எங்கள் ஊர் போலிசுக்குப் பொதுவாகவே நாங்கள் பயப்படுவதில்லை. சரவணனின் அப்பா முன்னால் அரசாங்க ஊழியரானதினாலும் காவல்துரையில் உயர்மட்ட அதிகாரிகள் வரை அவருக்கு நண்பர்கள் என்பதாலும் அன்று சில எச்சரிக்கைகளோடு விடுவிக்கப்பட்டோம். அதுவரை கைகள் இரண்டையும் பின்புறமாகக் கட்டி வெற்றுடம்பில் வெயிலில் மண்டியிட்டு நிற்பதை பள்ளியே வேடிக்கைப் பார்த்தது. சரவணன் கூறினான் ‘இதுதான்டா சமயம் உடம்ப நல்லா முறுக்கிக் காட்டு…சரக்குங்க பாக்குதுல்ல…’.
சரவணனுக்குக் சுருட்டை முடி. எப்படி சீவினாலும் பெரிதாக ஒன்றும் மாற்றம் காணாது. எனக்குதான் பரட்டை. முன்புர முடிகள் முகத்தை முழுதுமாக மறைக்கும் படியான நீளம். அனைவரையும் வகுப்புக்குள் அனுப்பும் போது என்னையும் சரவணனையும் மட்டும் கட்டொழுங்கு ஆசிரியர் உள்ளே அழைத்தார். முன்புறம் நீண்டிருந்த முடியைக் கற்றையாகப் பிடித்தார். என்னிலிருந்து பிரித்துக் குப்பையில் வீசினார். சரவணனுக்கு ஒரு அரை விழுந்தது. இதற்கு மூலக்காரணம் நாங்கள்தான் என ஏதோ ஒரு நரி காட்டிக்கொடுத்திருக்கிறது.
காட்டிக்கொடுப்பது போட்டுக்கொடுப்பது ஈனப்பிரவிகளின் செயல் என சரவணன் கர்ஜித்தான். எங்கள் மத்தியில் ஒரு கருப்பு ஆடு இருப்பதை அறிந்து கொண்டோம். அடிப்பட்ட வேற்று இனத்து மாணவர்களுக்கு எப்போதும் ஒரு பழக்கம் உண்டு. அவர்கள் ஆசிரியர்களிடம் சரணடைய மாட்டார்கள். அவர்களுக்குப் பிடித்ததெல்லாம் அடிக்கு அடிதான். போலிஸில் கூட அவர்கள் வாய் திறக்கவில்லை. என்னிடம் குத்துப்பட்டு முகம் வீங்கியவன் மட்டும் அவ்வப்போது முறைத்தபடி இருந்தான். அதற்கு அர்த்தம் என் முகத்தையும் அது போல் வீங்கவைப்பதுதான். அவன் அடித்தால் என் முகம் வீங்காது. முகமே இல்லாமல் போகும் அபாயம் மட்டும் உண்டு என்பதால் அவனை நேர்க்கொண்டு பார்க்காமல் இருந்தேன். இங்குக் காட்டிக்கொடுத்தது ஒரு தமிழன்.
நானும் சரவணனும் தனியாக அமர்ந்து சந்தேகத்திற்குறிய நபர்களை ஒரு பட்டியல் போட்டோம். ‘உன்னை அவன் என்னா சொன்னான் தெரியுமா…”, அன்னிக்கு அவன் உம்மேல உள்ள கடுப்ப எப்படி காட்டுனான் தெரியுமா?’ என அடிக்கடி சொற்களைப் பிரயோகிக்கும் சில குதப்பிறப்புகளில் மூன்று பேரைக் கண்டடைந்தோம். இரண்டே நாள் குற்றவாளி பிடிப்பட்டான். விசாரணைத் தொடங்கியது. சரவணன் பேசிக்கொண்டிருந்தான். அப்போதைக்கு எனக்குத் தெரிந்த கொஞ்ச நஞ்ச தமிழை வைத்துக்கொண்டு “போனது எம் மயிரு இல்லடா…உயிரு”என வசனமெல்லாம் பேசினேன்.
இம்முறை சரவணன் முதல் அடியில் ஆரம்பித்தான். நான் தொடர்ந்தேன். தோட்டத்துக்கும் செம்மண்சாலைக்கும் இடையில் பொருத்தப்பட்டிருக்கும் ரம்பம் போன்ற இரும்பு பாலத்தில் அவன் தலையை வைத்து இழுத்தோம். அவன் தலை முடி பிய்த்துக்கொண்டு வந்தது. சரவணன் கூறினான்… ‘மயிருக்கு மயிருடா’
– தொடரும்