அன்புள்ள நவீன்
இதுவரை வந்துள்ள இந்த வரிசை கதைகளில் எனக்கு மிகவும் பிடித்த கதை என ‘பேச்சி‘யை சொல்வேன். ‘யாக்கை’ யின் கதை சொல்லல் பாணி இதிலும் தொடர்கிறது. அப்பா கதை சொல்லியாகவும், அப்பா சொல்லி மகன் செல்வம் எழுதிய கதை என இரு சரடாக பிணைந்து செல்கிறது. அப்பா சொன்ன கதையே கூட செல்வம் சொன்னதுதானா என்றொரு மயக்கத்தை கதை அளிக்கிறது. இரண்டு கதைகளில் ஒரு கதை முற்று பெறுகிறது, மற்றொன்று பெறவில்லை என்பதாக கூட தோற்றமயக்கம் உருவாக்கியதில் கதை வெற்றி பெற்றுள்ளது. ‘கிராப்ட்’ ரீதியாக இந்த சோதனை கதை சொல்லல் முறையில் தேர்ந்து விட்டீர்கள் என்றே சொல்ல வேண்டும். எனினும் இதில் ஒரு சிறிய ஆபத்து உள்ளது, இது ஒரு கண்ணாமூச்சி விளையாட்டாக ஆகிவிடக்கூடும். கருப்பு மண்ணுக்கு அடியில் சிவந்த மண் கொம்பனை நினைவுபடுத்தியது போன்ற தகவல் வாசகரை கவனம் சிதற செய்யும் யுத்தியாக ஆகிவிடக்கூடும். தொன்மமும் உறவு சிக்கலும் முயங்கும் கதை. பேச்சி எனும் தொன்மம் வழியாக உறவு சிடுக்கை, பெண் உளத்தை தொட முயல்கிறது.
தந்தை மகள், அன்னை – மகன், கணவன் – மனைவி என இந்த மூன்று உறவுகளை பிணைக்கும் புள்ளியாக பேச்சி இருக்கிறாள். குல தெய்வத்தின் சாபத்தால் பிறந்த குழந்தைகள் இறந்துவிட , நேர்ந்துகொண்டு ஒன்பதாவதாக பிறக்கிறாள் பேச்சி. தாத்தாவிற்கு பேரன் மீது வாஞ்சையும் அன்பும் உண்டு ஆனால் மகளைப் பற்றிய எந்த அடையாளமும் அவரிடம் இல்லை. புகைப்படங்களில் கூட தாத்தாவின் புகைப்படங்களே உள்ளன. பிள்ளையை வயிற்றில் வாங்கி துரோகம் இழைத்துவிட்டாள் எனும் ஆங்காரம் அவருக்கு இருக்கிறது. பிள்ளையை பெற்றவுடன் அவள் மரித்தும் போகிறாள். பின்னர் பேரனுக்கு பொன்னியை திருமணம் செய்த பிறகு அவளுடைய வினோத நடத்தைக்கு காரணம் தாமிழைத்த துரோகம், பேச்சியை மறந்தது தான் காரணம் என புலம்பி மரிக்கிறார் தாத்தா. பேரன் தாத்தா நிறுவிய பேச்சி கோவிலில் காட்டு பன்றியால் தாக்கப்பட்டபோது பேச்சியால் காப்பாற்றப்பட்டதாக சொல்கிறான். அவன் பசி தீர்க்க அன்னையாக முலைபாலை பீச்சி அடிக்கிறாள். பொன்னியிடம் ““ஏற்கனவே பழக்கமா? எல்லாம் தெரியுது” என்று கேட்டவுடன் வீசி எறியப்படுகிறான். தாத்தா அவருடைய மகளை பற்றி சொல்லும்போதெல்லாம் தேவடியா கழுத, எவக்கிட்டயோ பிள்ளைய வாங்கிட்டு வந்ததடா என்றே வசைபாடுகிறார். அவளுடைய கருவை கலைக்க முயன்ற போது அவள் வீசிய உளியின் தழும்பு நெற்றியில் உள்ளது. பேரன் தாத்தாவிடம் பொன்னியைப் பற்றி கூறும்போது அவருடைய அந்த தழும்பு எரிகிறது. இவற்றை இணைத்து பார்க்கும் போது தாத்தா செய்த பாவம் என்ன எனும் கேள்வி கதையின் மையமாகப் படுகிறது. தாத்தா போதை உச்சியில் தனது வீர செயல்களை சொல்கிறார். கோழிகளை புணர்ந்ததை கூட சொல்கிறார். கருப்பு கோழியை தனியே பலியிட தூக்கி செல்கிறார். தோட்டத்திலிருந்து விலகி வரும் முன்பு எல்லா கோழிகளையும் பலியாக்க எடுத்து செல்கிறார். தாத்தா பேச்சியின் மரணத்திற்கு காரணமோ எனும் ஐயம் எழுகிறது.
பேச்சியால் காக்கப்பட்ட பின் செல்வம் எனும் மகனை ஈன்று அவன் பொன்னியுடன் நிறைவாழ்வு வாழ்கிறான் என்பது பிடிபடுகிறது. இவை அனைத்தும் பேச்சியால் பூடகமாக இணைகிறது. ஒருவகையில் இந்திய ஆண் மனதில் பெண் ‘அன்னைக் கடவுளாக’ புனிதமாகிறாள் அல்லது பணிவிடை செய்யும் அடிமையாகிறாள். இந்த இருமை கதையில் நன்றாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த இருமையை வென்ற பின்னே பொன்னியை நெருங்க முடிந்திருக்கும் என தோன்றியது.
புகைப்படங்களில் நினைவுகளை சேமிக்க முயல்பவன், காட்டுபன்றி வேட்டை, முனி பன்றி என சாகசமும் வாசிப்பு சுவாரசியமும் உள்ள கதை. இப்பகுதிகள் முத்துசாமியின் மண்புழுக்கள் நாவலில் வரும் செம்போத்து தேடுதல் மற்றும் ஜின் பன்றி பற்றிய பகுதிகளை நினைவுபடுத்தியது.
சுனில் கிருஷ்ணன்
அன்பான சுனில். உங்கள் கடிதங்கள் எனக்கு எப்போதும் உற்சாகம் கொடுப்பவை. முதல் காரணம் புனைவிலக்கியம் என்பது ஒரு தீவிரமான innocent முயற்சி எனும் மனநிலை உங்களுக்கும் இருப்பதுதான். இதை நீங்கள் கூறவில்லை. உங்கள் கதைகள், கடிதங்கள் வழி நானாக உங்களை அவ்வாறு அறிந்துகொண்டேன். புனைவிலக்கியத்தில் நானும் அவ்வாறானவனே. ஒரு சிறுவன் மிக தீவிரமாக தீப்பெட்டிகளைக்கொண்டு வானை நோக்கி அடுக்கிச்செல்வதுபோல. அந்தத் தீவிரத்தில் எந்தக் குழப்பமும் இல்லை. அது குறித்து தர்க்கபூர்வமாக உரையாடுவதில்தான் சங்கடம் இல்லையா? அந்தச் சங்கடம்தான் படைப்பிலக்கியத்தைத் தொடர வைக்கிறது. இரு கடிதங்கள் வந்துள்ளன. ஒன்று திட்டவட்டமாகக் கதையை வரையறை செய்து. மற்றது கடுமையாக நிராகரித்து. நான் இரண்டையும் தாமதமாகவே பிரசுரிப்பேன். இரண்டுமே பிற வாசகர்களின் தனித்தப் புரிதலை மட்டுப்படுத்தலாம். உங்கள் கடிதம் பல புதிய வாசிப்புகளைத் திறக்கின்றன. நன்றி.
நவீன்