ஏன் பெ.ராஜேந்திரனுக்கு நான் ஓட்டுப்போடப்போவதில்லை – 1

rajenthiranஅடுத்தவாரம் ஞாயிற்றுக்கிழமை (23.4.2017) மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தேர்தல். நானும் அச்சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினர்தான். ராஜேந்திரன் தலைமையில் சடங்குகள் செய்ய மட்டுமே தகுதி உள்ளதாக மாறிவிட்ட அவ்வியக்கத்தின் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதை தவிர்த்து ஆண்டுகள் சில ஆகின்றன. இந்நிலையில் விரிவுரையாளர் மன்னார் மன்னன் அவர்களை ஒரு கண்துடைப்புக்காக ஒருதவணை தலைவராக நியமித்தக் கதையெல்லாம் அனைவரும் அறிந்ததே. பதவியைத் தக்க வைக்க ஆவல் இல்லாத; தன்னை மீறி புதியத்திட்டங்களை உருவாக்க முயலாத ஒருவரை தனது தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக்கொண்டு மீண்டும் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார் பெ.ராஜேந்திரன். ஒருவர் இரு தவணைக்கு மேல் தலைவர் பதவியில் இருக்கக் கூடாது என்ற சட்டத்தின் அடிப்படையில் நிகழ்த்திய திருவிளையாடல் அது என அறிவுள்ளவர்கள் அறிவர்.

மீண்டும் ராஜேந்திரன் தலைவராகப் போட்டியிடுவது தேச விரோத செயலெல்லாம் இல்லை. தலைவர் பதவிக்கு அலையும் அற்பங்களைப் பார்த்துப்பார்த்து சலித்துவிட்ட நிலையில் 10 ஆண்டுகளுக்கு மேல் தலைமைப்பொறுப்பில் இருந்துவிட்ட ராஜேந்திரனுக்கு அப்பதவியால் அடைந்த சொகுசுகளை இழப்பதில் இருக்கும் சங்கடங்களை அறிய முடிகின்றது. இது ஒருவகையில் அடையாளச் சிக்கல்தான்.

சை.பீர்முகம்மது ஒருமுறை தேர்தலில் ராஜேந்திரனுடன் போட்டியிட்டு தோற்றார். ஆனாலும் அவரை இன்றுவரை எழுத்தாளர் என அடையாளப்படுத்தலாம். மு.கணேசன் இப்போது போட்டியிடுகிறார். ஒருவேளை அவர் தோற்றாலும் தன்முனைப்புப் பேச்சாளர் என ஓர் அடையாளம் உண்டு. ராஜேந்திரனுக்குச் சங்கத்தை விட்டால் வேறு வழியில்லை என்பது எவ்வளவு பரிதாபமான நிலை. அவர் சங்கத்தின் தலைவராக இல்லையென்றால் அவரை என்னவென்று அடையாளம் காண்பது? பாவம் அவர் எழுத்தாளரும் இல்லை. ஞாயிறு பத்திரிகை ஆசிரியர் என அழைக்கலாம். ஐயகோ! அதுவும் பத்திரிகை இருக்கும் வரையோ அல்லது அவருக்கு வேலை இருக்கும் வரைதானே. உண்மையில் நம் எதிரிக்குக் கூட இந்நிலை வரக்கூடாதுதான். ஆனால், இலக்கிய அறத்தில் இரக்கத்திற்கு இடமே இல்லை.

இரகசியமான ஆதரவு, கள்ள மௌனம், ஆதரிப்பதாகச் சொல்லி எதிர்ப்பது, எதிர்ப்பதாகச் சொல்லி ஆதரவு தருவது, குறுந்தகவல்களில் மட்டும் குமுறுவது, ஓட்டுக்கு விருதுகளை பேரம் பேசுவது போன்ற நொன்னை தனமெல்லாம் என்னிடம் இல்லை. எழுத்தாளன் முதலில் தன்னளவில் நேர்மையாக இருக்க வேண்டும் என நம்புகிறவன் நான். அவ்வகையில் இந்தத் தேர்தலில் ராஜேந்திரனை நான் ஏன் ஆதரிக்கவில்லை என்பதைப்பற்றி வெளிப்படையாகவே கொஞ்சம் பேசலாம் என நினைக்கிறேன்.

1. மாணிக்கவாசக புத்தகப் பரிசளிப்பில் ஊழல்.

_வளர்ச்சியும்__46883_zoom2009-இல் நடந்தது பழைய கதையாக இருந்தாலும் மீண்டும் நினைவுப்படுத்த வேண்டி உள்ளது. மறப்பது  மரபாக வைத்திருப்பவர்களுக்காகவாவது நினைவுபடுத்துவதைக் கடமையாக மாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது.

பொதுவாகவே ஓர் இயக்கம் போட்டி ஒன்றை நடத்தும்போது அந்த இயக்கத்தினரோ அவர்களுக்கு நெருக்கமானவர்களோ போட்டியில் பங்கெடுக்கக்கூடாது என்பது விதி. உலகம் முழுக்க அமுலில் உள்ள விதியும் இதுவே. ‘வல்லினம்’ நடத்திய சிறுகதைப்போட்டியில் கூட அதன் அங்கத்தினர் யாரும் பங்கெடுக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம். இத்தனைக்கும் வல்லினம் ஓர் அமைப்போ இயக்கமோ அல்ல. அஃது ஓர் பதிப்பகம் மட்டுமே. ஆயினும் சட்டங்களை மீறிய அறம் ஒன்று உண்டு. அது நமக்குள் இயங்குவது. அதையே நாங்கள் கடைப்பிடித்தோம்.

ராஜேந்திரன் அவ்வாண்டு மாணிக்கவாசக விருதுக்கு அவர் மனைவியின் ‘மலேசியப் புதுக்கவிதைகள் தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற நூலை போட்டியில் இணைத்துக்கொண்டார். மாணிக்கவாசக விருதையும் பெற்றுக்கொடுத்தார். அதே ஆண்டு ஆய்வாளர் ஜானகிராமன் மாணிக்கம் எழுதிய ‘மலேசிய இந்தியர்களின் இக்கட்டான நிலை’ எனும் நூலும் போட்டிக்கு அனுப்பப்பட்டிருந்தது. கற்றவர்கள் அந்நூல் எவ்வகையான முக்கியத்துவம் பெற்றது என அறிவர். சுமார் 17 ஆண்டுகள் செய்த ஆய்வின் பலனாக எழுதப்பட்ட அந்நூலில் உள்ள தகவல்கள் கடும் உழைப்பின் பலனால் விளைந்தவை. மலேசிய இந்தியர்கள் பற்றி புதிய உண்மைகளைச் சொல்பவை.

சரி, இங்கு இறுதி முடிவை எடுத்தது நடுவர் குழுவாகவே இருந்து தொலையட்டும். தரம் பற்றிஜ் பேசத்தொடங்கினால் அது நிரூபிக்க முடியாத ஒரு புள்ளியில் சென்று நிற்கும். காரணம் தரம் என்பது ரசனை, அறிவு, ஆளுமையைப் பொறுத்தே முடிவு செய்யப்படுகிறது. என் கேள்வி அதுவல்ல.

  • தலைவர் கணவனாக இருக்க மனைவியின் நூலை போட்டிக்கு இணைப்பது சரியா?
  • மனைவியின் நூலுக்குத் தகுந்த அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என உண்மையில் வேட்கை இருந்தால் தலைவர் பதவியை விட்டு  அவ்வாண்டு நீங்கியிருக்க வேண்டாமா?
  • இவ்வாறு சட்டத்திற்கும் அறத்திற்கும் புறம்பாகச் செயல்பட்டதால் ஜானகிராமன் போன்ற ஆய்வாளர்களின் தரமான நூல் புறக்கணிக்கப்படுவது முறையா?
  • இந்தக் கேள்விகளுக்கான பதில் அனைத்துமே ராஜேந்திரனுக்கு எதிர்மறையான பதிலை வழங்கும் பட்சத்தில் அவருக்கு ஓட்டுப்போடுவதன் மூலம் அந்த அநீதியில் நானும் பங்கெடுப்பதாகவே கருதுகிறேன். நீங்கள் எப்படி?

– தொடரும்

(Visited 783 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *