ஜிம் செட் ஒன்றை அப்பா வாங்கி வீட்டில் போட்டதோடு நண்பர்கள் குழு வீட்டிற்கு அடிக்கடி வரத்தொடங்கியது.உடற்கட்டின்மீது அதிகம் ஆர்வம் கொண்டிருந்த காலம் அது.பள்ளிவிட்டு வந்தவுடன் நானும் சரவணனும் உடற்பயிற்சி செய்யத் தொடங்கிவிவோம்.உடற்பயிற்சி செய்வதில் சரவணன் அதிகம் ஈடுபாடு காட்டுவான்.அதற்கு மேல் முடியாது என பலுவை நான் இறக்கும் போது அவன் அப்போதுதான் தொடங்கியது போல வேகத்தை முடுக்குவான்.சரவணனுக்குத் தன் கால்கள் குறித்து தாழ்வு மனப்பான்மை இருந்தது. உடலுக்கு ஏற்றார்போல் இல்லாமல், மெலிந்த கால்கள் அவனுக்கு. எப்படியும் அவற்றை பருக்கச்செய்ய வேண்டுமென்பதில் தீவிரமாக இருந்தான். அதற்காக எவ்வளவு மெனக்கெடவும் தயாராக இருந்தான்.சீனர்களின் கால்கள் பெருத்து இருக்க பன்றி இறைச்சிதான் காரணமென பன்றி இறைச்சியைத் தனதுணவில் அதிகம் சேர்த்துக்கொள்வான்.
எங்கள் உடலில் ஓரளவில் மாற்றம் ஏற்பட்டதும் அளவில்லா ஆனந்தம் அடைந்தோம். கைகள் நன்கு முறுக்கேறி இருந்தன. எந்த நேரமும் மொட்டைக்கைச் சட்டையுடன் லூனாஸை உலா வரத்தொடங்கினோம். பள்ளியிலும் சட்டையை மடித்துவிட்டுக்கொண்டோம். மூச்சை இழுத்து தம்பிடித்து நெஞ்சை தூக்கி நடப்பது ஒரு கதாநாயகனுக்குரிய கவனத்தை எங்கள் மீது பட வைக்கும் என அழுத்தமாக நம்பிய காலங்கள் அவை.சில காலங்களில் பயிற்சியின் பிரதிபளிப்பு உடலில் நன்கு புலப்படத்தொடங்கியதும் திமிர் இன்னும் கூடத் தொடங்கியது. சில கலவரங்களைத் திட்டமிட்டு ஏற்படுத்த முயன்றோம்.
மூன்றாம் படிவ பள்ளி விடுமுறை தொடங்கும் முன்பாக ஏற்பட்ட கலவரம்… (அதை கலவரம் என்றுதான் சொல்லவேண்டும்)………. இடைநிலைப்பள்ளியில் இன்றும் நினைவு கூர்வர். தொடர்ந்து 1 வாரம் ஆயுதங்களோடு திரிந்த காலங்கள் அவை. இ.எக்ஸ்.பைப் மோட்டாரின் கியர் சங்கிலியை சரவணன் புதிய ஆயுதமாக எங்களுக்கு அறிமுகம் செய்திருந்தான். நல்ல நீளம்.மெலிதாகக் கைக்குப் பிடிக்க வசதியாக இருந்தது. சண்டைக்கான திட்டத்தையெல்லாம் நானும் சரவணனும்தான் வகுப்போம். அதன்படி சபைக்கூடலில் அந்தச் சண்டையை அரங்கேற்ற வேண்டுமென முடிவுசெய்திருந்தோம். சரவணனுக்கு எனது அடியில் நம்பிக்கை இருந்தது .3 வருடங்கள் சிலம்பம் பழகியிருந்ததில் எதிரியை ஒரே குத்தில் வீழ்த்தும் உத்தியை ஓரளவு அறிவேன்.
சபைக்கூடல் நடந்து கொண்டிருந்தது. கடந்த வாரம் நடந்த சண்டையைப்பற்றி ஒழுங்கு நடவடிக்கை ஆசிரியர் கோபமாகப் பேசிக்கொண்டிருந்தார். எல்லாவற்றுக்கும் காரணம் இந்திய மாணவர்கள் என்றார். எட்டிப்பார்த்தால் தொலைவில் நான் குத்த வேண்டியவன் வாயில் எதையோ மென்றபடி நின்று கொண்டிருந்தான். சரவணன் காதில் கிசு கிசுத்தான்… ‘தோ பாருடா… எத பத்தியும் நினைக்காதே.தமிழன்னா கேவலமா?கறுப்பு தோலுன்னா எலக்காரமா? ஒரு குத்துதான்… ஒரே குத்துதான். அதோட அவன் எழுந்திருக்கக் கூடாது. கூட இருக்கிறதுல்லாம் எலிங்க. பயந்து ஓடிடுங்க. போனவாரம் ஒன்டியா வீட்டுக்குப்போன தனபால என்னா சொல்லி அடிச்சானுங்க…விட்டுடாத…’
நான் ஒன்றும் பேசவில்லை. இது எனக்குப் புதிதில்லை. அன்று நான் குத்த வேண்டியவன் என்னைவிட இரண்டு மடங்கு பெரிதாக இருந்தான். அந்த வருடம்தான் அவனுக்குக் கடைசி வருடம். அவன் படிவம் ஐந்து. நான் மூன்று. அவனை வீழ்த்த வேண்டும். அதுவும் ஒரே குத்தில்.
-தொடரும்