நான் போகும் போது இளஞ்செல்வன் அலுவலகத்தில் இல்லை. பள்ளி காண்டினில் அமர்ந்து தேனீர் அருந்தி கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் “நவீன் வாங்க” என்றவர் எனக்கும் தேனீரை காண்டினில் பணித்தார். “உங்க கவிதையெல்லாம் படிச்சேன். நல்லா இருக்கு. நீங்க அதிகம் வாசிக்கணும். வாசிக்கிற பழக்கம் உண்டா?” என்றார்.
“உண்டு” என்றேன் அழுத்தமாக.
“எந்தக் கவிஞர்களை வாசித்திருக்கிறீர்கள்” என்றார்.
“அக்கினி, ஜாசின் தேவராஜன், பா.ராமு, வனஜா” என்றேன். என்னை ஏற இறங்க பார்த்தவர்,
“மற்ற மூவர் சரி, யார் அந்த வனஜா?” என்றார்.
“நயனத்துல இதயம் துடிக்கிறது பகுதிக்கு எழுதுவாங்க. பெரிய கவிஞர் சார்” என்றேன். நல்ல கவிஞர்களையெல்லாம் இளஞ்செல்வனுக்குத் தெரியாதது வருத்தமாக இருந்தது. இளஞ்செல்வன் கொஞ்ச நேரம் அமைதி காத்தார். அவர் பள்ளியில் உள்ள ஒரு ஆசிரியையை அழைத்தார். அந்த ஆசிரியை ‘வீரா நாவல்’ எனும் புத்தகக் கடையைப் ‘பாயா பெசாரில்’ தொடங்கி நடத்தி வந்தார்.
அங்கு சற்று வித்தியாசமாக, தமிழ் புத்தகங்களை வாடகைக்கு விடப்பட்டது. புத்தக விலையில் 25% மட்டுமே வாடகை. இளஞ்செல்வன் அவரிடம் என்னை அறிமுகம் செய்து சில புத்தகங்களின் பெயர்களைக் கூறி, எனக்கு அவற்றைத் தரும்படி பணித்தார். அந்த ஆசிரியையும் எந்த குறிப்பும் எடுக்காமல் தலையை தலையை ஆட்டிக்கொண்டார்.
அவர் சென்றவுடன் இளஞ்செல்வன் மிக இயல்பாகப் பேசத்தொடங்கினார். “நான் கொஞ்சம் சண்டகாரன். இந்த மரபு கவிஞர்களோட ஆரம்பத்துல நிரைய சண்டை போட்டிருக்கேன். அண்மையில சீனி நைனா ‘கடலோரக் கவிதைகள்’ன்னு எழுத்தாளர் சங்கம் செஞ்ச புதுக்கவிதை திறனாய் ‘கடலோரக் கழுதைகள்னு’ உங்கள் குரல்லு கிண்டல் பண்ணியிருக்கிறாரு. படிச்சீங்களா?” என வினவினார்.
‘யார் சீனி நைனா?… லுனாஸுல சீனி விக்கிற ஒரே தமிழ் கடை அம்புலங்கடை. கடைக்காரர் பேரு அம்பலம்’ என கேட்க நினைத்தேன்.
என் பதிலுக்குக் காத்திருக்காமல், “அவருக்கு நான் பதிலுக்குப் போட்டேன் ‘நைனாக்கள் நாக்கு வளித்த மைனாக்கள்’ன்னு”. அதன் பின்னர் இளஞ்செல்வனின் பேச்சுகள் நீண்டது. எனக்குப் பெரும் பகுதி விளங்கவில்லை. அவர் விரல்களில் ஏற்பட்ட மெல்லிய நடுக்கம் மட்டும் என் கவனத்தை ஈர்த்தபடி இருந்தது. இளஞ்செல்வன் பேச்சுகளில் பெரும்பாலும் அவர் மரபுக்கவிஞர்களோடு செய்த வாக்குவாதங்களும் இலக்கிய விவாதங்களுமே இருந்தன.அவையெல்லாம் முதலில் சுவாரசியமாகவும் பின்னர் அலுப்பையும் கொடுத்தன. அவருக்காக ஏதாவது செய்யவேண்டும் போல் இருந்தது. அதன் மூலம் அவருடனான நட்பை வலுப்படுத்த எண்ணினேன்.
உடலில் வர்மம் உள்ள இரண்டு பகுதிகளையும் அவற்றைத் தீண்ட வேண்டிய முத்திரைகளையும் அப்போது சிலம்ப ஆசிரியர் உதவியால் ஓரளவு அறிந்து வைத்திருந்தேன். இளஞ்செல்வன் சொன்னப் பட்டியலில் யாராவது ஒருவரின் மேல் அவற்றைப் பிரயோகித்துப் பார்க்கும் ஆர்வம் அப்போது சம்பந்தம் இல்லாமல் தோன்றியது.
– தொடரும்