சரவணனுக்கும் எனக்கும் இடையில் மெல்லிய இடைவெளி விழுந்திருந்தது. சொற்களால்… புன்னகையால்… உதவிகளால் நிரப்பமுடியாத சூட்சுமமான இடவெளி. அந்த இடைவெளி குறித்து நாங்கள் இருவருமே பேச விரும்பவில்லை. அது குறித்து பேசுவது மேலும் பிரிவின் வேகத்தை அதிகரிக்குமோ என்ற எண்ணம் எங்கள் இருவருக்குமே இருந்தது. மனதின் ஓர் அந்தரங்கமான பகுதி விம்பி புடைத்து அதன் அதிர்வை உடல் முழுதும் பரவ செய்தபடி இருந்தது. இப்போதும் அந்த உணர்வை அதன் முழுத் தன்மையோடு என்னால் மீட்டுக்கொணர முடிகிறது.
சரவணன் வீட்டின் முன் நிர்ப்பேன். அவன் தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு என்னோடு பள்ளிக்குக் கிளம்புவான். ஓய்வு நேரம் எனக்காகக் காத்திருந்து சிற்றுண்டிச்சாலை நோக்கி நடப்பான். வீட்டிற்கு திரும்புகையில் ஒன்றாக செல்வோம். முதலில் அவன் வீடு வரும். நெடிய மௌனத்தை கைவிடாமல், ஹேண்டலைப் பிடித்தபடி விரல்களை மட்டும் தூக்குவான். சமயங்களில் அதுவும் இல்லை. வீட்டிற்குத் திரும்பியதும் அவனிடமிருந்து வரப்போகும் அழைப்புக்காகக் காத்திருப்பேன். அடிக்கடி அவன் வீட்டுத் தொலைபேசிக்கு அழைத்து குரல் கேட்டதும் வைத்து விடுவேன். அவன் வீட்டில் இருப்பதை மட்டும் உறுதி செய்து கொள்வேன். தொலைபேசிக்குப் பதில் இல்லையென்றால் அவன் என் வீடு நோக்கி வருவதாகக் கற்பனை செய்து கொள்வேன். அப்படி நம்பி ஏமாறும் பட்சத்தில் அவன் யாரோ ஒரு புதிய நண்பனுடன் ஊர் சுற்றுவதாக எண்ணம் வரும். மனம் வலிக்கும்.
எழுத்திலும் இலக்கியத்திலும் நான் காட்டிய தீவிரம் சரவணனுக்கு மனத்தடையை ஏற்படுத்தியிருந்தது. அதிலும் இளஞ்செல்வனுடன் எனக்கு ஏற்பட்ட நெருக்கம் அவன் எதிர்பாராதது.
‘டே எழுத்தாளனுங்களே பொய் காரனுங்கடா… சும்மா பேப்பருல எழுதி என்னாத்தடா கிழிச்சானுங்க… ஒரு தமிழனுக்கு அடிப்பட்டு ரத்தம் கொட்டும் போது தொடைக்க தைரியம் வருமா? கொட்ட சுறுங்கிங்கதான் எழுத போவானுங்க…’ எழுத்து, இலக்கியம், இளஞ்செல்வன் இதில் எது குறித்து பேசினாலும் ஆத்திரம் அடைந்தவன் பின் தனது நெடிய மௌனத்தால் என்னைத் தண்டிக்கத் தொடங்கியிருந்தான். அவன் கூறிய காரணங்கள் எனக்குப் பொய்யாகப் பட்டது. அவன் சொற்களில் அரை ஜீவன் மட்டுமே இருந்தது. நான் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருந்தேன். சரவணன் விலகி கொண்டே சென்றான்.
-தொடரும்