சாம்பல் பூத்த தெருக்கள் வழி… 3

08

                இந்தியா கேட்

டில்லிக்கு வந்தபின் ஏழு நாட்களுக்கு முன் தங்கிய ஹாட்டலிலேயே மீண்டும் தங்கினேன். அங்கு வேலை செய்யும் சிலர் ஓரளவு நண்பர்களானார்கள். அல்லது டிப்ஸ் கொடுத்து நான் நெருக்கமாகியிருந்தேன். தென்னிந்தியா போல இல்லை. ஹாட்டல்களில் டிப்ஸ் கொடுக்கும்வரை அறையைவிட்டு அகல மாட்டேன் என்கிறார்கள். ஹாட்டல் மூலம் டில்லியைச் சுற்றிப்பார்க்க ஏற்பாடு செய்யப்போகும் என் திட்டத்தைக் கூறினேன். அவர்கள் அது சரியான திட்டமில்லை என்றார்கள். செலவைக் குறைக்க ஒரு உபாயம் கூறினர். அதன்படி அதில் ஒருவரின் நண்பர்  காரை வரவழைத்தார்கள். ஒப்பீட்டளவில் கட்டணம் குறைவு. மேலும் முக்கியமான இடங்களையும் காட்டிவிடுவார் எனக்கூறினார்.

இந்தியா கேட்

01

காந்தி சுடப்பட்ட    இடத்தில்

டில்லி மாநகரின் மையப்பகுதிக்குச் சென்றோம். ‘இந்தியா கேட்’ முக்கியமான தேசியச்சின்னம். 42மீட்டர் உயரமுள்ள இந்த கலைச்சின்னம் ஆங்கிலேய ராணுவத்தின் சார்பாக போரிட்டு முதலாம் உலகப்போரில் இறந்த 70000 வீரர்களின் நினைவாகவும், 1919ம் ஆண்டில் நிகழ்ந்த முன்றாவது ஆங்கிலேயே-ஆப்கானியப்போரில் உயிர் நீத்த வீரர்களின் நினைவாகவும் எழுப்பப்பட்டது.  அங்கு அது முக்கியமான சுற்றுலாத்தளம் . அருகில் சென்று பார்த்தேன். போரில் இறந்த வீரர்களின் பெயர்கள் இதில் செதுக்கப்பட்டிருந்தன. அருகிலேயே இந்திய ஜனாதிபதி கோட்டையை வெளியில் இருந்து பார்த்தேன். (வெளியில் இருந்துதானே பார்க்க முடியும்!) உலகில் இன்று அதிபர்கள் வாழும் கோட்டைகளில் இதுவே பெரியது. கோட்டையைவிட அந்த அகன்ற சாலையில் உள்ள பிரிட்டிஷ் ஆட்சிகாலக் கட்டிடங்களே அவ்விடத்துக்கு கம்பீரம் சேர்ப்பதாய் எனக்குப்பட்டது. அந்தக் கட்டடங்கள் அரசின் ஒவ்வொரு துறைகளுக்கான  தலைமையகங்களாக உள்ளன. இருபுறமும் ஒன்றுபோலவே அவை நிறுவப்பட்டிருந்தன. புத்ரா ஜெயாவுக்கு தமிழக நண்பர்களை அழைத்துச் சென்றால் டில்லி போல உள்ளது எனச்சொல்வார்கள். அதன் உண்மையை அறிந்தேன்.

காந்தி ஸ்ம்ருதி

060504மஹாத்மா காந்தி தனது வாழ்நாளின் கடைசி 144 நாட்களை கழித்த பிர்லா ஹவுஸ்’ எனும் இடத்தில் காந்தி ஸ்ம்ருதி அமைந்திருந்தது.. அவர் படுத்திருந்த கட்டில்,  தடி மற்றும் மூக்குக்கண்ணாடியைப் பார்வைக்கு வைத்திருந்தனர். அவர் வழக்கமாக நடந்து செல்லும் பாதைச்சுவடுகள் அடையாளமிடப்பட்டிருந்தன. அதில் பொதுமக்கள் நடக்க அனுமதி இல்லை. அந்தப் பாதையின் முடிவில் காந்தி சுடப்பட்ட இடத்தில் தியாகித்தூணை அமைத்துள்ளனர். அருகில் அருங்காட்சியகம். மிக முக்கியமாக அவர் வாழ்வில் நடந்த சில முக்கியமான சம்பங்களைக் காட்சிகளாகச் செய்து வைத்துள்ளனர். வாசலில் உலக அமைதிக்கான GONG இருந்தது. ஆச்சரியமாக அதில் மலாய் வாசகம் பிரதானமாக இருந்தது. அருகில் இருந்தவர்களிடம் காரணம் கேட்டேன். “அது மலாயா?” என என்னையே திரும்பக்கேட்டனர். அக்காலத்தில் இந்த இல்லம் பிர்லா ஹவுஸ் அல்லது பிர்லா பவன் என்று அழைக்கப்பட்டிருக்கிறது. ஒருகாலத்தில் பிர்லா குடும்பத்தினரின் இருப்பிடமாக விளங்கிய இந்த வீடு காந்திஜி டெல்லிக்கு வரும்போதெல்லாம் தங்கும் இடமாக இருந்துள்ளது. காந்தி மரணத்துக்குப் பின்னர் அவர் குடும்பத்தினர் அரசுக்கு இவ்விடத்தை அவர் நினைவிடமாக உருவாக்க வழங்கியுள்ளனர்.  கொஞ்சம் தள்ளி பயணமானால் காந்தி சமாதி உள்ளது. அங்கு அவர் சொன்ன சில வாசகங்கள் இருந்தன. பிடித்தவற்றை படம் எடுத்துக்கொண்டேன்.

இந்திய தேசிய இந்திய அருங்காட்சியகம்

1314இங்கு 2 லட்சம் அரும்பொருட்களின் சேகரிப்பு உள்ளதாகக் குறிப்பு இருந்தது. வெளிநாட்டவர் என்றால் 650 ரூபாய் கட்டணம். நான் ஸ்டைலாக 20 ரூபாயை நீட்டி இந்தியக்குடிமகனாகவே சென்றேன். யாரும் கண்டுக்கொள்ளவில்லை. கி.மு 2700 ம் ஆண்டை சேர்ந்த சுடுமண் பொருட்கள், மௌரியர் காலம், தென்னிந்திய விஜயநகர காலம், குப்தர் காலம், பௌத்த மரபில் உள்ள கலைப்பொருள்கள், மோகலாயர் காலகட்ட ஓவியங்கள் என ஏராளம் இருந்தாலும் மொகஞ்சதாரோ – ஹாரபா நாகரீகத்தில் எடுக்கப்பட்ட பொருள்களைப் பார்த்ததும் உற்சாகமடைந்தேன். புகைப்படம் எடுக்க தடையில்லை. ஆனால் நுணுக்கமான கலைநுட்பங்களைக் கொண்ட வரலாற்றுச் சுவடுகளைப் பதிவு செய்யும் திறன் என் கைத்தொலைபேசியில் இல்லை. காலக்கட்டங்களுக்கு ஏற்ப பொருள்களை அடுக்கி வைத்திருந்தனர். பெரிய யானையின் தந்தத்தில் மிக அழகாக புத்தர் வாழ்க்கை செதுக்கப்பட்டிருந்தது. வெளிநாட்டவர் புரிந்துகொள்ள ஆங்கிலம்/இந்தி மொழி பதிவடங்கிய ஒலிக்கருவி வாடகைக்கு தரப்படுகிறது. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் சிற்பங்களின் முகங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பார்ப்பது புது அனுபவம்.

பழைய டில்லி

12டில்லியை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். ஒன்று பழையது மற்றது புது டில்லி. பழைய டெல்லி பெரும்பாலும் பரபரப்பு குறையாமலும் பெரிய வளர்ச்சி காணாமலும் இருந்தது. நான் ஒரு ரிக்‌ஷாவை பேரம் பேசி எடுத்தேன். அதில் பழைய டில்லி தெருக்களில் வலம் வருவதன் மூலம் அவர்கள் வாழ்வியலை ஓரளவு பார்க்க முடியலாம் என நம்பினேன். குறுகலான சந்துகள் வழியாக ரிக்‌ஷா புறப்பட்டது. சுற்றுப்பயணிகளுடன் அதிகம் பழகுவதில் எளிய ஆங்கிலம் பேசுகின்றனர் ரிக்‌ஷா ஓட்டிகள். “சேரிகள் உள்ளனவா? அங்குப் போகலாமா?” என்றேன். அங்கெல்லாம் மக்கள் நன்றாக வாழ்கின்றனர். இங்கிருந்து அதிக தொலைவு. அவர்களிடம் தொலைக்காட்சி, வாகனங்கள் என அனைத்தும் உண்டு என்றார். எளிய மக்களுக்குக் குறைந்த வசதி கிடைத்தாலே, இது போதும் அவர்கள் நன்றாக வாழ்கின்றனர் என்ற மனநிலைதான் . மும்பை தாராவி போல தென்னிந்தியத் தமிழர்கள் வாழும் தனித்தப்பகுதி போக வேண்டும் என்றேன். அப்படி டெல்லியில் இல்லை என்றும் சொன்னார்.

குறுகலான தெருக்களில் கட்டுப்பாடுகள் இல்லாமல் மின்சார கம்பிகள் மேலே முயங்கி கிடந்தன. அவை11 ஆபத்தில்லையா எனக்கேட்டேன். “ஆபத்துதான்” என்றார். அதனால் என்ன என்பதுபோல இருந்தது அவரது பதில். அந்தத் தெருவில் சிறிய சிறிய கடைகளாக வணிகம் நடத்துகின்றனர். எதிர்ப்புறம் செங்கோட்டை. ஆக்ரா கோட்டையை ஒத்த கட்டுமானம். அக்பர் அவர் தலைநகரை ஆக்ராவில் இருந்து டெல்லிக்கு மாற்றிய போது கட்டியது என சொன்னார் ரிக்‌ஷாகாரர். எதிர்ப்புறம் திகம்பர ஜைன கோயில். 1656இல் கட்டப்பட்டது. இந்தியாவின் மிகப்பெரிய ஜும்மா மசூதியும் அங்குதான் உள்ளது. 1656ம் ஆண்டு முகலாயப் பேரரசர் ஷாஜஹானால் கட்டப்பட்ட இந்த மசூதியில், ஒரே நேரத்தில் 25 ஆயிரம் பேர் தொழுகை நடத்த முடியும் என்றார்கள். அனைத்தையும் ரிக்‌ஷாவில் பயணித்தபடி பார்த்தேன். இறங்கி பார்க்க அவகாசம் இல்லை.

தாமரைக் கோயில்

10பஹாய் மதத்தவரின் தாமரை வடிவில் அமைந்த ‘பஹாய் லோட்டஸ் டெம்பிள்’ கவர்ச்சியானது. உள்ளே தியானம் செய்ய வெறுமையாக விடப்பட்டிருந்தது. அவ்வாறான பரந்த வெற்று அறை உணர்வு ரீதியில் சட்டென அமைதியைக் கொடுத்தது. நான் அங்குச் சென்றபோது கடும் வெயில். முக்கியச் சாலையில் இருந்து அந்தக் கோயிலுக்கு 500 மீட்டராவது நடக்க வேண்டும். அதன் அழகில் சோர்வு தட்டாமல் நடந்தேன். அற்புதமான கட்டிடக்கலை. வெளியே பளிங்குக்கல்லினால் சூழப்பட்ட வெண்மை.

புறப்பாடு

கடும் சிக்கனத்தால் ரூபாய் கொஞ்சம் அதிகமாகவே தங்கிவிட்டிருந்தது. உள்ளதிலேயே ஆடம்பரமான உணவு விடுதிக்கு வண்டியை விடச்சொன்னேன். மட்டன் பிரியாணி அவ்வளவு சுவை. கழிவறையில் அமர சோபாவைப் போட்டிருந்தனர். சோபாவில் அமரும் அளவுக்கு கழிவறையில் என்ன வேலை என புரியவில்லை. ஆடம்பரம் என்பது சம்பந்தம் இல்லாத இடத்தில் சம்பந்தம் இல்லாத பொருள்கள் இருப்பதுதான் போல. இரவு 11க்கு விமானம். அவசரம் இல்லாமல் கிளம்பினேன். விமானத்தில் ஏறியப்பின் அறிவிப்பில் எந்தெந்த நகரங்களைக் கடந்து விமானம் செல்லுமெனச் சொன்னார்கள். முதல் நகரம் வாரணாசி. விமானம் புறப்பட்ட முக்கால் மணி நேரத்தில் நான் வாரணாசிக்கு மேல் பறந்துகொண்டிருக்கலாம் எனத்தோன்றியது. ஃபாங்க் உண்ட யாராவது நான் செல்லும் விமானத்தின் ஒளியை நகரும் நட்சத்திரமாகக் கற்பனைச் செய்திருக்கக்கூடும்.

முற்றும்

(Visited 281 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *