மது குறித்த தீராத கற்பனையும் பயமும் அந்த வயதில் எனக்கு இருந்தது. ஒவ்வொரு மாதமும் வீட்டிற்கு வந்து சேரும் ‘பயனீட்டாளர் சங்க குரல்’ பத்திரிகையும் ‘மதுவை ஒழிப்போம்… மதியை வளர்ப்போம்’ என்று பிரச்சாரம் செய்து கொண்டிருந்தது. நான் வாழ்ந்த லுனாஸ் பகுதி சாராயத்திற்குப் பேர் போனது. எண்பதுகளில் நச்சுக்கலந்த சாராயம் குடித்து லுனாஸ் தோட்டத்தில் உள்ள பல வீடுகளில் பிணங்கள் வரிசைப் பிடித்து நின்றதையும் ஒப்பாரி ஓலத்தில் லுனாஸ் மூழ்கி போய் கிடந்ததையும் இன்றும் பலர் நினைவில் நிறுத்தி விசாரிப்பதுண்டு.
கெடாவைத் தாண்டி உள்ள மக்களிடம், நான் எனது ஊர் பெயரைச் சொல்வதில் ஆரம்பத்திலிருந்தே சில மனத்தடைகள் இருந்தன. பிண வாடையிலிருந்து தொடங்கும் உரையாடல்களை எதிர்கொள்வது அருவருப்பானதாக இருந்தது. பயனீட்டாளர் சங்கம் வெளியிட்ட ஒரு கையேடும் லுனாஸில் நடந்த இந்தச் சம்பவத்தைப் ஒப்பாரிப் படங்களோடு காட்டியிருந்தது.
நான் ஆரம்பக்கல்வி பயின்ற வெல்லஸிலி பள்ளியின் அருகேதான் அந்த வரலாற்றுக்குரிய சின்னங்கள் காடுமண்டி கிடந்தன. பாதியாய் உடைக்கப்பட்ட வீடுகளின் மதில்களுக்குப் பின்னே ‘அச்சிக்கா’ விளையாட வசதியாய் இருக்குமென்றாலும் கண்ணுக்குத் தெரியாத பிணங்களின் நிழல்கள் அங்கு அசைவதாகவும் மது அருந்துவதாகவுமே என் கண்களுக்குத் தெரிந்தன.
எனது பத்தாவது வயதில் கம்போங் லாமாவிலிருந்து கம்போங் செட்டிக்கு வீடு மாறி வந்தவுடன் மதுவின் வாசனை என்னை வேறு வகையாகத் துரத்தி வந்தது.
-தொடரும்