கவிதைகளுடனே வாழ்ந்த காலம் அது.கண்ணில் அகப்படும் அனைத்தையும் கவிதையாக்கிவிட மனம் துடித்தது. முதலில் என்னை அந்நியனாகப் பார்த்த சரவணன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக்கொண்டான். நாங்கள் இருவருமாகச் சேர்ந்து மொழி ஆராய்ச்சியில் இறங்கினோம். அதுவரை பிரயோகத்தில் இருந்த அத்தனைக் கெட்ட வார்த்தைகளும் எங்களுக்கு அபத்தமாகப் பட்டது. அத்தனையும் வெறும் உடல் உறுப்பின் பெயர்கள் அல்லது பிறப்பு குறித்தான எள்ளல்கள். கொஞ்சம் அதிகம் போனால் நமக்கு நெருங்கிய உறவின் உடல் உறுப்புகள். மொத்தமே இவ்வளவுதான் கெட்டவார்த்தை. இவற்றிற்கு கெட்டவார்த்தை எனப் பெயர் வைத்ததே தவறு எனப் பட்டது. தமிழில்தான் இந்த கதி என்றால் சீன, மலாய் மொழியிலும் இதே நிலைதான். கெட்ட வார்ததைகள் என்பதே நம்மை ஏமாற்றும் கற்பனை என புரிந்து போனது. எனவே நாங்களே எங்களுக்கான கெட்ட வார்த்தைகளை உருவாக்குவது என முடிவெடுத்தோம்.
இந்த விஷயத்தில் சரவணனுக்கு நான் தான் குரு. அதற்கு முன்பு கெட்டவார்த்தைகளாக அங்கீகாரம் பெற்றிருந்த சில சொற்களைச் சேர்த்தோம். அவற்றோடு இயல்பான இன்னும் பிற சொற்களை புகுத்தி மூன்று நான்கு சொற்றொடரில் ஒரு சில கெட்ட வார்த்தைகளை உருவாக்கினோம். அவை ஒரு காட்சியைக் கொடுத்தன. ஒரு கவிதை போல எதிர்பாராத அதிர்ச்சியைக் கொடுத்தன. உறுப்புகளின் செயல்பாடுகளில் முரண்களை புகுத்திப் பார்ப்பது எங்களின் கெட்ட வார்த்தைத் தத்துவங்களில் முதன்மையானது. எந்தக் காரணத்தைக் கொண்டும் நாங்கள் தயாரித்த கெட்டவார்த்தைகளில் யாதொரு உறவையும் குறிப்பிடாமல் பார்த்துக்கொண்டோம். தவறு செய்தவனைத் திட்டும் போது அது அவர்கள் சார்ந்த யாரையும் குறிப்பிடக்கூடாது என்பது சரவணனின் கோட்பாடு. உலகம் போற்றப்போகும் புதிய இலக்கிய வடிவை உருவாக்கும் தீவிரத்தில்தான் நானும் சரவணனும் செயல்பட்டோம்.
நாங்கள் உருவாக்கிய கெட்ட வார்த்தைகளை மனனம் செய்து கொண்டோம். தவறுதலாக உச்சரித்தால் அதன் காத்திரம் குறைந்து போகலாம். நண்பர்களிடையே பேசும்போது சாதரணமாகவே கொச்சையில் திட்டிக்கொள்ளும் வழக்கம் அப்போது இருந்தது. எங்கள் கெட்ட வார்த்தையைப் பயன்படுத்தும் சரியான சந்தர்ப்பத்திற்குக் காத்திருந்தோம். படியாத சுருட்டை முடி கொண்டவனானதால் சரவணனை நெருங்கிய நண்பர்கள் ‘ஒட்டடை’ என்றே அழைப்பர். மற்றவர்களுக்கு அழைக்கத் துணிவில்லை. அன்று பேச்சினூடே ஒருவன் இயல்பாக சரவணனை ‘ஒட்டடை’ என அழைக்கத் தொடங்கினான். கிடைத்தது சந்தர்ப்பம்… சேமித்து வைத்திருந்த அத்தனையையும் அவன் ஒருவனுக்கே செலவழித்தோம்.
பலியானவன் விழி பிதுங்கி நின்றான். எங்கள் கெட்ட வார்த்தைக்கு நிகராக அவனிடம் ஒரு சொல் கூட அகப்படவில்லை. அவனுக்கு எங்கள் கெட்ட வார்த்தையைப் புரிந்து கொள்ளவே நிறைய அவகாசம் தேவைப்பட்டது. எங்கள் சொற்களின் வன்மையை கற்பனை செய்தவன் கண்கலங்கத் தொடங்கினான்.
வெற்றி… வெற்றி… எங்கள் முதல் முயற்சி வெற்றியடைந்தது. சரவணன் முதன்முதலாக என்னைக் கவிஞனாக ஏற்றுக்கொண்டான். அவன் கணிப்பில் கவிஞனுக்கான தகுதி கெட்ட வார்த்தையில் இருந்திருக்கிறது.
– தொடரும்