மிக இயல்பான
ஒரு காலைப்பொழுதில்
சோற்றுப்பருக்கைகளை
கொத்தித்திண்ணும்
மைனாக்களின் கண்களில்
பட்டுவிடும்
மீந்திருக்கும் எலும்புத்துண்டுகள்
ஒருதரம் குதித்து
பின்நோக்கி ஓட வைக்கும்.
o
ஒன்று போலவே வந்தமரும் சிட்டுக்குருவிகள்
ஒன்று போலவே பறக்கின்றன.
அவற்றை அழைத்து வரும்
தலைமை பறவைக்கு
கூடுதலான
வண்ணமோ வடிவமோ
ஒரு போது இருந்ததில்லை.
o
ஐம்பதுக்கும் மேல்
குவிந்திருக்கும் புறாக்களைப் பிடிக்க
பெரும் ஓசை எழுப்பி
ஓடுகிறாள் மாயா
வழக்கமான பதற்றம் இன்றி
அவை பறந்துவிட
பிடிக்க இயலாத தன்
பிஞ்சு கரத்தை மூடி
சிறிதிலும் சிறிதான
அதன் துவாரத்தில்
ஒற்றைக் கண்ணால் பார்க்கிறாள்.
(Visited 56 times, 1 visits today)
கண்ணபிரான் தனது நேர்காணலில் மிகவும் பாராட்டி சொன்ன கவிதை இது. வெகு இயல்பாக மனதோடு பேசுகிறது.