சாம்பல் பூத்த தெருக்கள் வழி… 2

41படித்துறையின் மேலே ஒரு மரநிழலில் இருந்து கீழே நடப்பதை வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்தேன். எதற்கும் பெரிய அர்த்தம் இல்லாததுபோல தோன்றியது. மனிதர்கள் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தனர். ஒவ்வொரு விதமான நடை. எனக்கும் நடக்க வேண்டும் போல தோன்றியது.  வழிகாட்டிச்சொன்ன தசவசுவமேத படித்துறைக்குச் செல்லலாம் என எழுந்தபோது மனம் அவ்வளவு நிதானமாக இருந்தது. உடல் காற்றுபோலாகிவிட்டதை உணர்ந்தேன். நான் அடிப்படையில் கொஞ்சம் வேகமாக நடக்கக் கூடியவன். ஆனால் அன்று என்னால் வேகமாக நடக்க முடியவில்லை. ஒரு லாலான் புல்லின் பூவைப்போல கொஞ்சம் கொஞ்சமாக மிதக்கத்தொடங்கினேன். சிந்தனையில் எவ்வித குழப்பமும் இல்லை. நான் என்ன செய்கிறேன் என்பதை நன்கு அறிந்து வைத்திருந்தேன். தசவசுவமேதம் சென்றப்பின்னர் மீதம் இருந்த அரை உருண்டையையும் வாயில் போட்டு மெல்ல ஆரம்பித்தேன். எனக்குள் என்ன நடக்கிறது என கொஞ்சம் கொஞ்சமாக கவனிக்க ஆரம்பித்தேன்.

கங்கை ஆரத்தி

                கங்கை ஆரத்தி

வழிகாட்டி பக்கத்தில் வந்து அமர்ந்தபோது அவ்வளவு சீக்கிரம் மணி ஐந்தாகிவிட்டது ஆச்சரியமாக இருந்தது. மூன்று மணி நேரத்திற்கும் மேலாக மிகக்குறைவான விடயங்களே மனதில் ஓடியிருந்தன. வழிகாட்டிக்கு என் உடையெல்லாம் ஆச்சரியம் தரவில்லை. நான் வழக்கமாகவே இவ்வாறுதான் அணிவேன் என அவர் நினைத்திருக்கலாம். ஆனால் ஃபாங்க் சாப்பிட்டேன் என்றவுடன் கோவப்பட்டார். அவ்வாறு பிறரிடம் வாங்கி சாப்பிடுவது ஆபத்தாகலாம் என்றார். எந்த அசம்பாவிதத்துக்கும் தான் பொறுப்பேற்கமாட்டேன் என பதறினார். அரசாங்கமே ஃபாங்க் கடைகளை நடத்துகிறது. இவ்வாறு வெளியில் விற்கப்படுவதில் கலப்படம் இருக்கலாம் என்றார். ஆனாலும் எனக்கு எந்த விபரீதமும் நடக்காததால் கொஞ்ச நேரத்தில் சமாதானமடைந்தார். உடைகளை நான்தான் வாங்கினேன் எனத்தெரிந்தவுடன் ‘நீ வித்தியாசமான பயணி’ எனச்சிரித்தார்.

எனக்குக் கடுமையாகப் பசித்தது. ஃபாங்கின் விளைவாக இருக்கலாம்.   சாப்பிட்டுக்குளித்துவிட்டு மீண்டும் வரலாம் என்றேன். அழைத்துச்சென்றார். கதவைத்திறந்து மெத்தையில் வந்து குப்புறவிழ பலமணிநேரம் ஆனதுபோல உணர்ந்தேன். குளியல் இதமாக இருந்தது. நீரின் தன்மையை தோல்கள் எப்போதும் இல்லாதபடிக்கு நுட்பமாக உள்வாங்கியது. புலன்கள் கூர்மையாகியிருப்பதை அப்போதுதான் உணர்ந்தேன். எனக்குள் என்ன நடக்கிறது என்றும் நான் என்ன செய்ய வேண்டும் என்பதிலும் தெளிவாக இருந்தேன். மீண்டும் காசியை நோக்கி வரும்போது இடையில் அரசு நடத்தும் ஃபாங்க் கடையைப் பார்க்க வேண்டும் என்றேன். அழைத்துச்சென்று காட்டினார். ஏதோ திருப்பதி லட்டுபோல உருண்டைப்பிடித்து சாலை ஓரமாகவே விற்பனையாகிக்கொண்டிருந்தது ஃபாங்க். நான் முன்பு வாங்கிய அளவில் ஒன்றின் விலை விசாரித்தேன். 25 ரூபாய் என்றார். காலையில் கிழவனிடம் 50 ரூபாய்க்கு வாங்கி ஏமாந்திருந்தேன். கடைக்காரர் “கஞ்சா இருக்கிறது வேண்டுமா?”என்றார். அதெல்லாம் எனக்குச் சரிவராது என்பதால் ஃபாங்க் இரண்டு உருண்டைகள் மட்டும்  வாங்கினேன். வழிகாட்டி தடுக்க முயன்று தோற்றுப்போனார். அதற்குப்பின் அவர் என்னிடம் சரியாகப் பேசவில்லை. அவர் முகம் மட்டும் நிபுணத்துவ சிரிப்புடன் இருந்தது.

என்னை பயங்கரமான  போதை மோகி என அவர் கணித்திருக்கலாம். நான் அந்தக் கணிப்பை மாற்ற எண்ணவில்லை. அது ஒருவகையில் வேடிக்கையாக இருந்தது. உண்மையில் போதை வஸ்துகளிடமிருந்து எப்போதுமே தள்ளியிருப்பவன் நான். என்னிடம் பழகும் நண்பர்கள் இரண்டு விடயங்களை என் வாயில் இருந்து கேட்டிருக்க மாட்டார்கள். ஒன்றாவது, ‘போர் அடிக்கிறது’ என்பதை. உண்மையில் எனக்கு போர் அடிப்பதே இல்லை. என்னால் என்னை எப்போதுமே உற்சாகமாக வைத்துக்கொள்ள முடியும். நூற்றுக்கணக்கான பாடல்கள் என் நினைவில் உள்ளன. எத்தனைத் தனிமை இருந்தாலும் கத்திக்கூச்சலிட்டு பாடிக்கொண்டிருப்பேன். மற்றது ‘இது இல்லாமல் இருக்க முடியாது’ என இலக்கியத்தைத் தவிர வேறொன்றையும் நான் கூறியதில்லை. மது உள்ளிட்ட எதுவும் என்னை அடிமையாக்கக் கூடாது என்பதில் எனக்குப் பிடிவாதம் உண்டு. எதையும் காட்டி என்னை பணிய வைக்க முடியாது என்பதை நான் எனக்குள் கர்வமாகவே கூறிக்கொள்வேன்.

மது வகைகளில் உயர் ரக ‘வைன்’ பானங்கள் கிடைத்தால் விரும்பி எப்போதாவது பருகுவதுண்டு. கடைசியாக 11 ஆண்டு பழமையான ‘சிவப்பு வைன்’ பருகினேன். வைன் பொதுவாகவே கவிதை வாசிக்கும்போது புதிய அர்த்தங்களை திறந்துபார்க்கும் ஆற்றலை வழங்குகிறது எனக்கு. அது மனதை நிதானப்படுத்துமே தவிர புலன்களை கூர்மையாக்குவதில்லை. மாறாக ஒரு தற்காலிகக் கனவைக்கொடுக்கிறது. அதற்குள் நான் வாசிக்கும் கவிதையை இழுத்துக்கொள்கிறது.

38இருள் நெருங்க நெருங்க பல வகையான சாமியார்கள் எண்ணிக்கை படித்துறைகளில் அதிகரித்தது. பெரும்பாலும் ஆங்கிலேயர்கள் அவர்களைப் புகைப்படம் எடுக்க விரும்புகின்றனர். அதற்கேற்பவே அவர்களும் தங்களை அலங்கரித்துக்கொள்கின்றனர். முகத்தில் விபூதியைப்பூசியும் பலவண்ண ஆடைகளை அணிந்தும் அவர்கள் தரும் தரிசனம் பார்வையாளர்களைக் கவர்கிறது. அவர்களைப் போல நானும் ஒரு போலி சாமியார் என்பதால் புகைப்படம் எடுக்க எந்தப்பணமும் தரவில்லை. நான் அவர்களுடன் நின்று படம் எடுக்கும்போது வெள்ளையர்கள் என்னையும் சேர்த்து படம் எடுத்துக்கொண்டனர். ஊருக்குத் திரும்பியது என்னை ஓர் இளம் துறவி என நண்பர்களிடம் அவர்கள் வர்ணிக்கக்கூடும். மணிகர்ணிகா படித்துறையை நோக்கி நடந்தோம். அன்று இரவும் கங்கைக்குத் தீப ஆராதனை காட்டப்பட்டுக்கொண்டிருந்தது.

வழிகாட்டி புறப்படலாம் என்றார். நான் கொஞ்சம் தனிமையில் இருக்க எண்ணினேன். அவரைப் புறப்படச்39 சொன்னேன். அழவேண்டும்போல இருந்தது. குறிப்பிட்ட ஒரு காரணத்துக்காக இல்லாமல் வாழ்வில் செய்த அத்தனைப்பிழைக்காக; என்னால் துன்பப்பட்டவர்களிடம் மன்னிப்புக்கேட்க அவகாசம் கொடுக்காத வாழ்க்கையின் பிடிவாத கணங்களுக்காக; நான் நிரபராதியாக இருந்திருக்கின்ற எல்லா தருணங்களிலும் குற்றவாளியாகவும் இருந்ததற்காக அழவேண்டும்போல இருந்தது. வழிகாட்டியைப் போகச்சொன்னேன். நாளை காலையில் மீண்டும் படகு பயணம் செய்யலாம் என்றேன். அவர் நிச்சயமாக என்னால் காலையில் எழ முடியாது என்றார். நான் ஒன்றும் சொல்லவில்லை. ஓர் இடத்தில் ஆரவாரம் குறைந்து இருந்தது. அங்கே சென்று அமர்ந்துகொண்டேன். வழிகாட்டி கொஞ்ச நேரம் அருகில் அமர்ந்திருந்தார். கொசுக்கள் பிடுங்கி எடுத்தன. அவரால் தாங்க முடியாமல் புறப்படுவதாகக் கூறிச்சென்றார். என் பாதுகாப்பு குறித்த கவலை அவருக்கு. மீண்டும் ஒரு பொட்டலம் ஃபாங்க் சாப்பிட்டேன்.

மனம் இரவு கங்கைபோல சலனமற்றிருந்தது. நெடுநேரம் கங்கையைப் பார்த்துக்கொண்டிருந்தேன் என நினைக்கிறேன். உறுப்புகளை அசைப்பதில் நிதானம் இருந்தது. அது மனதின் நிதானம். அதன் கட்டுப்பாட்டில்தான் உறுப்புகளை அசைக்க முடிந்தது. ஆனால் நுண்ணுணர்வுகள் விழிப்பாக இருந்தன. சின்ன சின்ன சத்தங்கள், மெல்லிய குளிர், எங்கோ கேட்கின்ற சிப்பொலி, ஒரு நாய் குரைத்துக்கொண்டே என் பின்புறம் கடந்து ஓடும் சரசரப்பு, கொசுவின் முணுமுணுப்பு என எல்லாமுமே கேட்டது. எல்லாவற்றையும் மீறி நான் என்ன நினைக்கிறேன் என்பதை நான் கவனித்துக்கொண்டிருந்தேன். மனம் ஒரு விசித்திரமான காட்சி இயந்திரம். அது உருவாக்கும் காட்சியை அறிவின் மூலமாகக் காணும்போது அக்காட்சியை உடனடியாக அழித்து அடுத்தக் காட்சியைக் காட்டும். அந்தக் காட்சியையும் காணும்போது அடுத்தக்காட்சி என ஓடிக்கொண்டே இருக்கும். தன்னை ஒருவர் கவனிப்பதை அது விரும்புவதே இல்லை. நான் விடாமல் மனதை கவனித்துக்கொண்டே இருந்தேன். அதுவும் நான்தான். நான் என்னையே கவனித்துக்கொண்டிருந்தேன். ஒரு கணம் அது காட்சிகளைக் காட்டி ஏமாற்றுவதை நிறுத்தியது என்றே நினைக்கிறேன்.  அது நிறுத்திவிட்டது என எண்ணம் வந்தபோது மீண்டும் ‘நான்’ தன்னை நிறுவிக்கொண்டது. மனம் நின்றதற்கும் மீண்டும் நானென்ற நினைவு வந்ததற்கும் இடையில் நான் என்ன செய்துக்கொண்டிருந்தேன் என நினைவில் இல்லை. பக்தர்கள் ஃபாங்கை சிவபானம் என்கின்றனர். ஒருவேளை ‘நான்’ என்பது அழிந்த அந்த நிமிடங்களை அவர்கள் தியானம் என எண்ணக்கூடும்.

மணியைப்பார்த்தேன். அதிகாலை 3. அது மலேசிய மூன்றா இந்திய மூன்றா எனக்குழப்பம் எழுந்தது. மெல்ல எழுந்து ஆட்டோ பிடிக்க படிக்கட்டில் ஏறினேன். இறங்கி வந்தபோது காலியாக இருந்த பாதையில் இப்போது எறுமைகள் படுத்திருந்தன. படிக்கட்டுகளில் நிறைய பேர் படுத்திருந்தனர். மனிதர்களோடு நாய்களும் உறக்கத்தில் இருந்தன. வேறொரு படிக்கட்டின் வழி ஏறி நடந்தேன். துளியும் அச்சம் இல்லை. யார் எதிர்ப்பட்டாலும் அன்பாகக் கொஞ்ச நேரம் பேசலாம் எனத்தோன்றியது. சில ஆட்டோக்கள் நின்றுக்கொண்டிருந்தன. எந்தக்குறிப்பையும் பார்க்காமல் ஹாட்டல் பெயரைத் தெளிவாகக் கூறினேன். பெயரும் பாதையும் அவ்வளவு தெளிவாக நினைவில் இருந்தது. பேரம் பேசாத்தேவையில்லாத அளவுக்கு மலிவான தொகை சொன்னார். உடையின் மகிமை. அறைக்கு வந்தபோதுதான் ஏன் நான் அழவில்லை என்ற யோசனையே வந்தது.

                                                                                                      ***
ஹாட்டல் அறை தொலைபேசி அடித்தவுடந்தான் எழுந்தேன். வழிகாட்டுனர் லாபியில் இருந்து அழைத்தார். பத்து நிமிடத்தில் கிழம்பினேன். அதே காவி வேட்டிச்சட்டைதான். பையில் மாற்று உடைகள் எடுத்துக்கொண்டேன். வழிகாட்டி சிரித்தபடி அவர் கைத்தொலைபேசியில் நேற்று இரவு என்னை எடுத்தப்படத்தைக் காட்டினார். கங்கை ஓரம் அமர்ந்திருந்தேன். படத்தைப்பார்க்க ஆச்சரியமாக இருந்தது. “விட்டுப்போக மனம் இல்லை. அதான் கொஞ்ச நேரம் அங்கேயே சுற்றிவிட்டு புறப்பட்டேன்.” என்றார். புறப்படும்முன் பிடித்தப்படம்.  ஏகாந்தமாக இருந்திருக்கிறேன்.  கொஞ்சம் காசி வீதிகளில் சுற்ற வேண்டும் என்றேன். அழைத்துச்சென்றார். காசி விஸ்வநாதர் ஆலயத்திற்குச் சென்றோம். பெரிய கூட்டம்.  மலேசியாவிலிருந்து சிலர் வந்திருப்பது தெரிந்தது.  மீண்டும் படித்துறைக்குச் செல்லும் எண்ணம் தோன்றியது. இடையில் டீ குடித்தோம். மண்பானைபோல மண்ணால் செய்யப்பட்ட சிறிய குவளைகளில்தான் டீ கொடுக்கிறார்கள். காசியை அறிவது என்பது அதன் வீதிகளை அறிவதும்தான்.

37வீதிகளில் மனிதர்களுக்கு ஈடாக மாடுகளும் நடமாடுகின்றன. மனிதர்களும் மாடுகளும் ஒன்றாக சேர்ந்து வாழும் நகரம் அது. மாடு நடந்துசென்றால் குறுகலான சந்துகளில் மனிதர்கள் ஒதுங்கிவிடுகிறார்கள். இல்லாதுபோனாலும் அவற்றிற்கு யாரையும் ஒதுக்கிச்செல்ல தெரியும். படித்துறையில் இருப்பவர்கள் ஒரு படித்துறையிலிருந்து அடுத்ததற்கு எளிதாகப் போக முடிவதுபோல வாகனங்கள் தெருக்களில் போக முடியாது. ஒரு படித்துறையில் இருந்து அடுத்ததற்குச் செல்ல நீண்ட நேரம் பயணிக்க வேண்டும். சில படித்துறைகளுக்கு ரிக்‌ஷா மூலமே செல்ல முடியும். கார்கள் நுழைய வசதியான சாலைகள் இல்லை. நடக்க நடக்க பாதைகள் கீழும் மேலும் என விரிந்துகொண்டே சென்றது. கீழே போடப்பட்டிருக்கும் கற்களை அடையாளம் வைத்துக்கொண்டாலே பாதை தவறாமல் பயணம் செய்யலாம் என்றார் வழிகாட்டி. வெவ்வேறு இலக்குகளுக்கு வெவ்வேறு வடிவிலான தரைக்கற்களால் பாதை போட்டிருந்தார்கள். நான் ஏற்கனவே நண்பர் அகிலன் மூலமாக இதை கேள்விப்பட்டதுண்டு. ஒரே வடிவிலான தரைக்கல்லில் நடந்து சென்றால் பாதை தவற மாட்டோம். எனவே தனியாக காசித்தெருக்களில் அலையும்போது பாதையில் உள்ள கற்களின் வடிவில் கவனம் வைக்க வேண்டும்.

வீதிகளில் அலைந்து திரிந்துவிட்டு படித்துறைக்கு வந்தவுடன் இம்முறை நானே படகோட்டியிடம் பேரம் பேசினேன். 500 ரூபாய். வழிகாட்டி நம்ப மறுத்தார். சாத்தியம் இல்லை என்றார். அதுவும் இம்முறை நான் போக நினைத்தது கங்கை நதியின் வலப்புறம் இருக்கும் ராம்நகர் கோட்டைக்கு. தொலைவு அதிகம்.

ராம்நகர் கோட்டை

35பொதுவாகக் காசிக்கு வருபவர்கள் விஸ்வநாதர் ஆலயத்துடன் கதையை முடித்துக்கொள்கின்றனர். 17 ஆம் நூற்றாண்டில் ராம்நகர் கோட்டையைக் கட்டியவரான ராஜா பல்வந்த் சிங்கின் குடியிருப்பு வளாகமாக இந்தக் கம்பீரமான கோட்டை இருந்துள்ளது.

நான் சென்றபோது நல்ல வெயில். உண்மையில் வழிகாட்டிக்கு அங்கு வரவேண்டிய அவசியம் இல்லை. என் தேர்வு அது. ஆனாலும் வந்தார். மீண்டும் கங்கையில் படகுப்பயணம். இடத்தை அடைந்தபோது ஒரு பாலடைந்த பிரம்மாண்டம் அப்பியது. உள்ளே பல நாட்டைச் சேர்ந்த வாள்கள், பல்லக்குகள், நூற்றுக்கும் மேற்பட்ட பழங்கால துப்பாக்கிகள், புராதன கடிகாரங்கள் , பழங்கால வாகனங்கள் இருந்தன. குறிப்பாகப் பழைய ஃபோர்டு கார்களைப் பார்த்தது அவ்வளவு உற்சாகமாக இருந்தது. அதிகம் தந்த வேலைப்பாடுகளால் ஆன பொருள்களைக் காண முடிந்தது.

33புகைப்படங்களுக்கு அனுமதி இல்லை. நான் அவர்கள் சொல்வதைக் கேட்பதாகவும் இல்லை. உண்மையில் மிக முக்கியமான இடம் இது. மிகவும் திட்டமிட்டு பிரமாண்டமாகக் கோட்டை அமைக்கப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. அதன் உரிமை தற்போதைய ராஜாவிடம்  இருப்பதால்  பராமரிப்பற்று இருப்பதாக வழிகாட்டிக்கூறினார். கிடைக்கும் சொற்ப கட்டணத்தில்தாம் அதன் பராமரிப்பு நடக்கிறது. அரசு கைக்கு மாறும்போது இன்னும் நேர்த்தியாக மாறலாம்.

மீண்டும் படகில் ஏறியபோது உடைகளை மாற்றிக்கொண்டேன். எனது உத்32தேசமான பயணத்திட்டத்தில் அயோத்தி செல்லும் எண்ணமும் இருந்தது. ‘அக்னி நதி’ நாவலில் வரும் சரயு நதியை ஒட்டி அமைந்த நகரம் இது. அந்நதியைப் பார்க்க எண்ணியிருந்தேன். ஆனால் வாரணாசியில் இருந்து ஐந்து மணி நேரம் பயணம் என்பதாலும் காசியில் இன்னும் கொஞ்ச நேரம் இருக்கத் தோன்றியதாலும் அந்தப்பயணத்தைக் கைவிட்டேன். பயணம் என்பது காட்சிகள் ஆழமேயன்றி எண்ணிக்கையல்ல.

வாட்டர்

30கரைக்கு வந்தவுடன் வழிகாட்டியிடம் ‘வாட்டர்’ திரைப்படம் குறித்து கேட்டேன். அவர் அப்படத்தை அறிந்திருந்தார். ‘வாட்டர்’ காட்டும் விதவைகளின் வாழ்வு இன்னும் உள்ளதா என எழுந்த ஆவலைக் கூறினேன். நீ என்ன பட்டியலில் இல்லாததையெல்லாம் காட்டச் சொல்கிறாய் என்றவர் பின்பு அழைத்துச்சென்றார். உண்மையில் அவருக்கு என்னுடன் பயணிப்பதில் விருப்பம்தான். அவர் குறிப்பிட்ட நிறுவனத்தின் கீழ் பணியாற்றவில்லை. என்னைக்காட்டிலும் அதிக பணம் கொடுக்கும் ஒரு பயணியை அவரால் எளிதாகக் கண்டடைய முடியும். இன்னும் சொல்லப்போனால் அன்று காலையில் என்னை அயோத்திக்கு ஏற்றிவிடுவதுடன் அவர் கலன்றுக்கொண்டிருக்க வேண்டும். ஆனால் மனநிலைக்கு ஏற்ற என் திடீர் மாற்றங்களுக்கு ஏற்ப அவர் தன் பணி நேரத்தையும் மாற்றிக்கொண்டார்.

விதவைகளின் இல்லம் செல்ல ஒரே நிபந்தனை குறைந்த பட்சம் அவர்களுக்கான வெள்ளை புடவையும்31 பிஸ்கட்டுகளும் வாங்கிச் செல்ல வேண்டும் என்றார். காரணம் இல்லாமல் அவர்களிடம் பேச இயலாது. எனவே நன்கொடை தருவதாகச் சொன்னால் உள்ளே விடுவார்கள் என்றார். நானும் நான்கைந்து புடவைகளையும் பிஸ்கட்டுகளையும் வாங்கிக்கொண்டு ஓர் ஆசிரமம் சென்றேன். ” ‘வாட்டர்’ திரைப்படத்தில் உள்ளது போல இப்போது இல்லை. இன்னும் சொல்லப்போனால் எங்கள் முஸ்லிம் மதத்தில் கூட இப்போது நிறைய தளர்வு நிகழ்ந்துள்ளது. எனவே முழுக்க வெள்ளையாக வாங்காமல் கொஞ்சம் வண்ணம் கலந்துள்ளதை வாங்கலாம்” என புடவைகளை வாங்கியப்பின் சொன்னார். நான் சென்ற ஆசிரமத்தில் 20 விதவைப் பெண்கள். அதில் பாதிக்கும் மேல் முதுமையானவர்கள். அனைவருக்கும் இந்தி மட்டும் தெரியும். நான் இருப்பதிலேயே வயதான விதவை தாய் ஒருவரிடம் சேலையைக் கொடுக்கும் போது ஏதோ சொன்னார். ‘பேட்டா’ என்பது மட்டும் புரிந்தது. வழிகாட்டி ஆங்கிலத்தில் “ஏன் முழுக்க வெள்ளையாக உள்ளது கொஞ்சம் வண்ணம் இருக்கலாமே மகனே” எனக்கேட்கிறார் என்றார். மனம் கலங்கியது. வழிகாட்டியை நொந்துக்கொண்டேன். என்னையும் நொந்துகொண்டேன். ‘வாட்டர்’ போல இல்லாமல் அவர்கள் வாழ்வு வண்ணமயமாக மாறிவிட்டிருந்ததில் மகிழ்ச்சியாக இருந்தது.

வாரணாசியில் அவ்வாறான நிறைய ஆசிரிமங்கள் உள்ளன. சில அரசுசார்பற்ற இயக்கங்கள் அவற்றை நடத்துகின்றன. ‘வாட்டர்’ திரைப்படத்தில் 1938-ஆம் ஆண்டில் நடந்ததாகக் காட்டப்படும் ஒரு வாழ்வியல் சூழல் முற்றாக மாறி, விதவைகளுக்கு மொட்டையடிக்கப்படும் நிலையெல்லாம் இங்கு இல்லை எனவும் கணவன் இல்லாமல் தனித்து வாழும் பெண்களையும் குடும்பத்தால் நிராகரிப்பட்ட பெண்களையுமே பராமரிப்பதாக நாங்கள் சென்ற ஆசிரமத்து நிர்வாகி கூறினார்.

2017-03-24 16.45.38புறப்படும்போது “மலேசியாவில் பனாரஸ் பட்டுப்புடவை பிரபலம். அது எங்கே நெய்கிறார்கள்?” எனக்கேட்டேன். வழக்கமாக வரும் சுற்றுப்பயணிகள் சில பனாரஸ் பட்டுப்புடவை கடைகளுக்குச் செல்வார்கள் என்றார். ஆசிரமம் இருந்தப்பகுதி வாரணாசியின் மையமாதலால் அங்கிருந்து அனைத்துமே அருகேதான் என்றார். சில நிமிடங்களிலேயே பனாரஸ் பட்டு தயாரிக்கும் இடம் சென்றோம். ஒரு வயோதிகர் புடவை நெய்துகொண்டிருந்தார். அந்தக்கருவியைத் திரைப்படங்களில் பார்த்துள்ளேன். கொஞ்ச நேரம் அதை வேடிக்கைப்பார்த்தேன்.   அதன் சத்தம் ஒரு இசைபோல இருந்தது. அகிலன் மூலம் அங்கு அகோரிகளுக்கான ஆலயம் இருப்பதை அறிந்திருந்ததால் அங்கும் சென்று பார்த்துவிடலாம் என்றேன்.

20170322_121247

அகோரிகள் ஆலயம்

வாசலில் மண்டையோட்டு சிற்பங்களை வைத்து பயமுறுத்தலாக இருந்தது அகோரிகள் ஆலயம். சமாதியாகிவிட்ட அகோரிகள் படங்கள் அங்கு இருந்தன. ஓர் அகோரியின் கல்லறை அங்கு இருந்தது. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே அது பக்தர்கள் பார்வைக்காகத் திறக்கப்படும் என்றார் அதன் பராமரிப்பாளர்.  மூன்று கறுப்பு நாய்கள் இருந்தன. வாசலில் labrador. உள்ளே இருந்த Great Dane ரக நாயைப் பார்த்தவுடன் வழிகாட்டுனர் பாதி இறந்துவிட்டார். எதுவும் குரைக்கவில்லை. சுதந்திரமாகச் சுற்றிக்கொண்டிருந்தன. நான் சென்றபோது ஒரு பூனைபோல தனது கன்னங்களை என் மேல் தேய்த்தது. அதுவே என்னை கொஞ்சம் பின்னே தள்ளும் அளவுக்குச் சக்தி வாய்ந்தது. ஒரு Great Dane காட்டக்கூடிய முழு வாஞ்சையை மனிதனால் தாங்க முடியுமா எனத்தெரியவில்லை. கொஞ்சம் தடவிக்கொடுத்தேன். நான் நாய்களுடன் வாழ்பவன். அதற்கு என்மேல் நாயின் வாடை அடித்திருக்கலாம் என்றேன். வழிகாட்டி பரிதாபமாகச் சிரித்தார். அகோரிகள் ஆலயம் தியானம் செய்வதற்கென்றே உருவாக்கப்பட்டுள்ளது. நான் நாயுடன் விளையாடுவது அதன் பராமரிப்பாளர் விரும்பவில்லை. காமிராவை எடுத்தபோது இது சுற்றுப்பயணத்தளம் இல்லை என கண்டித்தார். கொஞ்ச நேரம் அங்கிருந்துவிட்டு நாய்களைப் பிரியமுடியாமல் வெளியேறினேன். திரும்பும் வழியில் பனாரசு இந்து பல்கலைக்கழகத்தைப் பார்த்தேன். ஆசியாவிலேயே பெரிய வளாகம் கொண்ட பல்கலைக்கழகம். இதை நிறுவிய மதன் மோகன் மாளவியாவுக்கு பாரதியார் சில அடிப்படை ஆலோசனைகளை வழங்கினார் என அவரது தங்கை மகன் சொன்னது அப்போது நினைவுக்கு வந்தது.

அறைக்குச் சென்று தூங்க வேண்டும்போல இருந்தது. ஆனாலும் காசி மோகம் தீரவில்லை. இரவில் மீண்டும் டெல்லிக்குப் பயணம். நானே மாலையில் ஹாட்டலுக்குச் சென்றுவிடுவேன் என்றும் என்னை படித்துறையில் விட்டுவிட்டு கிழம்பும்படியும் வழிகாட்டியிடம் கூறினேன். “நீ கடைசிவரை கங்கையில் இறங்கவே இல்லையே ” என்றார் அவர்.

“இந்த கங்கையில் ஏகப்பட்ட கிருமிகள் உள்ளன எனும் அறிவியலில் எனக்குச் சந்தேகமே இல்லை. அதனால் இந்த நதியில் நான் குளிக்கப்போவதில்லை. ஆனால் அதை பொருட்படுத்தாத மனிதர்களை காண்பது ஒரு பயணியான எனக்கு அவசியமாக உள்ளது” என்றேன். வழிகாட்டுனர் சிரித்தார். “சட்டப்படி இயந்திரப்படகுகளுக்கு இங்கு அனுமதி இல்லை. ஆனால் இங்கு ஓடும் அவை சட்டத்தை மீறியதே” என்றார். வழிகாட்டி விடைப்பெற்றார்.

கடைசியாக ஒருதரம் காசி படித்துறையில் நடந்துபார்த்தேன். துண்டு துண்டான காட்சிகளைத் தொகுத்துப்பார்த்தேன். நதியில் மிதந்துசெல்லும் படகுகளை வேடிக்கை பார்த்தேன். இங்கு எல்லோருமே எதற்காகவோ வருகிறார்கள். யாராக வருகிறார்களோ அவர்களுக்கானதாக இந்நகரம் மாறிவிடுகிறது. காசி ஒரு நகரம் இல்லை. அது தன்னுள்ளே எண்ணற்ற கணங்களைத் தொகுத்துவைத்திருக்கும் காலங்களால் ஆன ஆல்பம்.

  • தொடரும்
  • (சேரன் கவிதை வரி தலைப்பாக்கப்பட்டுள்ளது)
(Visited 256 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *