என் உயிர் எழுத்து…
இரண்டு மாதங்களில் 5 கவிதைகள் ‘மக்கள் ஓசை’ நாளிதழில் பிரசுரம் ஆகியிருந்தது. ஓரளவு நண்பர்கள் மத்தியில் நானும் என்னால் மக்கள் ஓசை பத்திரிகையும் பிரபலம் ஆனது. தமிழ் படிக்கத் தெரிந்த அனைவரும் ‘மக்கள் ஓசை’ படிப்பார்கள் என முதலில் நம்பியிருந்தேன். லுனாஸ் டவுனில் அப்போது ஒரே ஒரு ஒட்டுக்கடையில் தமிழ்ப் பத்திரிகைகள் விற்றுக்கொண்டிருந்தார்கள். அங்கு மொத்தமே வருவது 5 ‘மக்கள் ஓசைகள்’ தான். ஒன்றை நான் வாங்கிவிடுவேன். மீதம் உள்ள நான்கை வாங்குக் அதிஷ்டசாலிகளை தேடியும் கிடைக்கவில்லை.
என் கவிதயைப் பற்றி பேசுவதற்கோ அதன் ‘உன்னதங்களை’ என்னிடம் கேட்டு அறிந்து கொள்ளவோ நண்பர்கள் எவரும் இல்லை. அப்போதுதான் எழுத்தாளர் எம்.ஏ.இளஞ்செல்வன் நான் ஆரம்ப கல்வி கற்ற ‘வெல்லஸிலி தமிழ்ப்பள்ளிக்குத்’ தலைமை ஆசிரியராக வந்துள்ளார் என கேள்விப்பட்டேன். இளஞ்செல்வன் எழுத்தாளர் என்பதோ அவர் என்ன எழுதியுள்ளார் என்பது பற்றியோ அப்போது ஒன்றுமே எனக்குத்தெரியாது. அவர் நிச்சயம் ‘மக்கள் ஓசை’ வாங்கியிருப்பார் என மட்டும் நம்பினேன். அதிலும் ‘ம.நவீன், லூனாஸ்’ என பிரசுரமாகியிருக்கும் எனது கவிதைகளைப் படித்து ‘யார் அந்த நவீன் அதுவும் இந்த ஊரில்…’ எனத் தேடத் தொடங்கியிருக்கவும் கூடும் என ஆழ் மனம் அழுத்தமாக நம்பியது. அவரைச் சந்திக்க வேண்டும் என்ற ஆர்வம் துளிர்விட தொடங்கிய போது ஒரு நாள் சைக்கிளை எடுத்துக்கொண்டு புறப்பட்டேன்.
வெல்லஸ்லி தமிழ்ப்பள்ளிக்கும் எங்கள் வீட்டுக்குமான இடைவெளி ஐநூறு மீட்டர்தான். அது ஒரு சாயுங்கால வேளை. பள்ளியில் திரு.ராமு மாணிக்கம் (எம்.ஏ.இளஞ்செல்வனின் இயற்பெயர்) தனியே அமர்ந்து கோப்புகளைச் சரி பார்த்துக்கொண்டிருந்தார். யார் அனுமதியும் இல்லாமல் அலுவலகத்தைக் கடந்து அவர் அறைக்கதவைத் தட்டினேன். ஏறிட்டு கேள்விக்குறியோடு பார்த்தார்.என்னை ஓர் எழுத்தாளனாக அறிமுகம் செய்து கொண்டபோது கேள்விகுறிகள் உடனே விலகி ஆச்சரியக்குறி தொற்றிக்கொண்டன. அதற்கு மேல் ஒன்றும் பேசாமல் என் கவிதைகளைக் காட்டினேன்.
ஒரு சில நிமிடங்கள் கவிதைகளைப் புரட்டினார். என்னை நம்பிக்கையோடு ஏறிட்டவர் ‘என் மகளுக்குத் திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன… ரொம்ப பிஸியா இருக்கேன்… நீங்க இரண்டு வாரம் கழிச்சி வந்து பாருங்க… மறந்துடாதிங்க… என்னை உங்கள் கவிதைகள் கவராட்டினா வர வேண்டாமுன்னு சொல்லிருப்பேன்… உங்களால் கவிதை எழுத முடியும்… கண்டிப்பா வரணும். ‘என் கவிதைகள் இளஞ்செல்வன் கையில் இருந்தன. ‘கவிதைகள் பத்திரம் சார்’என்றேன். அன்போடு சிரித்தார். தட்டிக்கொடுத்தார்.
‘உங்களால் கவிதை எழுத முடியும்’ என அவர் சொன்னது ஆணவத்திற்கு உறுத்தலாக இருந்தது. அதிலும் அவர் என் கவிதைகளைப் படித்ததில்லை என்பது மேலும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் கொடுத்தது. நான் அவரிடம் கவிதை கற்க போகவில்லை. நான் எதிர்ப்பார்த்தது அங்கீகாரம். ‘ரொம்ப நல்லா இருக்கே உன் கவிதை’ என்ற சில சொற்கள். அவர் யார் எனக்கு கவிதை இனிதான் வரும் என்று சொல்ல… வெறுப்பாக இருந்தது. வீட்டிற்குச் சென்றதும் குவிந்து கிடந்த நயனம், வானம்பாடி, மக்கள் ஓசை, ஞாயிறு இதழ்கள் என ஒன்றுவிடாமல் புரட்டினேன். ஒன்றிலும் எம்.ஏ.இளஞ்செல்வன் என்ற பெயர் கொண்ட படைப்புகள் ஒன்று கூட இடம்பெறவில்லை. தரம் இல்லாததால் அவர் படைப்புகள் நிராகரிக்கப் பட்டிருக்கக் கூடும் எனத் தோன்றியது. மன பாரம் கொஞ்சம் குறைந்து நிம்மதியாக இருந்தது. ‘நிச்சயம் நம்மைவிட இளஞ்செல்வன் பெரிய எழுத்தாளர் இல்லை’ என முடிவெடுத்துக்கொண்டேன்.