சாம்பல் பூத்த தெருக்கள் வழி… 1

28காசியை நோக்கி பயணமாகும் முன் பார்ப்பவர்களிடமெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தேன், தனியாகச் செல்வதாக. உள்ளூர ஒரு சிறு தயக்கம். ‘தனியாகவா?’ என நண்பர்கள் யாராவது கேட்டுவைத்தால் ‘அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை’ என அவர்களிடம் சொல்லும்போதே எனக்குள் நானே சொல்லி சமாதானப்படுத்திக்கொண்டேன். என் வாழ்வில் நெருக்கடியான காலக்கட்டம் இது.  நீண்ட பயணம் முக்கியமாகப் பட்டது. உண்மையில் எனக்கு எப்போது பசிக்கும்? எப்போது உறக்கம் வரும்? எனது துணிச்சலின் எல்லை எது? இப்படி என்னை நான் கொஞ்சம் சோதித்துக்கொள்ளலாம் என்றும் நினைத்திருந்தேன். முக்கியமாக நான் செல்லும் இடம் சுற்றுலாதளமாக இருக்கக் கூடாது என்பதில் தீர்மானமாக இருந்தேன். காசி அதற்கு ஏற்ற இடமாகத் தோன்றியது.  அடிப்படையான சில முன்னேற்பாடுகளை மட்டும் செய்து வைத்தேன். காசி குறித்த அடிப்படை சித்திரங்கள் எழுத்தாளர் ஜெயமோகனின் சில கட்டுரைகள் மூலம் எனக்குக் கிடைத்துள்ளன. முக்கியமாக அக்னி நதி கட்டுரையின் முன்பகுதி. எனவே போவதற்கு முன் அவரை அழைத்தேன். காசி குறித்த சுவாரசியமான விடயங்களைப் பகிர்ந்துகொண்டார். ‘திரும்பியதும் அழைக்கிறேன்’ என்றேன். ‘திரும்பினால் அழையுங்கள்’ எனக்கூறி சிரித்தார்.

டில்லி விமான நிலையத்தில் இறங்கியதும் வாகனமோட்டுனர் அழைத்துச் சென்றார். மறுநாள் பயணத்துக்கான01 திட்டங்களைக் கூறினார். தாஜ்மஹால் பார்க்கச் செல்லலாம் என்றார். உண்மையில் அவர் அவ்வளவு வலியுறுத்தாவிட்டால் நான் ஆக்ரா சென்றிருக்க மாட்டேன். டில்லியைச் சுற்ற வேண்டும் என்றே நான் திட்டமிட்டிருந்தேன்.  டில்லியை ஒருநாளில் சுற்றி விடலாம் தாஜ்மஹாலைத் தவறவிட வேண்டாம் என்றார். தாஜ்மஹாலுக்குச் செல்வதில் எனக்கு கொஞ்சம் மனத்தடை இருந்தது. நம் பாடலாசிரியர்களும் இயக்குனர்களும் அதை மொழியாலும் ஒளியாலும் காட்டிக்காட்டி சலிப்படைய வைத்திருந்தனர். எனவே தாஜ்மஹால் ஏதோ பழக்கப்பட்ட இடம்போலவே தோன்றியது. ஆனால் நேரில் அது வேறாகவே இருந்தது.

தாஜ்மஹால்

நான் செ03ன்ற நேரம் நண்பகல். கடும் வெயிலில் அவ்விடம் செல்ல மூன்று பக்கமும் சுவரால் சூழப்பட்ட தடத்தில் நடந்து சென்றேன். தாஜ்மஹால் மெல்ல மெல்ல கண்களுக்கு அகப்பட்டது. வெள்ளைப் பளிங்கால் ஆன அக்கட்டடம் வெயிலின் வெம்மையில் தன்னை மறைத்திருந்தது. ஓர் இளம்பிறைபோல முதலில் அதன் தலைப்பகுதி தெரிய ஆரம்பித்து பின் முழுமையாகத் தன்னை வெளிக்காட்டியது. நான் சென்றுகொண்டிருந்த குறுகலான பாதையில் புகும் காற்றின் அழுத்தம் எழுப்பும் ஓசை தாஜ்மஹாலைப் பார்க்கும் கணம் மனதில் எழும் இசையாக மாறியது. அக்காட்சியும் அவ்விசையும் சட்டென ஒரு சோகத்தை மனதில் நிரப்பியது. மீண்டும் அவ்வனுபவம் எனக்கு நிகழப்போவதில்லை. அறிவு அங்கு தாஜ்மஹால் இருப்பதை முன்னமே கூறிவிடும். அது ஒரே ஒரு முறை நிகழும் அற்புத கணம்.

தாஜ்மஹாலைக் காதல் சின்னம் என்கிறார்கள். இருக்கலாம். தொலைவாக இருக்கும்போதே அழகாக இருக்கிறது. மாதிரிக்குச் செய்து வைத்திருந்த மும்தாஜ் மகால் கல்லறையைப் பார்க்கவெல்லாம் விருப்பம் ஏற்படவில்லை. அதனைச் சூழ்ந்து ஓடும் யமுனை ஆற்றினைக் கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன்.  தாஜ்மஹாலைக் கட்டும்போது ஷாஜகானுக்கும் அதைக் கட்டிய 22,000 பணியாட்களுக்கும் அந்நதி என்னவாக இருந்திருக்கும் என யோசித்துப்பார்த்தேன். ஷாஜாகானுக்குத் தன் கண்ணீரைவிட சிறியதாகவும் பணியாட்களுக்கு தங்கள் ரத்தத்தைவிட கொள்ளளவு குறைவாகவும் இருந்திருக்கலாம்.

அருகில் இருந்த தொல்பொருள்காட்சிக் கூடம் பார்த்த பிறகு ஆக்ரா கோட்டை சென்றேன். முகலாயப்02 பேரரசர்களான பாபர், உமாயூன், அக்பர், ஜகாங்கீர், ஷாஜகான், ஔரங்கசீப் போன்றவர்கள் வாழ்ந்த கோட்டை இது. உள்ளே சாஜகான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு தனது இறுதி ஏழு ஆண்டுகளை கழித்த இடத்தைப் பார்த்தேன். கோட்டையிலிருந்து தாஜ்மஹால் அழகாகக் காட்சியளியத்தது. சிறு சிறு துவாரங்கள் வழியே அறை சில்லிட்டது. கொஞ்ச நேரம் அங்கே அமர்ந்து மீண்டும் தாஜ்மஹாலைப் பார்த்தேன். புறப்பட மனம் வரவில்லை. மீண்டும் தாஜ்மஹால் செல்லலாமா என காரோட்டுனரைக் கேட்டேன். அவர் அதில் வெகு ஆர்வமாக இருந்தார். மீண்டும் தாஜ்மஹால். இம்முறை அதன் அருகில் செல்லாமல் கொஞ்சம் தள்ளி இருந்த பூங்காவில் படுத்துக்கொண்டேன். தாஜ்மஹாலின் ஒருபகுதி தெரிந்தது. ஓர் அழகிய பெண்ணின் கன்னம் தெரிவதுபோல. மிச்சத்தை நாம் கற்பனை செய்து கொள்ளலாம். அப்படியே பார்த்துக்கொண்டிருந்தேன்.

மதுரா

மறுநாள் டில்லி நகரம் பார்ப்பதாகத் திட்டம். எனவே காலையிலேயே புறப்பட்டோம். அப்போதுதான் வாகன ஓட்டுனர் மதுரா குறித்துக் கூறினார். மதுரா குறித்து ஏற்கனவே லஷ்மி சரவணகுமார் கூறியிருந்தார். எனவே அங்கே செல்வதென முடிவானது. ஆக்ராவிலிருந்து ஐம்பது கிலோ மீட்டர் தொலைவில் மதுரா நகரம் உள்ளது. இந்தியாவில் பழைய நகரங்களில் ஒன்று. கி.மு 1600 ஆண்டுகள் பழமையானது என்கிறார்கள். இந்து தொன்மவியல் அடிப்படையில் இதுவே கிருஷ்ணன் பிறந்த இடமாகச் சொல்லப்படுகிறது. மதுராவில் உள்ள கிருஷ்ணர் கோவில் பிரபலமானது. ஆலயத்தின் உள்ளே காமிரா, கைத்தொலைபேசி என எதையும் எடுத்துச்செல்ல அனுமதி இல்லை. பாதாளச் சிறையில் கிருஷ்ணன் பிறந்த இடம் கேசவ தேவ் கோயிலாகக் கட்டப்பட்டுள்ளது. குறுகலான பாதையில் நடந்து உள்ளே சென்றேன். என் படுக்கை அறை அளவுக்கே இருந்தது கண்ணன் பிறந்த அந்தச் சிறை. திரையைப் போட்டு மூடி வைத்திருந்தனர். நேரம் நெருங்க நெருங்க கூட்டம் அதிகரித்தது. திரையை விளக்கியவுடன் பக்தர்கள் உற்சாகமாகி வழிபடத்தொடங்கினர். எனக்குக் கொஞ்சம் ஏமாற்றமாகிவிட்டது. பிரதானமாக இருந்த கண்ணனின் உருவ கிராபிக்ஸ் படம் ஒன்று அவ்விடத்தின் பழந்தன்மையைக் கெடுப்பதாகப்பட்டது.

மோகலாய மன்னர்கள் காலத்தில் அங்கு கட்டப்பட்ட மசூதியிலும் வழிபாடு நடக்கிறது. 24 மணி நேரமும் கடும்04 போலிஸ் பாதுகாப்பு உள்ளது. விக்கிப்பிடியாவில் வாசித்தபோது அவுரங்கசீப் இந்தக் கோயிலின் பெரும்பகுதியை இடித்துவிட்டு அதன் அருகில் மசூதி கட்டினார் என்றும் மீண்டும் 1965இல் கோயில் கட்டப்பட்டதாகவும் விவரம் உள்ளது. கோயிலை ஒட்டி வெளியே ஒரு குளம். நான் மட்டும் அதைப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தேன். கம்சன், கிருஷ்ணனுக்கு முன் பிறந்த ஏழு குழந்தைகளைப் போட்டுக்கொன்ற இடம் என நம்பப்படுவதால் முக்கியத்துவம் தரப்படவில்லை எனப் பின்னர் தெரியவந்தது. நன்கு ஆங்கிலம் அறிந்தவர்கள் இங்கு எந்தத் தகவலையும் அவ்வளவு எளிதில் பெற முடியாது. அறிவிப்புப் பலகையில் முழுக்கவே இந்தியில் உள்ளது. அவர்களிடம் தகவலைக் கேட்டுப் பெற என்னைப் போன்ற ஓரளவு ஆங்கிலமும் நல்ல உடல் மொழியும் தெரியவேண்டும். அதை வைத்துக்கொண்டு நான் ஒரு நடனமே ஆடிக்காட்டிய பின் சரியான பதில் கொடுத்து விடுகிறார்கள். என் நடனத்தையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் கிருஷ்ணன் எங்களுக்கான பொதுத் தொடர்பு மொழி ஒன்றை அமுல்படுத்தினாலும் ஆச்சரியமில்லை.

கோயிலைவிட அந்த நகரமே முக்கியமானது. சட்டென ஒரு சாம்பல் பூத்த தெருவுக்குள் நுழைவதாகத் தோன்றும். சில வருடங்கள் பின்னோக்கிச் சென்றுவிட்டதுபோல இருந்தது. எவரும் கையில் கைத்தொலைபேசியை தேய்த்துக்கொண்டிருக்கவில்லை. எங்கும் நிதானம் பரவியிருந்தது. முதிர்ந்த முகங்கள் அதிகம் இருந்தன. வாகனமோட்டி காரைவிட்டு இறங்கவில்லை. உடன் வரவும் மறுத்துவிட்டார். அவருக்கு வேலையை முடித்து சட்டுப்புட்டென டெல்லியில் என்னை இறக்கிவிட வேண்டும். உண்மையில் நான் தொலைந்து விடக்கூடும் என அச்சம் தோன்றியது. என்னிடம் உள்ளூர் எண்கள் இல்லை. எனவே நம்பிக்கையான தொலைவு வரை நடந்துசென்று திரும்பினேன். எதுவும் நடக்காததுபோல வாகனமோட்டி என்னை பிருந்தாவனம் அழைத்துச் செல்வதாகக் கூறினார். நான் கடுப்பாகிவிட்டேன் என அவர் உணர்ந்திருக்கலாம்.

பிருந்தாவனம்

சினிமாவின் மூலமும் அதில் இடம்பெறும் பாடல்கள் மூலமுமே இந்திய நகரங்களின் பல பெயர்கள் மனதில்07 நிற்கும் எனக்கு. ‘பிருந்தாவனம்’ என்பது அப்படி ஒரு பெயர். கூடுதலாக சின்னப்பிள்ளையாக இருக்கும்போது தீபாவளி அட்டையில் கிருஷ்ணன் கோபியர்களோடு கொஞ்சிக்கொண்டு இருப்பதைப் பார்த்திருக்கிறேன். பசுமை பொங்கும் இடத்தில் அவர் ஊஞ்சல் ஆடுவதும் குழல் ஊதுவதும் குளத்தில் குளிக்கும் கோபியர்களிடம் குஜால் செய்வதும் என ஒரே ரகளையாக இருக்கும். இப்படியான மனப்பதிவுடன்தான் மதுரா மாவட்டத்தில் அமைந்துள்ள பிருந்தாவனம் சென்றேன். கிருஷ்ணனின் இளமைக் கால வாழ்க்கையோடு தொடர்புடையது என நம்பிய பக்தர்கள் இந்த இடத்தில் ராதை மற்றும் கிருஷ்ணரின் வழிபாட்டுக்கென நூற்றுக்கணக்கான கோயில்களை உருவாக்கியுள்ளனர். அதில் பழமையானது ஒன்றுதான். வண்டி ஓட்டுனர் மீண்டும் முருங்கை மரம் ஏறிக்கொண்டார். வாகனம் ஓட்டும் பணி மட்டும்தான் செய்வேன் என பிடிவாதமாகக் கூறிவிட்டார்.

சென்று இறங்கியவுடன் வழிகாட்டிகள் இந்தியில் பேசியபடி ஓடிவந்தாலும் நான் யாரையும் அனுமதிக்கவில்லை. ஒரு சில ஆலயங்களுக்குள் சென்றேன். நூறு வருடங்கள்கூட ஆகாத கோயில்களும் இருந்தன. சமஸ்கிருத மொழியில் ‘பிருந்தா’ என்றால் ‘துளசி’ என பொருளாம். ஒரு காலத்தில் இவ்விடம் துளசிக் காடாக இருந்துள்ளது. பொறுத்தமான வழிகாட்டி இல்லாமல் இந்தியில் உள்ள அறிவிப்புகளைப் புரிந்துகொள்ள முடியாது. ஆச்சரியமாக வடநாட்டுக் கோயிலினுள் நாதஸ்வரமும் தவிலும் வாசிக்கப்பட்டன. அங்கே தமிழர்கள் வழிபாட்டு தளமும் இருக்கிறதென பின்னர் தெரிந்துகொண்டேன்.

06யானைக்கு பெரிய நாமம் போட்டு கோயிலினுள் ஊர்வலம் ஒன்று நடந்தது. கொஞ்ச நேரம் யானையை வேடிக்கை பார்த்தேன். கண்ணாடியில் தன் முகத்தை அது பார்க்க நேர்ந்தால் ஊரில் உயிர் சேதங்கள் ஏற்படலாம்.
உண்மையில் பழைய நகரங்களில் அனுபவங்கள் கோயில்களுக்கு வெளியேதான் உள்ளன. மதுரா அவ்வாறான ஓர் அனுபவத்தைத்தான் கொடுத்தது. பிருந்தாவன கோயில்களில் இன்றி, வெளியில் தெருக்களில் மாடுகள் அதிகம் காணப்பட்டன. கிருஷ்ணன் மேய்த்ததின் பரம்பரை ஏதாவது ஒன்றிரண்டு இருக்கலாம் என நினைத்துக்கொண்டேன்.

கணேஷ் வெங்கட்ராமன்

டில்லியை வந்தடைய மாலையாகிவிட்டது. முகநூலின் மூலமாக நான் டில்லியில் இருப்பதை அறிந்த05 எழுத்தாளர் கணேஷ் வெங்கட்ராமன் தொடர்புகொண்டிருந்தார். அவருடைய வலைத்தளத்தை முன்பு ஒருமுறை வாசிக்க அனுப்பியிருந்தார் (https://hemgan.blog/). மண்ட்டோவையும் ஜி நாகராஜனையும் ஒப்பிட்ட ஒரு கட்டுரை அது. இருவரும் எனக்கு விருப்பமான எழுத்தாளர்கள். அன்று மாலை அவரைச் சந்திப்பதில் உற்சாகமாக இருந்தேன். முழுமையாக அன்றைய மாலையை ஓய்வாக்கிக்கொண்டேன்.

‘டைசுஸ் நகரில் ஒரு புத்தர் கோயில்’ எனும் கணேஷ் வெங்கட்ராமன் சிறுகதை தொகுப்பு காலச்சுவடு பதிப்பகம் மூலம் வெளிவந்துள்ளது. வல்லினத்திலும் இவரது சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளன. ஒரு வாரம் அநேகமாக இலக்கியம் குறித்த பேச்சு இருக்காது என்றே நினைத்திருந்தேன். ஆனால் நல்ல உரையாடலாகச் சென்றது. அவர் சரளமாக ஹிந்தி பேசினார். முன்பே சொல்லியிருந்தால் தானும் முறையாகத் திட்டமிட்டு பயணத்தில் இணைந்திருப்பேன் என்றார். மீண்டுமொரு வட இந்தியப் பயணத்துக்கான அத்தனை அறிகுறிகளும் என் முகத்தில் தெரியத் தொடங்கிவிட்டது.

மண்ட்டோவிடமும் ஜி.நாகராஜனிடமும் நான் காணும் வேற்றுமைகள் குறித்துக் குறிப்பிட்டேன். குறிப்பாக இருவர் கதைகளில் வரும் பெண் கதாபாத்திரங்கள் குறித்து இருவரும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம். முடிக்க முடியாமல் முட்ட முட்ட அவர் வாங்கிக்கொடுத்த உணவை உண்டேன். நல்ல பசி.

கணேஷ் வெங்கட்ராமன் வெளிப்படையானவராக இருந்தார். பேசும்போதே மாற்றுக் கருத்துகளைச் சிக்கல் இல்லாமல் தெரிவித்தார். வரலாற்றில் ஆர்வம் கொண்டிருந்ததால் அவரிடம் பேசித் தெரிந்துகொள்ள வேண்டியவை அதிகம் இருந்தன. குறிப்பாக பௌத்தம் குறித்து. அவர் புறப்பட்டவுடன் அறையில் அடைந்து கிடக்க விருப்பம் இல்லாமல் ரிக்‌ஷா எடுத்து அருகில் இருந்த பசிபிக் பேரங்காடிக்குச் சென்றேன். உலகில் உள்ள பேரங்காடிகள் அனைத்தும் ஒன்று போலவே இருக்கின்றன. இரவு முழுவதும் காசிப் பயணம் குறித்தே நினைவுகள். டில்லியில் இருந்து வாரணாசிக்கு விமானம் அதிகாலையில். உறங்கினால் எழ முடியாதோ என்ற குழப்பத்தில் விழித்தே இருந்தேன்.
 
பாரதி

08வாரணாசியைச் சுற்ற நான் வழிகாட்டுனர் ஒருவரின் உதவியை  நாடியிருந்தேன். மோடியின் தொகுதியாகிவிட்ட வாரணாசியில் தற்போது நிறைய மேம்பாட்டுத் திட்டங்கள் நடந்து வருவதாக வழிகாட்டி கூறினார். அவர் முஸ்லிம். சுற்றுலாத்துறை சார்ந்து பட்டப்படிப்பை முடித்தவர்.  இரண்டு வருடங்களுக்கு முன் வந்திருந்தால்கூட கார் பயணம் அவ்வளவு சவாலாக இருந்திருக்கும் என்றார். பயணத்தில் கொஞ்சம் அரசியல் பேசினோம். மோடியின் மீதான விமர்சனத்தை கொஞ்சம் தாராளமாகவே வைத்தார். நண்பர் கணேஷ் வெங்கட்ராமன் மூலமே காசியில் ஹனுமன்காட் பகுதியில் சங்கரமடம் எதிரில் பாரதி வாழ்ந்த வீடு உள்ளதை அறிந்தேன்.

அந்த வீட்டைத் தேடிக் கண்டடைய கொஞ்சம் அலைய வேண்டியிருந்தது. வழிகாட்டிக்கு நான் தேடும் இடம்10 குறித்து குழப்பம் இருந்தது. இதுநாள் வரை அவர் யாரையும் அங்கு அழைத்துச் சென்றதில்லை. ஒவ்வொரு இடமாக நிறுத்தி யாரிடமாவது விசாரிக்கும்போது ‘வாட் நேம்?’ எனக் கேட்பார் வழிகாட்டி. நான் ‘பாரதி’ என்பேன். அவர் அந்தப் பெயரைக்கூறி இந்தியில் விசாரிப்பார். யாருக்கும் தெரியவில்லை. தொலைப்பேசியில் கணேஷ் உதவியுடன் ஒருவழியாக நெரிசலான சந்துக்குள்தான் ‘சிவமடம்’ என்று எழுதப்பட்டிருக்கும்  வீட்டைக் கண்டுபிடித்து வாசலில் அமர்ந்திருந்த அம்மையார் ஒருவரிடம் அறிமுகம் செய்துகொண்டேன்.

தந்தை சின்னசாமி ஐயர் இறந்தபின் 1898 தொடங்கி பாரதியார் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் காசியில் வாழ்ந்த வீட்டில் அவரது தங்கையின் மகனைச் சந்தித்தேன். இங்குதான்  பாரதி தலைப்பாகை கட்டவும் மீசை வைக்கவும் தொடங்கினார். சமஸ்கிருதம், இந்தி மொழிகளைக் கற்றார். மேலை நாட்டு இலக்கியங்களை அறிந்தார். இந்திய விடுதலை உணர்ச்சி கொழுந்துவிடத் தொடங்கியதும் இங்குதான்.  தங்கையின் மகனான முனைவர் கே.வி.கிருஷ்ணன் 90 வயதை தாண்டியிருந்தாலும் தெளிவாகப் பேசியதுடன் பாரதி உபயோகித்தச் சில பொருள்களை, அவர் அமர்ந்து எழுதிய மேசையை, அவர் வாசித்த ஹார்மோனியப் பெட்டியைக் காட்டினார். கட்டிலின் அடியில் பாரதி அவர் தமது சகோதரிக்கு சீராகக் கொடுத்த இரும்புப்பெட்டி இருந்தது. மூன்று தாழ்ப்பாள்களைக் கொண்ட பழைய இரும்புப் பெட்டி அது. தொட்டுத் தடவிப் பார்த்தேன். அவ்வுணர்வை விளக்குவது கடினம். ஜடப்பொருள்களில் காலங்களைக் கடந்து செல்லுதல் அற்புதமான அனுபவம். அவர் பேசுவதைக் கொஞ்சம் வீடியோ பதிவு செய்தேன்.

09தன் மகன் ரவி, மருமகள் பவானி மற்றும் பேத்தி உடன் வசித்து வரும் கே.வி.கிருஷ்ணன் அவர்கள் பனராஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மிருதங்கம் வாசிப்பதில் திறமை கொண்டவர். தமிழ் சுடர், தமிழ்மாமணி போன்ற விருதுகளையும் அரசின் பாரதியார் விருதையும் பெற்றவர். காசியில் வசிக்கும்போது பாரதி இயற்றிய ‘அர்த்த பிரகாசம்’, ‘பாருக்குள்ளே நல்ல நாடு’, ‘வெள்ளைத்தாமரைப் பூவில் இருப்பாள்’ போன்ற பாடல்களை நினைவுகூர்ந்தார். பெரும்பாலும் அவர் பேச்சில் பாரதியாரை அவர்கள் குடும்பம் அக்காலக்கட்டத்தில் கொண்டாடி மகிழ்ந்ததைப் போலவே இருந்தது. நான்கு மொழிகளிலும் கே.வி.கிருஷ்ணன் அவர்களால் எழுதப்பட்ட பாரதி குறித்த சுருக்கமான நூலை வாசிக்கும் யாருக்கும் அவ்வாறான ஒரு மனப்பதிவே கிட்டும். அவரது நெகிழ்ச்சி, புகழ்ச்சியெல்லாம் இன்று தொடர்ச்சியான வாசகர்கள், எழுத்தாளர்கள் அவரைக்கொண்டாடி கொண்டாடி மெலெடுத்து வைத்திருக்கும் பிரமிப்பின் தொடர்ச்சியின் ஒரு பகுதியாகவே எனக்குத் தோன்றியது. வாழ்ந்த காலத்தில் அவர் சமூகம் அவரை எவ்வாறு எதிர்கொண்டது என்பதற்கான தடயங்களை அவர் எழுத்தும் பேச்சும் முழுக்கவே கழுவி விட்டிருந்தது.

கொஞ்ச நேரம் வீட்டில் அமர்ந்திருந்தேன். நான் செய்யும் தாமதம் வழிகாட்டிக்குக் கடுப்பாக இருந்திருக்கலாம். வழிகாட்டியிடம் நான்கு மொழிகளிலும் கே.வி.கிருஷ்ணன் அவர்களால் எழுதப்பட்ட பாரதி குறித்த சுருக்கமான நூலை வழங்கி வாசிக்கச் சொன்னேன். ‘Great Man’ என்றார். அதற்குப்பின் நான் தாமதப்படுத்துவதை அவர் பெரிதுபடுத்தவில்லை. அதற்குப் பின் அவரால் பாரதியின் பெயரை நினைவுகூர முடியலாம் என்றே தோன்றியது.

அரிச்சந்திரன் படித்துறை

வீட்டிலிருந்து வெளியே வந்தேன். இடதுபுறம் ஹனுமன் படித்துறை. வலது புறம் சென்றால் அரிச்சந்திரன் படித்துறை. நான் வலது புறம் செல்லத் தீர்மானித்தேன். புராணக் கதையில் வரும்11 அயோத்தி நாட்டு மன்னன் அரிச்சந்திரன்,  இங்கு அமைந்த மயானத்தில் வெட்டியானாக வேலை செய்த காரணத்திற்காக இப்படித்துறைக்கு அவர் பெயர் உண்டானதாக இணையத் தகவல்கள் கூறின. இங்குதான் அதிகப் பிணங்கள் எரிக்கப்படும் என்பதால் அதைச் சென்று காணும் ஆவலில் அரிச்சந்திரன் படித்துறையைத் தேர்ந்தெடுத்தேன். நான் சென்றபோது மூன்று பிணங்கள் எரிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. பாரதி வாழ்ந்த இல்லத்துக்கு அருகில் இருப்பதால் அவரும் இங்கேவது அமர்ந்து பிணங்கள் எரிவதை பார்த்திருக்கக் கூடும் என உள்ளுணர்வு சொல்லிக்கொண்டே இருந்தது.

பிணங்களை எரிக்கும்போது படம் எடுத்துவிட வேண்டாம் என வழிகாட்டி எச்சரித்துக்கொண்டே இருந்தார். நான் சொல் பேச்சைக் கேட்கும் பிள்ளையல்ல. ஆனால் அவ்வாறு எடுக்கப்படும்போது அதைக் காரணமாகக் காட்டி பணம் பிடுங்கும் வேலை சாதாரணமாக நடக்கும் என அவர் பின்னர் கூறினார். சரியாக ஏழு மணிக்குக் கங்கை ஆரத்தி தொடங்கியது. தீபத்தின் ஒளியில் அவ்விருள் தங்கமானது. அருகில் எரிந்துகொண்டிருந்த தீயிலிருந்த சாம்பலை முகத்தில் பூசியபடி கையுயர்த்தி வழிபட்டுக்கொண்டிருந்த ஒரு சாமியாரைக் கடந்து சென்றேன். சின்னஞ்சிறிய கொட்டகையில் சிலர் கூடியிருந்தனர். புகை சூழ்ந்திருந்தது. வழிகாட்டி அவர்கள் கஞ்சா புகைப்பதாகக் கூறினார். அதில் சிலர் எதையோ உருண்டை பிடித்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அதை ஃபாங் என்றார் வழிகாட்டி. எனக்கும் வேண்டும் என்றபோது அவர் முகத்தில் கலவரம். அதெல்லாம் உடலுக்கு ஒத்துவராது என்றார்.

171612

மறுநாள் மீண்டும் சூரியன் உதிக்கும் முன்பாகவே படித்துறைக்கு வந்தோம். படகு ஒன்றை வாடகைக்கு எடுத்தோம். 1300 ரூபாய். கங்கையில் சூரியன் கொஞ்ச கொஞ்சமாக எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தது. படகில் ஒவ்வொரு படித்துறையாக வேடிக்கை பார்ப்பது உற்சாகமாக இருந்தது. உண்மையில் கரையிலிருந்து கங்கையைப் பார்ப்பதைவிட கங்கையில் இருந்து கரையைப் பார்ப்பதே பேரனுபவம். ஒவ்வொரு படித்துறையிலும் ஒன்றுக்கு மற்றொன்று சம்பந்தம் இல்லாத செயல்கள் நடந்துகொண்டிருந்தன. சில படித்துறைகளில் மூழ்கி எழுந்து பக்தர்கள் சூரியனை வணங்கிக்கொண்டிருந்தனர். கொஞ்சம் தள்ளிச் சென்றால் வேத பாடம் சிறுவர்களுக்கு நடந்துகொண்டிருந்தது. அடுத்த படித்துறையில் வெள்ளையர்கள் யோகாசனம் செய்து கொண்டிருந்தனர். இன்னும் கொஞ்சம் தள்ளி அரிசந்திரா படித்துறையில் நேற்று எரிந்த பிணங்களில் ஆடுகள் ஏதோ பொறுக்கித் தின்றுகொண்டிருந்தன. இன்னும் ஏதோ எரிந்துகொண்டிருந்தது. வெயில் ஏறியதும் எருமைகளை அதே ஆற்றில் இறக்கி குளிக்க வைக்கின்றனர். ஒரே வரிசையில் வெவ்வேறு செயல்கள். மறு படித்துறை குறித்து அவர்களுக்கு விமர்சனம் ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் கண்முன் தெரியும் கங்கையே அவர்களுக்கான கடவுள். எதை சுமந்து வருகிறது எதை சுமந்து போகிறது என்பதெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. பொறுத்தம் இல்லாமல் அடுத்தடுத்து மாறும் காட்சிகள். எனக்கு ஏதோ காலத்துக்கு நதியின் உருவத்தைக் கொடுத்து அதில் பயணம் செய்வதாகவே தோன்றிக்கொண்டிருந்தது.

1813

சாரநாத்

மறுநாள் காலையிலேயே சாரநாத் கிளம்பினோம். புத்தர் தனது முதல் போதனையை நிகழ்த்திய இடம். கி.மு. 3-ஆம் நூற்றாண்டிலிருந்து கி.மு.12- ஆம் நூற்றாண்டு வரையிலான தொன்மச் சுவடுகள் அருகில் இருந்த அருங்காட்சியகத்தில் இருந்தன. பக்கத்திலேயே சமண மதத்தின் 11வது தீர்த்தங்கரரான சிரேயனசனாதரர் பிறந்த இடம் இருந்தது. அணில்கள் குழுமி அவ்விடத்தை அழகுபடுத்திக்கொண்டிருந்தன.

20அசோகர் தூணின் இடிந்த பகுதிகளைப் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். அந்தத் தூணின் உச்சியில் இருக்கும் நான்கு சிங்கங்களும் சக்கரமும் கொண்ட சின்னம்  அருங்காட்சியக முகப்பிலேயே வரவேற்பது நெகிழ்ச்சியான அனுபவம். அது அசோகர் காலத்திலேயே வழவழப்பாக்கப்படும் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டு சலவைக்கல்போல இருந்தது. அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்ட சாரநாத்துக்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கும் அருங்காட்சியகம் அது. ஆச்சரியமாக சிவன், தாடி முறுக்கு மீசையுடனும் இருக்கும் பழங்கால சிற்பமும் புத்தர் சிலைகளும் அற்புதமான அனுபவமாக இருந்தது.

நான் சென்றிருந்தபோது பிட்சுகள் சிலர் தியானத்தில் ஈடுபட்டிருந்தனர். பௌத்ததுக்கு முன்னரே அங்கு சமணம் கோலோச்சி இருந்திருக்கலாம். 11வது தீர்த்தங்கரரான சிரேயனசனாதரர் பிறந்த இடம் திகம்பர சமண ஆலயமாக இருப்பதாலும் அவ்வாறு கணிக்கிறேன். கணிப்புதான். ஆய்வுகளை இனிதான் ஆராயவேண்டும்.19

சாரநாத்தில் தொடர்ச்சியான அகழ்வாய்கள் நடக்கின்றன. இங்கு வாழ்ந்த பௌத்த பிக்குகளின் அஸ்திகள் மேல் செங்கற்களால் கட்டப்பட்ட சிறிய பகோடாக்களின் இடிபாடுகளால் ஆன பரப்பே கண்ணுக்கெட்டிய வரை விரிந்திருந்தது . புத்தர் அமர்ந்து தியானம் செய்ததாக நம்பப்படும் ஓர் இடத்தில் அமர்ந்துகொண்டேன். வழிகாட்டி ஓர் இடத்தில் அமர்ந்துகொண்டு இந்திப் பாடலைப் பாடிக்கொண்டிருந்தார். அவர் நிலையை நொந்ததாக இருக்கலாம்.

எனக்கு அவ்விடம் பூஜாங் பள்ளத்தாக்கையே நினைவுபடுத்திக்கொண்டிருந்தது. ஏறக்குறைய ஒரே மாதிரியான அமைப்பு. அதே அளவிலான வடிவிலான கற்கற்கள்.  ஆனால் அதைப்பற்றி சொன்னால் மலேசியாவில் உள்ள ஆண்ட பரம்பரையும் பேண்ட பரம்பரையும் சண்டைக்கு வருவார்கள். வெயில் ஏறும் வரை அங்கேயே சுற்றிக்கொண்டிருந்தேன். அவ்விடம் எங்கு அமர்ந்தாலும் பரந்த வெளி ஓர் ஆழ்ந்த நிதானத்தைக் கொடுத்தது. வெயில் ஏறியபோது காசி படித்துறைகளுக்குச் செல்லலாம் என்றேன். வண்டி புறப்பட்டது.

படித்துறைகள்

மதிய உணவுக்குப் பின் என்னைப் படித்துறையில் விட்டுவிட்டு சென்று விடும்படி வழிகாட்டியிடம் கூறினேன். எனக்குத் தனிமை தேவைப்பட்டது. அவர் சுற்றுலாத்துறையில் தான் பெற்ற கல்வி அறிவு மொத்தத்தையும் என்னிடம் காட்டுவதில் மும்முரமாக இருந்தார். எனக்குத் தகவல்களைவிட காட்சிகள் முக்கியமாக இருந்தன. காசி என்பது காட்சிகள்தான். துண்டு துண்டான காட்சிகள். தகவல்கள் இணையம் முழுவதும் குவிந்து கிடக்கின்றன. என்னை விட்டுவிட்டு மாலை ஐந்து மணிக்கு வருவதாகச் சொல்லிப் புறப்பட்டார். தசவசுவமேத படித்துறையில் நான் ஐந்து மணிக்கு இருக்க வேண்டும்.

அந்நிமிடம் பெரும் விடுதலை உணர்வு ஏற்பட்டது. ஒவ்வொரு படித்துறைகளாக நடக்க ஆரம்பித்தேன். நல்ல வெயில். ஆனால் வேடிக்கை பார்க்கும் ஆர்வத்தில் எதுவும் பொருட்டாக இல்லை. பெரும்பாலும் காவி உடைகளில் சுற்றிக்கொண்டிருந்தவர்கள் பணம் கேட்டனர். அல்லது குடிக்க நீர் வாங்கி தரக்கோரினர். எத்தனை முறை நடந்தாலும் யாராவது ஒருவர் படகில் சவாரி செய்கிறாயா என எதிர்கொண்டு வந்தார். துணி துவைத்து உலர்த்தும் பணிகளும் கரையோரமே நடந்துகொண்டிருந்தன.

1526

“பைசா…” என ஒருவர் அருகில் வந்தார். கழுத்தில் குரங்கு. “பைசா நஹி” என்றேன். தன்னிடமுள்ள சங்கிலிகளில் ஒன்றை வாங்கிக்கொள்ளச் சொன்னார். மண்டையோடுகள் உள்ள சங்கிலிகளைக் காட்டி அகோரி அணிபவை என்றார். தூக்கிப் பார்த்தேன். அவை கற்களால் தயாரானவை. போலி. அகோரிகள் மனித எலும்புகளில் அவர்களே தயாரித்த சங்கிலிகள் அணிவார்கள் எனக் கேள்விப்பட்டுள்ளேன். இருந்தாலும் 100 ரூபாய் கொடுத்து வாங்கிகொண்டேன். இம்முறை இன்னொரு வஸ்துவைக் காட்டினார். அது ‘ஃபாங்’. கஞ்சா ரகம். ஆனால் வாரணாசியில் அதை பிரசாதம்போல சில பண்டிகையின்போது அனைவருமே சாப்பிடுவார்களாம். கஞ்சா புகைப்பது. இதைச் சாப்பிடவேண்டும். அல்லது வடிவேலுபோல பாலில் கலந்தும் குடிக்கலாம். பல சைஸில் ஃபாங் உருண்டைகள் இருக்கும். நான் 50 ரூபாய்க்கு ஓர் உருண்டை வாங்கினேன்.  பாதியைச் சாப்பிட்டுப் பார்த்தேன். இனிப்பு கலந்திருந்தார்கள். அப்போதுதான் ஒரு எண்ணம் தோன்றியது. படித்துறையில் இருந்து வெளியேறினால் கடைத்தெரு. ஒரு வண்டியில் துணி விற்பவரிடம் 150 ரூபாய்க்கு காவி உடைகள் சிலவற்றை வாங்கினேன். போதையெல்லாம் சுத்தமாக இல்லை. கொடுக்கும் பணம், விலைகுறைப்பு என தெளிவாக இருந்தேன். மீண்டும் படித்துறையில் இறங்கியபோதுதான் கங்கை ஒளிகொண்டு புதிதாகத் தெரிய ஆரம்பித்தது. அப்படியே படிக்கட்டில் அமர்ந்தேன்.

  • தொடரும்
  • (சேரன் கவிதை வரி தலைப்பாக்கப்பட்டுள்ளது)
(Visited 343 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *