எனக்கு கதைகள் வாசிப்பது பிடிக்கும். ஆனால் அதிகமாக வாசிக்கும் நேர விஸ்தாரம் இல்லை. எப்போதாவது வாசிப்பதில் சில மனதில் இருக்கும். சில பல வருடங்கள் ஆகியும் மீண்டும் மீண்டும் நினைவில் வந்து போகும். தமிழில் மட்டுமல்ல மலாய் மற்றும் ஆங்கில நாவல்களை வாசிப்பேன். அப்படி வாசித்ததில் இன்றளவும் நான் பல முறை படித்து புரிந்து கொள்ள முடியாமல் போய் பல முறை வாசிப்புக்கு பிறகு புரிதலை உண்டாக்கிய கதைகளில் ஒன்றுதான் உங்கள் ‘நாகம்’. பார்க்க ஏதோ கோயில் குளம் நாகம் என பழைய இச்சாதாரி நாகம் பற்றியது போன்ற பீடிகை இருந்தாலும் கதை சரியா இல்லையே என்ற அத்திருப்தியோடுதான் கணிசமான மறுவாசிப்பை செய்தேன்.
மதம் சார்ந்த நம்பிக்கைக்கு பின்னால் மறைந்திருக்கும் மூன்று பேரின் சுயநல மனோபாவத்தின் ஒரு சேர் பிம்பமாக உருவாக்க பட்டதாக என் பார்வையில் இந்த நாகம் தென்படுகிறது. கதையில் ஒரு நாகம் கொல்லப்படுகிறது. பல நாகங்கள் அடிக்கடி கோழிக்குஞ்சை திருடி தலைமறைவாகின்றன. இன்னும் பல காசி வைத்த நெருப்பில் சாம்பலாகி இருக்கலாம். ஆனால் அனைத்துக்கும் உச்சமாக உணர்ச்சியின் பிம்பமாக பல காலம் அடக்கி வைத்திருந்த காமத்தின் பிம்பமாக பெண் மஞ்சள் நாகமாக அந்த இரவில் காசியை அவளுக்கு பணிய வைத்து சேவகம் செய்ய வைக்கிறாள் முத்தம்மா. இதை புரிந்து கொள்ள பல முறை வாசித்தேன் இந்த கதையை.
இதே போன்ற உணர்வை எழுத்தாளர் சிட்னி ஷெல்டனின் நாவல்களில் கண்டது உண்டு. வாசிப்பதற்கு எதார்த்தமாக இருந்தாலும் என்னவோ வேறொரு விஷயம் அதில் மறைந்து இருக்கும். வார்த்தைகள் நர்த்தனமாடும். குறிப்பாக அவரின் The Naked Face, If Tommorow comes, The Doomsday Conspiracy ஆகிய நாவல்களை சொல்வேன். இவற்றில் என்னை இன்றளவும் கவர்ந்தது If tomorrow come. த்ரேசி என்னும் ஒரு சாதாரண பெண் எப்படி அசாதாரணமாகிறாள். தந்திரத்தால் அவள் எப்படி சூழ்நிலைகளில் வெற்றி கொள்கிறாள். ஒரு ஆணை எப்படியெல்லாம் தன் பெண்மையில் காமரசனையை புகுத்தி பணிவிடை செய்யவைக்கிறாள் என்பதை நூதனமாக சொல்லியிருப்பார். பாம்பு என்றாலே இச்சை, உணர்ச்சி, காமம் இப்படி பல சொல்லலாம். கதையில் மஞ்சள் ராஜ நாகம் என்பது முத்தம்மாக்கும் காசிக்குமான உறவை பிறர் சந்தேகப்படாமல் இருக்க வேண்டி உருவாக்கப்பட்ட கட்டுக்கதை. முத்தம்மா இங்கே அதிகாரம் கொண்ட பெண்ணாக காசியின் ஆண்மையை நாகம் போலே தந்திரமாக அடைகிறாள். அதற்கு விலை தான் இந்த சாமியார் அலங்காரம், தங்கம், மரியாதை போன்றவை. சன்னமாக ஒரு ஆண் அடிமைத்தனம் புலப்படுகிறது. முத்தம்மா போன்ற ஆளுமை மிக்க பெண் தனக்கானதை தான் விரும்பிய படி எடுத்து கொள்கிறாள். இதே போல தான் நம் நாட்டு எழுத்தாளர் Faisal Tehraniயின் Tunggu Teduh Dulu என்ற நாவலில் கதாநாயகியை அடைய அவளது சித்திமகன் உட்பட பல ஆண்கள் மென்மையாகவும் வன்மையாகவும் முயற்சிக்கிறார்கள். ஆனால் அவளோ தனக்கு பிடித்தவனை தனக்கான முறையில் அடைந்து சுகிக்கிறாள். இங்கே முத்தம்மாவின் நடை உடை பாவனை நமட்டு சிரிப்பு தான் காசியின் ஒவ்வொரு செயலுக்கும் உந்து சக்தியாக இருப்பதாக நான் பார்க்கிறேன்.
முத்தம்மா என்னும் வீரியமிக்க நாகத்தின் உணர்ச்சி வடிகாலுக்கு பயன்படுத்தப்பட்ட காசியின் கூலி சாமியார் என்ற மரியாதையும் அதன் பொருட்டு தரப்பட்ட தங்க நகைகளும். பின்நாளில் இது பக்கிரிக்கு தெரியாமலே தான் இருக்கிறது. அவனுக்கு தெரிந்த உண்மையெல்லாம் நாகம் என்பதே இல்லை. அவன் கொன்றது சாதா நாகம். எங்கே காசி உண்மையைச் சொல்லி விடுவானோ என்ற பயத்தில் பாம்பு கடியிலிருந்து மீண்டு வந்த காசியை கொல்கிறான் பக்கிரி. ஒண்ட இடமில்லாமல் இருக்கும் பக்கிரி வாழ்வில் இன்னொரு இலக்கை நோக்கி போக எடுத்துக்கொண்ட யுக்தி. இங்கேயும் பாம்பின் மற்றுமொரு குணமான தந்திரம் தெளிவாகிறது. பாம்பு சாகடிக்கப்பட்ட உண்மை தெரிந்தாலும் பரவாயில்லை, தன்னை கொன்றாலும் பரவாயில்லை என ஆரம்பத்தில் சொன்னது எல்லாம் தனக்கான கருணையை எப்படியாவது ஏற்படுத்தி தப்பிக்கலாம் என போட்ட திட்டமாக கூட இருக்கலாம். ஆக கதையில் நாகத்தின் விஷமே முழுவதுமாக பரவி அதன் சாரத்தை எப்படி அடுத்த கட்டதுக்கு நகர்த்தலாம் என பக்கிரி மூலம் காத்திருக்கிறது.
நோவா, சரவாக்