உடும்பு, அலுங்கு, பறவைகள் என கொய்தியோ மணியம் எனக்கு ஏற்படுத்திய உணவு பழக்கங்கள் ஏராளம்.அவரது அசாத்திய தைரியம் அவரின்பால் ஒரு ஈடுபாட்டை வர வழைத்திருந்தது.பலவிதமான விலங்குகளைத் தின்பது என்னையே நான் ஒரு மிருகமாக்கிக் கொள்ளும் நம்பிக்கையை ஏற்படுத்தியது. காடுகளில் அலைந்து திரிய அந்த நம்பிக்கை முக்கியமானதாக இருந்தது.
கம்பத்தில் பலருக்கும் கொய்தியோ மணியத்தின் போக்கு பிடிக்காவிட்டாலும், பாம்புகளின் புளக்கம் அதிகம் உள்ள எங்கள் கம்பத்தில் அவருக்கு முக்கியத்துவம் இருந்தது. பதினான்கு வயதிலேயே பாம்பைக் கொள்ளும் திறனை நான் பெற்றிருந்தேன். செங்கல் குழியில் பதுங்கி கிடக்கும் குட்டிப்பாம்பின் மேல் கொதிநீர் ஊற்றி கொள்வது முதல் வீட்டில் பலகை இடுக்கில் பதுங்கி கிடக்கும் பாம்பின் தலையை நசுங்குவது வரை பாம்புகளைக் கண்டதும் கொன்றதும் அதிகம். ஆனால் காண்பதற்கு அறிதான ஏறக்குறைய 15 அடிகளுக்கு மேல் நீளம் உள்ள மலாய் நாகத்தை கொய்தியோ மணியம் ஒரு முறை தனியாளாக அடித்துக் கொன்று அதன் பக்கத்தில் அமர்ந்து பீடி குடித்துக்கொண்டிருந்த காட்சி அவர் துணிவிற்கு ஓர் எடுத்துக்காட்டு.
கம்பத்தில் ஒரு வீரனாக விஷ ஜந்துகளுக்குச் சவாலாக இருந்த கொய்தியோ மணியம் ஒரு நாள் தற்கொலை செய்து கொண்டார்.
அன்று மது அருந்திவிட்டு அடிக்க வந்தவரை ஓலம்மா சொன்ன ஒரு வார்த்தை அவரைத் தற்கொலைக்குத் தூண்டியிருந்தது.வழக்கமாகக் குடிக்கும் பீருடன் புற்களுக்கு அடிக்கும் மருந்தையும் கலந்து குடித்திருந்தார். ஓலம்மா ஒன்றும் பேசாமல் அழுதவாரே அவர் அருகில் இருந்தார். அம்மாவும் அப்பாவும் அவரை மருத்துவ மனைக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்தனர். நான் கொய்தியோ மணியத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். வலியில் துடித்தப்படி கொய்தியோ மணியம் அம்மாவிடம் முணங்கினார்,” என்னை அந்தக் கேள்வி கேட்டுடிச்சி…”. ‘எந்தக் கேள்வி’ என அம்மாவும் கேட்கவில்லை. எனக்குத் தெரிந்துகொள்ள ஆவலாய் இருந்தது. அந்த வயதில் தெரிந்த சொற்பமான கொச்சை வார்த்தைகளை வரிசை படுத்தி எதுவாக இருக்கும் என யூகித்தேன். கண்டுபிடிக்க முடியவில்லை.
மருத்துவ மனையிலிருந்து வீடு திரும்பிய மறுநாள் கொய்தியோ மணியம் மீண்டும் மதுவில் புல் மருந்தை கலந்து குடித்து இறந்திருந்தார். ஓலம்மா வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுதாள். பின்னர் ஓரிரு மாதம் அவரும் அதிகமாக மது அருந்தி இறந்துவிட்டார். என் வாழ்வில் இரண்டாவதாக நான் பார்த்த மது சார்ந்த மரணங்கள் அவை.
இன்றும் ஓலம்மா என்ன வார்த்தை சொல்லி கொய்தியோ மணியத்தைத் திட்டியிருப்பார் எனத் தெரியவில்லை. சதா ஏச்சுகளையும் இழிச் சொற்களையும் கேட்டே பழக்கப்பட்ட கொய்தியோ மணியத்தை கொல்ல அப்படி எந்தச் சொல்லுக்கு வலு இருந்தது எனவும் தெரியவில்லை.
ஆனால் ஒன்று மட்டும் உறுதி… ஓலம்மா நிச்சயம் இந்தச் சமூகம் நம்பிக்கொண்டிருக்கும் ‘கெட்ட வார்த்தை’களில் ஒன்றையும் உபயோகித்திருக்க மாட்டார். அவைகளுக்கு அத்தனை சக்தி கிடையாது.
-தொடரும்