என்னதான் ஹீரோஹிசமெல்லாம் செய்தாலும் பள்ளியைப் பொருத்தவரை பந்து விளையாடுபவர்கள்தான் உண்மையான கதாநாயகர்கள். பந்து விளையாடுபவர்களுக்கு அதிகளவு தோழிகள் இருந்தனர். எனக்கு பந்தை பார்த்தாலே அலர்ஜி. இன்றுவரை எவ்வளவு முயன்றும் ஒரு பந்துகூட நான் உதைத்துப் பறந்ததே இல்லை. காற்பந்து விளையாட்டு என் வாழ்வில் விளையாடிய விளையாட்டுகளை மட்டும் ஒரு தனி நாவலாக எழுதலாம்.சரவணன் என்னைப்போல் இல்லை. ஆனாலும் எனக்காக அவனும் விளையாடப்போவதை தவிர்த்தே வந்தான். எங்கள் இருவருக்கும் பூப்பந்து நன்றாக வசப்பட்டது.பின்னாலில் அது பெண்களுக்கான விளையாட்டு என நாங்களே முடிவெடுத்து குறைத்துக்கொண்டோம். பெண்களைக் கவர்வதில் சரவணனுக்குப் பிரச்சனை இல்லை. அவன் அழகன். எளிய உடையில் கூட கவரும் படி தெரிவான். ஆனால் நான்…
கருத்த உருவம்; பேசினால் நான்கு வார்த்தைக்கு ஒரு வார்த்தை திக்கும்; மெலிந்து கிடப்பேன்.எந்த பெண் பிள்ளைகளும் நிச்சயம் என்னை ஏறெடுத்தும் பார்க்கமாட்டார்கள். ஏதாவது செய்தேயாக வேண்டும். இருக்கவே இருக்கிறது, எனக்குத் தெரிந்த கொஞ்சம் தமிழும்… கவிதையும். கவிதை எழுத இடம் வேண்டுமே. ஏதோ ஒரு தமிழ்ப் படத்தில் நிழல்கள் ரவி நதியோரம் அமர்ந்து வெள்ளை ஜிப்பா போட்டுக்கொண்டு கவிதை எழுதுவார். பின்னர் தன் கர கரத்தக் குரலில் வாசிப்பார். ஒரு பழைய வெள்ளை ஜிப்பா இருந்தது… நதிக்கு நாயாய் பேயாய் அலைந்து இறுதியில் ‘தாமான் கீஜாங்’கில் இருந்த புத்தர் கோயிலைக் கண்டுபிடித்தேன். அந்தக் கோயில் நதியோரம் அமைந்திருந்தது. இன்னும் சொல்வதானால் ஒரு நதி வலைவின் இடவெளியில் இருந்தது. கோயிலை சுற்றிலும் ஆல மரம் விழுதுகள் விட்டிருந்தது. பிறந்தது முதல் கவிதை…
0 காதல் தோல்வி
ஆலமரம்
தாடி வளர்க்கிறது.
அன்றைக்கு மட்டும் ஆயிரம் முறையாவது அந்தக் கவிதையை வாசித்துப் பார்த்திருப்பேன். நான் எழுதிய கவிதையே வெவ்வேறு அர்த்தங்களை எனக்குத் தரத் தொடங்கியது. யாரிடமாவது வாசித்துக் காட்ட வேண்டும். சரவணனிடம் சொன்னால் நகைப்பான். பத்திரிகைக்கு அனுப்புவது என முடிவு செய்தேன். இந்த ஒரு கவிதையை போடமாட்டார்கள். மூளையை கசக்கிப் பிழிந்து மேலும் நான்கு கவிதைகளை மெனக்கெட்டு எழுதினேன்.
0 பிணங்கள்
புதைக்கப்படுகின்றன
அசைவன் வயிற்றில்…
0 கரண்ட் தடையில் கவலை
கண்ணீர் வடிக்கிறது
மெழுகுவர்த்தி…
இப்படி ஒரு கவிதை பிரசுரமாக மேலும் நான்கு கவிதைகளைச் சேர்த்து எழுதி, உடன் கவிதையைவிட நீளமாக அறிமுகக் கடிதமெல்லாம் எழுதி மக்கள் ஓசை பத்திரிகைக்கு (அப்போது அக்கினியால் நடத்தப்பட்ட வாரப்பத்திரிகை. ஒவ்வொரு வாரமும் குறைந்த பட்சம் 15 முதல் 20 கவிதைகளாவது பிரசுரித்தார்கள்) அனுப்பி வைத்தேன். அனுப்பிய இரண்டாவது வாரத்தில் கவிதை எந்த மாற்றமும் இல்லாமல் பிரசுரமானது.
ஒரு சுபயோக சுபதினத்தில் நான் கவிஞனாகி விட்டிருந்தேன்…
– தொடரும்