உங்கள் தளத்தில் யாக்கை சிறுகதைக்கு வந்த வாசகர் எதிர்வினை அனைத்தும் வாசித்தேன் . ஒரு கதை எவ்வாறெல்லாம் வாசித்து உள்வாங்கப்படுகிறது என்பதை நெருங்கி அறிவது ஒரு வாசகனாக எப்போதுமே எனக்கு உவகை அளிப்பது .
கடிதங்களை வாசித்த வரையில் நான் அவதானித்தது மூன்று.
ஒன்று வடிவ ரீதியாக அணுகுவது. [ஜெயமோகன் அவரது தளத்தில் இக்கதை குறித்து எழுதிய சிறு குறிப்பை குறிப்பிடுகிறேன்]
இரண்டு அழகியல் ரீதியாக, கடல்தாய் கொள்ளும் முகம், சிறு உயிர்களின் எளிய பசி போன்ற கவித்துவ தருணங்கள் வழியே அணுகுவது.
மூன்றாவது காமத்தின் வண்ண பேதம். பெரும்பாலானோர் இந்த மூன்றாம் பிரிவு [இங்கே என் நண்பர்களுடன் இக்கதை சார்ந்த உரையாடலில் இருக்கிறேன். அவர்களையும் இதில் இணைத்து சொல்கிறேன்]
நான்காவதாக எழும் குரல் நான் இதை எப்படி புரிந்து கொள்கிறேன் என்றால் என துவங்குவது.
ஐந்தாவது வழக்கமான காமம் சார்ந்த தளத்திலிருந்து விலகி வேறு விஷயங்களை முயன்று பார்க்கலாம் எனும் ஆலோசனைக் குரல் .
இந்த நான்கு, ஐந்து இரு சாரருக்கும் இக்கதை சார்ந்து எனது வாசிப்பை முன் வைப்பது அவர்களுக்குப் பயனளிக்கும் என நினைக்கிறேன். இந்த நான்கு எல்லைக்குள் வருபவர்களுக்கு ஒரு சொல். ஒரு இலக்கியப் பிரதி என்பது எந்த ஒன்றுக்கும் விடையாக வந்து நிற்பது அல்ல. இலக்கிய வாசிப்பு என்பது விடை கண்டு பிடிக்கும் விளையாட்டும் அல்ல. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இலக்கியம் பேசும் சிக்கல், ஒன்றை புரிந்து கொள்வதற்கு அல்ல. உங்கள் தர்க்கத்துக்கு மீறிய ஆழம் ஒன்றின் சிக்கல், அதன் பரிமாணங்கள் அதை ‘உணர்ந்து’ கொள்வது. குறிப்புணர்த்துவதே இலக்கியம் என்னும் கலையின் வழி. அதை உணர்ந்து கொள்வதே வாசிப்பு நல்கும் பிரதி தரும் இன்பம்.
ஐந்து வகைக்குள் வரும் வாசகர்கள், இந்த ஆலோசனையை முன் வைக்கும் முன், இக்கதை தனது, சப் டெக்ஸ்ட் வழியே, கையளிக்கும் வாசிப்பு சாத்தியங்கள் அனைத்தையும் கூடுமானவரை கணக்கில் கொண்ட பிறகே அதை முன் வைக்க வேண்டும். இங்கே தவரவிடப்பட்ட வாசிப்பு எது என கண்டால் மட்டுமே நாம் எந்த அளவு ஒரு கதைக்கு நம்மை ஒப்புக் கொடுக்காமல் அதற்கு ‘மேலாக’ நின்று கொண்டிருக்கிறோம் என விளங்கும் .
இந்த யாக்கை கதை நவீன் எழுதிய கதைகளில் சிறந்த கதை மட்டுமல்ல. தமிழ் சிறுகதை உலகில் என எடுத்துக்கொண்டால் கூட சிறந்த கதைகளில் ஒன்றாக அமையும் ஆற்றல் கொண்டது. முதல் காரணம் இக்கதை தனது வடிவம் வழியே சாதித்தித்திருக்கும் உள்ளடுக்குகள். பொதுவாக சிறுகதை எனும் வடிவம் எத்தகையது? வாசகர் முன்னாள் ஒரு கதையை சுவாரஸ்யமாக சொல்லி சென்று இறுதியில் வாசகர் எதிர்பாரா ஒரு ட்விஸ்ட்டில் நிறையும். அதிலிருந்து துவங்கிய தீவிர இலக்கிய சிறுகதையின் வடிவம் என்ன? இறுதியில் வரும் திருப்பம் வெறும் திருப்பமாக நின்று விடாமல், அந்த திருப்பத்தில் நின்று மீண்டும் கதையை மறு வாசிப்பு செய்ய வைக்கும். அந்த மறு வாசிப்பில் சொல்லப்பட்ட கதை வழியே,கையளிக்கப்பட்ட சொல்லப்படாத கதை வாசக மனதில் விரியத் துவங்கும். இந்த பரிணாம வளர்ச்சியில் அடுத்த கட்ட சாதனை என இக்கதையை சொல்ல முடியும்.
முதல் வாசிப்பில் வாசககர் ‘கண்டு பிடித்து’ விடும் பிராய்டிய உளவியல் சார்ந்த சப் டெக்ஸ்ட் இக் கதையின் சொல்லப்பட்ட கதை. அந்த சப் டெக்ஸ்ட் தனது இறுதியில் ஒரு திருப்பத்தை கொண்டிருக்கிறது. அங்கிருந்து துவங்குகிறது இந்த கதையின் இரண்டாவது உள்ளடுக்கு. அதாவது தேர்ந்த வாசகனுக்கான கதை வெளி .
கதையின் முதல் வடிவம் துல்லியமான புறம். விலை மாதுக்களுடன் பொழுதை கழிப்பவன். காத்ரினாவை ‘தேர்வு’ செய்கிறான். காரணம் அவளது உடல். அங்கே துவங்கி, தான், அவள், ஆண், பெண், எனும் உடல்களின் ஆற்றலையும் எல்லைகளையும் அறிகிறான். உடல் என்பது காமம் துய்க்கும் ஒன்று மட்டுமே அல்ல, அந்த கடல் போல, தன்மையோ, ஆழமோ அறிய இயலா, கையாள வகையறியா ஆதி ஆற்றலின் கைப்பாவை மட்டுமே இந்த உடல்கள் என அவன் முதல் முதலாக அறிய வரும் கணம் இக் கதையின் முதல் இழை .
இக்கதை கொண்ட வடிவத்தின் வழியே அளிக்கும் முதல் சப் டெக்ஸ்ட். ஈத்தனுக்கும் அவள் மகளுமான உறவு விவரணை வழியே கிடைப்பது. இது இரண்டாவது இழை. இந்த இரண்டைக் கடந்து இக்கதை பயணிக்கும் ஆழமே இக்கதையை தமிழில் நிகழ்ந்த முக்கிய கதைகளில் ஒன்றாக இதை உயர்த்துகிறது.
இரண்டு மாதம் கோமாவில் இருந்து ஈத்தன் கண் விழிக்கிறான். இப்போது காத்ரின் மேலும் பொலிவு கொண்டு தெரிகிறாள். காரணம்? இப்போது அவள் மகள் மட்டுமல்ல. கூடுதலாக ஒரு பெண் என உடல் மட்டுமாக தெரிகிறாள். ஏன்? இரண்டு மாத கோமா ஈத்தனிடம் இருந்து அனைத்தையும் பறித்து விட்டது. இப்போது அவன் கடலம்மாவின் மகன் இல்லை, மீனவன் இல்லை. வெறும் உடல். கலாச்சார கடிவாளத்தை இழந்து, அடிப்படை இச்சையால் மட்டுமே இயக்கப்படும் ‘வெறும் உடல்’. அப்பாவாக கடலில் விழுந்தவன் வெறும் உடலாக கரையேறுகிறான். செயல்பட இயலா நலிவே, அழிய வேண்டிய எல்லைக் கோட்டை காத்து நிற்கிறது .
அவனால் வெறும் உடலாகவும் வாழ முடியாது. பழைய அப்பனாகவும் வாழ முடியாது. அவன் கண்டடைத்த வழி, அவனது அப்பா அவனுக்கு காட்டிய வழி. ஆம் ஈத்தனால் அப்பாவாக இனி வாழ முடியாது. ஆனால் என்றென்றும் ஒரு அப்பாவாக சாக முடியும். செல்கிறான் சாகிறான். இப்போது அவன் கடலின் மகன். மீனவன், அனைத்துக்கும் மேல் காத்ரினாவின் அப்பா. தனது உயிரைக் கொண்டு அப்பா என்பதை அடிக்கோடிடுகிறான் ஈத்தன் .
உக்கிரமான ஒரு நிகழ்வை, உளம் பொங்கி ஆம் ஆம் என அரற்ற வைக்கும் ஒரு தருணத்தை, கண் கலங்கி மனம் திகைக்கும் ஒரு உறவு நிலையை ஒரு மிகை சொல்லின்றி , கச்சிதமான வடிவின் வழியே, ஒரு உன்னத அனுபவத்தை மௌனமாக வாசகனுக்கு கடத்திய வகையில் , இந்தக் கதை தமிழின் தனித்துவம் கொண்ட சிறந்த கதைகளில் ஒன்று என உயர்கிறது .
கடலூர் சீனு