‘உன்னைப்பற்றி எனக்குத்தெரியாதா?’ எனத் தொடங்கும் மொட்டைக் கடிதங்களும் ஆபாசப் பேச்சுகளும் ஒவ்வொரு முறையும் என்னை வந்து அடைகையில் ஒருவித ஆச்சரியமும் கேள்வியுமே என்னை அலைக்கழிக்கிறது. அதைவிட ஆச்சரியமாய் ‘நீ அந்த எழுத்தாளன்கிட்ட கெஞ்சினாயாமே’ .. ‘பிச்சை எடுத்தாயாமே’ என கூறும்போது ஆமோதிப்பதற்கான மௌனத்தைத் தவிர என்னிடம் வேறு சொற்கள் இல்லை. கூடவே மனம், எனது பள்ளி பருவத்தை நோக்கி நகர்கிறது. அது ஏற்படுத்தும் பரவசமும் சுதந்திரமும் ஓர் அழகிய கற்பனையாய் மீண்டும் மீண்டும் மண்ணில் சரிகையில், ஒரு கவிதை இரகசியமாய் பிறந்து மறுகணமே அழிகிறது.
என்னைப் பற்றி மறைப்பதற்கும் பாதுகாப்பதற்கும் எந்தப் பிம்பங்களையும் நான் சேர்த்து வைக்காத ஒரு காலகட்டத்தில் எதை அழிக்க இத்தனை எரிச்சல்களும் வசை மொழிகளும் எனவும் தெரியவில்லை. எழுத்தாளனின் முதல் தோல்வியே அவன் ஏற்படுத்த விரும்பும் பிம்பத்திலும் சமுதாயம் அவனுக்கு ஏற்படுத்தி கொடுத்திருக்கும் பிம்பத்தைக் காப்பாற்றுவதிலுமே தொடங்குகிறது என இன்னமும் நான் நம்புகிறேன்.
தன்னைச்சுற்றி எழுப்பப்பட்டிருக்கும் பிம்பத்தை உடைத்தெரிவதில்தான் தொடங்குகிறது எழுத்தாளனின் முதல் வெற்றி. அது எல்லோராலும் இயல்வதில்லை. சமூக மதிப்பு தரும் கவர்ச்சிக்கு அடிமையாவது எல்லோரையும் போல எழுத்தாளனுக்கும் இன்பமானதாகிறது.
எனது கவிதைகள் என்னைச்சுற்றி விழும் பிம்பங்களைக் களைக்க முயலும் அரசியல் நிரம்பியதுதான். அப்படி இருக்கையில் ஒரு நண்பரின் மின்னஞ்சல் இப்படி இருந்தது, ‘உன்னைப்பற்றி ஒருநாள் இந்த உலகுக்குத் தெரியவரும்.’ (இது கோபத்தில் எழுதப்பட்டது. இதையே கோபத்தின் உஷ்ணத்தைப் புகுத்தாமல் வாசித்தால் பாராட்டுபோல அமைந்துவிடும் என்பது வேறுவிஷயம்.) இந்த மின்னஞ்சல் ஒருவகை அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. இந்த உலகுக்கு ஏதாவது தெரியகூடாது என பத்திரப்படுத்தியிருக்கிறேனா என ஒருதரம் சிந்தித்துப் பார்த்தேன். அந்தச் சிந்தனையின் முறையில்லாத பாய்ச்சலின் கோர்வை இது.
இது வெறும் நினைத்துப்பார்த்தல்தான். எந்தக்கலப்படமும் இல்லாமல் நினைத்துப்பார்த்தல். எங்கிருந்து எழுத்தும் இலக்கியமும் தொற்றிக்கொண்டது என்பதையும் மொழியை வைத்து பிழைப்பு நடத்தும் கூட்டத்தில் உழன்று மீண்ட கதையையும் இன்றைக்கு இலக்கியம் என நாடிப்போவோரை இந்தக்கூட்டம் எப்படி வழி மறிக்கிறது என்பதையும் என் வாழ்வில் சந்தித்த இலக்கியவாதிகள் பற்றியும் சொல்ல
முயல்கிறேன். அவ்வளவுதான்.
-தொடரும்
meegavum arunai yaaga ullathu iya,…