ஒவ்வொரு நாளும் பதற்றமாகவே விடிந்தது. ஒரு பிரியத்தை தக்க வைத்துக்கொள்ளும் பதற்றம் அது. உருப்படாதவன், அஞ்சடி கார நாய், பொறுக்கி என்று கேட்டுக் கேட்டே பழக்கப்பட்ட என் காதுகளுக்கு முதன் முதலாக நம்பிக்கையான வார்த்தைகள் இளஞ்செல்வனிடமிருந்துதான் கிடைத்தன. பிறர் சொற்களின் மூலமாக என்னையே நான் கட்டமைத்துக் கொண்ட மணல் சுவரு இளஞ்செல்வன் மூலமாக உதிர்ந்து உதிர்ந்து உருவம் இழந்தது. தொடர்ந்த சந்திப்புகளில் இளஞ்செல்வன் என் மீது வைத்த நம்பிக்கையும் என்னை நம்புவதற்கான அடையாளமாய் அவர் காட்டிய சின்னஞ் சிறிய பிரியங்களும் ஒரு வகையான கூச்சத்தைக் கொடுத்தது.
இளஞ்செல்வன் வழிகாட்டலில் மு.மேத்தாவையும் வைரமுத்துவையும் முதன் முதலாக வாசிக்க ஆரம்பித்திருந்தேன். ஆரம்பத்தில் இலவசமாக புத்தகங்கள் கொடுத்த அந்த ஆசிரியை (‘வீரா நாவல்’ உரிமையாளர்) சில வாரங்களுக்குப் பிறகு பணம் எதிர்ப்பார்க்கத் தொடங்கியிருந்தார். அது குறித்து இளஞ்செல்வனிடம் சொல்வது சரியில்லை எனப்பட்டது. தீவிரமாகப் பணம் சேர்க்கத் தொடங்கினேன்.
முதலில் பினாங்கு செல்வதைத் தவிர்த்தேன். வீட்டில் மளிகைப் பொருட்கள் வாங்கும் பொறுப்பை நானே ஏற்றுக்கொண்டேன். பொருட்களின் விலை திடீரென உயர்ந்திருப்பதைக் கண்டு அம்மா அதிர்ச்சியடைந்தார். அதோடு கடைக்காரர்கள் என்னைச் சின்னப்பயல் என்று ஏமாற்றுவதாக நம்பினார். இப்படி இரண்டு வாரம் கஷ்டப்பட்டு உழைத்தாலே ஒரு புத்தகம் வாடகைக்கு எடுப்பதற்கான பணம் சேர்ந்துவிடும்.ஒரு புத்தகம் எனக்கு ஒரு வாரத்திற்குத் தாங்கவில்லை. மேலும் பணம் சம்பாதிக்க வேண்டும். புத்தகம் வாங்க வேண்டும். வேறு வழியில்லை பள்ளியில் கவிதைகள் விற்கத் தொடங்கினேன்.
அப்போது எங்கள் பள்ளியில் நிறைய பேர் எப்போதும் போல அப்போதும் காதல் வயப்பட்டிருந்தனர். பல வருடங்களாக பொத்தி பொத்தி வைத்த அவர்கள் காதலை தெரிவிக்கவும் அன்பைப் பகிந்துகொள்ளவும் அவர்களுக்கு அவசரமாகக் கவிதை தேவைப்பட்டது. பார்ப்பவர்களிடமெல்லாம் ‘மக்கள் ஓசை’ வாங்கும்படி நான் பிரச்சாரம் செய்து கொண்டிருந்ததால் பலரும் எனக்கு எழுத வரும் என அடையாளம் கண்டனர். தங்கள் உணர்வுகளை நான் எப்படியெல்லாம் கவிதையாக்க வேண்டும் என்று மனமுருகி வர்ணிப்பர். பள்ளி முடிவதற்குள் நான் அவர்கள் சொல்ல நினைத்ததை கவிதையாக்கி கொடுத்துவிடுவேன். ஒரு கவிதைக்கு 50 காசு கிடைக்கும். என் அரைகுறை தமிழ் அப்போதே எனக்கு 50 காசு கொடுத்தது.
சிலர் எழுதிய கவிதையை வாசித்து காட்டச் சொல்வார்கள். ஒவ்வொரு வரிக்கும் பின்னர் ‘அப்படினா… அப்படினா’ எனக் கேட்க நான் விளக்க உரையையும் ஆற்றியபடி செல்வேன். ‘இததாண்டா மச்சு (எங்கள் ஊரில் மச்சான் என்பது மச்சியாக திரிந்து பின் மச்சுவாக மாறியிருந்தது)நான் எதிர்ப்பார்த்தேன்…’ என கவிதையைக் கண்ணில் ஒற்றிக்கொண்டு செல்வார்கள். இப்படி செல்பவர்கள் மிகக் குறைவானவர்கள்தான். பெரும்பாலோர் ‘மச்சு…அது ‘ஈ’ கிளாஸ் படிக்குதுடா இதெல்லாம் புரியாதுடா…சின்னாங்கா எழுதுடா…நான் அவள லவ் பண்ணுறன்டா…பயந்து ஓடிட போகுதுடா’ என கெஞ்சுவார்கள்.
இது போன்றவர்களுக்கு எழுதுவது மிக சுலபம்…
‘நீ ஒரு நிலா
இனிய பலா’…
என்பன போன்ற வரிகள் இருந்தால் போதுமானது. அவர்கள் தேவை ஒன்றே ஒன்றுதான். கவிதையில் கண்டிப்பாக ‘மயில், நிலா, வானவில்…’ போன்ற சொற்கள் இருக்க வேண்டும். இந்தச் சொற்களுக்காக அவர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் ஐம்பது சென் செலவு செய்யத் தயாராக இருந்தனர். இவர்கள் மூலம் எனக்கு ஒன்றே ஒன்று புலப்பட்டது. ‘கவிதை எல்லோருக்கும் புரியும்படி இருக்க வேண்டும்.’
நான் ஒரு ஜனரஞ்சக கவிஞனாக உருவாகிக் கொண்டிருந்தேன்.