யாக்கை சிறுகதை கதையை நகர்த்தும் பாத்திரங்களின் இரு உடல்களும் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள முடியாத சூழலில் இருக்கிறது என்பதை மையப்படுத்துகிறது. ஈத்தனின் உடல் இனி மகளின் எதிர்கலத்தைக் காப்பாற்ற உதவாது என்பதையும், கேத்ரினின் உடல் காமுகரிடம் சிக்கி சிதைவுறப் போகிறது என்பதைக் குறியீட்டு ரீதியாகயாகவும் அழகியல் ரீதியாகவும் சொல்லிச் செல்கிறார். இரண்டு உடலுமே ‘தின்னக் கொடுத்து’ சன்னஞ் சன்னமாக அழிகிறது அல்லது அழியப்போகிறது என்பது அதன் சொல்லும் திறனில் சிறக்கிறது.
ஈத்தன் தன் மகளோடு உறவு கொண்டிருப்பாரோ என்ற சந்தேகம் எழும்போதே “ச்சே இருக்காது” என்கிறது அவலச் சுவையை விரும்பாத மனம். அதற்கு முதல் காரணம் அவர் இரண்டு மாதங்கள் நோயுற்று நலிவடைந்திருப்பதை மகள் வாயால் சொல்வதிலிருந்து புரிந்து கொள்ளமுடிகிறது. ஆனாலும் நான் இரண்டு மாதாமா கோமாவில் இருந்தேனா என்று கேட்பது அவள் இரண்டு மாதத்தில் ஒரு வயதுப் பெண்ணுக்கான துரித உடல் வனப்பைப் பெற்றிருப்பதையும் ,அவருக்கு சபலத்தை உண்டாகியிருக்குமோ என்ற சந்தேகத்தையும் நிறுவினாலும் , கேத்தரின் பிரக்ஞையற்றா படுத்திருந்தாள் , என்ற எதிர்வினா எழுகிறது. ஒரு ஆண் துணை இல்லாத வீட்டில் போதை வஸ்து உட்கொள்ளும் சமூகத்திலிருந்து யாராவது இவளைக் கெடுத்திருக்க வாய்ப்புண்டு என் அவர் சந்தேகமுறுவது இயல்பாக அமைந்திருக்கிறது.
ஆனால் அவர் ஏன் அவள் அருகில் படுத்திருந்தார்? மகளோடு உறவு கொண்டிருப்பாரோ என்ற பலத்த சந்தேகம் எழும் தருணத்தில் ஈத்தனின் தற்கொலைக்கு முன்னரான மகளின் அருகாமையை விரும்பிருக்கலாம் என்றும் எண்ணத் தோன்றுவது சகஜமே . அந்த அந்நியோன்யத்தை அவர் தொடக்கத்திலிருந்தே காட்டி வருகிறார். ஒரு தேர்ந்த கதைக்குரிய மொழி விளையாட்டை இப்படியாக சுழித்து ச் சுழித்து நகர்த்துவது வாசகனுகனின் பங்களிப்புக்கான இடங்களாகும். யாக்கையில் அவ்வாறான இடைவெளிகள் ஏராளம்.
ஈத்தன் இரண்டாவது முறையாகக் கடலில் வீழ்ந்தபோது தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முயற்சி செய்யவில்லை. அதனை அவன் திட்டமிட்டே செய்துகொள்கிறான். தன் மகளை இனி காப்பாற்றும் உடல் வலிமை அவனிடம் இல்லை. அப்படியே உடல் ஆரோக்கியம் மீண்டு வந்தாலும் நல்ல எதிர்காலத்தை மகளுக்குத் தர முடியாத நிலையில் அவள் மீனவ போதைப் பித்தர்களால் பலிகொள்ள நேர்வதை ஒரு தந்தையாக இருந்து பார்க்க விரும்பவில்லை. அந்த இயலாமையிலும் அச்ச உணர்விலும் அவன் தன்னை இழக்கக் கொடுக்கிறான். அவள் உடல் வனப்பு பித்தர்களை எளிதில் வசீகரித்துவிடும் என்று கோமாவிலிருந்து மீண்ட ஈத்தன் எண்ணித் துயறுருகிறார்.
கடலையும் ஆபத்தையும் , விபச்சாரத்தின் சோகத்தையும் ஒரு சேர பயணிக்கும் இரு கோடுகளை, ஒரு புள்ளியில் நிறுத்திபார்க்க வைக்கிறார் கதை சொல்லி. கடல் ஈவு இரக்கமற்று தன்னைக் காபாற்றிக்கொள்ள் முடியாதவர்களை விழுங்கு விடுவது போலவே, விபச்சாரமும் கேத்திரினாவை விழுங்கிவிடப்போகிறது. அப்பாவின், மீன்களால் தின்ற உடல் புரையோடி நாற்றமடிப்பதை விபச்சரத்தோடு வைத்துக் குறிப்புணர முடிகிறது. கடைசியில் கேத்தரினாவோடு உறவு கொள்ளாமல் நாயகன் போய்விடுகிறான் என்ற கேள்வி எழும்போது அதற்கான விடையை வாசகனிடம் விட்டு விடுகிறார் கதை சொல்லி. இதுதான் வாசகனுக்கு விடப்பட்ட நேர்த்தியான இடைவெளி.
நான் இப்படி யோசித்துப் பார்க்கிறேன். கேத்ரினாவை பலியிடும் ஜனத்திரளில் தானும் ஒருவனாக இருக்கக் கூடாது என்றே அவன் அவளோடு உறவு கொள்ளாமல் விலகிவிடுகிறான். கேத்ரினின் உடல் அனைத்தும் இழுக்கப்பட்ட சக்கையாக நோய்கொண்டு சீரழிந்த ஒன்றாக அவன் மனம் சிந்திக்கத் தொடங்கியதாலும் அவன் தன்னை அவளிடமிருந்து மீட்டுக்கொள்கிறான். ஈத்தனின் உடல் நாற்றமெடுக்கும் கதையைத் தொடர்ந்து சொல்லக் கேட்டதில் அவனுக்கு இந்த முடிவை எடுக்கிறான். அவள் உடலும் அவனுக்கு நாற்றமெடுக்க ஆரம்பிக்கிறது. இங்கே அவன் கேத்ரினை சுவைப்பதில் எந்த அவசரமும் காட்டவில்லை என்பதிலிருந்தே அவன் அவளிடமிருந்து எளிதில் விலகிப் போக முடியும் என்பதை நாம் உணரமுடியும்.
கதைக்குள் சொல்லப்படாமல் விடப்பட்ட இடங்களே கதையின் அடுத்த பரிமாணத்தையும், ஆழ அகலத்தையும் உணர்த்தி நிற்கிறது. இது அவ்வகைக் கதை.
கோ.புண்ணியவான்
யாக்கை – உடல். ஒன்றுமில்லா தருணத்தில் யாக்கையே ஒருவரின் மூலதனமாகிறது. பரந்து கிடக்கும் கடல் விரிந்த வாழ்க்கையை மையப்படுத்துகிறது. கடலில் ஈத்தன் மேற்கொள்ளும் போராட்டங்கள் ஒருவனின் வாழ்க்கைப் போராட்டங்களைச் சித்தரிப்பதுபோல் அமைவது சிறப்பு. கடல் அனுபவங்கள் என்னதான் ஒருவனுக்கு அனுபவம் கொடுத்தாலும் எல்லா நிலைகளிலும் அவனை அது காப்பாற்றுவதுல்லை. அனுபவங்கள் வெறும் பாடங்களே. வாழ்க்கையிலும். தன் மகள் மீது தீரா அன்பு கொண்ட ஈத்தன் தன் மகளை இனிமேல் காப்பாற்ற முடியாது என்ற நிலைக்கு வரும்போது கடலுக்கே தன்னை ஈந்து விடுகிறார். கடலில் விழுந்த தன்னைக் கொத்தித் தின்னும் மீன்கள்போல் கரையில் தன் மகளின் அழகைக் கொத்தித் தின்னக் காத்திருக்கும் காம மீன்கள்.
கோபி போன்ற மீன்கள் தன் பேச்சுத் திறமையால் எந்த உடலையும் கொத்தித் தின்று விடலாம். தன் மகளை இனிமேல் காப்பாற்ற முடியாதென்ற எண்ணத்தில் தன்னை வளர்த்த மீன்களுக்கே உடலை ஈந்து விடுகிறார் ஈத்தன். மகளே வாழ்க்கைக் கடலில் தன் உடலை ஈந்து பிழைக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறாள்.
உடலே மூலதனம்… அந்த உடல்மீதின் கொண்ட கவர்ச்சி கதாசிரியனை அதிர்ச்சியடையச் செய்கிறது.
முனியாண்டி ராஜ்