சரவணன் என்றொரு நண்பன்… |
‘நீங்க எழுத்தாளராக யார் காரணம்?’, ‘இளஞ்செல்வன் உங்களை எழுத்தாளராக்கினாரா?’, ‘எப்படி நீங்க எழுத ஆரம்பிச்சீங்க?’ எல்லா எழுத்தாளர்களைப் போலவே நானும் இந்தக் கேள்வியைப் பல தரம் சந்தித்துள்ளேன். எனக்கு எழுத்தை அறிமுகம் செய்தது எனவோ இளஞ்செல்வன்தான். ஆயினும் எழுத்தாளனுக்கான அடிப்படை பண்பைப் போதித்தவன் என் நண்பன் சரவணன். சரவணன் மிகவும் ஆச்சரியமான நண்பன். ஒரு கைகலப்பில்தான் அவனை நானும் என்னை அவனும் அடையாளம் கண்டுகொண்டோம். ரத்தம் ஒழுக பத்துக்கும் மேற்பட்ட மலாய்கார மாணவர்கள் மத்தியில் தனித்து நின்றுகொண்டிருந்தான். அவனிடம் பயம் இல்லை. இரத்தத்தைத் துடைக்கும் கணத்தில் தன்னை யாரேனும் தாக்கக்கூடும் எனும் எச்சரிக்கை உணர்வு மட்டும் இருந்தது. அவன் அதுவரை நம்பிய நண்பர்கள் அனைவரும் தொலைவில் கண்கள் மட்டும் வெளித்தெரிய நின்றனர். முதன்முதலாக ஆயுதம் எடுப்பதின் பதற்றத்தை உணர்ந்தேன். இஷ்டப்படி வீச அந்தக் கட்டை அத்தனை தோதாக இல்லை. ஆனால் அடுத்தவனின் பயம் ஒருவகை தன்னம்பிக்கையையும் திமிரையும் மூட்டியது. எல்லாம் முடிந்தபின் சரவணனிடம் கேட்டேன். ‘ஏன் சண்டை?’. ‘பறையன்னு சொன்னான் அதான்…அத சொல்ல அவன் யாரு வ……….டி’ அந்த நிமிடம் நானும் சரவணனும் உயிர் தோழர்களாகிவிட்டோம். என்னைச் சார்ந்திருந்த நண்பர் வட்டமும் அவனைச் சார்ந்திருந்த நண்பர் வட்டமும் கை குலுக்கிக்கொண்டது. ஏறக்குறைய 40 தமிழ் மாணவர்கள் வெறுப்புகள் அற்று ஒன்றிணைய நாங்கள் இருவரும் காரணமாக இருந்ததை இப்போதும் கூறி பெருமை படுவதுண்டு. அத்தனை காலமும் வேற்று இனத்து மாணவர்களின் புத்தகப்பை சுமக்கவும் அவர்களின் விரத காலங்களில் திருட்டுத்தனமாக உணவு வாங்கித்தரவும் அவர்கள் வீட்டுப்பாடங்களைச் செய்வதற்கு உதவவும் கேட்கும் நேரத்தில் பணம் கொடுக்கவும் மட்டுமே பயன்பட்ட தமிழ் மாணவர்களின் கைகளுக்கு முதன்முதலாக ஆண்மை வந்திருந்தது. பள்ளி முழுதும் இது ஆச்சரியத்தைப் பரப்பியிருந்தது. தமிழ் மாணவர்கள் ஒன்றிணைவது அவர்கள் கனவிலும் நினைக்காத ஒன்று. அதிலும் மூன்றாம் படிவத்தில் படிக்கும் முதல் நிலை மாணவனிலிருந்து கடை நிலை மாணவன் வரை ஒரே குழுவாகிக் கிடந்ததும் சர்வ சாதாரணமாக ஐந்தாம் படிவத்தில் பயிலும் வேற்று இன மாணவர்களை ஓட ஓட விரட்டுவதும் அவர்களுக்கு என்னையும் சரவணனையும் நன்கு அறிமுகம் செய்திருந்தது. சரவணன் பெண்கள் மத்தியில் ஒரு கதாநாயகனாகவே வலம் வந்தான். சண்டை வரும் காலங்களில் முதல் மாடியிலிருந்து அவன் கீழே குதித்து களத்தில் நிற்பது அவனைத் தனித்துக்காட்டியது. அவன் சண்டையில் ஒரு நேர்மை இருந்தது. அவனிடம் வந்து முறையிடுபவர்களிடம் நியாயம் யார் பக்கம் என்பதை மட்டுமே முதலில் பார்ப்பான். தமிழர்களை அவமதிக்கும்படியான சொற்கள் இருந்தால் அன்று எங்களுக்குப் பாடம் இல்லை என்று பொருள். பயணத்தின் சுகத்தை முதன் முதலாக சரவணன் எனக்கு போதித்தான்.எங்களுக்கு இலக்கு அவசியம் இல்லாமல் இருந்தது.பள்ளி நாட்களில் எங்களின் கண்களின் பட்ட எந்தக்காட்சியும் வெள்ளி,சனி கிழமைகளில் (கெடா மாநிலத்தில் வெள்ளி மற்றும் காரிக்கிழமையில் மட்டுமே பள்ளி விடுமுறை)படக்கூடாது என்பது மட்டுமே எங்களுக்குள் நாங்கள் செய்துகொண்ட ஒப்பந்தம்.மோட்டாரில் ஏறி தூரம் செல்லச் செல்ல ஏற்படும் பரவசத்தை அனுபவிக்கையில் நாங்கள் பேசிக்கொண்டது குறைவு.அப்போது எங்கள் இருவரிடம் இருக்கும் மொத்தத் தொகையே பத்துவெள்ளியாகத்தான் இருக்கும்.மோட்டாருக்கு எண்ணை நிரப்ப 3 வெள்ளி.சாப்பிட ஆளுக்கு 3 வெள்ளி.வீடு திரும்புகையில் ஆளுக்கு 1 வெள்ளி ஐஸ் கச்சாங். பினாங்கு எங்கள் பயணங்களில் முதல் இலக்காக இருக்கும்.லுனாஸிலிருந்து 20 நிமிடங்கள்.(நமது உயிரின்மீது பயம் இல்லாமலும் அடுத்தவன் உயிரின் மீது இரக்கம் இல்லாமலும் மோட்டார் ஓட்டினால்.)கடலும் கடல் சார்ந்த பகுதியும் மனதுக்கு தெம்பைத்தரக் கூடியவை.ஒவ்வொரு நாளும் எங்கிருந்து எவன் வந்து அடிப்பான் என்ற பாதுகாப்புக்குறித்தே சிந்தித்த எங்களுக்குத் திறந்த வெளி பெரும் மன அமைதியைக் கொடுக்கும்.இப்போது நினைத்துப்பார்த்தாலும் அது போன்ற தருணமெல்லாம் நானும் சரவணனும் நெடிய மௌனத்தை அனுமதித்த காரணம் புரியவில்லை.அது கொஞ்சம் ஆழ்ந்து சுவாசிக்கத் தேவைப்பட்ட மௌனமாக இருக்கலாம். அநேகமாக எங்கள் பயணங்களின் பட்டியலில் பாலியல் தொழிலாளிகளின் பகுதி முக்கிய இடம் பிடித்துவிடும். பட்டவர்த்தில் அதற்கென்று தனி இடம் இருந்தது.முன்பு அங்கு ‘ரூமா தாங்கா’ என எழுதப்பட்டிருக்கும்.இப்போது கொஞ்சம் மாறி ‘ஹாட்டல் தாய்’ என்றும் ‘ஹாட்டல் பாங்கோக்’ என்றும் எழுதப்பட்டுள்ளதாக கேள்விப்பட்டேன். அது போன்ற இடங்களில் நுழையும் போது நான் தலை கவசம் போட்டுக்கொள்வேன்.சரவணன் எதையும் அணியாமல்தான் வருவான். ‘உன்னை உனக்குத் தெரிஞ்ச யாராவது பாத்துட்டா’? என ஒருதரம் அவனைப் பார்த்துக் கேட்டேன். ‘உனக்கு என்னாடா இங்க வேலன்னு நான் அவனைப் பார்த்து கேப்பேன்’ என்றான். கையில் 10 வெள்ளியை வைத்துக்கொண்டு பாலியல் தொழிலாளிகளிடம் விலை விசாரிப்போம். அவர்கள் விலை அதிக பட்சம் 50 ரிங்கிட்டைத் தாண்டியதில்லை. விலை குறைப்பு நடக்கும். அவர்கள் 40 வெள்ளிக்கு இறங்க மாட்டார்கள். அந்த சம்பாஷனையின் நீளம் எங்களுக்கு அதிகம் தேவைப்பட்டது. சரவணன் மொழியில் சொல்வதென்றால் ‘உருவத்தை நன்கு மனதில் பதிய வைத்துக்கொண்டால் வீட்டிற்குச் சென்று இலவசமாகவே உறவு கொள்ளலாம்.’ சில இடங்களில் ‘பாப்பா ஆயாம்’எங்களை நெருங்க விடுவதிலை.பணம் வைத்திருப்பவனின் வாடையை அவர்கள் நன்கு அறிந்து வைத்திருந்தனர். ஏதாவது ஒரு விடுதியில் ரிட்டையர் ஆகும் வயதில் இருக்கும் பாலியல் தொழிலாளியிடம் அமர்ந்து அதிக நேரம் பேசுவோம்.அவர் அளிக்கக்கூடிய சேவை குறித்து விளாவாரியாக விசாரிப்போம்.அவர் தரக்கூடிய விளக்கம் அன்று நாங்கள் பேசி மகிழ போதுமானதாக இருக்கும். -தொடரும் |
திறந்தே கிடக்கும் டைரி … 2
(Visited 55 times, 1 visits today)