இறுதியாய்
இறுதியாய் பேசி முடிந்துவிட்டது.
கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள்
கொடுக்கப்பட்ட நம்பிக்கைகள்
கொடுக்கப்பட்ட திட்டங்கள்
கொடுக்கப்பட்ட முத்தங்கள்
எல்லாமே எல்லாமே
இந்த நிமிடம்
இல்லையென ஆகிவிட்டது
இதற்குமேல் மாற்றம் இல்லையென்பதும்
இதற்குமேல் மறுபரிசீலனை இல்லையென்பதும்
இதற்குமேல் மீள்வாய்ப்பில்லை என்பதும்
மரணத்துக்கு மட்டும் சொந்தமானதல்ல
என்பதை உணர்ந்தாகியும் விட்டது
***
எனவே அன்பை நிராகரிக்கிறேன்
ஓர் அன்பை
அன்பின் பொருட்டு நிராகரிக்கப்பழகினேன்
அதற்குப் பின் அவளது புலன்கள்
சிரிக்கலாம் என்பதற்காகவும்
அதற்குப்பின் அவளின் இறக்கைகள்
விரியலாம் என்பதற்காகவும்
இனி அவளது கண்ணீர் சுரப்பி
செயல்படாக்கூடாது என்பதற்காகவும்
ஓர் அன்பை
அன்பின் பொருட்டு நிராகரிக்கப்பழகினேன்
அவளை நித்தனைக்குட்படுத்த
இனியும் அவசியம் இருக்காது
அவள் விழிப்பதும் உறங்குவதும்
அவளின் கண்களே முடிவு செய்யும்
வன்மம் நெருங்காத மாலை பயணங்கள்
இனி அவளுக்குச் சாத்தியப்படக்கூடும்
சந்தேகத்தின் இரவுகளை வெறித்துப்பார்க்கும் படபடப்பு
அவளுக்கு இனி எப்போது வாய்க்காது
எனவே அன்பை அன்பின் பொருட்டு நிராகரிக்கப் பழகினேன்
இனியும் அவள் சிலுவைகள் போல
குற்றங்களைச் சுமக்க வேண்டியதில்லை
பிரியத்தின் ஏக்கத்தைவிட
திட்டவட்டமாகிவிட்ட தனிமை
அவளை ஆசுவாசப்படுத்தலாம்
ஒரு தந்திரமானவனின் கேள்விகளுக்கு
அவள் மௌனத்தைத் தயாரிக்க வேண்டியிருக்காது
மன்னிப்புக்கேட்க வேண்டியதோ
மன்னிக்க வேண்டியதோ
இனி இல்லவே இல்லை
எனவே அன்பை நிராகரிக்கப்பழகினேன்
அன்பின் பொருட்டு
***
பிரிவு
நாம் பிரிந்தே தீர வேண்டும்
என முடிவெடுத்த அவ்விரவில்
மழை பெய்ததாக நினைவு
அம்மழை அன்று மட்டும்
பூமியிலிருந்து வான் நோக்கி பாய்ந்தது
எந்த அவஸ்தையைச் சொல்லும்போதும்
சிரிப்பதுபோல
அன்றும்
நான் சிரித்துக்கொண்டே
ஒவ்வொன்றாக மனதில் வருடிப்பார்த்தேன்
அதுவரை செய்த அன்பை
அதுவரை பெற்ற உதவிகளை
அதுவரை பரிமாறிக்கொண்ட பரிசுகளை
ஒரு கம்பி மத்தாப்பு
உற்சாகமாய் பொங்கி அடங்குவதுபோல
அன்றிரவு ஒளிகொண்ட அவை
பின்னர் உடனே இருண்டுபோனது
நம்பிக்கையுடன் எட்டிப்பார்த்த உன்னிடம்
அது மின்னல் ஒளி என்றேன்
மீண்டும் நீ அழச்சென்றாய்
***
சொல்வதற்கு
உன்னிடம் சொல்வதற்கு அவ்வளவு கதைகள் உள்ளன
நாம் பிரிந்த தினத்தில் தொடங்கி
அவற்றை கேட்கும்போது
நீ சிரிப்பாய்
கோபப்படுவாய்
காதுகளை மூடிக்கொள்வாய்
போதும் போதுமென அழுவாய்
மௌனமாவாய்
பின்னர்
பிரிந்துவிடலாம் என்பாய்
எனவே நான் உனக்கு
அந்தக்கதைகளை
எப்போதுமே சொல்லப்போவதில்லை