இன்று நினைக்கும் போது எதுவும் நியாயம் இல்லாதது போல தோற்றம் அளிக்கிறது. ஆனால் பெரும் பான்மை மக்களால் தொடர்ந்து அடிமை பட்டு கிடக்கும் நாங்கள் எங்களுக்கான சுதந்திரத்தை அகிம்சை வழி தேடி பெரும் அவகாசமும் வாய்ப்பும் அப்போது குறைவு என்பது மட்டுமே உண்மை.சாதியின் பெயரால், இனத்தின் பெயரால், மதத்தின் பெயரால் ஒவ்வொரு நாளும், கீழாக நடத்தப்படும் எம் சகோதரர்களுக்கு இன்றுவரை இடைநிலைப்பள்ளிகளில் எந்த வகையான பாதுகாப்பு வேலிகளும் இல்லை என்பதே நிதர்சனம். இன்றைய இயந்திர வாழ்வில் ‘அடுத்தவனுக்கு என்ன நடந்தால் என்ன?’ என வீட்டைப்பூட்டிக்கொண்டு தொலைக்காட்சியில் மட்டுமே உலகைப் பார்க்கும் ஒரு சமூகம் இடைநிலை பள்ளிமுதல் பல்கலைக்கழகம் வரை இருக்கவே செய்கிறது.அவர்களால் அரசாங்கத்திற்கு உயர்தர கூலிகளாக இருக்க மட்டுமே முடியும்.அப்படி இருந்துவிட்டுப்போனாலும் பாதகமில்லை. ஆனால் இந்தக் கூட்டம்தான் புல்லுறுவிகளாகவும் எட்டப்பர்களாகவும் மாறவும் செய்கிறது.வேறு வழியே இல்லை ‘களை’ பிடுங்கத்தான் வேண்டியுள்ளது.
அதிகாரத்தை எதிர்ப்பது எழுத்தாளனின் முதல் பணி என இன்று ஒவ்வொரு திருப்பத்திலும் நினைத்துக் கொள்கிறேன். அதற்கான வேரை இடை நிலைப்பள்ளியில் எனக்கு ஆழ ஊன்றியவன் சரவணன். அதிகாரத்தை நோக்கி உண்மையின் குரலை அதற்கு மறுவருடமும் நாங்கள் இன்னும் ஆழமாகக் கொடுத்தோம். எங்களின்……………. இடைநிலைப்பள்ளியில் இன்றும் அது நினைவில் கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நன்னெறி கழகத்தால் ஏற்பாடு செய்யப்படும் ஒரு கூட்டத்தில் எங்கள் படமே ஒளிவட்டில் ஏற்றப்படுகிறது. அதை நானும் இதுவரைப் பார்த்ததில்லை. கைகளை ஓங்கி கூட்டமாக கோஷம் போட்டு, வகுப்பறைக்குள் நுழையாமல் மறியல் செய்த எங்களை பார்த்த இளைய நண்பர்கள் இப்படி கூறினர் “அண்ணா ஒரு வேளை உங்கள புடிச்சி உள்ளுக்கு வச்சிருந்தாங்கண்ணா?”
இது போன்ற கேள்விகள் எழாத வயது அது. சாலையில் அதிக பட்சம் வேகமாய் மோட்டார் ஓட்டுவது பற்றியும் மோட்டார் பந்தையம் இடுவது பற்றியும் ஆயுதங்களை எதிர்கொண்டு ஓடுவது பற்றியும் கேள்வியே இல்லாத வயது.நிமிடத்திற்கு நிமிடம் வாழ்ந்த வயது. வேற்று இனத்தானோடு சண்டையிட்ட ஒரு சக தமிழ் நண்பனை மட்டும் எந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் நிர்வாகம் பள்ளியைவிட்டு நீக்கினால் வன்முறையில் ஈடுபடுவது தவிர வேறென்ன செய்ய முடியும். அதிக பட்சம் வகுப்பறை கண்ணாடிகளும் குறைந்த பட்சம் ‘மஞ்சள்’ முகங்களும் உடைக்கப்பட்டன.மூன்றாவது நாளில் நண்பன் பள்ளியில் இருந்தான்.
சில விஷயங்களுக்கு பொறுமை தோதுபடாது என அப்போதே பிடிபட்டது. எங்கள் குழு கொஞ்சம் கொஞ்சமாக பிளவு பட்டுக்கொண்டிருந்தது. மூன்றாம் படிவத்திற்குப்பின் சில நண்பர்கள் வேறு பள்ளிகளுக்கு மாறினர். சிலர் பள்ளியை விட்டு நின்றனர். சிலர் ‘போலி டெக்நிக்’ படிக்கச்சென்றனர். கூட்டம் குறைந்தது.ஆனாலும் பழைய பயம் அனைவருக்கும் இருக்கவே செய்தது.நான்காம் படிவத்தை ஹனிமூன் வருடம் என்றார்கள் ஆசிரியர்கள். பரீட்சைகள் குறைவு.அடுத்த வருடம்தான் எஸ்.பி.எம். கல்வியில் மிகவும் பின் தங்கி இருந்தேன். என்னைவிட சரவணன் மோசம்.
எனக்கு இளஞ்செல்வன் ஞாபகம் அடிக்கடி வரத்தொடங்கிய காலம் அது…