நேற்று நவீன் பதிவிட்டவுடன் வண்டி கதையை வாசித்தேன். முதல் வாசிப்பில் கதை பிடிக்குள் வரவில்லை. முதலில் கிருஸ்த்துவ கதை மாந்தர்கள் வருகிறார்கள். அடுத்த மடிப்பில் இந்து கதைமாந்தர்கள் ஏன் வரவேண்டும் என்று குழப்பமாகவே இருந்தது. இந்தப் புரியாமைக்கு ரொம்ப நாட்களாய் இருக்கும் என் கவனச் சிதறல் குறைவு ஒரு காரணம். வயது கூடிப்போனதும் ஒரு காரணமாக இருக்கலாம். இரண்டாவது வாசிப்பில் கதை புரியத் தொடங்கியது. நல்ல வேளையாக எல்லா அடுக்கிலும் கதைப் பொருள் ஒன்றே என்பதால் கொஞ்சமாய்த் தெளிவு உண்டானது. பின்னல் வேலைப்பாடும்தான் குழப்பத்துக்குக் காரணம். மூன்றாவது அடுக்கில்தான் கொஞ்சமாய் வெளிச்சத் தீற்றல் விழுந்தது.
கதையின் இரண்டாவது அடுக்கில் வாசகனுக்கான மிகப் பெரிய இடைவெளியை உருவாக்கி தேடலுக்கான முகாந்திரத்தை வைக்கிறார். இறுதி அடுக்கில் முடிச்சு தானாக அவிழ்கிறது. நவீனக் கதை சொல்லல் முறை இது.
தங்களின் தாழ்ந்த சாதிய அடையாளத்தை மலேசியர்கள் உதறிவிட்டு மேலெழுந்து கம்பீரமாய் தோற்றம் எடுத்து வருவதை நான் என் வாழ்நாள் நெடுக்க அவதானித்து வருகிறேன். தன் பெற்றோர் அல்லது அதற்கு முந்தைய தலைமுறையினரின் தாழ்ந்த அடையாளத்தை இல்லாமல் ஆக்கும் போக்கு இப்போதுள்ள தலைமுறையில் தெளிவாகவே காணக்கிடைக்கிறது. இந்தக் கதை அதற்கொரு சான்று. மரியதாஸ் தன் பழைய அடையாளத்தை மறக்க/மறுக்க முயன்றுவரும் தருணத்தில் செண்டர் போர்ட் மாட்டு வண்டியில் ஏறிக் கும்மாளமிட்ட மகன் தோமஸை உக்கிரத்தோடு தாக்குவதிலிருந்து மரியதாஸின் மனத்தினுள் இகழ்சிக் கறை பட்டிருந்ததைக் காட்டி விடுகிறார். கதையின் மைய இடம் இது.
இன்னொன்று மாட்டுவண்டியின் சக்கரத்தின் உயரத்தோடு தன் உயரத்தை ஒப்பிட்டு நோக்கி தான் பெரியவனாகிவிட்டேன் என்று கதாசிரியர் சொல்லும் இடம் கவித்துவம் நிறைந்தது. தோமஸின் பாட்டி வெற்றிலைப் பாக்கு எச்சிலைத் துப்பணும் என்று சாக்குச் சொல்லித் தன் சுய மரியாதையைக் காப்பதும் கவித்துவம் நிறைந்த இடம்தான்.
எனக்கு சில சந்தேகங்கள் எழுந்தன. இக்கதையை அறுபதுகளில் வைத்துப் பார்க்கலாம் எம் ஜி ஆரை நீக்கிவிட்டிருந்தால். ஏனெனில் மாட்டு வண்டி, மலம் அள்ளும் வேலை எல்லாம் அறுபதுகளில் அல்லது எழுபதுகளின் துவக்கத்தில் நான் பார்த்திருக்கிறேன். லுனாஸ் போன்ற உட்புற பகுதிகளில் எண்பதுகளில் நடந்திருக்கலாம். ஆட்சேபனை இல்லை. எம் ஜி ஆர் எண்பதுகளின் மத்தியில் இறந்தார் என்ற நினைவு.
எண்பதுகளில் இந்து சமயத்திலிருந்து கிருத்துவ சமயத்துக்கு மாறிய ஒரு தலைமுறையினர் கதை கொஞ்சம் நம்பகமற்ற தன்மையை உண்டாக்குகிறது. நான் இந்துவும் கிருத்துவ மதத்தினர் சம எண்ணிக்கையில் வாழ்ந்த தோட்டத்தில் கால் நூற்றாண்டு வசித்தவன். அங்கே இந்த மதம் மாறுவதை நான் பார்க்கவில்லை.
தன் சாதிய அடையாளத்தை இல்லாமல் ஆக்கும் மனித மனச் சித்திரம் கதையில் கூச்சலில்லாமல் பதிவாகி இருக்கிறது. மரியதாஸ் தோமஸ் பாத்திரங்கள் கதை நகர்ச்சியை சீரான ஒழுக்கோடு செலுத்துகிறார்கள். இரண்டாவது வாசிப்பில் கதையின் கனம் வலுக்கிறது.
இன்னொரு முறை வாசிக்க வேண்டும். மேலும் சில திறப்புகள் நிகழலாம்.
கோ.புண்ணியவான்