காமம்

காமம் வெல்வது பற்றி
காதலி
சொல்லிக்கொண்டிருந்தாள்

முதலில் தனது
முகம் மறக்கச் சொன்னாள்
அதில் துளைகள் அதிகம் இருப்பதாகவும்
அவைகளில் அழுக்குகள்
வெளியேறக்கூடுமென்றாள்

உதடுகள் பற்றி கேட்டேன்
சுரக்கும் எச்சில் பற்றியும்
கிருமிகள் பற்றியும்
நினைவு படுத்தினாள்

என் பார்வையை விளங்கிக்கொண்டவளாக
மார்பை
பசு மடியுடன் ஒப்பிட்டாள்
அத்தனையும் ஊளை சதை என்றாள்

என்னைத்தொடர விடாமல்
தனது மூத்திரம் பற்றியும்
அதன் துர்வாடை
ஒரு பிணத்திற்கு சமமானது என்றாள்

என் பார்வையில் நம்பிக்கை இழந்தவள்
பிரத்தியேக திரவம் ஒன்று தடவி
தோலை
சுருங்கச் செய்தாள்

ஒரு தீக்குச்சியில்
தன்னை எரித்து
சாம்பலாக்கினாள்

நான் பத்திரமாய்
விழுந்துகிடந்த
அவள் காமத்தை
கையில் ஏந்திச் சென்றேன்

(Visited 91 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *