யாக்கை : கடிதங்கள் 5

யாக்கை: சிறுகதை

அன்புள்ள நவீனுக்கு,drawn-fishing-sea-fish-14

நலம். மிக்க நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.

கனவு கலைந்து,  கலங்கிய நினைவுடன் விழித்தெழுந்த, ஒரு அதிகாலையில் முதல் வேலையாக ‘யாக்கை’ கதையை வாசித்தேன்.  அந்த தருணம் முதல் எழுதும் இந்தக் கணம் வரை மனதில்  ‘யாக்கை’ யே நிரம்பி வியாபித்திருக்கிறது.  ‘காலைக் காட்சியில் பாசியால் நிரம்பி பச்சை நிறத்தில் காட்சியளித்த கடல்’ , ‘ஆழ்கடலுக்குள் உண்டாக்கிய அலைகளால் நீர்  செம்மண்  நிறத்திலிருந்தது’ போன்ற வர்ணனைகளும்,  ‘மழை பெய்த கடலடியில் மண் கிளம்பி கண்ணாடி போன்ற வலையில் படிந்து விட்டால் மீன்கள் உஷாராகி விடும்’ போன்ற நுண்தகவல்களும்,  ‘நீரில் உலர்ந்து பிளவுபடத்துவங்கிய முதுகுத்தோலை கொத்தி மீன்கள் சதையை பிய்த்த’, ஈத்தனின் வாழ்வின் உச்ச தருணங்களும், என இந்த கதை அபாரமான வாசிப்பனுபவம்  தந்தது.  கப்பலின் முன்பகுதிக்கு அணியம் எனவும், இங்கு சங்கரா மீன் என கூறப்படுவதன் ஒரு வகை, செப்பிலி மீன் எனவும் அறிந்து கொண்டேன்.

பேக்கேஜில் வாடகை எடுத்து பெற்ற  நேரத்தை அவசரத்துடன் வீணடிக்க விரும்பாத கதைசொல்லி அவனுக்கு கிளர்ச்சி தந்து,  மயக்கி முயக்க முயலும் விலைமகளான கேத்ரினாவுடன்  உரையாடுகிறான். கேத்தரினாவின்  தந்தை ஈத்தன் அவரின் கடல் பயண தோழர்களுடன் புயல் வரும் என்ற முன்னறிவிப்பையும் மீறி, தன் மகளின் திருமண ஏற்பாடு செய்ய வேண்டிய கட்டாயத்தால்,  மீன்பிடிக்க கடலுக்கு செல்கிறார். மிடுக்காக ஆங்கிலம் பேசி , மீன்களை நட்சத்திர விடுதியில் விற்க தெரிந்த கோபி, ஒரு முறை , கேத்தரினாவிடம்  இணக்கமில்லாத பாலியல் அத்துமீற முயன்றவன்.  கோபியை பழித்து பேசிய சில நிமிடங்களில், கடலை நோக்கி குறியை நீட்டிய,  ஈத்தனை ஒரு பெரிய அலை வந்து அடித்துச் செல்கிறது.  அந்த கணம் முதல் இரண்டு மாதங்களுக்கு கடலில், மூச்சை பிடித்தபடி,  பலூன் போல மிதக்கும் ஈத்தன், தேவனின் கண்களையும், சிறுவயதில் பார்த்த மேகச்சிலுவையையும் தேடுகிறான். கடலின் அலையாக தன்னை மாற்றிக் கொண்டு,, மீன்களுக்கு தன்னை இரையாக ஒப்புகொடுத்து உப்பு நீரில், அக்கினி உருண்டையாக மாறிய,  ஈத்தனின் முடிவை அறிந்த பின் உடைகளை கலைத்துவிட்டு உறவிற்கு ஆயத்தமான கதைசொல்லி  ஏன் கால்சட்டையை அவசரமாக அணிந்து கேத்தரினாவை விட்டு விலகுகிறான் என்ற கேள்வியுடன் கதை முடிந்தது.

ஈத்தனும், கோபியும், கதைசொல்லியும் மூன்று விதமான இயல்புடைய ஆண்கள். கோபிக்கு  கடல் என்பது ஒரு லாபமீட்டும் தொழிற்சாலை. தனக்கு உரிமையில்லாத பெண் முன் ஆண்குறியை காட்டும் அவன். தன் முன்பகைக்காக கடலில் விழுந்த ஈத்தனை கைவிட்டதற்கான வாய்ப்பும் கதையில் உண்டு. ஈத்தனோ தன் மகள் மீது அன்பும்,  கடலன்னையின் மீதும் பேரீர்ப்பும் கொண்டவன். ஒரு விபத்தால், கடலில் விழும் ஈத்தன்,  தன்னிலை மறந்து கடலுக்குள் தன்னை அமிழ்த்தி அலையாக தன்னை  ஒப்புக் கொடுத்து, பிழைத்து வந்து, நிலம் தந்த சமநிலையைத் தாள முடியாமல், மீண்டும் அதே இடத்திற்குச் சென்று மாள்கிறான்.   கோபி, ஈத்தன் என்ற இரு துருவங்களுக்கு இடையில் அலைபவனே கதைசொல்லி எனத் தோன்றுகிறது.  முதலில் தன் நிறமுள்ள பெண்ணிடம் முயக்கத்தில் கூட தன்னை விட்டுக்கொடுக்காத கதைசொல்லி, அவளிடம் தன்னை சிறிது சிறிதாக இழக்கிறான். கடலில் விழுந்த  தந்தையின் வாழ்வின் நிச்சயமின்மையின் சூழல் கேத்ரினாவின் சொற்களில் விரிய விரிய, அவள் உடல் மீதான  கதைசொல்லியின் பார்வை விவரிப்பின் நுட்பம் கூடுகிறது, அவள் உடல் கருமையில் ஒளி கூடுகிறது,  காம வேட்கை தீவிரமடைகிறது.

சூழலியல் தன்னார்வலரும் , அறிவியல் புனைகதைகள் எழுத்தாளருமான சாரா மைட்லாண்ட (Sara Maitland )  ன் Moss witch என்கிற கதையிலும் பச்சை பாசி ஆடை அணிந்த ஒரு  இயற்கை அன்னை வருகிறாள், அவள் பெயர் பாசிக் கிழவி (Moss witch).  காட்டில்  தாவர ஆராய்ச்சிக்காக வரும் ஒரு இளைஞன், பாசிக் கிழவியின் எச்சரிக்கையை மீறி ஒரு வளர் கொடியின் தளிர் தண்டை வெட்டியவுடன், அவனை  பாசிக் கிழவி அறைகிறாள். இறந்த அவனின் உடலின் பாகங்களை ஒன்றொன்றாக வெட்டி எடுத்து கலைநயத்துடன் அவைகளுக்குறிய தாவரங்களுக்கு உரமாக்கி அழகூட்டுகிறாள்.  இறுதியில் மண்டை ஓட்டினை பொடிபோல உதிர்த்து காற்றில் தூவியபடி மறைகிறாள். மேற்கின் இந்த இயற்கை அன்னையைப் போல பரிவற்றவள் அல்ல ‘யாக்கை’யின் கிழக்கின் கடலன்னை. படகில் நின்ற ஈத்தனுக்கு, முதலலை என்னும் அபாய எச்சரிக்கை தருகிறாள்.. உப்பில் துவர்த்த பச்சைப் பாசியை உணவாக தருகிறாள். காற்றைப் பிடித்து எடையிழந்தால், நாட்கணக்கில் மிதக்க வைத்து காக்கிறாள். ஆனால் அவள் தரும் உச்ச ஆன்மீக அனுபவத்திற்கு ஈடாக, உப்பு நீரில் தாள முடியாத வலியினைத் தருகிறாள். மகள் கேத்தரினுடனான உறவின் முறிவினை கோருகிறாள்.

கடலன்னையை எந்த ஒரு மண்ணின் நிலம் அல்லது பண்பாட்டு சூழல் எனலாம்.    கோபியை நிலத்தை, பண்பாட்டை சுரண்டி தன்னலத்திற்காக விற்கத்  தயங்காத  தன்னை முன்னிறுத்தும் முச்சந்தி வியாபாரி எனலாம். மனத்திண்மை கொண்ட ஈத்தனை  அதே பண்பாட்டு சூழலில், அர்பணிப்பும் தேடலும் கொண்ட ஒரு படைப்பு மனம் எனக் கொள்ளலாம்.  அவன் கடலில் விழுந்து அமிழ்ந்த அந்தக் கணம்,  படைப்பு மனம் அவனறியாமல், தன்னை இழந்து, தீவிரமாக பண்பாட்டுத் தேடலை துவங்கும் தீவிரமான கணம் எனலாம், விடலைப் பருவ முதல் காதலில் விழும் கணம் போல. இந்த மாபெரும் தேடல் கடலில் அவன் மூழ்கிய பின், அவன் அணுக்கமான உறவுகளை கைவிட நேரலாம். உப்பு நீரில், மீன்கள் அவன் சதையை கொத்தித் தின்னலாம். இந்த கொடும் விலைக்கு பதிலாக அவன் பெறுவது சாமானியர்களும்,  மீன்களைத் தேடும் தேர்ந்த கடற்பயணிகளும் கூட காண வாய்ப்பே  கடலன்னையின் தட்டிவிடாத மார்புக் காம்பினை,  இறைவனான கர்த்தரின் கண்களை, மேகச் சிலுவையை,  செம்மண், பாசிப் பச்சை கடலை. கடலின் சூழலை ஒரு தொட்டிக்குள் அடக்கி, வெப்ப நீர் பீலி வ‍ழியாக பாய்ச்சும்  ஏழடி ஜக்கூசியில், அனுபவிக்க எத்தனிகுக்கும் கதைசொல்லி போன்ற இடைநிலையர்களுக்கு  இந்த தேடலின் ஆழம் புரிய நேர்ந்தாலும் தங்கள் ஆழ் மனத்தை கலைக்க முடியாமல் வெற்றாடையை அணிந்தபடி விலகுவார்கள்.  ஆனால் உப்பு நெடியுடைய கடற்காற்று அவர்கள் ஆடையையும், தோலையும் ஊடுறுவி உள்ளத்தை என்றுமே துளைத்து ஈர்க்கும்.

உங்கள் கதைகள் மூலம் மனதிற்கு மேலும் மேலும் அணுக்கமாகிறீர்கள்.


உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

என்றும்  அன்புடன்,

சிவமணியன்

நவீனின் எழுத்தையறிந்தவன் என்ற வகையில் இது வாசகனின் மனத்தைத் தைப்பதற்கென அளவெடுத்து நச்சென்ற தைத்த சட்டையென சிறப்பான வாசிப்பனுபவம் தருகிறது இக்கதை. எனினும் இந்த அளவெடுப்பே இக்கதையை ஒருபடி கீழிறக்குகிறதோ?. அண்மையில் எழுதிய நாகம் என்ற கதை (கிளைமேக்ஸ் தவிர) இன்னும் நல்ல அனுபவமாய் விரிந்தது.

நீர்ப்பாத்திரங்களாக கடலும்- ஜாக்குஸியும், வதையும் ருசியும் தரும் பெண்களாக கடற்கிழவியும்-கேத்றினும், ருசிப்பவர்களாக கிழவனும்- கதைசொல்லியும், காட்சிகள் இன்பமும்-துன்பமும். என்று புனையப்பட்ட கதையில் கடலில் மனதைச்சுமந்து உயிரோடு மிதக்கும் கிழவனும் காமத்தைச்சுமந்து அலையும் மனிதனும் யாக்கையின் (பழைய) பாடுபொருள்கள். வடிவமும் நேர்க்கோட்டில் நிகழும்காலமும் கடந்தகாலமுமாய் மாறிமாறி வரும் சீன்களாய் மிக எளிய வடிவம் எனினும்,

கதையின் உச்சம் நிகழ்வது அக்கிழவன் மீண்டும் கடலுக்குள் சென்று குதிப்பதே. உடல் கப்பலுக்குள் வந்தாலும் கடித்திழுத்துத்திரும்பும் மீன் முக்கிய காட்சி. இந்த இரண்டுக்காகவேனும் இந்த எழுத்தாளனைப் பாராட்டுகிறேன்.

எனக்கு ஒதுக்கப்பட்ட ஜக்கூஸியில் இன்னும் எவ்வளவு நேரமோ தெரியவில்லை. ஜக்கூஸி மீன்கள் காத்துக்கொண்டிருக்கின்றன.

எம்.கே.குமார்.

 

(Visited 99 times, 1 visits today)