இளஞ்செல்வனின் பேச்சைக் கேட்பது இனிமையான அனுபவம்.என்னையும் ஒரு பொருட்டாக மதித்து அவர் தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டதை இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது. அவர், தான் செய்த இலக்கிய வாதங்களைத் தொகுத்து ஒரு புத்தகமாகப் போட எண்ணியிருந்தார். “அப்படிப் போட்டா நல்லா இருக்கும்ல…” என வினவியவரிடம் என்ன சொல்வதென்று தெரியாமல் ஒரு மார்க்கமாகத் தலையாட்டி வைத்தேன். “போடணும்… போடணும்” என்றார். அல்லது தனக்குத் தானே கூறிக்கொண்டார்.
ஒரு முறை அவரிடம் நான் எழுதிய முதல் சிறுகதையை எடுத்துச்சென்று காட்டினேன். படித்துப் பார்த்தவர் “நான் சொன்ன கடையில புத்தகம் எடுத்து படிக்கிறீங்களா?” எனக்கேட்டார். பின் அவரே “நிறைய படிங்க” என்றார்.
என்னைப் பொறுத்தவரை தனக்குத் தானே பேசிக்கொள்வதை தவிர்க்க இளஞ்செல்வனுக்குப் பயன்பட்ட கருவி நான். அப்படி ஒரு கருவியாய் இருப்பது எனக்கும் பிடித்திருந்தது. சொற்களைச் சேகரிக்கும் பெட்டி போல்.யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருக்கும் ஆணவத்தின் குரலை என்னிடம் காட்ட இளஞ்செல்வனுக்கு வசதியாய் இருந்தது. எனக்கும் அதை ஏந்தி கொள்வதில் எந்தத் தடையும் இருந்ததில்லை. ஒரு வேளை அது ஆணவம் என அப்போது நான் அறியாமல் இருந்திருக்கலாம்.
புதுமைப்பித்தனைப் பற்றியும் ஜெயகாந்தன் பற்றியும் ஓரிரு முறை கூறியுள்ளார். புதுமைப் பித்தனின் சில கதைகளை அவராகவே கூறி அவராகவே வியப்பார். அவருக்குத் துணையாக வேறு வழியே இன்றி நானும் வியப்பது போல பாவனை செய்வேன். எனக்கு அப்போது தெரிந்ததெல்லாம் வைரமுத்து மற்றும் மேத்தா மட்டுமே. அந்த மாபெரும் இலக்கிய ஜாம்பவான்களைப் பற்றி இளஞ்செல்வன் பேசாதது வருத்தமாக இருக்கும். அப்படி அவர் பேசப்போகும் ஒரு தினத்தில் இடையில் புகுந்து எடுத்து விட வைரமுத்து கவிதைகள் சிலவற்றை மனனம்கூட செய்து வைத்திருந்தேன்.
அனேகமாக வெல்லஸில் தமிழ்ப்பள்ளியில் என்னுடைய வருகையும் இளஞ்செல்வனுடனான சந்திப்பும் வழக்கத்துக்குள்ளாகிவிட்ட ஒரு சூழலில் இளஞ்செல்வனைக் காண அன்றும் பள்ளிக்குச் சென்றேன். பள்ளியில் அவர் கார் இல்லை. அந்தப் பள்ளியில்தான் எனது ஆரம்ப கல்வியை முடித்திருந்ததால் ஆசிரியர்கள் பலர் நல்லப் பழக்கம். அதில் ஓர் ஆசிரியர் “ஆதி. குமணன் வந்திருக்கிறார். அவருடன் வெளியேறி இருக்கிறார்” எனக் கிசுகிசுத்தார்.
ஆதி. குமணன் என்றதும் எனக்கு வியப்பு ஏற்பட்டது. அப்போது ஆதி. குமணன் சர்ச்சைக் குறியவராகவும் தனக்கென மிகப்பெரிய வாசகர் வட்டத்தைக் கொண்டவராகவும் இருந்தார். அவரின் ‘ஞானபீடம்’பகுதி பலராலும் விரும்பி வாசிக்கப்பட்டு வந்தது. அவரது ‘பார்வைகள்’ கட்டுரை தொகுதியையும் வாசித்து முடித்திருந்தேன். மலேசிய நண்பன், மக்கள் ஓசை, இதயம் என பெரிய பத்திரிகை அதிபதியாக விளங்கினார் ஆதி.
அடித்தது லாட்டரி. ஆதி. குமணனைச் சந்தித்து எனது கதைகளையும் கவிதைகளையும் கொடுத்து பிரசுரிக்கச் செய்ய வேண்டும் என முடிவெடுத்தேன். சைக்கிளை எடுத்துக்கொண்டு விரைந்தேன். லுனாஸ் டவுன் முச்சந்தியில் உள்ள ‘ஹீத்தாம் மானிஸ்’ கடையின் ஓரமாக இளஞ்செல்வனின் பென்ஸ் கார் நின்றது. கருப்பு கண்ணாடியால் சூழப்பட்ட கடை அது. இதுவரை நான் உள்ளே நுழைந்ததில்லை. வழக்கமான கடைகளைவிட அங்கே சற்று விலை அதிகம் எனக் கேள்வி பட்டதுண்டு. மெதுவாக கடையை நெருங்கினேன். உள்ளேதான் அவர்கள் இருக்க வேண்டும். இரு கைகளையும் பக்கவாட்டில் வைத்து ஒளியை மறைத்தபடி கண்ணாடியில் முகம் அழுத்தி உள்ளே பார்த்தேன்.
இளஞ்செல்வனும் ஆதி. குமணனும் சில பீர் பாட்டில்களோடு கண்ணாடி கிளாஸில் நுரை பொங்க அமர்ந்திருந்தனர்.
– தொடரும்