வண்டி: ஈப்போவிலிருந்து மூன்று கடிதங்கள்

வணக்கம் நவீன் நான் விமர்சனம் செய்பவள் அல்ல. ஆனால் ‘வண்டி ‘நிறைய விடயங்களை ஒவ்வொருராஜி வாக்கியத்திற்குப் பின்னாலும் ஒளித்து வைத்திருப்பதாக உணருகிறேன். நீங்கள் திறன்மிக்க கதை சொல்லி என்பதை ஒவ்வொரு முறையும் உணருகிறேன். கதையின் ஆரம்பித்திலேயே மரியதாஸ் எனும் பெயர் இக்காலச் சூழலுக்கான கதை இல்லை என சொல்லாமல் சொல்லி செல்கிறது. இப்பொழுது இந்த பெயர்கள் இளம் பிள்ளைகளுக்கும் இளைஞர்களிடமும் இல்லை. அல்லது மிக மிக அரிது என்பதே அதன் காரணம்.

மரியதாஸ் உண்மையில் எம்ஜீயாருக்காக கிருஸ்மஸை தவிர்கிறாரா இல்லை தன் அப்பாவின் இறப்புக்குத் துக்கம் அனுசரிக்கிறார என்பது என்னுள் எழுந்த கேள்வி. ஏனெனில் ராமச்சந்திரனாக இருந்த மரியதாஸின் உணர்வில் இன்னமும் தான் எந்த வழி வந்தோம் என்கிற வலியும் நினைவும் இருந்து கொண்டே இருக்கிறது. தான் கொண்டாடிய மாட்டு வண்டியே தன்னை கேவலபடுத்த உதவியதற்காக அந்த வண்டியை அவர் வெறுக்கிறார். அதன் சாயல் தன் மகனை அடிப்பதிலும் அந்த கிண்டலின் வலி அவனுக்கும் வந்துவிட கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறார். அதன் வெளிப்பாடே தோமஸுக்கு விழுந்த அடியாக கருதுகிறேன். அப்பா தனக்கு அளிக்கும் பரிசுகளில் தெரியும் அப்பாவின் கலை வெளிப்பாட்டை மனதளவில் கொண்டாடினாலும் அதன் மூலம் குப்பைகளை பொறுக்கியதில் கிடைத்தது என தெரிய வந்த பொழுது அந்தப் பரிசு பொருட்களை எடுக்காமலே வெளியாகி விடுகிறார் ராமச்சந்திரன். தன் மேல் விழுந்த இழுக்குகெல்லாம் தான் பிறந்த இடமும் வளர்ந்த சூழலும் காரணம் என முடிவு செய்தவர் தான் விரும்பும் தலைவரின் பெயரையே மாற்றிக் கொள்கிறார். தான் மதம் , இடம் மாறுவதின் வழி தன் அடையாளங்களையும் அதனால் வந்த வலிகளையும் மறைக்க மறக்க நினைக்கிறார் மரியதாஸ். இது மரியதாஸ்க்கு மட்டும் ஏற்பட்ட கற்பனை அல்ல என்பது வாசர்கள் அனைவருக்கும் தெரிந்ததே. மதம் மாறி கொள்வதின் மூலம் தன்னை மேன் நிலை மக்களாக காட்டி கொள்ள முனைந்த கூட்டத்தில் மரியதாஸ் இணைய முயல்கிறார். அதுவே லய மக்கள் கொடுத்த பலகாரங்களை புறக்கணிப்பது போன்ற செயல்களின் வழி நிறுவப்படுவதாக உணர்கிறேன்.

ராமச்சந்திரன்(மரியதாஸ்) சிறுவனாக இருக்கையில் தன் தகப்பனை கொண்டாடவே செய்கிறார். தன் தாய் மேல் அத்தனை ஈர்ப்பு இருப்பதாக எங்கும் தெரியவில்லை. அப்பா இல்லாமல் போனதின் அறிகுறியாகவே தன் தாயின் நெற்றியை நினைக்கிறார். 90களில் லயத்து வீடுகளுக்கோ அல்லது அடுக்கு மாடி குடியிருப்பு பகுதிகளுக்கோ செல்லும் பிள்ளைகளை கெட்ட/ஒழுக்கமற்ற பிள்ளைகளாகவே சித்தரித்த ஒரு சூழல் இருந்ததை நான் அறிவேன். அதன் வெளிப்பாடு வக்கிரமாக இருந்தது. லயத்துக்காரன் லயத்துக்காரி…லயத்து கோவில் என பிரித்ததும் இல்லாமல் அதை பாவபட்ட மக்கள்/இடமாக மாற்றி வைத்த பெருமை நிறைய பேருக்கு உண்டு. புதம்மா காளையின் கழிவையும் இனி தான்தான் அள்ள வேண்டும் எனும் ஒற்றை வாக்கியத்திலேயே தான் செய்யும் வேலையை சொல்லி செல்கிறார். அதன் வலி நம் மேல் படர்ந்தாலும் கதை போக்கில் நாம் புதம்மாவின் வலியை விட ராமச்சந்திரனின் வலியைத்தான் அதிகம் உணர்கிறோம். மரியதாஸின் மனைவியும் தான் தனியாக சமையல் அறையில் துன்பப்டுவதையும், அதன் காரணம் எம்ஜிஆர் இல்லை என்பதையும் சொல்லாமல் சொல்லி செல்கிறார். இந்தக் கால கட்டத்தில்தான் ஆண்கள் அதிகம் பெண்களில் துன்பங்களிலும் வீட்டு வேளைகளிலும் பங்கு எடுத்துக் கொள்ளாததையும் ஆண்கள்தான் வெளியில் படும் துன்பங்களுக்கு அவமானங்களுக்கும் பெண்கள் வழி வழிக்கால் தேடியதையும் மெல்லமாக சொல்லிச் செல்கிறது கதை. (மரியதாஸ் தன் மனைவியை மணந்தது மூலமாக தன் அடையாளங்களை துறக்க முயற்சிப்பது)

இந்த நாட்டில் வாழ வந்த இனங்களில் சீன இனமும் ஒன்று.தமிழன் உடல் உழைப்பை மட்டுமே நம்பி இன்னமும் இன்னொரு இடத்தில் அடிமையாக இருப்பது மிக நூதனமான நிதர்சனம். அதுவே புதம்மா மலக்கழிவை உரமாக கொட்டிவிட்டு வெறும் 50 காசையும் ஒரு கீரைக்கட்டையும் வாங்கி வருவது தெரிகிறது. அந்த கழிவின் மூலம் தோட்டக்காரன் பல நூறுகளை சாம்பாதிப்பது யாருக்கும் புரியாமலே போய்விடும். புரிந்தாலும் அதை புறக்கணித்து விடும் இனம் புதம்மாவின் இனம். புதம்மாவின் வழி இலாபம் அடையும் இனமே அவளை வசைப்பாடுகிறது. வேறு வழி செல்ல சொல்கிறது. இதுதான் நிராகரிக்க பட்ட மக்களின் மிக வேதனையான விடயமாக சொல்லிப்போகிறது கதை. இன்னொரு இடத்தில் சாக்கடையே எல்லை கோடாக நிற்கிறது. இது சாக்கடையாக இருக்கும் மனித மனங்களின் எல்லை கோடுகள். ஏழைகளின் துன்பங்களை தீர்ப்பவராகவே எம்ஜிஆர் பார்க்கப்பட்டார். அவரை வழிக்காட்டியாக பலர் ஏற்றுக் கொண்டார்கள். தங்களை எம்ஜியாரகவும் நினைத்துக் கொண்டார்கள். அதன் வெளிப்பாடே இறுதிக்காலங்களில் மரியதாஸின் அப்பா எம்.ஜி.ஆர் தோற்றதிற்கு மாற முயற்சிப்பது. அதன் மூலம் மரியாதையை தேட முயற்சித்திருக்கலாம். தன் பிள்ளைகளை இறுதி வரை ‘தன்’பிள்ளைகளாகவே பார்க்கும் குணம் நம் இனத்திற்கு அதிகம் அதன் வெளிப்பாடே நினைவு பிரண்ட நிலையில் குழந்தைகளிடம் சுயமாக பேசிக் கொள்ளுதல் என நினைக்கிறேன். அல்லது பேச முடியாமல் போனவற்றை பேச முயற்சி செய்ததாக கூட இருக்க கூடும். தன்னை வேறு ஓர் அடையாளத்துடன் காட்ட முயற்சிப்பதுவாகவே தான் வளர்ந்த குடும்பத்தில் இருந்து தன்னை ஒதுக்கி கொள்வதின் அதன் வெளிப்பாடே தன் தகப்பனின் இறுதி சடங்கில் மரியதாஸ் ஒதுங்கி நின்றது அல்லது மரியதாஸ் தம்பியே தன் அண்ணனை ஒதுக்கியும் வைத்திருக்கலாம். அதுவே அவன் முன் நின்று அனைத்துக் காரியங்களையும் செய்ததற்கான காரணமாகவும் இருக்கலாம். காலம் எல்லாவற்றையும் தன்னுள் புதைத்துக் கொள்ளும். ஆனால் எதையும் மறைத்துக் கொள்ளாது.

ஒவ்வொரு இடத்திலும் காலம் தன் நிலையை மாற்றிக் கொள்ளும், அது யார் மேலும் இயலாமையை திணிப்பதில்லை, மாறாக மகிழ்ச்சியையும் வாழ்வை வாழவும்தான் சொல்லிச் செல்கிறது. அதன் குறியீடாகவே மாட்டுவண்டியையும் மரியதாஸின் மகனையும் காண்கிறேன்.

நவீன் கதையை இன்னும் நிறைய பேசலாம். அதிகம் எழுதிவிட்டேனோ என தோன்றுகிறது. கதை பல மன நிலையில் இருந்தும் பேசவும் பார்க்கவும் வைக்கிறது. இந்த கதையை அழுத்தமாக சொல்ல வேண்டுமெனில் மலேசியாவில் இல்லை என மேம்போக்கோடு மறுக்கப்படும் சாதிய வீரியத்தின் ஒரு கோடு மட்டுமே. அது குழந்தையின் பேரோடு ஒரு மனப்போராட்டத்தை பேசி போகிறது . எனக்கு வயது 33 ஆக போகிறது . 7 அல்லது 8 வயது வரைக்கும் கம்பங்களில் மலம் அள்ளும் தொழிலாளியை பார்த்து இருக்கிறேன்.அப்பொழுது சரியாக புரியவில்லை.அவர் புறமுதுகு மட்டும் ,தோளில் தூக்கிய வாளி மட்டும் இன்னிம் நினைவுகளில்.

ராஜி, ஈப்போ

 


21034705_1820379971320385_7255683185298959794_nராமச்சந்திரன் தான் மரியதாஸ் என்பதை உணரும் வரையில், வண்டி கொஞ்சம் நொண்டிக்கொண்டுதான் இருந்தது….அறிந்ததும் மீள் வாசிப்பு அவசியமாகி…..பயணம் மிகவும் அழகாயிருந்தது!பெற்றோரின் ஜாதி, மற்றும் அவர்கள் செய்யும் தொழில் மீது அவமானப்பட்டு வெறுப்புற்று…..குடும்பத்தை விட்டு பிரிந்து….கிருஸ்துவ பெண்ணொருத்தியை மணமுடித்து…..மதம் மாறி….வேறொரு அடையாளத்தை அமைத்துக்கொண்டு வாழும் ஒருவன். தனது மகனின் வழி மனிதம் உணருவதாக கதையின் கரு.கதையில் எம்.ஜி.ஆர் அவர்களின் ஆளுமை, ஏழை எளியவரின் வாழ்வில் அவர் ஏற்படுத்திய தாக்கம், எதிலும் அவரையே, எதையும் அவராகவே கருத/காணமுடிந்த மக்களின் பற்று போன்றவற்றை கதை நடையில் சொருகியிருந்த விதம் பிரமாதம்.நவீன் அவர்களை பல முறை வாசித்திருந்ததாலோ என்னமோ, எதிர்பார்ப்புகள் சற்று அதிகம் இருந்தது. சில இடங்கள் தேவையில்லாது போலுணர்ந்தேன். ஒரு இடத்தில ராமச்சந்திரனை தவறாக தனபாலன் என எழுதப்பட்டுள்ளது.மற்றபடி கதைசொல்லி ‘வண்டி’யை செலுத்திய விதம் மிகவும் அருமை. மிகவும் நேர்த்தியான கதையோட்டம். சரளமாக கதைச் சொல்வதில் நவீன் ஓர் அபாரம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.வாழ்த்துக்கள் நண்பரே!

கலைசேகர், ஈப்போ


நாட்டின் அன்றைய உண்மை நிலவரத்தை இக்கதை நினைவுபடுத்தியதாக நினைக்கிறேன். வறுமையி21192168_1421962084553551_8980742143534033502_nல் வாழ்ந்த பலரின் அனுபவங்களையும், ஒதுக்கப்பட்ட ஏழை வர்க்கத்தையும் இச்சிறுகதையின் வழி வெளிச்சம் காட்டப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில் வாழ்ந்த மக்கள், அவர்களின் சாதீய புறக்கணிப்புகள், கீழ்நிலைத் தொழிலாளிகள் என்னும் பிரிவுகள் மலிந்தே கிடந்தது. கதை சிறப்பாக புனையப்பட்டிருக்கிறது என்பதே என்  கருத்து. நன்றி.


உத்ராபதி, ஈப்போ

 

(Visited 142 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *