சட்டென தோன்றும் எல்லா ஆர்வமும் எப்போது வேண்டுமானாலும் என்னைவிட்டு நீங்கிவிடும் அபாயம் இன்றளவும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. மிகவும் நான் திட்டமிட்டு ஆர்வமாகச் சந்திக்கச் செல்லும் நண்பர்கள், அவர்கள் வீட்டை அடையும் தருணத்தில் அலுப்புக்குறியவர்களாக மாறிவிடுகின்றனர். ஆர்வமாக வாங்கும் புத்தகங்கள் பல மாதங்கள் கேட்பாரற்று கிடக்கின்றன. விரும்பிய நண்பர்கள் தொலைபேசி எண்களை எடுப்பதில் தாமதம் ஏற்படுத்துகிறேன். இளஞ்செல்வன் என்னுள் தோன்றிய தருணத்திலேயே அழியவும் தொடங்கினார். அவர் கண்களில் என் கவிதைகள் தட்டுப்படாதது வருத்தமாக இருந்தது. மீண்டும் அவரைச் சந்திக்கும் எண்ணம் இல்லை. எனக்கு இந்தக் கதை, கவிதையெல்லாம் தோதுபடாது என முடிவெடுத்துக் கொண்டேன்.
கவிதையையெல்லாம் மூட்டை கட்டிவைத்து விட்டு, இரண்டு வாரங்கள் சரவணனோடு சுற்றி அழைந்தேன். ‘பாடாங் கோத்தா’வில் மோட்டார் பந்தையத்தில் ஈடுபடுவது மனதிற்கு தெம்பை அளித்தது. அடுத்தவரின் கவனம் நம் மீது பட வேண்டும் என்ற எண்ணம் சிலருக்கு வெற்றியையும் சிலருக்கு இழப்புகளையும் தருகிறது. அந்த எண்ணமே என்னை அலைக்கழிக்க வைத்தது. முடி ஸ்டைலை அடிக்கடி மாற்றுவது,கைகளை விட்டு சைக்கிள் ஓட்டுவது, புது பேட்டனில் கால்சட்டை தைப்பது எனத் தொடங்கி மோட்டார் பந்தையம் விடுவதில் வந்து நின்றது.
சரவணனிடம் அப்போது மோட்டார் இருந்தது. பந்தையம் விடும் அளவுக்கு அதன் தரம் இல்லை. ‘ பாடாங் கோத்தாவில்’ வேறு நண்பர்கள் மோட்டாருடன் இருப்பார்கள். பல நூறு ரிங்கிட் செலவில் அவர்கள் மோட்டார், பந்தயத்திற்கென தயார் செய்யப்பட்டிருக்கும். கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம். அவர்கள் பாயா பெசார் பகுதியில் உள்ளவர்கள். ஒரு வருடம் வெல்லஸிலி மாரியம்மன் கோயில் திருவிழாவுக்கு வந்து இரவோடு இரவாக வெட்டுப்பட்டு உயிர் இழக்க வேண்டியவர்களை சரவணன் காப்பாற்றியிருந்தான். அவர்கள் கண்களில் ஆரம்பத்தில் நன்றி இருந்து பின் நட்பாக மாறியிருந்தது.
பாடாங் கோத்தா பட்டர்வோர்த்தில் உள்ள பகுதி. நன்கு அகலமான சாலை. இரவில் அதன் போக்குவரத்து குறைந்திருந்ததால் மோட்டார் பந்தையம் விடும் இடமாக காலப்போக்கில் மாறிருந்தது. அதை சிலர் சட்டவிரோத மோட்டார் பந்தையம் என்றனர். சட்டம் பற்றியெல்லாம் அப்போது எங்களுக்கு அவ்வளவாகத் தெரியாததால் அது பற்றியெல்லாம் கவலை படவில்லை. மேலும் ஏதாவது ஒன்றை மீறுவதை மட்டுமே அப்போதைய வாழ்வின் முக்கியமான கடமையாகச் செய்து வந்தோம். இப்போதும்.
எனக்கு ஒரு பந்தயம் தேவைப்பட்டது. பந்தயத்தின் மூலம் மனம் அடங்கியது. பந்தையத்தின் மூலம் ஆணவத்துக்கு ஆகாரம் கிடைத்தது. மனதுடன் போட்டியிட முடிந்தது. எழுத்தை… கவிதையைச் சோம்பேரிகளுக்கான சாதனமாக நகைக்க முடிந்தது. கவிதை எழுதுகையில் வன்முறை இல்லை. இடரினால் உயிர் இழப்போம் என்ற அபாயம் இல்லை. இரத்தம் இல்லை. எதிரி இல்லை.
பாடாங் கோத்தாவிலிருந்து பக்கம்தான் ‘பந்தாய் பெர்ஸே’. திருநங்கைகளின் சாம்ராஜியம் நிரம்பிய இடம். பந்யத்தில் தோல்வி அடைந்தாலும் வெற்றி அடைந்தாலும் (பெரும்பாலும் தோல்விதான்) இறுதியில் அங்குதான் தஞ்சம் அடைவோம். அங்கு சரவணனுக்கு நெருங்கிய நண்பர்கள் உண்டு. அவனுக்காக அவர்கள் செலவு செய்யத் தயாராக இருந்தனர். அவர்களோடு பேசிக்கொண்டிருக்கும் கணங்கள் இன்பமானது. சீண்டல்களிகளிலும் கிண்டல்களிலும் நேரம் போவது தெரியாது. அவர்கள் காட்டும் பொய்யான கோபமும் காமமும் சோகமும் இரசிக்கும்படியாக இருந்தன. சரவணன் அவர்களிடம் பகிரங்கமாகவே ‘ஓவரா நடிக்காதிங்கடி’ என்பான். ஆபத்து இல்லாவிட்டால் பொய்கூட சுவாரசியமிக்கதாகவே எனக்குப் படும்.
நாட்களை கணக்கில் எடுக்காமலேயே எந்தவித ஆர்வமும் செலுத்தாமலேயே சரியாக இரண்டாவது வாரத்தில் இளஞ்செல்வனின் ஞாபகம் வந்தது. மீண்டும் ஒருமுறை போய் பார்த்தால் என்ன என்று தோன்றியது.