சிறுகதை: வண்டி

kathaiபாட்டிவீட்டுக்குப் போகவேண்டும். காலையிலேயே அப்பாவிடம் ஞாபகப்படுத்திவிட்டான் தோமஸ். மரியதாஸ் ஒன்றும் சொல்லாமல் விட்டத்தைப் பார்த்தபடி எம்.ஜி.ஆர் பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தார். தன் அம்மா வீட்டுக்குச் செல்வதென்றாலே அவருக்குப் பிடிக்காது. ஏதாவது காரணம் சொல்லி தட்டிக்கழித்துவிடுவார். பாட்டி மட்டும் அவ்வப்போது தோமஸைப்பார்க்க வருவாள். வாசலிலேயே அமர்ந்திருப்பாள். தோமஸ் எவ்வளவு அழைத்தாலும் உள்ளே வராமல் “வெத்தல எச்சி துப்பனுமய்யா” என்பாள். மரியதாஸ் “வாங்க” என்பதோடு நிறுத்திக்கொள்வான். அம்மா பாட்டியிடம் பேசி அவன் பார்த்ததில்லை. எம்.ஜி.ஆர் இறந்ததை நேற்று  தமிழ்ச்செய்தியில் கேட்டது முதல், அவர்கள் வீட்டில் கிருஸ்மஸ் கொண்டாட்ட உற்சாகம் கலை இழந்து போயிருந்தது.

மரியதாஸ் எம்.ஜி.ஆரின் ரசிகர். காலையிலிருந்தே அவர் நடித்தப்படங்களில் உள்ள பாடல்களாக வானொலியில் ஒலிபரப்பிக்கொண்டிருந்தனர். இடையிடையே வானொலி அறிவிப்பாளரும் எம்.ஜி.ஆர் குறித்த நினைவுகளைச் சொல்லிக்கொண்டிருந்ததைக் கேட்டு மரியதாஸ் ஆமோத்திப்பது போலவும் மறுப்பதுபோலவும் தலையை ஆட்டிக்கொண்டார்.  பிலோமினா மட்டும் பரபரப்பாகக் குசுனியில் உருட்டிக்கொண்டிருந்தாள். அவளது எல்லா அசைவிலும் கோபம் இருந்தது. வேலை செய்யும் பள்ளியில் அவள் மட்டுமே கிறித்துவப்பெண். மதிய உணவுக்குப் பெரிய கூட்டம் வரும். இது வருடம் தோறும் வாடிக்கை.  வீட்டுக்கு வரும் விருந்தினர்களைப் பட்டினிப்போட எம்.ஜி.ஆர் சாவைக் காரணம் சொல்ல முடியாது. திட்டமிட்டுதான் இவ்வருட கிருஸ்மஸ் கொண்டாட்டத்தைப் புறக்கணிக்கிறார் என நேற்று இரவுதான் மரியதாசிடம் கத்தித்தீர்த்திருந்தாள்.

கிருஸ்மஸ் தினத்தில் தொலைக்காட்சியில் நிறைய கார்ட்டூன்கள் போடுவார்கள். மரியதாஸ் காலையில் இருந்தே தொலைக்காட்சியைத் திறக்கவிடவில்லை. அந்தத் துக்ககரமான நாளில் தோமஸ் கார்ட்டூன் பார்த்துச் சிரிப்பது அவருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். அவன் அம்மாவிடம் சொன்னபோது “கண்டவன் செத்ததுக்கெல்லாம் நாம ஏன் கிஸ்மஸ் கொண்டாடாம இருக்கனும்?” என அவனிடமே திரும்பக் கத்தினாள். மரியதாஸிடம் கத்தி எந்தப்புண்ணியமும் இல்லை. பாட்டிவீட்டில் தொலைக்காட்சியை அவன் பார்த்ததாக நினைவில்லை. ஆனாலும் அங்குச் சென்றால் தான் மகிழ்ச்சியாக இருக்கலாம். பாட்டிவீடு பற்றி பேசியதும் அம்மா ஏதோ பாத்திரத்தைப் போட்டு உடைக்க, ஹாலுக்கு ஓடி வந்துவிட்டான். அப்பாவிடம்  கேட்க பயமாக இருந்தது. கடந்த ஒருவாரமாகவே அவன் முதலாம் ஆண்டு செல்லும்போது நண்பர்களிடம் எதை பேச வேண்டும் பேசக்கூடாது என ஒரு பட்டியலே போட்டுக்கொடுத்திருந்தார். அதில் முதல் கட்டளையே பாட்டிவீடு குறித்து பேசக்கூடாது என்பதுதான்.

பாட்டி வீடு சென்டர்போட் லயத்தில் இருந்தது. இரண்டு மாதங்களுக்கு முன் தாத்தா இறந்தபோது மரியதாஸ் அங்கு அவனை முதன்முறையாக அழைத்துச்சென்றார். பிலோமினா பிடிவாதமாக வரமாட்டேன் என மறுத்துவிட்டாள்.  மரியதாஸ் சடங்குகள் எதிலும் கலந்துகொள்ளாமல் தள்ளியே நின்றார். “மூத்தமவன கூப்பிடுங்க” எனச் சடங்கு செய்பவர் சொல்லும்போதெல்லாம் மரியதாஸின் தம்பியே முன்வந்து நின்றார். பல வருடங்களுக்குப்பின் பார்த்தபோதும் அப்பாவின் தோற்றத்தில் பெரிய மாற்றத்தை மரியதாஸால் காணமுடியவில்லை. தலையில் எம்.ஜி.ஆர் தொப்பியும் கருப்புக்கண்ணாடியும் அணிவித்து பெரும்பகுதி முகத்தை மறைந்திருந்தது. கடைசி காலத்தில் அப்பா லுனாஸ் வட்டாரத்தில் அப்படித்தான் உலாவிக்கொண்டிருந்ததாகப் பேசிக்கொண்டார்கள்.

சுற்றியிருந்த அழுகையின் ஓலங்களும் வெற்றிலைக்கறையேறிய வாய்களும் தோமஸுக்குப் புதுமையானவை. தோமஸினால் அப்பாவை விட்டு எங்கும் நகர முடியவில்லை. துக்கச்சோறு சாப்பிடாமல்தான் அன்று மரியதாஸ் புறப்பட்டிருந்தார். அதன் பிறகு எட்டாம்துக்கத்துக்காக இரண்டாவது முறையாக தோமஸை அழைத்துக்கொண்டு சென்டர்போட் லயத்துக்குச் சென்றார். வரிசையாக நின்ற மூன்று குப்பைலாரிகளிலிருந்து வெளிவந்த துர்வாடையில் தோமஸ் மூக்கை மூடிக்கொண்டான். தாத்தா சாவின்போது  அவனால் அவ்விடத்தை ஒழுங்காக பார்க்க முடிந்திருக்கவில்லை. புதிய பிரதேசத்திற்கு வந்ததுபோல் இருந்தது.

மரியதாஸுக்கு வெரித்துக்கிடந்தத்தெரு அச்சத்தைக் கொடுத்தது. கூட்டம் இருந்திருந்தால் உள்ளே யாருக்கும் தெரியாமல் நுழைந்து பத்தோடு பதினொன்றாக வெளியேறியிருப்பார். யார் கண்ணிலும் படுவதற்குள் புறப்பட்டுவிட வேண்டும். பக்கத்தில்தான் ஜெ.கெ.ஆர் கூலித்தொழிலாளிகளின் கோட்ரஸ். சென்டர்போட் லயத்து வீடுகள் போல பலகைகளால் கட்டப்பட்டிருந்தாலும் கொஞ்சம் வசதியானவை. ஜெ.கெ.ஆர் கோட்ரஸ் வாசிகளில் பெரும்பாலோர் முன்பு தோட்டத்தில் மேக்குச்சியில் வாழ்ந்தவர்கள். தோட்டத்துண்டாடலுக்குப்பிறகு சாலை அமைக்கும் தொழிலாளர்களாகவும் சாலையோர புற்களை வெட்டுபவர்களாகவும் அங்கு வேலைக்கு அமர்த்தப்பட்டவர்கள். அவர்கள் சென்டர்போட் லயத்துப் பக்கம் வருவதில்லை. இரு வசிப்பிடத்துக்கும் குறுக்காக ஒரு சாக்கடை ஓடிக்கொண்டிருந்தது. இருதரப்பு தெரு கச்சடாக்களும் பொதுவாகச் சங்கமிக்கும் சாக்கடை அது. இருபாலருக்குமான எல்லா உரையாடல்களும் சாக்கடையின் எல்லையில்தான் நடக்கும். சண்டையும்.

மாலை நெருங்கும்போது சென்டர்போட்வாசிகள் அனைவரையும் வீட்டுக்கு வெளியே பார்க்கமுடியும். தோமஸ் சென்றபோது சிலர் குழந்தைகளுக்கு உணவூட்டிக்கொண்டிருந்தனர். சிறுமிகள் பெரும்பாலும் நொண்டி விளையாடிக்கொண்டிருந்தார்கள். பெண்கள் வாசலில் அமர்ந்திருந்தார்கள்.  கொழுகொழுவென்று இருந்த தோமஸைக் கண்டவுடன் தாய்மார்கள் பலரும் தின்பண்டத்தை  அவன் கையில் திணித்தனர். மரியதாஸ் அனைத்தையும் வாங்கி மோட்டார்சைக்கிளின் கூடையில் வைத்தார். வீட்டில் சென்று சாப்பிடத்தருவதாகக் கூறினார். சிலர் தங்கள் குழந்தைகளுக்கு ஊட்டிக்கொண்டிருந்த சோற்றில் ஒருவாய் கொடுக்க உருண்டைப்பிடித்தபோது தோமஸுக்கு வயிற்றுவலியென்று தடுத்தார். எட்டாம் துக்கத்திலும் உணவுண்ணாமல்தான் திரும்பினார். வீட்டுக்குத்திரும்பிச்செல்லும் போது கூடையில் இருந்த மொத்தத்திண்பன்டங்களையும் அப்பா குப்பையில் வீசினார்.

கருமகிரியைக்காக மரியதாஸ் மூன்றாவது முறை பாட்டிவீட்டுக்கு அழைத்துச் சென்றபோது அவன் நேராக அந்த இடத்துக்கு ஓடினான். அது ஒரு பழைய மாட்டு வண்டி. அதற்கென அமைக்கப்பட்ட கொட்டகையில் கமுக்கமாக இருந்தது. முதன்முதலில் தன்னைவிட இரு பெரிய சக்கரங்களைப்பார்த்தவுடன்  தோமஸுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. அடுத்தவருடம் முதலாம் வகுப்பில் சேர்கின்றபடியால் தான் பெரிய பையன் ஆகிவிட்டதாகவே நம்பியிருந்தான். சக்கரத்தைப் பிடித்து நகர்த்திப்பார்த்தான். முன்புறம் சென்று வண்டியை இழுத்துப்பார்த்தான். துளி அசைவில்லை. வண்டியைச் சுற்றிச்சுற்றி வந்தான். முன்புறம் நுகத்தடி கழன்று மண்ணில் கிடந்தது. அது என்னவென்று கொஞ்ச நேரம் ஆராய்ந்தான். ஸாண்ட்டகிளாஸ் ஓட்டிவரும் மான் வண்டியை அவன் கார்ட்டூன்களில் பார்த்தது. மான்கள் வண்டியை இழுத்துக்குக்கொண்டு பறக்கும். இது தரையில் இருப்பதால் மாட்டுவண்டி என முடிவுக்கு வந்தான். மாட்டுவண்டியை அவன் எம்.ஜி.ஆர் படங்களில் பார்த்தது. வாடகைக்கு எடுத்துவரும் வீடியோ கேசட்டுகளில் எம்.ஜி.ஆர் திரைப்படங்களைப் பார்க்க மட்டும்தான் அவன் அனுமதிக்கப்பட்டிருந்தான். அதில் மாடுகள் அவ்வளவு எளிதாக இதுபோன்ற வண்டிகளை இழுத்துக்கொண்டு ஓடும். அவன் மாடுகளைக் காட்டிலும் பலசாளி என நம்பியிருந்தான். வங்காளிகளின் மாடுகள் பூச்செடிகளைக் கடித்தால் இவன்தான் கல்லெறிந்து விரட்டுவான். வண்டி அசைவில்லாமல் நிற்பது அவனுக்குப் பெரும் ஆச்சரியமாக இருந்தது.  வண்டியின் பின்பக்கம் சாய்ந்திருந்தது அவன் ஏற வசதியாக இருந்தது. ஒரே தாவலில் ஏறி கொலுப்பலகையில் அமர்ந்தான். வண்டி கொஞ்சம் முன்புறம் இறங்கியதும் உற்சாகம் கூடியது. கையில் வைத்திருந்த குச்சியைத் தட்டி ‘ஹேய் ஹேய்’ என சத்தமிட்டு விரட்டியபோது இன்னும் சில சிறுவர்கள் வண்டியில் ஏறிக்கொண்டு “வேகமா ஓட்டு…” என பயணத்தில் இணைந்துகொண்டனர். வண்டி ஜோராகப் போய்க்கொண்டிருக்கும்போதுதான் பளீர் என முதுகில் முதல் அடி விழுந்தது.

கைகளைப் பின்னோக்கி செலுத்தி தேய்க்க முயல்வதற்குள் தொடையில் அடுத்த அடி. மற்றச் சிறுவர் பின்புறமாகக் கீழே குதித்து ஓட தோமஸ் கொலுப்பலகையில் நின்றுக்கொண்டிருந்தான். அப்பா பெல்ட்டுடன் நின்றுக்கொண்டிருந்தார்.  பின்புறம் ஓடினால் இன்னொரு அடிவிழலாம் என்பதால் முன்னோக்கியே குதித்தான். “விட்டுடுயா அவன… எங்கிட்ட கேட்டுதான்டா ஏறுனான்” என பாட்டி புலம்புவது அவன் காதுகளில் கேட்டது. மரியதாஸ் காதைப்பிடித்து திருகியபடி அவனை மோட்டாரில் ஏற்றினார். “இனி வரமாட்டேன். ஏதும் ஒதவி தேவன்னா வீட்டுக்கு வா”எனப் பாட்டியைப்பார்த்துச் சொல்லிவிட்டு முறுக்கினார். அன்றும் அவர் எதுவும் சாப்பிடவில்லை.

அன்று இரவு மரியதாஸ் அவனைத் தடவிக்கொடுத்தார். தேம்பிக்கொண்டிருந்தவன் கையில் ஒரு பரிசைக்கொடுத்தார். அதை வண்ணக்காகிகதத்தால் மடித்திருந்தார். மடிக்கப்பட்ட தாளிலேயே  பூ செய்து மேல் பரப்பில் குடுமிபோல தொங்கவிட்டு அழகுப்படுத்தியிருந்தார். பிரித்துப்பார்த்தபோது கலர்பென்சில் பெட்டி இருந்தது. தொடையிலும் முதுகிலும் பட்டையாக வீக்கம் இருந்தது. அப்பா இரவு முழுவதும் அவற்றைத் தடவியபடி இருந்தார். “அழாத கிருஸ்மஸ்க்கு பாட்டி வீட்டுக்குக் கூட்டி போறேன்” என அப்பா அன்று சமாதானம் சொன்னதை இரண்டு மாதம் கழித்தும் தோமஸ் நினைவில் வைத்திருந்தான். கிருஸ்மஸுக்காக  வாங்கிக்கொடுத்த ஸாண்ட்ட கிளாஸ் சட்டையைப் போட்டுக்கொண்டு அப்பாவின் கரங்களைப் பற்றினான்.

                                                                                                                         ***

அப்பா சொன்னபடியே அன்று மாட்டுவண்டியை வீட்டுக்கு ஓட்டி வந்ததில் ராமசந்kathai 02திரனுக்கு சந்தோஷம். புதிதாகக் கருப்புக்கண்ணாடி அணிந்திருந்தார். அதற்குமுன் பக்கிரி மாமா அப்பாவை வீட்டில் இறக்கிவிட்டு வண்டியை ஓட்டிக்கொண்டு போய்விடுவார். அவர் வீடு கூலிம் சென்டர்போட் லயத்தில் இருந்தது. கூலிமில் இருந்து லுனாஸுக்கு வருவதில் உள்ள சிரமத்தை ஒவ்வொருநாளும் புகாராகச் சொன்னதின் பிரதிபளிப்பாக வீட்டின் அருகில் வண்டியை நிறுத்த முனிசிபாலிட்டி கொட்டாய் அமைத்துக்கொடுத்ததில் இருந்து மாட்டுவண்டி எப்போது வரும் ராமசந்திரன் கேட்காத நாள் இல்லை.

ஒற்றைக் காளை. கருமை நிறம். வந்து நின்றதும் மூச்சிரைத்தது. ராமச்சந்திரனை மிரட்சியுடன் பார்த்தது. “தொடலாமா பா ” என அவன் அருகில் என்றபோது கொம்பை ஆட்டி எச்சரித்தது. அதன் கழுத்து மணி சத்தம் கேட்டு புதம்மா தாமதமாகத்தான் வந்தாள். “எம்ஜார கழுத்துல சுட்டுப்போட்டானாமெ…கழிச்சல்லபோவ” வெற்றிலையைத் துப்பினாள். ஊரே அதைப்பற்றிதான் பேசிக்கொண்டிருந்தது.

வீரையன் முன்பே செய்தியைக் கேள்விப்பட்டிருந்தார். “தலைவருக்கு ஒன்னும் ஆவாது” என முணுமுணுத்துக்கொண்டார். கொஞ்ச நேரம் தலையில் கை வைத்து அமர்ந்தவர் “வண்டி நல்லா இருக்கா ராமச்சந்திரா” அவன் தாடையில் கை வைத்து ஆட்டினார்.  அம்மாவுக்கு மாட்டுவண்டி குறித்த எந்த ஆர்வமும் இல்லை. கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு “இனிமே இது பேண்டதையும் அள்ளிபோடனும்” சொல்லிவிட்டு உள்ளே சென்றாள். அன்றைய இரவு ராமச்சந்திரனுக்கு நீளமாகத் தெரிந்தது. உறக்கம் பிடிக்கவில்லை. அறைக்குள் அப்பாவின் குரல் சன்னமாகக் கேட்டது. அவர் அழுதுகொண்டிருந்தார். “அவருக்கு ஒன்னும் ஆவாதுங்க…எம்ஜார் அழுவலாமா…” என புதம்மா மெதுவாகச் சமாதான பேச முயன்றுக்கொண்டிருந்தாள். அவள் குரல் அமைப்புக்கு அவ்வாறான ஒலி குறைந்த பேச்சு எப்போதுமே ஒத்துப்போனதில்லை. ராமச்சந்திரனுக்கு அதுபற்றியெல்லாம் பெரிய அக்கறை இருக்கவில்லை. அவன் வகுப்பில் இருவர் தங்கள் வீட்டில் உள்ள மாட்டுவண்டி குறித்துச் சொல்லும்போதெல்லாம் அவனுக்குச் சொல்லிக்கொள்ள ஒன்றும் இருக்காது. இப்போது அவன் வீட்டிலும் ஒரு மாட்டு வண்டி இருந்தது. அதைப்பற்றிய கதைகளை அவன் மனம் தயாரித்துக்கொண்டிருந்தது.

எழுப்பாமல் விழித்த அவனை புதம்மா ஆச்சரியமாகப்பார்த்தார். வேலைக்குப் போகும் அவசரத்தில் ஒன்றும் அவனிடம் பேசவில்லை. தாமதமானால் அதிகாலையில் மலக்கூடம் செல்பவர்களின் வசைக்கு ஆளாக நேரிடும். விடிந்துவிட்டால் மலவாளியைத்தூக்குக்கொண்டு சுற்றுப்பாதையில்தான் செல்ல வேண்டும். வழக்கமான பாதையில் நடந்தால் சீனர்கள் திட்டுவார்கள். குறும்புக்கார இளைஞர்கள் வாளிக்குள் கல் எறிவார்கள். சுற்றுப்பாதை உடலை நோகடித்துவிடும். மாற்றுவாளிகளை எடுத்துவைத்துக்கொண்டார். எவ்வளவு கழுவினாலும் அதில் மலத்தின் நெடி அடிக்கும். அதிகாலை நான்கு மணிக்குள் அருகில் உள்ள கம்பத்து சாமன்கொட்டாயில் நிறைந்துள்ள மல வாளிகளை எடுத்து கையில் கொண்டு போகும் காலி வாளிகளை வைக்க வேண்டும். அவை பொது சாமான்கொட்டாய்கள். ஒரு நடைக்கு இரு வாளியைத்தான் அவளால் தூக்க முடியும். மீண்டும் வீட்டுக்கு வந்து இன்னும் இருவாளிகளை எடுத்துக்கொண்டு இன்னொரு கம்பத்தில் வாளியை மாற்ற வேண்டும். சேகரித்த மலத்தை சீனன் தோட்டத்தில் உரமாகக் கொட்டி முடிக்கும்போது சூரியன் எட்டிப்பார்க்கும். வாளிக்கு ஐம்பது காசும் கையில் கொஞ்சம் கீரைக்கட்டும் கிடைக்கும்.

ராமச்சந்திரன் காலையில் விடிவதற்கு முன்பே பள்ளிக்கு ஓடினான். பள்ளிக்கூடம் என்பது மாரியம்மன் கோயிலுக்கு அருகில் போடப்படிருக்கும் தகர தடுப்புதான். இடையில் ஒரு பலகை போடப்பட்டு இரு வகுப்புகளாக நடந்தன. பலகைக்கு அந்தப்பக்கம் ராமச்சந்திரனின் இருதம்பிகளும் படித்தனர். அது முதலாம் தவணைக்கானது. இவன் இந்தப்பக்கம் படித்தான். அடுத்தவருடம் தம்பிகள் இருவரும் இந்தப்பக்கம் வந்துவிடுவார்கள் என்றும் அவன் பெரியப்பள்ளிக்குச் செல்வான் என்றும் அப்பா சொல்லியிருந்தார். அவனுக்குப் பெரியப்பள்ளிக்குச் செல்வதில் ஆர்வம் இருந்தது. பத்து மணிக்குமேல் இந்தப்பள்ளிக்கூடத்தின் உஷ்ணம் மாணவர்களால் தாங்க முடியாதது. தகரம் கொதிக்கும். ஓய்வுமணிக்குப் பிறகு அரசமரத்தின் அடியில் வகுப்புகள் நடந்தன.

மாணவர்கள் யாரும் இன்னும் வந்திருக்கவில்லை. பூசாரியின் நடமாட்டம் மட்டும் தெரிந்தது. அவன் கோயிலுக்குள் அவசியமில்லாமல் நுழைந்தால் ஏசுவார். விரட்டி அடிப்பார். அவனைப்போலவே சென்ட்டுபோர்ட் லயத்தில் குடியேறியவர்களின்  பிள்ளைகளை பூசாரி அவ்வளவு எளிதில் அனுமதிப்பதில்லை. கோயிலுக்குப் பின்னால் இருக்கும் ஆயக்கொட்டகைக்கு ஓடினான். அவன் ஆயக்கொட்டகையில் வளர்ந்தவனில்லை. தோட்ட வேலை செய்பவர்களுக்கு மட்டும்தான் ஆயக்கொட்டகை. அங்கிருந்த ஒன்றிரண்டு குழந்தைகளிடம் அவன் வீட்டில் மாட்டுவண்டி இருப்பது பற்றி கூறினான்.  ஆயம்மா விரட்டியடிக்கவும் அதிகாலை பூசை மணி ஒலிக்கவும் சரியாக இருந்தது.

அவனும் வழிபாட்டு வரிசையில் நின்றுக்கொண்டான். வழிபாடு நேரத்தில் பூசாரி அவனைத்துரத்துவதில்லை. ஆனால் எல்லா குழந்தைகளின் நெற்றிலிலும் விபூதி வைத்துவிடுபவர் அவனைச் சீண்ட மாட்டார். பக்கத்தில் சௌந்தரி இருந்தாள். “எங்க மாட்டோட கழுத்திலும் மணி இருக்கு” எனக்கிசுசிசுத்தான். லுனாசில் மாட்டு வண்டி உள்ள மூன்று தமிழர்கள் வீட்டில் சௌந்தரியின் குடும்பமும் ஒன்று.  இருவரும் மாறிமாறி தங்கள் வீட்டில் இருக்கும் மாட்டுவண்டி குறித்து ஒப்பிட்டுக்கொண்டனர். ராமச்சந்திரன் மாட்டின் கருமை நிறம் பற்றியும் கூரிய கொம்பு பற்றியும் வண்டியின் பெரிய சக்கரங்கள் பற்றியும் சொன்னான். எல்லோரும் ஆர்வமாகக் கேட்டுக்கொண்டிருந்தபோது கிருஷ்ணன்தான் “அது சென்டர்போட் வண்டிடா… குப்ப அள்ள  முனிசிபாலிட்டி கொடுத்தானுவ. எங்க ஐயா சொன்னாரு” எனக்கிண்டல் அடித்தான். அவன் வீட்டிலும் ஒரு மாட்டுவண்டி இருந்தது. அனைவரும் சிரித்தனர். அதோடு அவனைக் குப்பை வண்டி எனப்பட்டப்பெயர் இட்டு கிண்டல் அடிக்கத் தொடங்கினர்.

ராமச்சந்திரன் அன்று மாலையே அவன் அப்பாவிடம் அதுகுறித்து புகார் செய்தான். “சோத்த போடுற தொழில தப்பா பேசக்கூடாதுடாப்பா. முன்ன அப்பா பக்கிரி மாமா வண்டியில குப்ப அள்ளுவேன். வண்டிக்குப் பின்னால உக்காந்து வரனும். நாத்தம் குடலைப் புடுங்கும். வேற வழியில்லாம சுருட்டு புடிப்பேன். எம்.ஜி.ஆருக்கு சுருட்டு புடிச்சா புடிக்காது. இப்ப அப்பா வண்டி ஓட்டுறேன். இனிமே சுருட்டு புடிக்க மாட்டேன். வாயில சோத்த கொஞ்சம் சந்தோசமா வைக்கலாம்” என பாக்கெட்டில் இருந்த சிறிய பரிசொன்றை எடுத்துக்கொடுத்தார். ராமச்சந்திரன் பிரித்தபோது அதில் சிறு புட்டிகள் இருந்தன. காலியான வண்ணக் கண்ணாடி புட்டிகள் அவை.

அப்பா எப்போதுமே அவன் கொண்டுவரும் புகார்களுக்கு ஏதாவது ஒரு பரிசைக்கொடுத்து அமைதிபடுத்துவார். பரிசை முறையாக ஏதாவது ஒரு காகிதத்தில் சுற்றி வைத்திருப்பார். பரிசை அவர் காகிகத்தில் சுற்றிக்கொடுக்கும் விதம் ராமச்சந்திரனுக்குப் பிடித்தமானது. காகிதத்தில் சின்னச் சின்ன பெட்டிகள் செய்து அதனுள் பரிசை வைத்துக்கொடுப்பார். மடிக்கப்பட்ட காகிதத்தில் பூக்கள் செய்து இணைத்திருப்பார். அப்படி அவனிடம் நிறைய பரிசு பொருள்கள் உள்ளன. தீபாவளிக்காக அம்மா செய்துக்கொடுத்த நெய் உருண்டையை எல்லாரையும்போல அவனும் டீச்சரின் தட்டில் வைத்தபோது மொத்தச் சாப்பாட்டையும் அவர் குப்பையில் கொட்டிவிட்டதாகச் சொல்லிய அன்று இரவு அப்பா மை பேனா ஒன்றைப் பரிசாகக் கொடுத்தார். வகுப்பில் அவன் பக்கத்தில் யாரும் அமர்வதில்லை என்று அழுதபோது விசில் ஒன்றை பரிசாகக் கொடுத்தார். விஸ்வநாதனின் தண்ணீர் புட்டியில் குடித்ததற்காக அவன் அம்மா எல்லார் முன்பும் அறைந்தார் என்று சொன்னபோது சாவி கொடுக்கும் சின்னக்கடிகாரத்தைப் பரிசாகக் கொடுத்தார். புகார்களோடு சென்றால் பரிசு கிடைக்கும் என்பதால் அவனும் தனக்கு நடக்கும் துன்பங்கள் அனைத்தையும் சொல்லிவிடுவான். அப்பாவும் சளைக்காமல் பரிசுகளை எடுத்துக்கொடுப்பார். அவற்றில் எதுவும் பயன்படுத்த முடியாதவைகளாக இருந்தாலும் அப்பா செய்த அவற்றுக்குறிய பொட்டலங்களில் வரிசையாக சன்னல் ஓரம் அடுக்கி வைத்திருப்பதில் ஒரு சந்தோஷம்.

அவனுக்கு அவற்றைப் பள்ளிக்கு எடுத்து சென்று நண்பர்களிடம் காட்ட ஆசை இருந்தது. ஒருமுறை அம்மாவுக்குத் தெரியாமல் அவற்றை புத்தகப்பையில் திணித்து எடுத்துச் சென்றான். ஒவ்வொன்றாக எடுத்து அவன் மேசை மீது வைத்தபோது முதலில் கொஞ்சம் ஆர்வமாக பார்த்தார்கள். “இது என்னோடது” என வேலு சைக்கிள் மணி ஒன்றை எடுத்து வைத்துக்கொண்டபோது ராமச்சந்திரனுக்குக் கோபம் வந்தது.

“டேய் அத எங்கப்பா வாங்கி கொடுத்தாருடா” என்றான்.

“அப்பா மணிய மட்டும் ஏண்டா வாங்கி கொடுத்தாரு. சைக்கிள் எங்கடா?’என வேலு சொன்னவுடன் அவனுக்கு அவமானமாகிவிட்டது. கூடவே சில நண்பர்கள் அங்கிருந்த விளக்கும் புட்டிகளும் தங்கள் வீட்டில் உதவாமல் வீசி எறிந்தது என முணுமுணுப்புக் கேட்டதும் கோபம் அதிகரித்து வேலுவின் மேல் பாய்ந்தான். “ஏண்டா என்னைய அடிக்கிற குப்ப வண்டி” என வேலு அடிவாங்கிக்கொண்டே கேட்டபோது உண்மையில் அவனுக்கு பதில் தெரியவில்லை. ஆனால் மேலும் மேலும் அவனை அடிக்கத் தோன்றியது.

அன்று அப்பா கொடுத்த எந்தப் பரிசையும் அவன் வாங்கிக்கொள்ளவில்லை. ஓயாமல் அழுதுக்கொண்டிருந்தவனை சமாதானம் செய்ய முடியாமல் வீரைய்யன் மாட்டு வண்டியில் ஏற்றினார். “எம்ஜார் பேர வச்சிக்கிட்டு அழலாமா?” எனக்கொஞ்சினார். எம்.ஜி.ஆர் பாடல்களைப் பாடியபடி லுனாஸின் மையச்சாலையில் வண்டியை விட்டார். அந்தப்பயணம் அவனுக்கு உற்சாகமாக இருந்தது. பின்புறம் இருந்து மாட்டின் பிரமாண்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தவன் சமாதானம் ஆனான். அவனும் அப்பாவுடன் சேர்ந்து பாட்டுப்பாடத்தொடங்கினான். அப்பாவின் கையில் இருந்த ரோத்தான் குச்சியை பிடுங்கி எம்.ஜி.ஆரைபோல கைகளை ஆட்டினான். மாட்டை அடித்தான். அப்பாவுக்கு ஈடாகக் குரலை உயர்த்திப்பாடினான். எம்.ஜி.ஆருக்கு எந்தக் கஷ்டமும் வராதது போல தனக்கும் இனி வராது என நினைத்துக்கொண்டான். மறுநாள் தான் செய்த மாட்டுவண்டி சவாரி குறித்து அவன் சொல்வதற்கு முன்பே குப்பை வண்டியில் அவனைப் பார்த்ததாக பள்ளி முழுவதும் மீண்டும் கிண்டல் பேச்சு ஆரம்பமாகியிருந்தது. அதுதான் ராமச்சந்திரன் முதலும் கடைசியுமாக மாட்டுவண்டியில் ஏறியது.

                                                                                                                                    ***

வீட்டுக்குச் சென்றபோது புதம்மா வெற்றிலை இடித்துக்கொண்டிருந்தார். ஸாண்ட்ட கிளாஸ் உடையில் இருந்த தோமஸை ஒருதரம் உற்றுப்பார்த்து “அடடே” என்றார். அம்மாவை வெறும் நெற்றியில் பார்க்க மரியதாசுக்கு என்னவோ போல் இருந்தது. கொஞ்ச நேரம் அமைதியாக நின்றார். அம்மா வெளியே நாற்காலியை எடுத்துப்போட்டபோது அமர்ந்துகொண்டார். “ஏ நான் கிருஸ்மஸ் தாத்தா வந்திருக்கேன்” எனக் கத்திக்கொண்டே தோமஸ் வீட்டினுள் செல்வதை பார்வையால் மறுத்தவர் பின்னர் அனுமதித்தார்.

“அப்பாவோட பென்சன் வருது. ஆனா வீடு தரமாட்டன்னு சொல்லிட்டானுங்க. குடும்பத்துல யாராவது சென்டர்போட் வண்டி ஓட்டனுமாம். கவர்மன்ட்வேலைனாலும் தம்பி வேணானுட்டான் . கிளாப்பா சாவிட் குத்தபோரானாம். வீடு கெடைக்கும். தண்ணிகாசு, கரண்டுகாசு கட்ட வேணாம்” மரியதாஸ் ”ம்’ கொட்டி அமர்ந்திருந்தார். தோமஸுக்குப் பாட்டி வீடு மாறிச்சென்றால் மாட்டுவண்டி என்னாகும் எனக் குழப்பம் வந்தது. அங்கிருந்த சன்னல் வழியாக மாட்டுவண்டியைப் பார்த்தான். அவன் வீட்டில் கட்டம் கட்டமான வலைக்கம்பியில் சன்னல் இல்லை. எல்லாம் கண்ணாடி சன்னல்கள்தான். அப்படி உள்ளிருந்து வெளியே மாட்டுவண்டியைப் பார்ப்பது அவனுக்கு உற்சாகம் கொடுத்தது. கொஞ்ச நேரத்தில் “அப்பா” என வெளியே உற்சாகத்தோடு வந்தவனின் கைகளில் தூசிகளால் பழுப்பேறிகிடந்தவற்றை என்னவென்று உற்றுப்பார்த்தார்.  “கடசி கடசியா அவருக்கு நெனவு பெரண்டுருச்சி. உன்னையும் தம்பிங்களையும் சின்னப்புள்ளைங்கன்னு நெனச்சி சொந்தமா பேசிக்கிட்டு இருந்தாரு. செல சமயம் ரகளையே நடக்கும். ஆனா எப்பவுமே நீ உட்டுட்டுபோன பரிசையெல்லாம் அவர் தொட்டதில்ல. என்னையும் எடுக்கவிடல” சொல்லும்போது புதம்மாவின் கண்களில் ஈரம் மின்னியது.

பொட்டலங்களுடன் தோமஸ் மாட்டு வண்டிக்கு ஓடினான். அப்பா அடிப்பார் என்பதெல்லாம் அவனுக்கு மறந்திருந்தது.

“ஏய் நான் தான் கிருமஸ்தாத்தா. இது கிருஸ்மஸ் தாத்தா மான் வண்டி. ஒங்க எல்லாருக்கும் பரிசு கொண்டு வந்திருக்கன்.”  எனக்கூச்சலிட்டவனைச் சுற்றி சென்டர்போட் லயப்பிள்ளைகள் கொஞ்ச நேரத்தில்  கூடினர்.

“கிஸ்மஸ் தாத்தாவாம்” என புதம்மா பேரனின் செய்கையில் சிரித்தாள்.

மரியதாஸின் ஈரம் படிந்த கண்களில் அவன் எம்.ஜி.ஆர் போல காட்சியளித்தான்.

புதுவிசை – செப்டம்பர் 2017

(Visited 1,101 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *