கவனம்: நான் இங்கே பேசுவது முன்னாள் எழுத்தாளர் சங்க தலைவர் ராஜேந்திரனின் செயல்பாடுகளில் உள்ள பலவீனங்கள் குறித்தும் அவர் ஏன் தொடர்ந்து தலைமைப் பொறுப்பில் இருக்க வேண்டியதில்லை என்பது குறித்துமே. அவரது தனிப்பட்ட வாழ்க்கை, ஒழுக்கம், குடும்பம் குறித்து எனக்குத் தகவல்களை அனுப்பும் சல்லிகள் இதோடு நிறுத்திக்கொள்வது நல்லது. நான் எழுத்துக்கூலி அல்ல. நான் செய்வது தேர்தல் பிரச்சாரமும் அல்ல. நேற்று என் முகநூலில் ராஜேந்திரனை ஒருமையில் அழைத்த varusai omar என்பவரையும் அவர் கருத்துகளையும் நீக்குகிறேன். அறிவார்த்தமான மாற்றுக்கருத்துகளையே வரவேற்கிறேன். ஆதரவுக்குரல் கொடுக்கும் உணர்சிகளைக்காட்டிலும் அவை மேலானவை.
3. நூல்பதிப்பின் பலவீனங்களும் சுயநலமும்
இன்றைய நவீன யுகத்தில் நூலை பதிப்பித்தல் என்பது தொழில்நுட்பம் சார்ந்தது. அது சாதனையெல்லாம் கிடையாது என்பதை பல கூட்டங்களில் பதிவு செய்துள்ளேன். வல்லினம் மூலம் ஒரே சமயத்தில் சாதாரணமாக 4 நூல்கள் வரை பதிப்பித்து வெளியிட்டுள்ளோம். ஆனால் அதை நாடு தழுவிய நிலையில் எடுத்துச்செல்வதில் எங்கள் தொடர்புகள் மட்டுப்பட்டதே. பதிப்புத்துறையில் வல்லினம் பணியை இவ்வாறு பட்டியலிடலாம்.
- கலை இலக்கிய விழா உட்பட நண்பர்கள் சிலர் உதவியின் மூலம் நாட்டில் அவ்வப்போது நடக்கும் நிகழ்ச்சிகளில் எங்கள் நூல்களை விற்பனைக்கு வைக்கிறோம்.
- வல்லினத்தில் இயங்கும் தயாஜியின் ‘புத்தகச் சிறகுகள்’ இணைய புத்தக்கடை மூலம் எங்கள் பதிப்பில் வந்த நூல்களைக் கேட்பவருக்கு அனுப்பிவைக்கும் முறையைப் பின்பற்றுகிறோம்.
- தமிழக புத்தகச் சந்தையின் மூலம் புத்தகங்களை வெளிநாட்டு தமிழர்கள் பார்வைக்குக் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கொண்டு செல்கிறோம்.
- மலேசியாவில் சில கடைகளில் எங்கள் நூல்களை விற்பனைக்கும் வைத்துள்ளோம்.
- தமிழகத்தில் உள்ள எழுத்தாளர்களிடம் எங்கள் பதிப்பகத்தில் வந்த நூல்களை அனுப்பி அவர்கள் விமர்சனங்களை இணையத்திலும் தமிழகத்தில் வெளிவரும் கணையாழி, உயிர்மை, அம்ருதா, உயிர் எழுத்து போன்ற இதழ்களில் பிரசுரம் செய்து கவனப்படுத்துகிறோம்.
- தேசிய நூலகத்தில் இதுவரை வல்லினம் பதிப்பில் வெளிவந்த நான்கு நூல்கள் ஒவ்வொன்றும் தலா 200 பிரதிகள் வாங்கப்பட்டுள்ளன.
- வல்லினம் பதிப்பில் வந்த நூல்கள் குறித்த கறாரான விமர்சன அரங்குகளை ஏற்படுத்துகிறோம். நூல்கள் குறித்து விவாதிக்கிறோம்.
இதுவரை அரசிடம் இருந்து எந்த மானியமும் வாங்காமல் தனிமனிதர்களின் ஆதரவால் மட்டுமே நாங்கள் இவற்றை 9 ஆண்டுகளில் சாத்தியப்படுத்தியுள்ளோம். நூல்களை இயன்றவரை பரந்த வாசிப்புத்தளத்துக்குக் கொண்டுச்செல்வதே எழுத்தாளர்களுக்குச் செய்யும் நியாயம் என்பதால் இவற்றை நாங்கள் முறையாகக் கடைப்பிடிக்கிறோம். இனி 55 ஆண்டுகால பழமை வாய்ந்த, வலுவான கட்டமைப்பு கொண்டதாகக் கூறிகொள்ளும் எழுத்தாளர் சங்கத்தின் செயல்பாட்டுக்கு வருவோம்.
ஓர் எழுத்தாளருக்கு தான் எழுதும் படைப்புப் பரவலாகச் சென்று சேர வேண்டும் என்பதே ஆழமான விருப்பமாக இருக்கும். எழுத்தாளர் சங்கம் இதுவரை தான் வெளியிட்ட சிறுகதை தொகுப்பு நூல்களையோ, நாவல்களையோ மலேசியாவில் பரவலாக வெளியீடு செய்ததில்லை என்பது கசப்பான உண்மை. மலேசியப்பத்திரிகைகளில் வெளிவந்த தரமான சிறுகதைகளை நூலாகத் தொகுத்து, வெளியீடு என ஒரு நிகழ்ச்சியைச் செய்வார்கள். அதில் நூறுக்கும் குறைந்த புத்தகங்கள் விற்கும். முடிந்தது கதை. மீத புத்தகங்கள் ஏதோ ஓர் இருட்டறையில் தூங்கும். நாவல் போட்டியில் வென்று நூலாகப்பட்ட நாவல்களுக்கும் இதே நிலைதான். நாடு முழுவதும் உள்ள பிற மாநில எழுத்தாளர் சங்கங்களுடன் தொடர்பைப் பயன்படுத்தி மலேசிய இலக்கியம் பரவலான வாசிப்புக்குச் செல்ல ராஜேந்திரன் சார்ந்த குழுவின் உழைப்பு என்ன என்ற கேள்வியை முன் வைக்க வேண்டியுள்ளது.
வேலை பலு, அவ்வாறு நூல்களைக் கொண்டுச்செல்வதில் சிக்கல் என ஆயிரம் காரணங்கள் ராஜேந்திரனிடம் இருக்கலாம். ஆனால் அவரது தனிப்பட்ட நூல்களை மட்டும் எப்படி நாட்டின் மூலை முடுக்கில் எல்லாம் வெளியிட முடிகின்றது எனும் இணை கேள்வி உடனே தொந்தரவு செய்யத் தொடங்குகிறது. உதாரணமாக, அவர் அண்மையில் எழுதி வெளியிட்ட ‘பண்பின் சிகரம் பத்மா’ எனும் நூல் கோலாலம்பூரிலும், பேராக் மாநிலத்திலும் பிரமாண்டமாகவே வெளியீடு கண்டது. பேராக் மாநில தமிழ் எழுத்தாளர் சங்க இணை ஏற்பாட்டில் தனது நூலை வெளியீடு செய்ய முடியும் ராஜேந்திரனால் ஏன் சங்கத்தின் நூல்களை அவ்வாறு பரவலாகக் கொண்டுச்செல்ல முடியவில்லை? கோலாலம்பூர் வெளியீட்டில் அமைச்சர் டாக்டர் சுப்ரமணியம், துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன், டத்தோ ஸ்ரீ உத்தாமா சாமிவேலு எனச்சென்று முதல் நூலை வாங்க கீதாஞ்சலி ஜி போன்ற தொழிலதிபர்களையும் அணுகியுள்ளார். தன் ஒருவரின் நூலுக்கு இத்தனை அற்புதமான வசூலைச் செய்ய முடிகிறபோது சங்கத்தின் நூல்களை லாபகரமாக விற்பனை செய்ய ஏன் தயக்கம் காட்டுகிறார் என்பதுதான் ‘கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றான்?’ என்பதைக்காட்டிலும் ஆச்சரியமான கேள்வி.
ராஜேந்திரன் தன் நூல்களை எப்படி வேண்டுமானாலும் விநியோகித்துக்கொள்ள உரிமை உண்டு. அதேபோல மேற்சொன்ன பிரமுகர்களும் தாராளமாக ராஜேந்திரனுக்கு ஆதரவு காட்டலாம். என் கேள்வி அவர்களது தனிமனித சுதந்திரம் குறித்தல்ல. அவருக்கு நாட்டின் பிற அமைப்புகளுடனும் பிரமுகர்களுடனும் ஏற்பட்டுள்ள தொடர்பு அவர் மக்கள் ஓசை ஞாயிறு ஆசிரியர் என்பதால் அல்ல. எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் என்ற அடையாளத்தைக் கொண்டுதான். அப்படி இருக்க அந்த அடையாளத்தின் மொத்தப்பலன்களைத் தனது நூல் வெளியீட்டுக்குப் பயன்படுத்திக்கொண்டு அவ்வடையாளத்தின் மூலம் சக மலேசிய எழுத்தாளர்களுக்குப் பெற்றுத்தரவேண்டிய உரிய நன்மைகளைப் பெற்றுத்தராமல் இருப்பதுதான் தலைமைத்துவ பண்பா?
ஒருவேளை, அதோடு நின்றிருந்தால் சுயநலம் எனக்கூறிவிட்டு கடந்துவிடலாம்தான். ஆனால் தொடர்ச்சியாகப் பலமுறை வைரமுத்துவின் நூலை இந்நாட்டில் வெளியீடு செய்வதில் சுயநலம் என்பது சந்தர்ப்பவாதமாக தன்னை அடையாளம் காட்டத்தொடங்கியுள்ளது. ‘கள்ளிக்காட்டு இதிகாசத்தில்’ இருந்து கணக்கிட்டால் என் கணிப்புப்படி இதுவரை நான்கு முறை அவரது நூல் இந்நாட்டில் பரவலாக வெளியீடு கண்டுள்ளது. பெரும் தொகை கொடுத்து நூலை வாங்க புரவலர்களையும் ஏற்பாடு செய்துவிடுவார் ராஜேந்திரன். 13.7.2011 வைரமுத்துவின் பிறந்தநாள் அன்று ‘வைரமுத்துவின் திரைப்படப்பாடல்கள் 1000’ எனும் நூலையும் வெளியீடு செய்து அசத்தியதை யாரும் மறந்திருக்க முடியாது. அந்த அசத்தல் நினைவில் இருந்து மறையும் முன்பே கடந்த ஆண்டு வைரமுத்துவின் சிறுகதை தொகுப்பும் வெளியீடு கண்டது.
அவர் தலைவராக இருந்த காலத்தில் மலேசிய எழுத்தாளர் ஒருவருக்காவது இவ்வாறான மேடைகளை அமைத்துக்கொடுத்திருக்கிறாரா? அல்லது எழுத்தாளர் சங்க நூல் வெளியீட்டையாவது இவ்வாறு பிரமாண்டப்படுத்தியுள்ளாரா? இந்நிலையில் செல்வச்செழிப்பில் திளைக்கும் குறிப்பிட்ட ஒருவருக்கு மட்டும் தொடர்ச்சியாக ராஜேந்திரன் உபசாரம் காட்டுவது பலருக்கும் இவ்வாறான சந்தேகங்களை எழுப்பலாம்.
அ. வைரமுத்துவுக்குக் காக்காய் பிடிப்பதன் மூலம் தமிழகத்தின் ஏதேனும் அரசியல் உறவை வளர்த்துக்கொண்டு வணிகத்தில் ஈடுபட்டுள்ளாரா? அதற்காக வைரமுத்துவுக்கு ஏற்படுத்திக்கொடுக்கும் நாகரீக வணிகமா இது?
ஆ. குழந்தைகளுக்குக் காட்டெருமை, கங்காரு போன்றவற்றை அருகில் காட்டி அசத்தியப்பின் அவர்களின் ஆச்சரியத்தின் மூலம் முத்தங்களைக் கேட்டுப்பெருவது போல வைரமுத்து எனும் சினிமா வெளிச்சத்தை அப்பாவி ஆசிரியர்களிடமும் வாசகர்களிடமும் அருகில் காட்டி அவர்கள் ஓட்டு தனக்கு வர உறுதி செய்யும் உத்தியா?
இ. தனக்கு எவ்வித இலக்கிய ஆளுமையும் இல்லை என்கிறபடியால் வைரமுத்துவின் வெளிச்சத்தில் இரவல் தேவைப்படுகிறதா?
இவை சந்தேகங்கள் மட்டுமே. சரி ஏதோ இருந்துவிட்டு தொலையட்டும். மலேசிய எழுத்தாளர்களின் நூல்களைப் பரவலாக்க முயற்சிகளும் எடுக்காமல், பெரிய தொகையில் விற்பனையாக உரிய வெளியீட்டு விழாவும் நடத்தாமல், தனது புத்தகத்தை மட்டும் விரிவாக விற்பனை செய்து கூடவே வைரமுத்துவுக்கு பரவலான சந்தையை உருவாக்கிக்கொடுத்துக்கொண்டிருக்கும் ராஜேந்திரன் மீண்டும் தலைவராக வருவதால் மலேசிய இலக்கியம் உருப்படுமா?
இன்னமும் சை.பீர்முகம்மது போன்றவர்கள் மலேசிய சிறுகதை இலக்கியத்தைப் பிரதிநிதிக்கும் மாபெரும் சிறுகதை தொகுப்பை (வேரும் விழுதுகளும்) வெளியிடுவதற்குத் தங்கள் உழைப்பையும் பணத்தையுமே நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இன்னமும் பெண் படைப்பாளிகள் தங்கள் சிறுகதைகளைக் கூட்டாகத் தொகுத்து வெளியீட்டு விழா நடத்த சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மலேசிய இலக்கியத்துக்காக உழைக்கும் எழுத்தாளர்கள் மேடைகளில் சிறப்பு பிரமுகர்போல முகம் காட்டத்துடிக்கும் ராஜேந்திரன், வைரமுத்துவுக்கு மட்டும் சிறப்புச்செயலாளராக மாறிவிடுவது ஏன்? நல்ல வீணைகள் இங்கிருக்க, புழுதியை நக்கித்திரிவது ஏன்? இனியும் அவர் பதவியில் தொடர்ந்தால் சங்கத்தின் அழிவு நிச்சயம்.
அதன் அழிவுக்குதான் நாம் கைக்கோர்க்கப் போகிறோமா? அப்படி கைக்கோர்க்கும் உங்களைப் பார்த்து வருங்கால சந்ததி உமிழாதா?
- தொடரும்