யாக்கை : கணேஷ் பாபு கடிதம்

யாக்கை சிறுகதை மேலோட்டமாகப் பார்க்கையில் மரணத்திற்கெதிரான ஒருவரின்Hand-in-the-Water-500x337 போராட்டமாகத் தென்பட்டாலும் உண்மையில் அது இருவருடைய யாக்கைப் போராட்டமாகத்தான் விரிகிறது. ஈத்தனின் யாக்கைப் போராட்டத்தை அவரது மகள் சொல்லச் சொல்லக் கேட்டுக்கொண்டே வரும் கதைசொல்லி ஒரு கட்டத்தில் ஈத்தனுடன் தன்னைத் தொடர்புபடுத்திக் கொள்கிறான். தன்னை அண்டவந்த மரணத்தில் இருந்து தப்பிக்க முடிந்த ஈத்தன் தானே மரணத்தைச் சென்றுதொடும் புள்ளியில் உறைந்து போகும் கதைசொல்லி ஈத்தனாகத் தன்னையும், கடலாக அந்தப் பெண்ணையும் பாவித்துக்கொள்ளும் தருணத்தில் கதை நிறைவுறுகிறது.

கதை இரண்டு வலுவான படிமங்களை முன்வைக்கிறது. கடல் மற்றும் பெண். அதனூடாக யாக்கை என்பதன் பொருளை அல்லது பொருளின்மையை வாசகனுக்கு கடத்துகிறது.

தாயில்லாத தனது மகளுக்காக கடலில் இரண்டு நாட்கள் உயிரைக் கெட்டியாகப் பிடித்துவைத்திருந்த ஈத்தன் மீண்டும் தான் உயிருக்குப் போராடிய அதே கடலில் விழுந்து இறக்கிறான். மகளுக்காக தனது யாக்கையில் சுமந்திருந்த அன்பு யாவும் வற்றிப்போய், அன்பேயில்லாத கிழவியான ஆழ்கடலில் தஞ்சமடைவதன் பின்னணியில் உள்ள மர்மமே கதைக்கு கூடுதல் அழுத்தத்தை அளிக்கிறது. யாக்கை என்பது உடலில் அல்ல மனதில்தான் இருக்கிறது என்ற கோணத்திலும் கதையை அணுகலாம்.

“யாக்கை அகத்ததா புறத்ததா அறியேன்” என்ற வில்லிப்பாரத வரிகள் நினைவுக்கு வருகிறது. நவீனுக்கு வாழ்த்துகள்.

மிக்க அன்புடன்,
கணேஷ் பாபு
சிங்கப்பூர்

(Visited 87 times, 1 visits today)