நேற்றைய கட்டுரையை வாசித்து பல நண்பர்கள் தொடர்புகொண்டனர். பெரும்பாலும் அறிவுரைகள். சில ஆதரவு கருத்துகள். சில அரைவேக்காட்டுத்தனமான புரிதல்கள். எடுத்த எடுப்பில் “சார் உங்கள் இலக்கிய பாதையும் அவர்கள் இலக்கியப் பாதையும் வேறு வேறு. ஆனால் இருவருமே தமிழுக்கு முக்கியம்தான்…” என தங்கள் ஞானம் பொருந்திய முகரையை என் தரிசனத்துக்கு வைத்தனர். நான் அவர்களிடம் கேட்டதெல்லாம் ‘முதலில் கட்டுரையை ஒழுங்காக வாசித்தீர்களா?’ என்பதுதான். எதையும் நிதானமாக வாசிக்காத புரிந்துகொள்ளாதவர்களில் இளம் எழுத்தாளர்களே அதிகம் என நான் நினைத்திருந்தேன். ஆனால் மை.தி.சுல்தான் அவர்கள் என் கட்டுரையை வித்யாசாகர் எழுதியது என எதிர்வினை ஆற்றியதில் இருந்தே இந்தக் கொடிய நோய் மூத்தப்படைப்பாளிகள் மத்தியிலும் உண்டு எனப்புரிந்தது.
நான் அக்கட்டுரையில் இலக்கியம் குறித்து எங்குமே பேசவில்லை. நான் பேசுவதெல்லாம் இலக்கிய அறம் குறித்து மட்டுமே. ஆனால் அதை புரிந்துகொள்ள முடியாத அல்லது புரிந்தும் புரியாததுபோல நடிப்பவர்கள் சிக்கலை எளிமைப்படுத்த நினைக்கின்றனர். அவர்கள் நேராக வெகுசன / தீவிர இலக்கியத்தில் ராஜேந்திரனையும் என்னையும் நிறுத்தி இரண்டுமே தமிழுக்கு அவசியம் என அறிவுக்கொழுந்தைக் கிள்ளி வீசுகின்றனர். அதன்மூலம் நான் முன்வைக்கும் கேள்விக்கு நேர்மையான பதிலைச் சொல்வதில் இருந்து தப்புகின்றனர். எழுத்தாளர் சங்கம் முன்னெடுக்கும் இலக்கிய முயற்சிகளை ரசனை அடிப்படையில் நான் அணுகவில்லை. அந்தச் செயல்பாட்டில் உள்ள அப்பட்டமான சுயநல அரசியலையே சுட்டிக்காட்டுகிறேன்.
2. சேரனுக்கு ஒரு லட்சம்
31.3.2012 இல் தினக்குரல் பத்திரிகையில் ‘வெட்கப்படுகிறேன்’ எனும் தலைப்பில் நடிகர் சேரன் சம்பந்தப்பட்ட செய்தி ஒன்று வந்தது. மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் ஆஸ்ட்ரோ வானவில்லும் இணைந்து மூன்றாவது முறையாக ஏற்பாடு செய்திருந்த நாவல் போட்டிக்குச் சேரனை அழைத்திருந்தனர். அதில் கலந்துகொண்டு நாவல் போட்டியைத் தொடக்கிவைக்க சேரன் ஏற்பாட்டாளர்களிடம் ஒரு லட்சம் ரூபாய் கேட்டிருக்கிறார். (ஏறக்குறைய 10,000 ரிங்கிட்) இவர்களும் ஒப்புக்கொள்ள, மலேசியா வந்த சேரன் இங்குத் தமிழர்கள் மொழியை வளர்க்க படும் பாட்டைப்பார்த்து அந்தப்பணம் தனக்கு வேண்டாம் என்றும் அதை வெற்றியாளர்களுக்குப் பகிர்ந்துகொடுக்கும்படியும் கூறிவிட்டார்.
வழக்கம் போல தமிழ் நெஞ்சர்கள் உள்ளம் கசிந்தது. தமிழ் வாந்தி எடுத்தனர். இந்நாட்டு தமிழ்மீது சேரனுக்கு எத்தனை அக்கறை என நெகிழ்ந்தனர். அவருக்கு மலேசியத் தமிழ் இலக்கியத்தின் நிலையைப் புரியவைத்த ஏற்பாட்டுக்குழுவை பயங்கரமாகப் பாராட்டினர். எல்லாம் சரி! ஆனால் சில கேள்விகளை யாருமே கேட்கவில்லை.
1. மலேசிய நாவல் தொடக்க நிகழ்ச்சிக்குத் தமிழக இயக்குனரை அழைத்தே தீரவேண்டும் என்ற அவசியம் என்ன?
2. அப்படி அழைத்தாலும் அவருக்கு 1 லட்ச ரூபாயைக் கொடுப்பதாக ஒப்புக்கொண்டிருப்பதால் அந்தப்பணம் யாருடையது?
3. அது ஆஸ்ட்ரோவின் பணம் இல்லை என்றால் எழுத்தாளர் சங்கம் அப்பணத்தைக் கொடுக்க ஒப்புக்கொண்டதா? அது சங்கத்தின் பணமென்றால் அதற்கான அவசியம் என்ன வந்தது?
4. அதே ஆண்டில் (2012) தேசிய நூலகத்தில் நடந்த ‘வாசிக்க வாருங்கள்’ நிகழ்ச்சியில் சிலருக்கு விருது வழங்கப்பட்டது. ஒருவருக்கு 300 ரிங்கிட். மலேசிய எழுத்தாளர்களுக்கு 300 ரிங்கிட், ஆனால் தமிழகத்தில் எல்லா வசதியுடனும் புகழுடனும் இருக்கும் சேரனுக்கு 10,000 ரிங்கிட்டா? இது என்ன நியாயம்?
5. எழுத்தாளர் சங்க உறுப்பினர்களைக் காட்டி அரசிடம் பெரும் பணத்தை அவர்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் தமிழக இயக்குனருக்கு வழங்குவதில் ஏதேனும் காரணம் உண்டா? (அதே காலக்கட்டத்தில் ராஜேந்திரனின் மகன் துணை இயக்குனருக்கான வாய்ப்பை தேடிக்கொண்டிருந்த தகவலை நாம் இன்னமும் வதந்தி என்றே நம்புவோம்.)
6. தமிழகத்திலும் இலங்கையிலும் மலேசியாவிலும் நாவல் துறையில் சாதித்த பல ஆளுமைகள் உள்ளனர். அவர்களையெல்லாம் அழைக்காமல் ஓர் இயக்குனரை அழைப்பதன் மூலம் எதை சாதித்தார்கள்?
7. ராஜேந்திரன் என்ற தனி மனிதர் தன் சொந்தப்பணத்தில் யாரையும் அழைக்கவோ அவருக்கு எவ்வளவு பணம் கொடுக்கவோ அனுமதி உண்டு. அதற்கான கணக்குகளை அவர் வருமானவரித்துறையில் காட்டிக்கொள்ளலாம். ஆனால், சங்கத்தின் பெயரில் அதன் வங்கி இருப்பின்மூலம் ஒருவரை அழைப்பது முறையாகுமா?
8. இதெல்லாம் இருக்க, நாவல் போட்டியில் முதல் பரிசு பெறுபவருக்கே அவ்வளவு பெரிய தொகை வழங்கப்படாதபோது, சிறப்பு விருந்தினருக்கு அவ்வளவு பெரிய தொகையைக் கொடுக்க அறிவுள்ளவன் சம்மதிப்பானா?
என் கேள்விகள் அனைத்தும் எனக்கானவை அல்ல. நான் எழுத்தாளர் சங்கம் கொடுக்கப்போகும் எந்தப் பொன்முடிப்புக்காகவும் காத்திருபவனும் அல்ல. இதற்கான நியாயமான காரணங்கள் ராஜேந்திரனிடம் இருக்கலாம். அவர் திருவாய் மலர்ந்தால்தான் உண்மை வெளிச்சத்துக்கு வரும். தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரையாக அழைத்து மணிக்கணக்காக நியாயம் சொல்வது உண்மையில் இருந்து தப்பும் ஒருவழிதான்.
சிங்கப்பூர் போன்று அரசாங்க அங்கீகாரங்கள் இல்லாமல், தமிழகம் போல அரசு அங்கீகாரங்கலோ பரந்த வணிக வசதிகளோ இல்லாமல் காலம் முழுக்க மொழியின்மீது உள்ள தீராத காதலால் மட்டுமே இலக்கியத்தில் இயங்கும் மூத்தப்படைப்பாளி ஒருவருக்கு இந்நாட்டில் கிடைக்காத கௌவரவும் அங்கீகாரமும் வெகுமதியும் தமிழக சினிமாக்காரனுக்குக் கிடைப்பதில் என்ன நியாயம் உள்ளது? எனக்கு என் நாட்டு எழுத்தாளர்களும் அவர்கள் நலனும் முக்கியம். சங்கம் அதைதானே கருத்தில் கொள்ள வேண்டும். இங்கு கிள்ளிக்கொடுத்து அங்கு அள்ளிக்கொடுப்பதை நான் ஏற்கவில்லை. ஓட்டுப்போடப்போகும் நீங்கள் எப்படி?
- தொடரும்