வணக்கம் டாக்டர்,
நீங்கள் ம.நவீனுக்கு எழுதிய கடிதம் வல்லினம் 100ஐ தொட்டிருப்பதால் அதன் பதிப்பாசிரியர் எனும் அடிப்படையில் என் எதிர்வினையை முன்வைக்கிறேன்.
உங்கள் முதல் கடிதம்
(1) கட்டுரையைப் பிரசுரிப்பதாகச் சொல்லி போடாமல் விட்டு வாக்குறுதி மீறியது;
- வல்லினம் 100 படைப்புகளுக்கு ஒவ்வொரு பிரிவுக்கும் பொறுப்பாசிரியர் நியமிக்கப்பட்டு படைப்புகள் தேர்வு செய்யப்பட்டன.
- கேட்டு பெறப்பட்ட படைப்புகள் எழுத்தாளரின் அனுமதியுடன் எடிட் செய்யப்பட்டன.
- பெரும்பாலும் மாற்றங்களைக்கோறும் படைப்புகளைத் திருத்தம் செய்து தரச்சொல்லி கேட்டுக்கொள்ளப்பட்டது.
- திருத்தி தருவதில் சிக்கல் உள்ளவர்களின் படைப்புகளையும்; கேட்டுக் கொண்ட பின்னும் எழுதாத எழுத்தாளர்களையும் அத்துடன் விட்டு விட்டோம்.
இவ்வளவு தெளிவாய் வரையறைகளை வைத்து செயலாற்றிக் கொண்டிருக்கும்போது நீங்கள் சொல்லும் வாக்குறுதி மீறல் எங்கு நடைபெற்றதென ஆதாரத்துடன் நிறுவினால் மேற்கொண்டு இதுபற்றி பேசலாம்.
(2) ‘வாசகர் வட்டத்தைப் போல் பணம் எதிர்பார்த்திருந்தால் கொடுத்திருப்பேன்’ என்ற சொல்லாடல்.
அருகில் இல்லாத ஒரு தரப்பைப் போகிற போக்கில் தலையில் தட்டிவிட்டு செல்லும் செயலாகவே இச்சொல்லாடல் உள்ளது. ‘எதிர்பார்த்தல்’ என்பது லஞ்சம் என்கிற புரிதலையே இங்கு தருகிறது. அப்படியானால் வல்லினம் லஞ்சம் வாங்கிக்கொண்டும் படைப்பைப் போடும் என்கிற வேறொரு பார்வையும் நீங்கள் கூறுவதாகிறது. இன்றும் ஆய்வுகளில் தோய்ந்திருக்கும் நீங்கள் இவ்வளவு அலட்சியமாக சொற்களை பிரயோகிப்பது சரியா?
இரண்டாவது கடிதம்
(1) கலை இலக்கிய விழாவுக்கு நீங்கள் வரவில்லை என்ற வன்மத்தை வைத்து இப்போது பழி சுமத்துவதாக வசை.
நீங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்பதை என்னிடம்தான் புலனத்தில் தெரிவித்தீர்கள். நீங்கள் மட்டுமில்லை இப்படி நிறையபேர் கடைசி நேரத்தில் வரவில்லை. இதையெல்லாம் கணக்கில் வைத்துக் கொண்டு சந்தர்ப்பம் கிடைத்தால் பழிதீர்க்க நவீனுன் சரி வல்லினமும் சரி பலகீனமானவர்கள் அல்ல.
(2) //கருத்தரங்குகள், பட்டறைகள் நடத்துவோர் கட்டணம் வசூலிப்பதற்குப் பெயர் லஞ்சம் என்றால் அதனைத் தான் தாங்களும் வாங்கியிருக்கிறீர்கள்.//
கருத்தரங்கு, பட்டறை நடத்துவதற்கு பணம் வசூலிப்பதை லஞ்சம் பெறுவது என்பதாக நவீன் சொல்லியிருக்கவில்லை. ஒருவேளை முதல் கடிதத்தில் நீங்கள் கூறியிருக்கும் ‘வாசகர் வட்டம்’ இயக்கம் இதற்குத்தான் பணம் வசூலிக்கிறார்கள் என்றால், முதல் கடிதத்தில் நீங்கள் அவர்களை அவதூறு செய்திருப்பதாகவே பொருள்படும். மேலும், வல்லினம் கலை இலக்கிய விழாவும் சரி வல்லினம் 100 நூலும் சரி பணம் பெற்று செயல்படுத்த கருத்தரங்கோ, பட்டறையோ அல்ல.
இறுதியாக
டாக்டர்… பொதுவெளியில் இயங்குபவர்கள், ஆளுமைகள் குறித்து எவறேனும் பேசுவதை கேட்க நேரிட்டால் முதலில் அவர் மீதான வசையிலிருந்து தொடங்குவது தமிழ்ச் சூழலில் இடைபட்ட காலமாக நான் கவனித்து வருவது. இறந்து மண்ணாகிவிட்ட டாக்டர் இராம சுப்பையா தொடங்கி, வழக்கறிஞர் பசுபதி, ஆய்வாளர் நா.பாலபாஸ்கரன் வரை ஒருவரை அவரது சாதனைகளால், கொண்டு வந்த மாற்றங்களால் புதுமைகளால் அறிமுகப்படுத்த ஒருவருக்கும் மனம் வருவதில்லை. வேறுவழியில்லாம் சொல்லித்தான் ஆகவேண்டும் என்றால் அழமற்ற பதிவுகளே மிஞ்சும். இவை குறித்து சிந்திக்கும்போது வசை, அவதூறு வீசப்படும்போது அவர்களும் அவரைச் சார்ந்தவர்களும் அவ்வப்போதே எதிர்வினையாற்றாமல் விட்டது காரணமாயிருக்குமோ எனத் தோன்றுகிறது. உங்கள் மின்னஞ்சல் பதிவுகளுக்கு பதிலளிக்காமல் விடுவது அதே தவற்றை நானும் செய்வதற்கு ஒப்பாகிவிடும். அதே சமயம் எல்லா குற்றச்சாட்டுகளுக்கும் பதில்சொல்லி விளக்கவும் எப்போதும் அவசியமிருப்பதில்லை என்பதையும் அறிகிறேன்.
விஜயலட்சுமி,
வல்லினம் நூறு பதிப்பாசிரியர்