கொய்தியோ மணியத்தையும் ஓலம்மாவையும் அநேகமாக லுனாஸ் வட்டாராத்தில் தெரியாதவர்கள் குறைவு. கொய்தியோ மணியம் பெரிய தாதாவாக ஒரு காலத்தில் வளம் வந்தவர். அந்தமான் தீவிலிருந்து விடுவிக்கப்பட்டு லுனாஸில் தஞ்சம் அடைந்திருந்தார். உடும்பு வேட்டியாடுவதில் அவருக்கென தனி உக்திகளை வைத்திருந்தார். இளமை காலத்தில் இருவர் முக்கிக்கொண்டு தூக்கும் மூட்டைகளை தனி ஒருவராக தூக்கி தோளில் போட்டுக்கொண்டு போவதை அம்மா சொல்லி கேட்டிருக்கிறேன். ஒரு காலத்தில் இருந்த உடற்கட்டு அவரின் எழுவதாவது வயதிலும் ‘விட்டுப்போவேனா’ என அவர் உடலிலேயே கொஞ்சமாய் தங்கியிருந்தது. கொய்தியோ மணியமும் ஓலம்மாவும் எங்களுக்கு அண்டை வீட்டுக்காரர்களானார்கள்.
நாங்கள் அங்கு சென்ற இரண்டாவது வாரத்தில் ஓலம்மா அலரியபடி எங்கள் வீடு நோக்கி ஓடி வந்தார். அவர் தலையில் இரத்தம். என் ஞாபகத்தில் அவ்வளவு மனித ரத்தம் பார்த்தது அதுதான் முதன்முறை.
இரண்டு வாரத்திற்கு ஒரு முறையாவது ஓலம்மாவின் இரத்தத்துளிகள் எங்கள் வீட்டின் அஞ்சடியில் சொட்டு விட்டிருக்கும். கொய்தியோ மணியம் பெரிய மரக்கட்டையைச் சுமந்தபடி ‘இனிமே இந்த வீட்டுப்பக்கம் வராதடி’ எனத்தொடங்கி ஓலம்மாவின் கற்பு குறித்தும் அவர் அம்மாவின் கற்பு குறித்துமான சந்தேகம் கலந்த வார்த்தைகளை கொச்சையாக உமிழ்வார். ஓலம்மாவும் தான் பாதுகாப்பாக இருக்கும் தைரியத்தில் எங்கள் வீட்டிலிருந்தபடியே கொய்தியோ மணியத்தின் சொல் அம்புகளை சில உபரிகளோடு இணைத்து மீண்டும் அவரை நோக்கியே பாய்ச்சுவார். என் அம்மா காதை மூடியபடி ஒரு மூலையில் அமர்ந்து கிடப்பார். ஓலம்மாவின் கோபம் தீர்ந்ததும் அவர் காயத்திற்கு மருந்து போட்டுவிடுவார். அது போன்ற சமயமெல்லாம் எனக்கு அம்மவின் மீது கோபமாக இருக்கும். ‘இவங்களுக்கெல்லாம் எதுக்கு உதவி செய்றீங்க’ என கத்துவேன். அம்மா, “உதவின்னு கேட்டு வந்தா செய்யாம இருக்கக் கூடாது” என்பார்.
காலப்போக்கில் எனக்கும் இந்த சூழல் பழகிவிட்டது. கொய்தியோ மணியம் போதையில் ஒருவராகவும் தெளிந்த நிலையில் வேரொருவராகவும் காட்சியளித்தார். தெளிவாக இருக்கும் பொழுதுகளில் கொய்தியோ மணியம் தாத்தாவிடம் பொழுதைக்களிப்பது சுவாரசியமானது. அவர் சில மூலிகைகள் குறித்து அறிந்து வைத்திருந்தார். கால் கட்டைவிரலால் புற்களைத் தடவியபடி நடப்பவர் திடீரென ‘தெ…இதுதான்’ என சிறிதாய் இருக்கும் ஒரு வகை இலையைப் பறித்து மெல்வார். அந்த இலையில் உள்ள பால் இரத்தத்தில் கலக்கும் போது அது வெளிபடுத்தும் வாடை பாம்புகளை அச்சம் கொள்ளச்செய்யும் என்பார்.
கொய்தியோ மணியம் வேட்டைக்குப் போவதைப் பார்க்கவே ஆச்சரியமாக இருக்கும். வெரும் லாஸ்டிக் மட்டுமே அவர் ஆயுதம். கூடவே இரண்டு நாய்கள் ஓடும். அரைகால் சட்டை மட்டுமே அணிந்திருப்பார். வெற்றுடல். சிறு தழும்புகூட இல்லாமல் அவர் சுற்றிவரும் காட்டிலிருந்து போனமாதிரியே மூட்டைநிறைய உடும்புகளை அள்ளிக்கொண்டு வருவார். காடு அவருக்கு பழக்கமான பிரதேசம். காட்டுக்குள் நுழையும் போது அவர் மது அருந்தி நான் பார்த்ததில்லை.
ஒரு முறை அவரோடு பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கும் போது கத்தி வீசுவது குறித்து என்னிடம் பேச ஆரம்பித்தார். கத்தி நம்மை நோக்கி வருகையில் அதை எப்படி கையாள்வது என அவரே வீசி அவரே தடுத்தும் காண்பித்தார். சத்தத்துடன் இடது கையால் கத்தியை வீசி லாவகமாக ஆள்காட்டி விரலுக்கும் நடு விரலுக்கும் நடுவில் அதை அடங்கச்செய்வதை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். பிறகு கத்தியை என் கையில் கொடுத்து வீசச் சொன்னார். கைகள் நடுங்கின. கத்தி தன்னால் கீழே விழுந்தது.
கொய்தியோ மணியம் என்னை ‘பொட்டை’ என்றார்.
-தொடரும்