ஏன் பெ.ராஜேந்திரனுக்கு நான் ஓட்டுப்போடப்போவதில்லை – 4

malaysia.tamil_.writers.association.logo_இந்தக் கட்டுரையை எழுதத்தொடங்கியது முதல் புளோக்கைப் படிப்போர் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துவிட்டது.  பல்வேறுவிதமான கடிதங்களும் அழைப்புகளும் வருகின்றன. மகிழ்ச்சிதான். ஆனால், சில சங்கடமான கடிதங்களையும் எதிர்க்கொள்ள வேண்டியிருந்தது. அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. சோரம்போன தலைமைத்துவத்தையும் எழுத்தாளர்களையும் பார்த்துப் பார்த்து பழகிவிட்டவர்களுக்கு அனைத்துமே சந்தேகத்திற்குறியவைதான். வந்திருக்கும் கடிதங்கள், புலனப்பதிவுகள், அழைப்புகள் அடிப்படையில் சில விடயங்களைத் தெளிவு படுத்திவிடலாம் என நினைக்கிறேன்.

1. நான் எழுதும் இந்தக் விமர்சனத் தொடருக்கும் ‘வல்லினம்’ குழுவினருக்கும் எந்தத் தொடர்புமே கிடையாது. இதனோடு வல்லினத்தில் உள்ளவர்களைத் தொடர்புப்படுத்துவதை நான் விரும்பவில்லை. என் கருத்துகள் என்னுடையவை மட்டுமே.

2. நன்கு அறிமுகம் இருந்தாலும் இந்த நிமிடம்வரை நான் மு.கணேசனிடம் தொடர்புக்கொள்ளவில்லை. அவரும் என்னை அழைக்கவில்லை. நான் அவ்வணியிலும் இல்லை. நான் எவ்வணியின் பிரச்சாரகனும் இல்லை. எனக்கு நெருக்கமானவர்கள் யார் தலைமைப்பொறுப்பில் இருந்தாலும் நான் சங்கத்தின் எந்தப்பொறுப்பிலும் எப்போதுமே இருக்கப்போவதும் இல்லை.

3. எழுத்தாளர் சங்கத்தால் எனக்கோ வல்லினத்துக்கோ ஆகப்போவதென எதுவும் இல்லை. எந்தக்காலத்திலும் யார் பதவியில் இருந்தாலும் நான் சங்கத்திடம் எந்த விருதும் வாங்கப்போவதில்லை என்பதில் தெளிவாக இருக்கிறேன். தனிப்பட்ட எனது எந்த நூலையும் படைப்பையும் போட்டிக்கோ விருதுக்கோ அனுப்பப்போவதும் இல்லை.

4. நான் என் சக நண்பர்களுடன் இணைந்து எங்களுக்கு மிகச்சரியாக இருக்கும் பாதையை வகுத்துக்கொண்டு பயணிக்கிறேன். இந்தத் தொடரில் நான் பேசுவதும் எழுதுவதும் எனக்காக அல்ல. ஓர் சிறந்த இயக்கம் தனது அத்தனை வீரியங்களையும் இழந்து தனிநபரின் நிறுவனம் போல செயல்படுவதை இக்காலத்தில் தட்டிக்கேட்காவிட்டால் காலத்தால் நான் குற்றவாளியென்றே கருதுகிறேன்.

5. வல்லினத்தின் மூலம் எங்கள் இலக்கியச் செயல்பாடுகள் தனி நபருக்கானதாக எப்போதுமே இருந்ததில்லை. அது மலேசிய இலக்கியத்தை மையப்படுத்துவது; அதன் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டது. அதன் பொருட்டே இதழியல் முயற்சிகள், பட்டறைகள், ஆவணப்படங்கள், மொழிப்பெயர்ப்பு முயற்சிகள், நூல்பதிப்புத் திட்டங்கள் எனத்தொடர்ந்து இப்போது புகைப்படச்சேகரிப்புத் திட்டத்தையும் தொடங்கியுள்ளோம். இதன் அடிப்படையில் மலேசியத் தமிழ் இலக்கியத்துக்கென அரசோ, அரசியல்வாதிகளோ, தனிநபர்களோ வழங்கும் பணம் சரியான முறையில் மலேசியத் தமிழ் இலக்கியத்துக்குப் பயன்பட வேண்டும் என கருதுகிறேன். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் அவ்வகையில் பின்னடைந்துள்ளது என கருதுகிறேன்.

சங்கம் சரியான பாதையில் செயல்படுகிறதா?

ஓர் இயக்கம் வலுவானது எனக்கூற சில அடிப்படையான தகுதிகள் தேவை. 10 ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்தாளர் சங்கத்தின் தலைமைப்பொறுப்பில் இருந்த ராஜேந்திரனால் சங்கத்தை நிபுணத்துவத்துடன் நடத்தமுடிந்ததா என்ற கேள்வியை முன்வைக்க வேண்டியுள்ளது.

  • நூல் பதிப்பில் நேர்மையான அணுகுமுறை

எழுத்தாளர் சங்கம் நிறைய நூல்களைப் பதிப்பிக்கிறது. நூல் பதிப்பிக்கப்படும் தொகையைக் காணும்போது கொஞ்சம் திகிலாகத்தான் இருக்கிறது. ஒரு நூலை இயக்கம் ஒன்று அச்சுக்கு அனுப்பும் முன் டெண்டர் விட வேண்டும். டெண்டரை ஏற்க யாரும் முன்வராத பட்சத்தில் குறைந்தது மூன்று அச்சகத்திலாவது விலைப்பட்டியலைக் கேட்டுப்பெற வேண்டும் என்பது பொதுவாக அமுலில் உள்ள சட்டம். ஞாயமான விலை கேட்கும் பதிப்பகத்திடம்தான் நூலை அச்சுக்கு அனுப்ப வேண்டும். தனிப்பட்ட நட்பின் அடிப்படையில் அல்லது ரகசிய கொடுக்கல் வாங்கல் நடக்கலாம் என்ற காரணத்தினாலேயே இச்சட்டம் அமுலில் உள்ளது. சங்கம் இதைக் கடைப்பிடிக்கிறதா?

  • ராயல்டி

சில ஆண்டுகளுக்கு முன் ராயல்டி குறித்த சர்ச்சை எழுந்தது. அப்போது தலைவராக இருந்த ராஜேந்திரன் அதற்கு முன்பும் பின்பும் கூட சங்கத்தின் மூலம் பதிப்பிக்கப்பட்ட எந்த நூலுக்கும் ராயல்டி வழங்கவில்லை. வல்லினம் மூலம் இதுவரை பதிப்பான 22 நூல்களுக்கும் 20% ராயல்டி வழங்கியுள்ளோம். முந்தையக் கட்டுரையில் சொன்னதுபோல ராஜேந்திரன் தன் நூலை பெரிய அளவில் விற்பனை செய்வதுபோல எழுத்தாளர் சங்க நூல்களின் விற்பனையையும் விரிவாக்கம் செய்திருந்தால் தாராளமாகவே நியாயமான தொகையை ராயல்டியாக வழங்கியிருக்க முடியும். இன்னமும் எழுத்தாளன் அரசியல்வாதிகள் கொடுக்கும் ஊக்கத்தொகையையும் பணமுடிப்பையும் பெற்றுக்கொண்டு மகிழவேண்டும் என்பது ஆரோக்கியமான திட்டமா?

  • சுய விளம்பரம்

20 மார்ச் 2016-இல் நடைபெற்ற ‘ரெ.கார்த்திகேசுவின் படைப்பிலக்கியக் கருத்தரங்கை’ ஓர் உதாரணமாக எடுத்துக்கொள்வோம். ‘இலக்கிய வட்டம்’ இதழ் தொடங்கி இலக்கியத்தில் அவரது செயலூக்கம் விரிவானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இந்நிகழ்ச்சியில் அவருக்காகத் தயாரிக்கப்பட்ட நூலில் அவர் படங்களுக்கு ஈடாக தனது படங்களையும் ராஜேந்திரன் புகுத்திக்கொண்டது பலருக்கும் அருவருப்பையே எற்படுத்தியது. தொடக்கம் முதல் இறுதிவரை 27 இடங்களில் ராஜேந்திரன் படங்கள். ரெ.காவின் இறுதிக்காலத்தை அறிந்து நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சியில் அவர் வாழ்வை ஆவணப்படுத்த எவ்வித முயற்சியும் எடுக்காமல் அதிலும் தன்னையே முன்னிறுத்தும் கீழ்மையான நோக்கம் கொண்டவர்களிடம் ஒரு படைப்பாளி தனித்த அடையாளத்துடன் இயங்க முடியுமா? கார்த்திகேசு எனும் இலக்கிய ஆளுமை எழுத்தாளர் சங்கத்திற்குள்ளேயே முடங்கிப்போனவர் எனக் காட்டுவது அவரை அவமதிப்பதாகாதா? 23 ஆண்டுகளுக்கு முன் வந்த எஜமான் திரைப்படத்தில் வல்லவராயன் “சாவு வீட்டிலும்கூட நான்தான் பொணமாக இருக்கனும்” என்பார். இன்னுமா அந்தப் படம் எழுத்தாளர் சங்கத்தில் ஓடுகிறது.

  • திட்டங்கள்

மிக அண்மையில் ராஜேந்திரனின் வேடிக்கையான ஒரு திட்டத்தைச் செவிமடுத்தேன். அதாவது விரைவில் மோரிசியஸ் செல்லும் ஒரு குழு அங்குச் சென்று வீடுகளில் தங்கி தமிழை வளர்க்கப் போகிறார்களாம். எப்படி என்பதுதான் சுவாரசியமானது. தினமும் பத்து நிமிடம் புலனம் வழியாகத் தமிழில் குறுந்தகவல் அனுப்பவதன் மூலமாக அவர்கள் நாட்டில் தமிழ் வளர்ந்துவிடுமாம். மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கைக் குறைந்துகொண்டிருக்கிறது. தமிழ் எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், எனப்பலரும் தங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளியில் சேர்க்காதச் சூழலில் அவர்கள் மத்தியில் தங்கள் பிரச்சாரத்தைத் தொடங்காமல் இதுபோன்ற அபத்த திட்டங்கள் எதற்காக? அறிவார்ந்த சிந்தனை உள்ளவர்களானால் இந்தத் திட்டத்தை கேட்டுச் சிரிக்க வேண்டாமா?

  • இலக்கியப் பயணங்கள்

ராஜேந்திரன் தொடர்ச்சியாக நடத்தும் இலக்கியப்பயணங்களில் கலந்துகொள்பவர்களில் யாரேனும் எழுத்தாளர்களாக உருவாகியுள்ளனரா? பயணத்திற்கென்று வசூலாகும் பணத்தின் முழு விபரங்கள் ஆண்டறிக்கையில் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டை சில ஆண்டுக்கூட்டங்களில் செவிமடுத்துள்ளேன். பயணத்தில் கலந்துகொள்ளும் பலருக்கு தமிழும் தெரியாது என்றும் கேள்விப்பட்டதுண்டு. எது எப்படி இருந்தாலும் பங்கேற்பாளர்கள் எவ்வகையான ஆக்கங்களை தமிழ் இலக்கியச் சூழலுக்கு வழங்கியுள்ளனர் என அறிய ஆவலாக இருக்கிறேன். பயணக்கட்டுரையில் ராஜேந்திரனைப் புகழ்வதைத் தவிர உருப்படியாக ஏதேனும் படைத்துள்ளனரா?

  • திடீர் பதவிகள்

ஓர் இயக்கத்தை இன்னொருவரிடம் ஒப்படைத்தப்பின் அதில் தலையிடாமல் இருப்பது உயரிய பண்பு. ஆதி.குமணனுக்கு அந்தப்பண்பு இருந்தது. பதவியை அவர் ஒப்படைத்தவிதம் அவர் முதிர்ச்சியைக் காட்டியது. ஆனால் பதவியை விட்டுப்போக மனமில்லாமல், தலைவருக்கு ஈடாக இன்னொரு பதவி தேவை என வெளிநாட்டு தொடர்பாளர் என புதிய பதவி ஒன்றை ஏற்படுத்திக்கொண்டு தன்னை தொடர்ந்து சமூகத்தின் கவனத்தில் வைத்துக்கொள்ள பாடுபட்டது அவரது பலவீனத்துக்கு ஒரு சான்று. மேலும் பத்து ஆண்டுகளுக்கு மேல் இருந்தும் தனக்குப் பின் இன்னொரு ஆளுமையை உருவாக்கிவிட முடியாதவர் மீண்டும் தானே தலைமைப் பொறுப்பை ஏற்க நினைப்பதெல்லாம் பலவீனத்தின் உச்சக்கட்டம்.

  • வெல்வதற்கான பொய்கள்

அமெரிக்கா தொடர்ந்து போர் புரியவும் அதன்வழி தனது வலிமையை நிலைநாட்டிக்கொள்ளவும் ஏதாவது ஒரு நாட்டின் மீது முதலில் அவர்கள் அணுஆயுதங்களை வைத்திருப்பதுபோன்ற கடுமையான பலிகளைச் சுமத்தும். அந்தக் கற்பனையான கோபத்துடன் அந்நாட்டை அழித்தொழிக்கும். அப்படியானதொரு வதந்திவேறு இந்தத் தேர்தல் காலக்கட்டத்தில் பரவி வருகிறது. எதிரணியினர் வென்றால் சங்கத்தின் கட்டடத்தைச் சுயநலத்துக்காகப் பயன்படுத்திக்கொள்வர் என்ற அச்சத்தைப் பரவச்செய்துள்ளனர். சாத்தியமே இல்லாத இந்தப் பயத்தை உருவாக்குவதன் மூலம் தனது இறுப்பை தக்கவைக்க போராடும் மனம் எத்தனை பலவீனமானது. இதேபோல சில ஆண்டுகளுக்கு முன் சை.பீர்முகம்மதுவை எதிர்த்துப்போட்டியிட்டபோது தான் வென்றால் லட்சம் ரிங்கிட் நன்கொடை கிடைக்கப்போகிறது என்றும், அதன் மூலம் மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்களைத் தொடர்ந்து பதிப்பிக்கப்போவதாகவும் கூறிய அவரது இன்றுவரை நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதியை நினைவு படுத்திக்கொள்ளலாம்.

  • வெல்வதற்கான பயங்கள்

ஒருவேளை இம்முறை ராஜேந்திரன் வென்றால் அது தமிழ் ஆசிரியர்கள் போட்ட ஓட்டினால்தான் இருக்கும் என்பது என் கணிப்பு. அவர்களுக்குத் தமிழகத்தைச் சுற்றிக்காட்டியதன் மூலம் மிகச்சிறந்த சுற்றுலா ஏஜண்டாகி இருக்கும் ராஜேந்திரனுக்கு நன்றி உணர்ச்சியுடன் அவர்கள் ஓட்டிடுவர். மேலும் மிக நுட்பமாக தேர்தலை திட்டமிட்டு மே மாத இறுதியில் மோரிசியஸுக்கு ஏற்பாடு செய்துள்ளார். சுற்றுலாவுக்காகப் பணம் செலுத்தியவர்களுக்கு ராஜேந்திரன் தோற்றால் பயணம் தடைப்படலாம் என்றும் பணம் திரும்ப கிடைக்காது என்றும் அச்சம் ஏற்படலாம். அந்த அச்சம் ஓட்டாக மாறும். இதெல்லாம் அரசியல் சாதுர்யத்துடன் நகர்த்தப்பட்ட காய். இதை வெல்ல இன்னொரு அரசியல் சதிகளால் ஆகாது. சதிகளுக்கு ஆயுள் குறைவு. அவரவர் மனதுக்கு நேர்மையாக இருப்பது மட்டுமே எந்தச் சூழ்ச்சியையும் வெல்லும் வழி. மாணவர்களுக்குப் போதிக்கும் ஆசிரியர் ஒருவர் உண்மைக்கு எதிராக நிற்பது அவர் மாணவர்களுக்கும் அநீதியின் பக்கம் நிற்க போதிப்பதற்குச் சமம். இயற்கை மிக சூட்சுமமானது. மீண்டும் அது எதிரே வந்து அழுகிப்போன பொய்யின் துற்வாடையுடன் கதவைத்தட்டும். அப்போது யாராலும் தப்ப முடியாது.

  • நவீனத்துவம்

சின்னச் சின்ன அமைப்புகளுக்குக் கூட அகப்பக்கம் இருக்க, மலேசிய எழுத்தாளர் சங்கத்துக்கென ஒரு வலைத்தளம் இல்லாதது வேதனை. முறையான பதிவுகள் என எதுவும் இல்லை. ‘மக்கள் ஓசை’ ஞாயிறு பக்கம்தான் எழுத்தாளர் சங்கத்தின் அதிகாரப்பூர்வ இதழ்போல ஆக்கப்பட்டுவிட்டது. மூன்று மாதத்துக்கு ஒரு இதழைக்கூட கொண்டுவர முடியாத இயலாமையில் உள்ளவர்கள் படம் காட்ட மட்டும் மெனக்கெடுவது சாமிவேலு காலத்து ம.இ.காவைக் காட்டுவதுபோலவே உள்ளது. உறுப்பினர் ஆக பாரம் தேவைப்பட்டால் இணையத்தில் தரவிரக்கம் செய்யும் பாணியெல்லாம் நடப்புக்கு வந்துவிட்ட சூழலில் இன்னமும் சங்க அலுவலகத்துக்குச் சென்று பாரத்தை வாங்க மெனக்கெடுவதெல்லாம் எத்தனை அவலமானது.

இறுதியாக

ஒருவர் ஒரு செயல்பாட்டில் எவ்வளவு நேர்மையுடன் இருக்கிறார் என்பதை அவர் செய்யும் காரியங்களை வைத்து அனுமானிக்கலாம். அவரது செயல்திட்டங்கள் ஆழமானதாக இருக்கும். உதாரணமாகச் சிலவற்றைச் சொல்லலாம்.

  • மை ஸ்கில்ஸ் அறவாரியத்தையும் ஶ்ரீ முருகன் நிலையம் ஆகிய இரு அமைப்புகளை ஒப்பிடலாம். சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட மாணவர்களுக்குக் கல்வியை வழங்கும் அமைப்பினுடைய பணிக்கும் கட்டணம் வாங்கி டியூசன் நடத்தும் அமைப்புக்கும் உள்ள வித்தியாசம் என்ன? ஶ்ரீ முருகன் நிலையமும் நமக்குத் தேவைதான். ஆனால் மை ஸ்கில்ஸ் கல்வியின் மூலம் சமுதாயப்பிரச்னைகளைத் தீர்க்க முனைகிறது.
  • நாட்டில் நடக்கும் நூல் வெளியீடுகளையும் வேரும் வாழ்வும் நூலுடன் ஒப்பிடுவோம். தனிப்பட்ட நூல்கள் தனிப்பட்டவர்களின் தேவையைக் கருத்தில் கொண்டே வெளியீடு காண்கின்றன. வேரும் வாழ்வும் ஒரு காலக்கட்டத்தின் சிறுகதை போக்குக்கு இன்றுவரை அடையாளமாக இருக்கிறது.
  • முனைவர் முரசு.நெடுமாறன் (மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம்), ஜானகிராமன் மாணிக்கம் (மலேசிய இந்தியர்களின் இக்கட்டான நிலை), மலேசிய இந்தியர்கள் வாழ்வை புனைவுகள் மூலம் சித்தரிக்கும் அ.ரெங்கசாமியின் 5 நாவல்கள் என மலேசியத் தமிழ்ச்சூழலில் நடந்த எந்த மாபெரும் முயற்சிக்கும் சங்கத்துக்கும் இம்மியளவும் தொடர்பில்லை. (லங்காட் நதிக்கரை – அ.ரெங்கசாமியின் நூல் நாவல் போட்டியில் வென்றதைத் தவிர).

இந்த ஆழம் செல்ல முடியாதவர்கள் சென்றுவிட்டதைப்போல பாவனைக்காட்ட பிரமாண்டங்கள் தேவைப்படுகின்றன. அந்தப் பிரமாண்டங்கள் மூலமே பலவீனமான, சிந்திக்க மறந்த கூட்டத்தின் கண்களை எளிதாக ஏமாற்றலாம். தமிழகத்துக்குச் சுற்றுலா, மொரிசியசில் தமிழை வளர்த்தல், நடந்து முடிந்த கார்த்திகேசுவின் அரங்கு, வைரமுத்துவைக் கொண்டுவந்து படம் காட்டுதல், தமிழகத்தில் அவருடன் அமர வைத்து எளிய மனங்களை கிளுகிளுப்பாக்குதல், போன்ற ஆர்பாட்டங்கள் எல்லாம் வலுவான திட்டங்கள், ஆழமான முயற்சிகள் இல்லாதவர்களிடமிருந்து வெளிபடும் சத்தங்கள் மட்டுமே.

இந்தச் சத்தங்களை வைத்துக்கொண்டு இம்முறை ராஜேந்திரன் தேர்தலில் வெல்ல அதிக வாய்ப்புண்டு என  நான் நன்கு அறிவேன். காரணம் இத்தேர்தலில் ஓட்டுப்போடப்போவதில் எழுத்தாளர்களைக் காட்டிலும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகம் என்பதால்.

  • முற்றும்
(Visited 360 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *