யாக்கை : கடிதம் – கிருஷ்ணன்

நவீன் ,

இந்த சிறுகதை மிகச்சிறப்பாக இருந்தது ,

உங்களது போன சிறுகதை போயாக்கில் வரும் கனவு மிக செயற்கையாக இருந்தது. உண்மையில் உள்ள அச்சம் அவ்வாறே கனவுருக்கொள்ளாது , உருமாறித் தான் தெரியும். மேலும் ஒரு ஆங்கில ஆசிரியரின் தர்க்கம் மீறிய அச்சம் ஏற்புடையதாக இல்லை. கதை சற்று மார்கோஸ் சாயலில் இருந்தது.

இந்தக் கதை கூட்டு வாசிப்பில் சில அனுகூலங்கள் உள்ளது போலவே சில பின்னடைவுகளும் உள்ளது, இக்கடிதங்களில் கூறப்படும் incest உறவுக்கு வாசிப்பு சாத்தியம் இருப்பதாகத் தெரியவில்லை. முதலில் விழுந்த சுரேஷ் பிரதீப்பின் கடிதத்தில் இது கூறப்பட்டிருப்பதால் பின்னர் அனைவரும் அதே வரிசையில் நிற்பது போல தோன்றுகிறது. பிறரும் இவ்வகை வாசிப்பை மறுக்காதது ஆச்ரமளிக்கிறது. கேத்ரீன் அருகே உணரும் தந்தையின் மூச்சு காற்று இதற்கு இடம் கொடுத்திருக்கலாம்.

இதில் உள்ள கடல் வாழ்வு அசலானது ஒரு கடலோடி மட்டுமே இப்படி உணரமுடியும். ‘கடலும் கிழவனும்’ அந்த விடாபிடியும் கடலோடிகளுக்கே உண்டானது. முதலில் அன்பற்று விரியும் கடல் பின் கருணையுடன் தோன்றுவது ஒரு தரிசனம், அபூர்வமாக சில சிறுகதைகளில் மட்டுமே இது காணக் கிடைக்கும்.

இது ஒரு விலைமாது சொல்வதால் வழக்கமாக வாடிக்கையாளர்களுக்கு சொல்லும் கற்பனை கதை அதை சொல்லி சொல்லி தேர்ந்துள்ளாள் என்பதற்கான சத்தியத்தையும் தன்னுள் தக்கவைத்துள்ளது.

வதையும் தத்தளிப்புமாய் ஒரு யாக்கை, போகமும் இன்பமுமாய் ஒரு யாக்கை.

ஒரு அற்புத கதா வாசிப்பு அனுபவம்.

கிருஷ்ணன் ,
ஈரோடு .

 

 

(Visited 66 times, 1 visits today)