வண்டி: கடிதங்கள்

IMG-20170505-WA0009‘வண்டி’ சிறுகதையை வாசித்தேன். அருமை!  ஈப்போ வாசகி ராஜி  எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த அத்தனை கருத்துக்கும் உணர்வுக்கும் நானும் உடன்படுகிறேன்! நிறைய இடங்களில்,’வார்த்தைக்குள் வாக்கியம்’ வைத்துள்ளீர்கள்! வாசகனின் ஊகத்துக்கும் சிந்தனைக்கும் – சொல்லாமலே உணர்ந்து கொள்வதற்கும் நிறையவே இடம் கொடுத்துள்ளீர்கள்.

‘சொல்லப்பட்ட வார்த்தைகளைவிட சொல்லாமல்விட்ட வார்த்தைகளுக்கே வலிமை அதிகம்’ என எங்கேயோ படித்ததாக ஞாபகம். சொல்லாமலேயே நிறைய சொல்லி இருந்த இடங்கள் ஏராளம். அந்த இடைவெளியும் வாசகனுடைய சுய சிந்தனைக்கும் முடிவுக்கும் இடங்கொடுக்கும் கதைகள்தானே சிறந்த கதைகளாக அமையும்.

மற்றவர்களுக்கு எப்படியோ. எனக்கு இரண்டாவது வாசிப்பு அவசியமில்லாமல் இருந்தது. முதல் வாசிப்பிலேயே கதை புரிந்துவிட்டது. தன்னை எனக்கு அறிமுகப்படுத்தி அடையாளப்படுத்திக் கொண்டது! ஒரு வேளை, கதைசொல்லி எனக்கு நன்கு பரிட்சியமானவர் என்பதாலோ என்னவோ. தமிழ்நாட்டிலும் சரி, இங்கு நம் நாட்டிலும் சரி, நிழல் எம்.ஜி.ஆரை நிஜ எம்.ஜி.ஆர் என நம்பி அவரைப் போலவே அல்லது அவராகவே மாறி வாழ்ந்து வந்த ஒரு பெரும் கூட்டம் இருந்தது என்னவோ உண்மைதான்.

‘வண்டி’ கதைமாந்தர்கள் (தாத்தா-அப்பா-பேரன்) இந்த ரகத்தைச் சேர்ந்தவர்கள்தானே. எனக்கும் கூட அந்த நிழல் நிஜமாகி இருந்த காலம் உண்டு. வண்டியைப் பற்றி இன்னும் நிறைய சொல்லலாம். நேரில் பேசலாம்.

அன்புடன்,
உங்கள் அபிமான வாசகன்
பி.எம்.மூர்த்தி

வணக்கம் நவீன். வண்டியில் பயணித்தேன். ஆரம்பத்தில் சாதாரண தோட்டப்புறத்து கதை மாதிரி தெரிந்தாலும் அதன் பின்னர் கனமாக ஆகிவிட்டது. மலம்,குப்பை அள்ளுபவர்கள் மதத்தின் பேரில் விருட்சமாய் வளர்ந்திருந்த சாதியின் பிடியில் சந்தித்த அவமானங்கள் மனதைப் பாதிக்கவே செய்தன. மற்ற மாணவர்களைப் போன்று சிறுவயது மரியதாஸ் தன் ஆசிரியையின் தட்டில் பாசத்தோடு வைத்த நெய்யுருண்டையோடு எல்லா பலகாரத்தையும் குப்பைத் தொட்டியில் கொட்டிய இடம் வெகுவாய் பாதித்தது.

இந்துமதத்தினர் சிலர் சாதி பாகுபாடு காட்டி நெற்றியில் திருநீறு இட மறுத்தது இவையாவும் அவர் பின்னாளில் மதம் மாறிட காரணமாய் அமைந்தது. பின்னாளில் தன் மகனுக்கு யார் என்ன கொடுத்தாலும் சாப்பிட விடாமல் மரியதாஸ் தடுத்தது சிறுவயதில் அவனுக்கு ஏற்பட்ட அவமானம் தந்த கோபமே என உணர்ந்தேன். காலத்தை வேறுப்படுத்திக்காட்ட எம்.ஜி.ஆர் சுடப்பட்டதையும், அவரது இறப்பையும் பயன்படுத்தியதும் பாராட்டத்தக்கது.

சாதிப்பிரிவினை மட்டுமல்லாது ஏழ்மையும் சொல்லப்பட்டிருக்கிறது. ஒருவர் பயன்படுத்தி தூக்கிப் போட்ட பழைய பொருள்கள் வசதியில்லாதவர்களுக்கு எவ்வளவு பெருமைக்குரிய விசயம் என்பதைக் காட்டிய விதம் மிகவும் எதார்த்தம்.

மனிதம் பேசும் அருமையான கதை.

கி.இ.உதயகுமாரி

அருமையான கருவுடன், அழகாக சொல்லப்பட்ட கதை. ஜாதி வித்தியாசத்தை வித்தியாசமான பாணியில் சொன்ன விதம் என்னைக் கவர்ந்துள்ளது. மத மாற்றம் ஏன் ஏற்படுகிறது? இந்து மதத்தில் காட்டப்படும் பிரிவினை வாதமே முதன்மை காரணியாகும். கால வேறுபாடும் கதையின் நகர்தலும் வாசகனுக்கு நல்ல வேட்டை.

இரண்டு காலக்கட்டத்திலும் நடைபெறும் சம்பவங்களும் அழகாக கோர்வையாகின்றன. தங்களின் எழுத்து பணி தொடரட்டும்.

அன்புடன்,
சுதாகர் சுப்ரமணியம்

வண்டி பிடித்திருந்தது.

ஒடுக்கப்பட்டவர்களுக்கு எம்ஜியார் அளித்த உளவியல் விடுதலையை அழகாகப் பதிவுசெய்துள்ள கதை. எம்ஜியார் பாடலை இருவரும் பாடிக்கொண்டு சென்றார்கள் என்பதற்கு பதிலாக அந்த இடத்துக்குப் பொருத்தமாக அவர் பாடல் ஒன்றைக் குறிப்பிட்டு எழுதியிருந்தால் இன்னும் காட்சி எடுப்பாக இருக்கும் என்று நினைத்தேன்.

எம்ஜிஆர் சினிமா வழியாக மக்கள் மனதில் இடம்பிடித்த நுட்பத்தை விளக்கும் MSS Pandian-ன் Image Trap (தமிழில் பூ.கொ.சரவணன் மொழிபெயர்ப்பில் பிம்பச்சிறை என்று வந்தது) வாசித்திருக்கிறீர்களா?

சிவானந்தன் நீலகண்டன், சிங்கப்பூர்

வண்டி சிறுகதை

(Visited 86 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *