எதிர்முகம் நேர்காணல்

நேர்காணல் 01கடந்த ஆண்டு (2018) நவம்பர் மாதம், இணைய தொலைக்காட்சியான தமிழ் மலேசியா தொலைக்காட்சியில் ‘எதிர்முகம்’ எனும் அங்கத்திற்காக என்னை நேர்காணல் செய்தார்கள். சமூக வலைத்தளங்களிலும் இலக்கிய வட்டங்களிலும் வல்லினம் மற்றும் என்னைக்குறித்த சர்ச்சைகள் தொடர்பான கேள்விகளுடன் K.P ஜோன் இந்த நேர்காணலை சிறப்பாகவே முன்னெடுத்தார். அதன் எழுத்து வடிவம் இது. எடிட்டிங்கில் நீக்கப்பட்ட சில பகுதிகளையும் இணைத்துள்ளேன். சிலவற்றை நீக்கியும் உள்ளேன். சில பதில்களை எழுத்து வடிவத்திற்கு ஏற்ப விரிவாக்கியுள்ளேன். இது கடந்த ஆண்டு எடுக்கப்பட்டதால் அண்மையச் சூழல்கள் குறித்து பேசியிருக்க மாட்டேன். தமிழ் மலேசியா தொலைக்காட்சிக்கு நன்றி

கேள்வி: வல்லினம் என்பது ம.நவீன் என்ற ஒரு தனி நபருடையதா அல்லது ஒரு குழுவினருடையதா?

ம.நவீன் : ஒரு வேளை இந்தக் கேள்வி பத்து ஆண்டுகளுக்கு முன்பு கேட்கப்பட்டிருந்தால் வல்லினம் என்ற ஒரு இலக்கிய இதழை நடத்துவதற்கு அவசியமான கே.டி.என் என்னுடைய பெயரில் இருந்தது; எனவே அதன் அடிப்படையில் வல்லினம் என்பது என்னுடையது என பதில் சொல்லி இருக்கலாம். அதுவே ஒரு  எட்டு வருடத்திற்கு முன்பு கேட்டீர்களென்றால் வல்லினம் என்பது ஒரு பதிப்பகம். அதற்கெனவும் உரிமம் வேண்டும். அது என்னுடைய பெயரில் இருப்பதால் அதுவும் என்னுடையது எனக் கூறி இருக்க முடியும். ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் வல்லினத்தின் போக்கு முற்றிலும் மாறி மலேசிய இலக்கியத்தை முன்னெடுத்துச் செல்லும் ஒரு வாகனமாக இருக்கிறது. இந்தப் பயணத்தில் அந்த நோக்கத்தோடு உடன்பட்டு செயல்படக்கூடிய நண்பர்கள் பலர் உள்ளனர். எனவே, தற்போது வல்லினம் என்பது நவீனுக்குச் சொந்தமானது அல்ல. ஒரு நோக்கத்தை அல்லது ஒரு செயல்திட்டத்தை அடிப்படையாகக்கொண்டு செயல்படும்போது அது ஒரு தனி நபருக்குச் சொந்தமாக இருப்பதற்கு வாய்ப்பில்லை. எனவே, வல்லினம் என்பது ஒரு காலகட்டத்துக்குப் பிறகு நிறுவன அடையாளத்தை நீக்கி ஒரு குழுவிற்குச் சொந்தமானதாகவே தன்னைத்தானே உருமாற்றிக்கொண்டுள்ளது. அந்தக் குழுவில் சிலர் இணைந்து சில நோக்கங்களை ஒட்டி செயல்படுகிறோம்.

கேள்வி: வல்லினம் என்பது ஒரு குழு என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால், இங்கு தனி நபரான  நவீன் என்பவர் வல்லினத்தில் இருந்து கொண்டேதான் இருக்கிறார். ஆனால், அந்தக் குழுவினர் என்று சொல்லக்கூடியவர்கள் பல விமர்சனங்களை வைத்துவிட்டு வல்லினத்திலிருந்து வெளியே சென்றுகொண்டே இருக்கிறார்கள். அது ஏன்?

ம.நவீன்: மீண்டும் தெளிவாகச் சொல்லவேண்டுமானால் வல்லினம் பதிவு செய்யப்பட்ட ஓர் இயக்கமல்ல. இயக்கத்தில்தான் வெளியேறுவதும் இணைவதும் நடக்கும். அதற்கான சட்டதிட்டங்களும் இருக்கும். வல்லினத்தில் இணைவது என்பது படைப்பிலக்கிய ரீதியாகவும் அதன் செயல்பாட்டிலும் தன்னை இணைத்துக்கொள்வதுதான். வெளியேறுவதாகச் சொல்பவர்கள் அவ்விரு பங்களிப்பையும் இனி வழங்கமாட்டோம் எனச் சொல்வதாக எடுத்துக்கொள்ளலாம். அவ்வகையில் நான் தொடர்ந்து வல்லினம் வழி எனது படைப்பு ரீதியான பங்களிப்பையும் செயல்பாட்டுக்கான உழைப்பையும் தருகிறேன். அப்படித் தர இணங்காதவர்கள் விலகிவிடுகிறார்கள். இது அவரவர் தேர்வைப் பொறுத்தது. யாரையும் நாம் வற்புறுத்த முடியாது அல்லவா?

ஆனால் வல்லினத்தில் எனக்கென சில பொறுப்புகள் உள்ளன. வல்லினம் இதழுக்கு படைப்புகள் வழங்குவதற்கு அப்பாற்பட்ட பொறுப்புகள் அவை. மற்றவர்களுக்கும் அவ்வாறான பொறுப்புகள் உள்ளன. குறைவான ஆள்பலம் என்பதால் அவரவர் பொறுப்பைக் கவனமாக செய்ய வேண்டியுள்ளது. அந்த வகையில் நான் என் பொறுப்புகளைக் கண்டிப்புடன் செய்கிறேன். காலம் தவறாமை, படைப்புகளின் தரத்தில் சமரசமின்மை போன்ற நிலைபாடுகளோடு செயல்படுவதால் மனவருத்தங்கள் வருவதும் உண்டு. ஆனால் இவை என் தனி அடையாளத்துக்கான முயற்சிகள் அல்ல. வல்லினம் தன் தரத்தில் இருந்தும் நோக்கத்தில் இருந்தும் விலகிவிடக்கூடாது என்னும் கவனத்தினால் வருவது.

கேள்வி: அப்படி பங்களிப்பைத் தரமாட்டேன் எனச்சொல்லக் காரணம் ஏதேனும் இருக்குமென கருதுகிறீர்களா?

ம.நவீன்: அடிப்படையில் சிந்திக்கத் தெரிந்தவர்களே வல்லினத்தில் வந்து இணைய முடியும். இலக்கியம் குறித்த ஒரு தெளிவான பார்வையோ அல்லது பிற கலைவடிவங்கள் குறித்த தீவிரமான ஈடுபாடோ உள்ளவர்களுக்குத்தான் வல்லினத்தில் இணைந்து செயல்படலாமென்ற எண்ணமே முதலில் தோன்றும். சிந்தனை எங்கே இருக்கிறதோ அங்கே முரண்பாடுகள் இருக்கும். ஒருவன் சொல்வதைக்கேட்டு அவனது பின்னால் போகக்கூடிய ஆட்டு மந்தைகளாக சிந்தனையற்றவர்கள்தான் இருப்பார்கள். எனவே, சிந்தனை இருப்பவர்களுக்கு மத்தியில் முரண்பாடுகள் நடந்து கொண்டேதானிருக்கும். வல்லினத்தில் அதுதான் நடந்தது.

இப்படி மாற்றுக்கருத்துகளால் பிரிந்து சென்றவர்கள் ஒரு சிலரே. இதுதவிர அடையாளச் சிக்கல்களால் பிரிந்தவர்களும் உண்டு. ஒரு குழுவில் இருக்கும்போது தனக்கான அடையாளம் பாதிக்கப்படுமோ என்ற பதற்றம் சிலருக்கு இருக்கும். இதை நான் தவறெனக் கூறமாட்டேன். எல்லா இளம் படைப்பாளிகளுக்கும் உள்ள ஒரு சிக்கல்தான் இது. நான் யார்? என்னுடைய தனித்த அடையாளமென்ன? என்ற கேள்விகளிருப்பது இயல்பான விஷயம்தான். வல்லினத்தில் இணைந்திருப்பதால் தன் தனித்த அடையாளம் பாதிக்கப்படும் என நினைப்பவர்கள் பிரிந்து செல்வதுண்டு.

மூன்றாவது தரப்பு என ஒன்று உண்டு. அவர்கள் தங்கள் அளவில் பலவீனமானவர்கள் என அறிந்தவர்கள். அதைச் சமன் செய்ய உற்சாகத்தோடு வந்து இணைவார்கள். வெகுவிரைவில் இங்கு ஒட்ட முடியாமல் பிரிந்துசெல்வார்கள். காரணம் வல்லினம் குழுவுடன் இணைந்துகொள்வதாகச் சொல்பவர்களிடம் தொடர்ந்து படைப்புகள் வழங்க வலியுறுத்தப்படும். எழுத்தாளன் சாவகாசமானவன், அவனை கட்டாயப்படுத்த முடியாது என்ற மொண்ணைப் பேச்சுக்கெல்லாம் இங்கே இடமில்லை. ஆறு மாதங்கள் உருப்படியாக ஒன்றுமே எழுதாமல் எழுத்தாளனாக உலவுவதையெல்லாம் வல்லினத்தில் அனுமதிப்பதில்லை. இவர்களுக்கு முகநூல் போதுமானது. அதில்தான் அவ்வப்போது வாசித்துக்கொண்டிருக்கும் புத்தகம் என ஒரு நூலின் அட்டையைப் போட்டு லைக் வாங்கலாம், யாரோ எழுதிய புத்தகத்தின் சாரத்தைச் சுருக்கமாகப் போட்டு தன்னை ஒரு வாசகராக நிறுவலாம், ஏதாவது ஓர் அரசியலைப் பிடித்துக்கொண்டு அது சார்ந்த குழுவுடன் இணைந்து ஊர் ஊராகச் சுற்றலாம், அதன் வழி ஊடக நபர்களின் நட்பைப் பெற்று தன்னை அடையாளப்படுத்தலாம், அவ்வப்போது சில புரட்சி கோஷங்களை எழுப்பி கவனப்படுத்திக்கொண்டே இருக்கலாம். வல்லினத்தில் அதற்கு இடமில்லாததால் அவர்களாகவே கால ஓட்டத்தில் விலகிச்செல்லும் நிலை ஏற்படுவதுண்டு.

மாற்றுக் கருத்து இருந்தாலும் அந்த மாற்று கருத்துகளுக்குள் இருக்கின்ற ஒற்றுமையைப் பிடித்துக் கொண்டுதான் மலேசிய இலக்கியத்தை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்திச் செல்ல வேண்டும். ஒரு நோக்கத்தோடு மலேசிய நவீன இலக்கியத்தை, வளர்க்க வேண்டுமென்ற ஒன்றுபட்ட ஒரு நோக்கத்தைப் பிடித்துக்கொண்டு  செயல்படக்கூடிய நண்பர்கள்தான் தற்போது வல்லினத்தில் உள்ளனர்.

கேள்வி: வல்லினத்தின் செயல்பாடுகள் ஒவ்வொன்றுமே நவீன் என்ற தனி நபருக்கே பெயரெடுத்துத் தருகின்றன என்ற எண்ணம் அக்குழுவில் இயங்கும் பலருக்கும் இருக்கலாமென நான் கருதுகிறேன். இதையொட்டிய உங்களின் கருத்து என்ன?

ம.நவீன்: ஒவ்வொரு தனி மனிதனின் மன  ஓட்டத்தையும் என்னால் கணிப்பது இயலாது. ஆனால் பொதுவான ஒரு விஷயத்தை சொல்லலாமென நினைக்கிறேன். விஷ்ணுபுர இலக்கிய வட்டம் என்பது தமிழ்நாட்டில் ஜெயமோகனை அடிப்படையாக வைத்து இயங்கக்கூடிய ஓர் இயக்கம். ஜெயமோகன் தமிழ் நவீன இலக்கியத்தில் மிக பெரிய ஆளுமை. அந்த ஆளுமைக்குக் கீழ் இணையக்கூடிய இளம் படைப்பாளிகள் பலர்.  அதில் சுனில் கிருஷ்ணனும் இருக்கிறார். அவருடைய ‘அம்புப்படுக்கை’ என்ற சிறுகதை தொகுப்புக்கு அண்மையில் யுவபுரஷ்கர் விருது கிடைத்தது. அது ஒரு இந்திய தேசிய விருது. இங்கு சுனில் கிருஷ்ணன் என்ற ஒரு படைப்பாளி ஜெயமோகனுடைய இலக்கிய வட்டத்தில் இருப்பதால் தன்னுடைய அடையாளம் பாதிக்கப்படுமென நினைக்கவில்லை. அவர் அவ்வாறு நினைக்காததற்குக் காரணம் அவர் ஒரு சிறுகதைப் படைப்பாளி மட்டுமல்ல, அவர் ஒரு வளைத்தளம் நடத்துகிறார், அது போலவே பல புதிய படைப்பாளிகளை அறிமுகப்படுத்த முயற்சி செய்கிறார், அவர்களை நேர்காணல்கள் செய்கிறார், ஓர் இலக்கிய இயக்கமாக செயல்பட முயற்சி செய்கிறார். எனவே, யார் ஒருவர் தொடர்ந்து செயல்படுகிறாரோ அவருக்குத் தன் ஆளுமை மீது நம்பிக்கை இருக்கும். இந்தக் கூட்டத்தில் காணாமல் போய்விடுவோம் என்ற பயமிருக்காது. அதன் அடிப்படையில் வல்லினமென்றால் நவீன் மட்டும்தானா என்றால் இல்லை என்பதற்கு உதாரணமாக வல்லினக் குழுவில் உள்ள பாண்டியனைக் குறிப்பிட முடியும். இன்று மலேசியாவில் சிறந்த கட்டுரையாளராக, எழுத்தாளராக அவரை அடையாளப்படுத்தக்கூடிய வண்ணம் அவர் தன்னை வளர்த்திருக்கிறார். அவர் தனது வளைத்தளத்தில் தொடர்ந்து எழுதி வருகிறார். அவருடைய இரண்டு தொகுப்புகள் வெளிவந்துள்ளன. மூன்றாவதாக நாவல் வெளியிடப்படவுள்ளது. அதே போல விஜயலட்சுமியையும் குறிப்பிட வேண்டும். ஒரு கட்டுரை நூல், ஒரு மொழிபெயர்ப்பு நூல் என இரண்டு புத்தகங்களை வெளியிட்டுள்ளார். ‘சடக்கு’ எனும் இணையத்தளத்தை முன்னெடுத்துச்செல்கிறார். எனவே, ஒரு குழுவில் இருப்பதால் தன்னுடைய அடையாளம் தொலையக்கூடுமென சொல்பவர்கள் உண்மையில் உழைக்கத் தயங்குபவர்கள். இலக்கியத்தில் தீவிரமாக உழைப்பவர்கள் எங்கு இருந்தாலுமே தன்னுடைய உழைப்பின் மூலமாக தன்னுடைய அடையாளத்தைத் தக்க வைத்துக்கொள்வார்கள்.

கேள்வி: அப்படியானால் வல்லினத்தை விட்டுச் சென்றவர்கள் அனைவருமே எந்த உழைப்பும் போடாதவர்களென சொல்ல வருகிறீர்களா?

ம.நவீன்: ஒரு தரப்பு, நீங்கள் சொல்வதைப் போலவே உழைப்பைப் போடாதவர்கள்தான்.நேர்காணல் 01 படைப்பிலக்கிய உந்துதல் தீர்ந்த பிறகு, கவனத்தைக் கோருவதற்கு மட்டுமே அவர்களின் செயல்பாடுகள் இருப்பதைக் காணலாம். வேறொன்றும் செய்ய முடியாதபோது சட்டென்று ஒரு போராளியாக மாறி தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு  எல்லாவற்றிற்கும்  போர்க்கொடி பிடிப்பவர்களாக தங்கள் அத்தியாயங்களைத் தொடங்குவதுண்டு. உலகில் பிற நாடுகளிலும் அவ்வாறு படைப்பு வரட்சி கொண்டவர்கள் இருப்பதால் அவர்களெல்லாம் நாளடைவில் ஒன்றிணைந்து ஒரு சிறு கும்பல் ஆகிறார்கள். இவர்களால் இலக்கிய முயற்சிகள் என ஒன்றும் பெரிதாக வராது. அப்படிபட்டவர்கள்  வல்லினத்தைவிட்டு வெளியேர வேண்டுமென நான் மனதார விரும்பியதுண்டு. குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பெருமைகொள்ள வல்லினம் ஒரு போதும் விரும்பியதில்லை. இலக்கியம் வாசிப்பவர்கள், எழுதுபவர்கள் இவை இரண்டு தகுதிகளும் இல்லாதவர்கள் வல்லினத்தில் இருப்பதை நான் விரும்பியதில்லை. குழுவினரின் எண்ணிக்கையைக் காட்டிலும் தரத்திற்கே வல்லினம் முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளது. ஆனால், வல்லினத்தவிட்டு வெளியேறிய பின்பு இலக்கியத்தில் தீவிரமாக செயல்படக்கூடிய மற்றுமொரு தரப்பினரும் இருக்கவே செய்துள்ளனர். அப்படி வெளியேறியவர்களில் சிலர் சுயமாக இணைய இதழை நடத்துகின்றனர். அவர்களின் நோக்கம் என்னவாக இருந்தாலும் இது என்னளவில் பாராட்டக்கூடிய ஒன்றுதான்.

இந்த இரண்டு தரப்புகளையும் சாராத வேறுநிலையிலான மூன்றாவது தரப்பும் இருக்கவே செய்கிறனர். அவர்கள் வல்லினத்தில் இருக்கும்போது பேசக்கூடிய அறங்களையும், நியாயங்களையும், வல்லினத்தை விட்டு வெளியேறிய பின்பு மிக சாதாரணமாக விட்டுக்கொடுத்து விடுகின்றனர். இலக்கியம் சாராதவர்களை, இலக்கிய ஆர்வமல்லாதவர்களை இலக்கிய மேடைகளில் மையப்படுத்தக்கூடாது என்பது வல்லினம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே என்னுடைய முக்கிய கொள்கையாக இருந்திருக்கிறது. ஆனால், வல்லினத்திலிருந்து வெளியேறிய பிறகு ஒரு வருட காலத்திலேயே பதிப்பகம் தொடங்குகின்ற சில நபர்கள்  இலக்கியம் சாராத நபரை மேடையில் நிறுத்துவதும், இலக்கியம் அல்லாத கவிதைகளை பணத்துக்காக புத்தகமாக்குவதுமாக செய்துள்ளனர். இது எனக்கு மிகுந்த வருத்தத்தைக் கொடுக்கின்ற செயல்தான். ஆனால், அதேவேளை இது அவர்கள் தங்களைத் தாங்களே சுய மதிப்பீடு செய்வதற்கு மிக முக்கியமான காலமாக நான் கருதுகிறேன். குழுவோடு இயங்கும்போது மிக உறுதியாகப் பேசக்கூடிய நியாயங்களில் தனித்து இயங்கும்போது எங்கெல்லாம் சறுக்குகிறோமென தங்களைத் தாங்களே ஒரு சுயமதிப்பீட்டு செய்து கொண்டால் சிறப்பாக இருக்கும்

உங்களின் இந்த தொடர்க்  கேள்வியில் ஒரு மறைமுக குற்றச்சாட்டு உள்ளது. வல்லினம் மூலமாக நவீன் மட்டும்தான் தெரிகிறார் என்றால் வல்லினத்தில் இருக்கின்ற பிற படைப்பாளிகளின் உழைப்பின் மூலமாக நவீன் தன்னை நிறுவிக்கொள்கிறான் என்றும் அர்த்தம்கொள்ளலாம். உண்மையில் இதுவரை நான் 10 புத்தகங்களை வெளியிட்டுள்ளேன். அந்த ஒவ்வொரு புத்தகமுமே கடும் உழைப்பினால் போடப்பட்டதுதான். இரண்டு சிறுகதை தொகுப்புகள், இரண்டு கவிதை தொகுப்புகள், இரண்டு பத்தி தொகுப்புகள், உலக இலக்கியங்கள் குறித்த ஒரு புத்தகம், மலேசிய நாவல்கள் குறித்த விமர்சனக் கட்டுரைகள் தொகுப்பு, மலேசியா சிங்கப்பூரில் இருக்கின்ற முக்கியமான ஆளுமைகளின் நேர்காணல் தொகுப்பு, குழந்தைகளின் உளவியல் குறித்த ஒரு தொகுப்பு என அவை வெளிவந்துள்ளன. இப்படி பல்வேறு தொகுப்புகளை வெளியிட நான் தொடர்ந்து செயல்பட்டுள்ளேன். இதைத் தவிர்த்து இதுவரை மலேசிய சிங்கபூரிலுள்ள 15 ஆளுமைகளை ஆவணப் படங்கள் வழி  ஆவணப்படுத்தியுமுள்ளேன். எந்த உழைப்பையுமே போடாமல் யாரோ ஒருவரின் உழைப்பின் மூலமாக நவீன் தன்னை அடையாளப்படுத்திக்கொள்வதாக ஒரு குற்றச்சாட்டுத் தோரணையில் இந்தக் கேள்வி இருப்பதாகவே நான் புரிந்துகொள்கிறேன்.

கேள்வி: நீங்களோ அல்லது உங்கள் குழுவினரோ முன்னெடுத்துச் செல்லக்கூடிய இலக்கியங்கள் பலருக்குப் புரிவதில்லை என்ற ஒரு குற்றச் சாட்டும் உள்ளது. அதைப் பற்றிய உங்களின் கருத்து என்ன?

ம.நவீன்: ஒரு கலைவடிவத்தை விளங்கிக்கொள்ளக்கூடிய ஒருவரால் இந்தக் கேள்வியைக் கேட்க இயலாது. தமிழ்ச் சூழலிலும் சரி, உலக இலக்கியங்களிலும் சரி, இலக்கியப் புரிதல் குறித்தும் கலைத்தன்மை குறித்தும் தொடர்ச்சியாகப் பேசப்பட்டே வருகிறது. எந்த ஒரு கலைவடிவத்தையும் விளங்கிக்கொள்வதற்கான பயிற்சி மிக முக்கியம். ஓர் உதாரணம், தினமும் நம் வீட்டில் வண்ணங்களைப் பார்ப்பதாலும், வண்ணங்கள் நமக்குப் பரிட்சயம் என்பதாலும் மட்டுமே எங்கோ உள்ள ஒரு ஓவியக் கண்காட்சியில் இருக்கும் நவீன ஓவியங்கள் நமக்கு புரிய வேண்டுமென்பது அவசியமில்லை. வண்ணங்கள் புரிகிறதே, ஓவியங்கள் ஏன் புரியவில்லை எனக் கேட்பதும் நியாயமற்றது. அதேபோல சத்தங்கள் நமக்குப் புரிவதால் மட்டுமே ஒரு இசையை விளங்கிக்கொள்ள முடியுமெனச் சொல்ல முடியாது. அதேபோலதான் இலக்கியமும். மொழி புரிவதால் மட்டுமே இலக்கியமும் புரிய வேண்டும் என்ற அவசியம் நிச்சயமாக இல்லை. எனவே, இதைப் புரிந்துகொள்வதற்கான தனித்த பயிற்சிகள் அவசியப்படுகிறது. இலக்கியம் என்பது மொழிக்குள் செயல்படக்கூடிய இன்னொரு மொழி. மீ மொழி (meta language). மொழியைக் கொண்டு உருவாக்கப்படுகின்ற ஒரு கலை வடிவம்தான் அது. ஆனால், நாம் நம்முடைய தினசரி வாழ்வில் கட்டுரை எழுத, வாசிக்க, என பல விடயங்களுக்கு மொழியைப் பயன்படுத்துவதாலேயே ஒரு மொழி நமக்குப் புரிகிறது என்ற எண்ணம் நமக்குள் வலுவாக வந்துவிடுகிறது. இந்தப் புரிதலின் அடிப்படையிலேயே இந்த மொழியால் உருவாக்கப்பட்ட ஒரு கலைவடிவமும் நமக்குக் கட்டாயம் புரியுமென ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறோம். ஆனால், அது புரியாமல் போகும்போது நமக்குக் கோபம் வருகிறது.  இந்த மொழியை வாசிக்க முடிந்த எனக்கு இந்த மொழியில் எழுத முடிந்த எனக்கு ஏன் நவீன சிறுகதையை விளங்கிக்கொள்ள முடியவில்லை என்ற கேள்வியும் வருகிறது. எனவே, உனக்கு எல்லா வண்ணங்களின் பெயரும் தெரிகிறது, ஆனால் ஏன் உன்னால் ஒரு நவீன ஓவியத்தை விளங்கிக்கொள்ள முடியவில்லை என்ற கேள்விதான் நான் கேட்கும் பதில் கேள்வியாக இருக்கும். இந்த ஒரு வேறுபாட்டை விளங்கிக்கொள்வதால் மட்டுமே இலக்கியத்தை அறிய, மொழி ஆற்றல் மட்டுமே அவசியமல்ல என்பதை உணர முடியும்.

கேள்வி: எழுத்தாளர் மு.வரதராசன் போன்ற பல எழுத்தாளருடைய எழுத்துகள் பலருக்கும் புரியும்படியே இருந்துள்ளன. அந்த வகையில் ஏன் உங்களின் எழுத்துகள் மட்டும் அவ்வாறு இல்லாமல் இருக்கிறது?

ம.நவீன்: இந்தக் கேள்வி என்னை நோக்கி மட்டும் வைக்கக்கூடிய கேள்வி அல்ல. நவீன எழுத்தாளர் அனைவருக்குமான கேள்விதான் இது. மிகவும் பிரபலமான கேள்வியும்கூட. எனக்கு அகிலனை, நா.பார்த்தசாரதியைப் புரிகிறது. ஆனால் இன்றைய எழுத்தாளர்களைப் புரியவில்லையே என்றால், என்னிடம் அதற்கு மறு கேள்வி ஒன்று உள்ளது. தமிழ் இலக்கியம் தோன்றிய இரண்டாயிரம் ஆண்டு காலகட்டத்தில் எழுதப்பட்ட சங்கக் கவிதை உங்களுக்குப் புரிந்ததா? அதற்குப் பிறகு வந்த திருக்குறள் உங்களுக்குப் புரிந்ததா? அல்லது அதற்குப் பிறகு வந்த பக்தி இலக்கியம் உங்களுக்குப் புரிந்ததா? புதுமைப்பித்தனை உங்களுக்குப் புரிந்ததா? அல்லது அதற்குப் பிறகு வந்த நவீன படைப்பாளிகளை உங்களுக்குப் புரிந்ததா எனக் கேட்டால் யாரிடமிருந்தும் பதில்கள் வரப்போவதில்லை. காரணம் மேலே நான் கூறிய எதையுமே அவர்கள் வாசித்திருப்பதில்லை. மு.வாவையும், கல்கியையும், அகிலனையும் எனக்குப் புரிகிறது என இவர்கள் மீண்டும் மீண்டும் கூறுவதற்குக் காரணம் இந்தப் படைப்பாளிகளில் சிலர் கல்விக்கூடங்களில் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள். மாணவர்களுக்குப் புரிய வேண்டுமென்ற நோக்கத்தின் அடிப்படியில் எளிமையான இலக்கிய வடிவமே கல்விக்கூடங்களில் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இரண்டாவதாக இதிலிருக்கும் இன்னும் சிலர் ஜனரஞ்சக படைப்பாளிகள். மக்களை எளிதாகச் சென்றடைய, அவர்களின் சுவாரசியத்துக்காக எழுதிய படைப்பாளிகள். ஒரு நீண்ட நெடிய இலக்கிய வரிசை தமிழில் இருக்கும்போது இதை எதையுமே படிக்காத ஒருவன், குறுகிய ஒரு காலகட்டத்தை மட்டுமே வாசித்துவிட்டு எனக்கு இதெல்லாம் புரிகிறதென சொன்னால் அவனைப் பார்த்து என்னால் நகைக்க மட்டுமே முடியும்.

கேள்வி: நான் உங்களிடம் வைத்த இந்தக் குற்றச் சாற்றுகள் எல்லாமே, உங்கள் வாசகர்களிடமிருந்து பெறப்பட்டதுதான். எனவே, நீங்கள் உங்கள் வாசகர்களுக்கு புரியும்படி எழுத விரும்பிகிறீர்களா அல்லது உங்களுக்கு நீங்களே எழுதிக்கொள்கிறீர்களா?

ம.நவீன்: சாலையோரமாக கொய்தியாவ் பிரட்டி விற்பவன் ஒருவன் 20 வருடங்களாக சுவை குன்றாமால் ஒரே சுவையுடன் பிரட்டிக்கொண்டிருக்கிறான். தன்னுடைய வாடிக்கையாளனை எந்தக் காலத்திலும் இழந்துவிடக்கூடாது என்பதுதான் அவனது ஒரே நோக்கம். இதைத்தான் நாம் நுகர்பொருள் என்கிறோம். நுகர்பவனுக்காக உற்பத்தி செய்யக்கூடிய பண்டம் நுகர்வு கலாச்சாரத்தை சார்ந்தது. இலக்கியத்திலும் அப்படி உண்டு. அதை நாம் வணிக இலக்கிய என்கிறோம். ஒரு வாசகனைக் கவர்வது மட்டுமே வணிக இலக்கியத்தின் முதன்மை நோக்கமாக உள்ளது. உதாரணத்திற்கு ராஜேஷ்குமார் கதையைச் சொல்லாம். வாசகனை முதல் பத்தியிலேயே கவர்ந்து தன் வசம் வைத்துக்கொள்வதுதான் ஒரு வணிக இலக்கியத்தின் நோக்கம். பிறகு அவனது ரசனைக்குத் தேவையான படைப்பை இயந்திரம்போல உற்பத்தி செய்கிறான். அதன் வழி ஒரு படைப்பாளன் தன் வாசகனைத் தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்கிறான். ராஜேஷ்குமாரின் 50 நாவல்களை தமிழ்வாணனின் 50 நாவல்களை வாசித்துள்ளதாகப் பெருமையாக சில வாசகர்கள் சொல்லிக்கொள்வதுண்டு. ஆனால், அதை வாசிப்பதன் மூலமாக அவர்கள் தங்களது சுவாரசியத் தேவைக்குத் தீனி போட்டுக்கொள்கிறார்கள் என்பது மட்டுமே என்னுடைய அபிப்பிராயம். ரசனைக்குத் தீனிபோடக்கூடிய ஒரு திட்டவட்டமான அமைப்புதான் அந்த நாவல்கள். இது, இவர்கள் ஒரு நுகர்வு கலாச்சாரத்துக்கு அடிமையாகி இருப்பதைக் காட்டுகிறது.

ஆனால், ஒரு தீவிரமான படைப்பாளி என்பவன் தன்னுடைய வாசகனை ஒரு நுகர்வு கலாச்சரத்துக்கு அடிமையாக்க மாட்டான். அவன் வாசகனின் சிந்தனை எல்லைகளை விரிவாக்கி வாசகனுக்கு ஏற்கனவே வாழ்வு குறித்து இருந்த முன்முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வைப்பான். அவனுடைய எண்ணங்களைக் கலைத்துப்போடுவான். அவன் நம்பக்கூடிய அறத்தை நோக்கி கேள்விகள் எழுப்புவான். அவன் கடைப்பிடிக்கும் விழுமியங்களை அசைத்துப் பார்ப்பான். புதிய நியாயங்களைச் சொல்வான். புதிய தார்மீகத்தை சொல்வான். அதற்கு முன் தன் வாசகனுக்கு இருந்த எல்லா விதமான மன கட்டமைப்புகளையும் உடைத்து மீள் கட்டமைப்பு செய்வான். இது ஒரு நவீன படைப்பாளி அல்லது தீவிர படைப்பாளிக்கு இருக்கின்ற திறன் என்று சொல்லாம். எனவே, ஒரு தீவிர படைப்பாளி தன் வாசகனைத் தக்க வைத்துக்கொள்ள முயற்சி செய்யாமல் புதிய எல்லைகளைத் தொட முயல்வது போலவே நானும் எனது படைப்புகளின் மூலம் புதிய எல்லைகளைத் தொட முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். இந்தப பயணத்தில் என்னுடைய வாசகன் என்னைப் பின்தொடர்ந்தே ஆகவேண்டுமென்ற எண்ணம் எனக்கு இல்லை. நான் எழுதும் கணமே முழுமையுள்ளவனாக ஆகிறேன். அதேபோல வாசகர்களின் எண்ணிக்கையை வைத்துதான் ஒரு சிறந்த படைப்பாளனை நிர்ணயிக்க முடியுமென்ற குறுகிய சிந்தனையும் என்னிடமில்லை.

கேள்வி: வல்லினம் நடத்தும் போட்டிகளில் உங்களுக்குப் பிடித்தவர்களை மட்டும் வெற்றியாளர்களாகத் தெரிவு செய்கிறீர்களென்று இலக்கிய ஊழல் குற்றச்சாட்டு உங்கள் மீது உள்ளது. அதேபோல வல்லினம் போட்டிக்கு வந்த படைப்புகளைத் திருத்தச் சொல்கிறது என்றும் பரவலாகப் பேசப்படுகிறது. இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ம.நவீன்: இலக்கிய ஊழல் என்பது மிகப்பெரிய வார்த்தைதான். ஆனால், இதற்குச் சரியான பதில் தருவது முக்கியமென நான் நினைக்கிறேன். வல்லினம் இப்போழுது நடத்தக்கூடிய குறுநாவல் பதிப்புத் திட்டத்தையும் அடுத்து நடத்தவிருக்கும் ஆசிரியர்களுக்கான சிறுகதைப் போட்டியையும் சேர்த்து இதுவரை 4 போட்டிகளை நடத்தியுள்ளது. வல்லினம் தனக்கு வேண்டியவர்களுக்குப் பரிசு கொடுக்கிறது என்பது உங்களுடைய முதல் குற்றச்சாட்டு. இந்தக் குற்றச்சாட்டை நான் ஆதாரத்துடன் மறுக்க வேண்டியுள்ளது.

முதல் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசைப் பெற்ற செல்வன் காசிலிங்கம் என்ற படைப்பாளி அப்பொழுதுதான் முதல் படைப்பை வல்லினத்திற்கு வழங்கியுள்ளார். அதற்கு முன்னர் அவரது எந்த படைப்புமே வல்லினத்தில் வெளியிடப்பட்டதில்லை. இந்தத் தகவலை நீங்கள் ஆராய்ச்சி செய்து வேண்டுமானாலும் உறுதி செய்துகொள்ளலாம். போட்டிக்கென்று எழுதிய ஒருவருக்கு நியாயமான முறையிலேயே அந்தப் பரிசு வழங்கப்பட்டது. அதே போல இரண்டாவதாக நடத்தப்பட்ட போட்டியில் எஸ்.பி.பாமாவுக்கு முதல் பரிசு கிடைத்தது. இதிலும் வல்லினத்துக்கு வழக்கமாக எழுதக்கூடிய ஒரு படைப்பாளிக்கு அந்தப் பரிசு வழங்கப்படவில்லை என்பதை ஆய்ந்து அறியலாம். அதற்கு முன் அவர் படைப்பு ஒன்றுகூட வல்லினத்தில் பிரசுரமானதில்லை.

வல்லினம் படைப்புகளைத் திருத்தச் சொல்கிறது என்பது இரண்டாவது குற்றச்சாட்டு. இந்தக் குற்றச்சாட்டை மறுப்பதற்கு முன்னதாக வல்லினம் நடத்திய போட்டிகளுக்கு இடையேயான வேறுபாட்டை சொல்ல வேண்டிய அவசியம் உள்ளது. முதலில் நடத்தப்பட்டது ஒரு சிறுகதைப் போட்டி. சடங்காக ஒரு போட்டி எப்படி நடத்தப்படுமோ அவ்விதமே நடத்தப்பட்டது. ஆனால், இரண்டாவதாக நடத்தப்பட்டது சற்று வேறுபடானது. அது ‘வல்லினம் படைப்புப் போட்டி’ என்றே அறிவிக்கப்பட்டது. வல்லினத்துக்கான படைப்புகளை அதிகரிப்பதற்கான திட்டம்தான் இது. அப்படி வல்லினத்துக்கு அனுப்பப்படும் படைப்புகளை அப்போதைய வல்லின ஆசிரியர் அ.பாண்டியன் முழுமையாக வாசித்துத் தெரிவு செய்வார். அப்படி தெரிவு செய்யப்பட்ட பிறகு அந்தப் படைப்பு பிரசுரிக்கப்படும். பிரசுரிக்கும் முன்பு படைப்புகளைத் திருத்தும் கடமையைத்தான் வல்லினமும் செய்தது. இப்பணி ஒவ்வொரு இதழிலும் நடப்பதுதான். அந்தக் கடமையை அப்போதைய வல்லின அசிரியரான அ.பாண்டியன் செய்தார்.  தகுதியுள்ள ஒரு படைப்பில் இருக்கும் குறைகளைத் சம்பந்தப்பட்ட படைப்பாளியிடம் சொல்லி அவரையே திருத்தச் சொன்னோமே, தவிர நாங்கள் சுயமாக எந்த திருத்தத்தையும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. படைப்பில் இருக்கும் தனிமனித சாடல்கள், அவதூறுகள், ஆங்கிலச் சொல் பயன்பாடு போன்ற குறைகளைச் சுட்டிக்காட்டி அதைச் செறிவுப்படுத்தும் நோக்கிலேயே இந்தத் திருத்த நடவடிக்கைகள் பிரசுரிக்கும் முன் மேற்கொள்ளப்பட்டது. இப்படி சில படிநிலைகளுக்குப் பிறகு பிரசுரமான படைப்புகளே போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டன. அதற்குமேல் அதில் ஆசிரியர் குழுவிடமிருந்து எந்த ஒரு தலையீடும் இருக்காது.

மூன்றாவதாக நடத்தப்பட்டது குறுநாவல் பதிப்புத் திட்டம். இதுவும் போட்டியல்ல என்பதை நான் தெளிவாகவே சொல்லி விடுகிறேன். காரணம் நாம் சடங்காக ஒரு விஷயத்தைப் பல காலமாக நடத்துவதாலேயே நம் மூளை இறுகிப் போயுள்ளது. என்ன சொன்னாலுமே சடங்கான விஷயத்துக்கே நாம் செல்லக்கூடிய மனநிலையில் இருக்கிறோம். எழுதிய நபருக்குத் தங்களது நாவல் உலகிலேயே சிறந்த நாவல் என்ற கற்பனை இருக்கலாம். அது அவரவர் சுதந்திரம் சார்ந்தது. அதை அவர் வேறு எங்கும் வெளியிடவும் செய்யலாம். அதுவும் அவரின் சுதந்திரம் சார்ந்ததே. ஆனால், எங்களிடம் அனுப்பப்படும் நாவல்களை நடுவர் குழுவே வாசித்து அதை வல்லின பதிப்பகத்தில் பதிப்பிக்கலாமா வேண்டாமா என்பதை அதன் தரத்தின் அடிப்படையில் முடிவு செய்யும். இந்தத் திட்டத்தில் எந்தப் பரிசு தொகையும் அறிவிக்கப்படவில்லை. இது முழுக்க முழுக்க குறு நாவல் பதிப்புத் திட்டம் மட்டுமே. எனவே, இதில்  தேர்ந்தெடுத்த  நாவல்களை மட்டுமே பதிப்பிப்போம்.

நான்காவதாக நடத்தப்படவுள்ளதும் சடங்கான ஒரு சிறுகதைப் போட்டிதான். தொடக்கத்தில் நான் கூறியது போலவே இதுவும் ஒரு வழமையான சிறுகதைப்போட்டி. அதன் அடிப்படையில் ஆசிரியர்கள் அனுப்பும் கதைகளில் சிறந்த கதைகளைப் பரிசு கதையாகத் தெரிவு செய்வோம். எனவே, இதை ஊழலென சாடுவதில் அர்த்தமில்லை என நான் கருதுகிறேன்.

கேள்வி: அண்மையில் மா.ராமையா அவர்களை நீங்கள் நேர்காணல் செய்திருந்தீர்கள். மலேசியாவில் வாசிப்புப் பழக்கம் பின்தங்கி உள்ளதாகச் சில குற்றச் சாட்டுகளை அவர் அந்த நேர்காணலில் முன் வைத்தார். அப்படி அவர் வைத்தக் குற்றச் சாட்டுகளுக்கு நீங்கள் ஆதாரம் கேட்கவில்லை. ஆனால் பிறர் எழுதும் கட்டுரையில் தரவுகள், மேற்கோள்கள், ஆதாரங்கள் இல்லையென்றால் அவற்றைக் கடுமையாக விமர்சனம் செய்கிறீர்கள். இது என்ன முரண்?

ம.நவீன்: ஒரு கட்டுரைக்கும் நேர்காணலுக்கும் அடிப்படை வேறுபாடுகூடதெரியாத நிலையில் இந்தக் கேள்வியை என்னிடம் கேட்பது வேடிக்கையாக உள்ளது. இதற்கு ஒரு உதாரணத்தின் மூலமாக நான் சரியான விளக்கத்தை கூற முடியும். வல்லினத்தின் வாசகர் எண்ணிக்கை எவ்வளவு என்று ஒரு வேளை என்னிடம் நீங்கள் இப்போது இந்த நேர்காணலில் கேட்டால் அதற்கு என்னால் வாய்வழியாக மட்டுமே பதில் கூற முடியும். தவிர, வேறு எந்த ஆதாரத்தையும் இங்கு இந்த நேரத்தில் காட்ட முடியாது. காரணம் நான் அதை இங்குக் கொண்டுவரவில்லை. நீங்கள் கேட்கும் கேள்விக்கு என்னால் அதிகபட்சமாக நியாயமான பதிலை நினைவிலிருந்து மட்டும்தான் கூற முடியும்.

ஆனால், ஒரு வேளை நான் வல்லினத்தின் வாசகர் எண்ணிக்கை என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினேன் என்றால் அதில் கடந்த மூன்று மாதங்களில் வல்லினத்தின் வாசகர் பரப்பு அதிகரித்திருப்பதை மிகச் சரியான ஆதாரத்துடன் காட்ட முடியும். அப்படி ஆதாரத்துடன் ஒன்றை முன் வைப்பதே கட்டுரையின் தன்மையாகவும் உள்ளது. எனவே, ஒரு நேர்காணலின் தன்மையும் கட்டுரையும் தன்மையும் வெவ்வேறாவை.

ஒவ்வொரு எழுத்துக்கும், படைப்புக்குமான தன்மைகள் வெவ்வேறாகவே இருக்கிறது. எனவே, நேர்காணல் என்பது அது நடக்கும் சமயத்தில் ஒருவனின் மனதில் என்னென்ன தோன்றுகிறதோ, அவனுக்கு என்ன தெரியுமே, அவனது அனுபவங்கள் எதைச் சார்ந்ததோ அதை ஒட்டியே அவனது பதில்கள் இருக்கும். நான் விமர்சிப்பது உழைக்கத் தயங்கும் சோம்பேறிகள் ஓர் அறிவுத்துறையைப் பற்றி ஊகத்தில் எழுதும் குப்பைகள் பற்றியது. அந்தக் குப்பைகளை உண்மையென இளம் தலைமுறையினர் நம்பிவிடக்கூடாது என்ற அக்கறையில் அதைச் சுட்டிக்காட்டுகிறேன். இந்த அறியாமையைப் போக்குவதற்காக உங்களுடைய தொலைகாட்சியில் நான் பாடம் நடத்த வேண்டுமானால் அதற்கும் நான் தயாராகவே இருக்கிறேன்.

நேர்காணல் 01கேள்வி: வல்லினம் தொடர்ச்சியாகப் பல சர்ச்சைகளை எதிர்நோக்கி வந்துள்ளது. இதில் என்னுடைய கேள்வியானது வல்லினம் சர்ச்சைகளை உருவாக்குகிறதா அல்லது வல்லினம் சர்ச்சைகளைத் தேடிச் செல்கிறதா?

ம.நவீன்: அதற்கு முதலில் சர்ச்சை என்றால் என்ன என்ற தெளிவுக்கு நாம் வருவது அவசியம். பொதுப் புத்தியில் நம்பப்படும் ஒன்றுக்கு மாற்றான ஒரு குரலை எழுப்புவது சர்ச்சை எனப்படுகிறது. அப்படிப் பொதுப் புத்திக்கு மாற்றான ஒரு கருத்தைச் சொல்வதுதான் சமூகத்தில் சிந்திப்பவனின் வேலை. அப்படிச் சொல்பவர்கள் சர்ச்சை செய்பவர்களாகக் கருதப்படுகிறார்கள். இங்கு சர்ச்சை என்பது ஒரு தகாத வார்த்தையோ, தகாத செயலோ அல்ல என்பதை நாம் அறிதல் அவசியம். ஒரு முகமாக எல்லோரும் ஒன்றை ஒரு கோணத்தில் அணுகும்போதும் அவர்களின் பார்வைக்குப் படாமல் அதற்குள்ளிருக்கும் இன்னொன்றை எடுத்துக்கூறும் ஒரு குரல் அறிவுத் தளத்திலிருக்கும் ஒரு குரலாகவே இருக்க முடியும்.

கேள்வி: நான் எதை முன்னிறுத்திக் கேட்கிறேனென்றால் அண்மைய காலமாக நீங்கள் மலேசிய எழுத்தாளர் சங்கத்தின் மீது பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தீர்கள். இந்தச் சூழல் நீங்களே சர்ச்சைகளைத் தேடிப்போவதாக ஒரு எண்ணத்தையே எங்களுக்குத் தருகிறது?

ம.நவீன்:  இதற்கு நான் மூன்று உதாரணங்கள் வழி இந்த விடயத்தை விளக்கலாம் என நினைக்கிறேன். முதலாவது எழுத்தாளர் சங்கத் தலைவர் திரு.ராஜேந்திரன் பதவியில் இருக்கும்போது அவரது மனைவி எழுதிய ‘மலேசிய புதுக்கவிதைகள் தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற கட்டுரைத் தொகுப்புக்கு மாணிக்க வாசகம் விருது கிடைத்தது. ஒவ்வொருவரும் அணுகக்கூடிய படைப்பின் தர அடிப்படை என்பது வேறுபட்டது என்பதால் நான் இந்தத் தொகுப்பின் தரத்தைப் பற்றிப் பேச விரும்பவில்லை. ஆனால், ஒரு இயக்கத்தின் செயற்குழுவில் உள்ளவர்களின் படைப்புகள் ஒரு போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படக்கூடாது என்பது உலகப் பொதுவிதி. இதை நாம் எல்லோருமே கடைப்பித்துக்கொண்டு தானிருக்கிறோம். அதன் அடிப்படையில் எழுத்தாளர் சங்கத் தலைவர் ராஜேந்திரன் அவர்களின் மனைவிக்கு பரிசு கிடைத்தது நியாயமற்றது. மேலும், அதே சமயத்தில், அதே காலகட்டத்தில் ஜானகிராமன் என்ற படைப்பாளி கடந்த 20 ஆண்டுகளாக மலேசிய தமிழர்களின் தோட்டப்புற வாழ்க்கையை ஆராய்ந்து ஒரு ஆவணத் தொகுப்பு நூலை வெளியிட்டிருந்தார். அது மலேசிய தமிழர்களின் இக்கட்டான நிலையைச் சொல்லக்கூடிய மிக முக்கியமான தொகுப்பு. அந்தத் தொகுப்பு நிராகரிக்கப்படுகிறது. எனவே, உலகப் பொதுவில் இருக்கக்கூடிய விதியை மீறி ஒரு சங்கத் தலைவர் தன் மனைவிக்கு ஒரு விருதை வழங்குகிறார். அதைக் கேட்பதற்கு இங்கு யாருமில்லை.

இரண்டாவதாக  எழுத்தாளர் சங்கம் நடத்திய நாவல் போட்டியைத் தொடங்கி வைக்க நடிகர் சேரன் மலேசியாவிற்கு அழைக்கப்பட்டார். அங்குத் திரண்டிருந்த மக்கள் திரளைக் கண்டு அவர்களின் தமிழார்வத்தைப் பாராட்டியுள்ளார். இந்நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்க எழுத்தாளர் சங்கம், தனக்குத் தருவாதாக ஒப்புக்கொண்ட ஒரு லட்சம் ரூபாயை வேண்டாமென்று விட்டுக்கொடுப்பதாக அவர் அந்த நிகழ்ச்சியில் கூறியிருக்கிறார். இது பத்திரிகையில் வெளியிடப்பட்டது. இது மக்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பாராட்டுக்கு மயங்கும் சமூகம்தானே நம்முடையது. எனவே அது பரபரப்பாகப் பேசவும்பட்டது. ஆனால், எழுத்தாளர் சங்கம் தருவதாக ஒப்புக்கொண்ட அந்த ஒரு லட்சம் யாருடையது? எழுத்தாளர் சங்கத்தின் பணமென்றால், அதாவது உறுப்பினரின் எண்ணிக்கையைக் காட்டி அரசாங்கத்திடமிருந்து பெற்ற பணத்தை ஏன் ஒரு நடிகருக்கு ஒரு நிகழ்ச்சியைத் திறந்து வைப்பதற்காக வழங்க வேண்டும். இது ஒரு படைப்பாளியாக என்னுடைய அடிப்படையான கேள்வியாக இருந்தது. இப்படிச் செய்வதால் அவருக்கு ஏதேனும் சுய லாபம் இருக்கிறதா என்று எனக்கு ஏற்பட்ட சந்தேகத்தைதான் முன் வைத்தேன்.

என்னுடைய இன்னொரு குற்றச்சாட்டுமுள்ளது. பத்திரிகைக்கு அனுப்பப்படும் படைப்புகளில்  இவர்களே சிறந்தவற்றைத் தேர்வு செய்து புத்தகமாக்கி விற்கிறார்கள். அந்தப் படைப்பு பத்திரிகையில் வெளியிடப்பட்டதும் பலரது வாசிப்புக்குக் கொண்டு செல்லப்பட்டதும் ஓர் எழுத்தாளர் தனது சுய விருப்பத்தின் பேரில் செய்தது. ஆனால், அதையே ஒரு புத்தகமாக பிரசுக்கும்போது அது ஒரு பண்டமென்றே கொள்ளப்படுகிறது. ஒரு படைப்பு எழுத்தாளனின் விருப்பத்தில் பத்திரிகையில் வருவது என்பது வேறு. அதை அவன் அனுமதி இல்லாமல் தொகுத்து புத்தகமாக்கி விலை போடும்போது அது ஒரு பண்டமாகிறது. எனவே, விற்பனை செய்யப்படும் அந்தப் பண்டத்திற்குள் தனிப்பட்ட எழுத்தாளர்களின் உழைப்பும் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கான ‘ரோயல்டி’ பணம் எங்கே என்பது என்னுடைய கேள்வியாக இருந்தது. இதை நான் கேட்கவில்லை. அந்த நூலில் அனுமதி பெறப்படாமல்  தங்கள் சிறுகதை பிரசுரிக்கப்பட்டதால் சில எழுத்தாளர்கள் கேட்டனர். வல்லினம் அதற்கான களத்தை அமைத்துக்கொடுத்தது. ஆனால், இப்படி அவர்கள் கேட்டதற்குப் பிரதிபலனாக பல மூத்தபடைப்பாளிகளின் கோபத்தையே சம்பாதிக்க முடிந்தது. அதோடு இலக்கிய முன்னெடுப்புகளை நாங்கள் அழிக்க நினைக்கிறோம் என்பதே அவர்களின் குற்றச்சாட்டாக இருந்தது. ஆனால் கொஞ்சம் சரியாக யோசித்தால் உண்மை புரியும். ஒரு படைப்பாளி அவனுக்கான சுய மரியாதையோடு இயங்குவதற்கு அவனுக்கான ‘ரோயல்டி’பணத்தை அது எவ்வளவு சிறிய தொகையாக இருந்தாலும் கூட கொடுக்கலாமென்பதுதான் என்னுடைய வாதமாக இருந்தது.

நன்கு கவனித்தால் சங்கத்தின் இந்தப் போக்குகள் என்னை நேரடியாக பாதிப்பதில்லை. நான் தனிப்பட்ட முறையில் என் நூல்கள் எதையும் எழுத்தாளர் சங்கம் நடத்தும் போட்டிகளுக்கு அனுப்பியதுமில்லை. இத்தனை முரண்பாடுகள் கொண்ட அமைப்பிடம் எந்த விருதுகளும் வாங்கப்போவதில்லை என வெளிப்படையாகவே சொல்லிவருகிறேன். நான் பேசுவது இதனால் பாதிக்கப்படும் பிற எழுத்தாளர்களுக்காக. அவர்கள் ஏமாற்றப்படுவதை உரக்கச் சொல்லிக்கொண்டே இருக்கிறேன். ஆனால், இந்தச் சுரண்டலுக்கெல்லாம் பெரும்பாலான எழுத்தாளர்கள் மத்தியில் எந்த எதிர்ப்புக்குரலும் வராது. இந்தச் சுரணையற்ற தனமே எனக்கு பெரும் சங்கடமாக இருந்தது. ஏதும் மறுத்துப்பேசினால் இனி வரக்கூடிய காலங்களில் சங்கத்தின் சலுகைகள், விருதுகள் எதுவும் கிடைக்காது என்ற கள்ளமௌனம் சாதிக்கும் சந்தர்ப்பவாதிகளுக்கு மத்தியில்தான் நான் என் தரப்பை முன் வைக்கிறேன். அதுதான் சர்ச்சை என்றால் நான் அதைத் தொடர்ந்து செய்யத்தான் போகிறேன்.

கேள்வி: உங்களைப் போன்றவர்கள் கொடுக்கும் நெருக்கடியினால் தாங்கள் நடத்திய போட்டிகளைத் தொடர முடியவில்லை என சங்கத்தின் தலைவர் கூறியுள்ளாரே. இதனால் இலக்கியத்துக்கு இழப்பாகாதா?

ம.நவீன்: ஒருவேளை அரசாங்கம் சாலை வரி கட்டவில்லை என்ற குற்றச்சாட்டில் சங்கத் தலைவருக்கு சம்மன் கொடுத்தால் இனி தான் காரே ஓட்ட மாட்டேன் என முடங்கிக்கொள்வாரா? மாட்டார் அல்லவா? இது அவரது இயலாமை. நோகாமல் நொங்கெடுக்கும் உத்தி எனச் சொல்லலாம். முதலில் எழுத்தாளர் சங்கம் என்பது ஒரு என்.ஜி.ஓ. அதற்கு ஒரு பாரம்பரியம் உண்டு. பல மூத்த எழுத்தாளர்கள் அலங்கரித்த இடம் என்பதால் மட்டுமே அதற்கு இன்று மரியாதை. அந்த மரியாதையின் பொருட்டே பலரும் அதன் உறுப்பினர்களாக உள்ளனர். அவ்வளவு உறுப்பினர்கள் இருப்பதால்தான் அரசு மானியம் கிடைக்கிறது. கொஞ்சம் முயன்றால் யாரும் புதிய எழுத்தாளர் அமைப்பு ஒன்றைப் பதிவு செய்து நடத்தலாம். ஒரு என்.ஜி.ஓவுக்கு எந்த எழுத்தாளர்களின் அனுமதியும் இல்லாமல் நாளிதழ்களில் வந்த சிறுகதைகளைப் பதிப்பிக்க யார் அனுமதி கொடுத்தது. கணக்கிட்டால் அந்தத் தொகுப்பில் வெளிவந்த கதைகளுக்கு மிகக்குறைந்த ராயல்டி தொகையே கிடைக்கும். ஆனால், இது பணம் மட்டும் சம்பந்தப்பட்டதல்ல. உரிமை சம்பந்தப்பட்டது. சேவை என பொய்யுரைத்து யாரும் அனுமதியின்றி பிறர் படைப்புகளைப் பயன்படுத்தக்கூடாது. இந்நிகழ்வு அதற்கான விழிப்புணர்வைக் கொடுத்தது.

கேள்வி : நாளிதழில் வந்த சிறுகதைகள் நூலாக வரவே கூடாது என்கிறீர்களா?

ம.நவீன்: அது அந்தந்த எழுத்தாளரின் ஒப்புதல் சார்ந்தது. உதாரணமாக, வல்லினத்தின் முகப்பிலேயே எங்களுக்கு வரும் படைப்புகளை அச்சு இதழாகக் கொண்டுவரும் உரிமையைப் பற்றிய குறிப்பு ஒன்றைக் கொடுத்திருப்பதைக் கவனித்திருக்கலாம். ஒருவேளை ஒரு எழுத்தாளர் அதற்கு உடன்படவில்லையென்றால் அவர் படைப்பை அனுப்பமாட்டார். அது அந்த எழுத்தாளரின் சுதந்திரம். 2010இல் வெளியிட்ட தொகுப்பிலும் கடந்த ஆண்டு ‘வல்லினம் 100’ களஞ்சியம் தொகுத்தபோதும் அகப்பக்கத்தில் இடம்பெற்ற படைப்புகளை அச்சுக்குக் கொண்டுவந்தபோது ராயல்டி எதுவும் வழங்கவில்லை. அதே சமயம் வல்லினம் அகப்பக்கத்தில் இடம்பெறாத புதிய படைப்புகளுக்குப் பணம் வழங்கினோம். இந்தத் தொகை குறித்த உடன்படிக்கையை படைப்பை வழங்கும் எழுத்தாளரிடம் முன்னமே பேசி முடிவெடுத்தோம். அதேபோல வல்லினம் சிறுகதை போட்டி நடத்தியபோதும் அதன் விதிமுறையில், வென்ற சிறுகதைகள் வல்லினம் பதிப்பகத்திற்கு உரிமையானவை எனத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தோம். இந்த விதிமுறையை விரும்பாத ஒருவர் போட்டிக்குக் கதையை அனுப்பாவிட்டால் அது அவரின் உரிமைதானே. இங்கு யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. அதுபோல சிறுகதைகளைப் பிரசுரிக்கும் நாளிதழ்களே அவற்றைத் தொகுத்து நூலாக்கினால் அது அந்த எழுத்தாளருக்கும் பத்திரிகைக்குமான ஒப்புதல் சார்ந்தது.  ஒரு அரசு சாரா இயக்கத்துக்கு, எழுதியவர்களின் உரிமையின்றி அவற்றைத் தொகுத்து நூலாக்க என்ன உரிமையுண்டு?

கேள்வி : வல்லினத்தைப் பொறுத்தவரை அது தீவிர வாசகர்களுக்கான ஒரு அமைப்பு. ஆனால், எழுத்தாளர் சங்கமென்பது அப்படியல்ல. தேசிய அளவில் இயங்கக்கூடிய ஒரு இயக்கமாக இருக்கிறது. ஆனால் நீங்கள் உங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை அந்த தேசிய ரீதியில் இயங்கும் எழுத்தாளர் சங்கத்தின் மீது  திணிப்பது சரியா?

ம.நவீன்: நான் பொதுத் தளத்தில் சொல்லக்கூடிய கருத்துகள் அனைத்துமே எழுத்து வடிவங்களாக என்னுடைய தனிப்பட்ட இணையத் தளத்திலும், வல்லினத் தளத்திலும் உள்ளது என்பதால் நான் சொல்லக்கூடிய வார்த்தை மாறுவதற்கான வாய்ப்பு இல்லை. இதுவரையில் எந்த இடத்திலுமே நான் வல்லினத்தைப் போல எழுத்தாளர் சங்கம் செயல்பட வேண்டுமெனக் கூறியது கிடையாது. எப்போதுமே நான் கேட்கக்கூடிய கேள்விகள் என்னவென்றால், தேசிய சங்கம் நியாயமாக எதைச் செய்ய வேண்டுமோ அதை அந்த சங்கம் செய்ததா என்பதை மட்டும்தான்.

அந்த வகையில் முதல் கேள்வி, மூன்று மொழிகள் அல்லது இனங்கள் வாழக்கூடிய இந்த நாட்டில் சீன இலக்கியத்திற்கும் தமிழ் இலக்கியத்திற்குமான ஊடாட்டம் நடந்துள்ளதா? அதாவது தமிழ் இலக்கியத்திலிருந்து சீன இலக்கியத்துக்கு படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறதா? அல்லது சீன இலக்கியத்தில் தற்போது என்ன நடக்கிறது என்ற குறைந்தபட்ச அறிதலாவது நம்மிடையே உள்ளதா? அல்லது மலாய் இலக்கியத்தில் என்ன நடக்கிறது என்பதுதான் நமக்குத் தெரியுமா? ஒரு சமூகத்தை அதன் இலக்கியத்தின் வழி அறிய எழுத்தாளர் சங்கம் ஏதாவது முயற்சித்துள்ளதா அல்லது அதை ஒரு முனைப்பாக முன்னெடுத்துள்ளதா?

வல்லினம் தொடங்கிய காலம் தொட்டே சில முயற்சிகளைச் செய்துள்ளது. முதல் கலை இலக்கிய விழாவிலேயே மலாய்க் கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டோம். அடுத்ததாக நாங்கள் வெளியிட்ட இரண்டு கவிதை தொகுப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அந்தப் புத்தகத்தோடு இணைத்து வெளியிட்டோம். மேலும் மலேசியத் தமிழ் மூத்தபடைப்பாளிகளின் சிறந்த சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டோம். இது தவிர்த்து பறை என்ற இலக்கிய இதழ் வந்த பிறகு மலாய், சீன இலக்கியமென்று ஒரு சிறப்பிதழையே வெளியிட்டுள்ளோம். இப்படி எங்கள் சக்திக்கு இயன்ற சில விஷயங்களை நாங்கள் செய்துள்ளோம். ஆனால் தேசிய அளவிலான சங்கமானது இம்மாதிரியான முயற்சிகளையே மலேசிய இலக்கிய நகர்ச்சிக்கான செயல்பாடாக அவர்கள் இன்னும் பல இயக்கங்களோடு சேர்ந்து பெரும் முனைப்புடன் செயல்படுத்தலாம். அப்படி அவர்கள் செய்கின்ற பட்சத்தில்தான் நாம் இன்னொரு சமூகத்தைப் புரிந்து கொள்வதற்கும் அவர்களை நெருங்குவதற்கும் அது வழிவகுக்கும். அதுவே நாம் ஒரு தேசத்தில் வாழ்கிறோம் என்ற உணர்வை நமக்குள் ஏற்படுத்தும்.

ஒரு சிறிய சம்பவம் ஒன்றை எடுத்துக்காட்டாக முன்வைக்கலாம். அண்மையில் ‘ஜாகாட்’ பட இயக்குனரை நேர்காணல் செய்யும்போது ஜாகாட் படம் என்ன விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை அறியும் வாய்ப்புக் கிடைத்தது. அவருடைய சக சீன இயக்குனர்கள் 1990களில் தமிழ் மக்களின் வாழ்க்கையில் இருந்த நெருக்கடிகளையும் துன்பங்களையும் அறிந்துகொள்ள இந்த ஜாகாட் படம் உதவியுள்ளது. தோட்டத்தை விட்டு வெளியேறிய பின்னர் அவர்களுக்குக் கிடைத்த அதே சலுகைகளும், வசதிகளுமே தமிழ் மக்களுக்கும் கிடைத்திருக்கும் என்பதே அப்போதைய மலாய்க்காரர்கள் மற்றும் சீனர்களின் புரிதலாக இருந்துள்ளது. சொந்த நாட்டிலேயே தமிழர்கள் நிராகரிப்பட்டுள்ளதை அறியும் முதல் தளமாக அவர்களுக்கு ஜாகாட் திரைப்படமே இருந்துள்ளது. இது அவர்களுடைய தவறல்ல. இங்கு நான் அடையாளம் காட்ட விரும்புவது ஒரு இலக்கியத்தின் கடமையைத்தான். ஒரு சமூகத்தின் குரலாகவே இலக்கியம் இருந்திருக்க வேண்டும். இலக்கியத்தைத் தமிழ் நாடு, ஈழம், மொரிஷியஸ் ஆகிய நாடுகளுக்குக் கொண்டுபோவதாகச் சொல்லும் நாடகத்தைக் கொஞ்சம் குறைத்துக்கொண்டு இந்த சமூகத்தில் வாழும் பிற இனத்தவருக்கு நம் வாழ்வு புரியும்படி அல்லது சென்றடையும்படி ஏதாவது செய்தார்களென்றால் சிறப்பாக இருக்குமென்பதே என்னுடைய கருத்து.

இரண்டாவதாக, இளம் படைப்பாளிகளை ஊக்குவித்து அவர்களுக்காக பட்டறை நடத்தி அவர்களை எழுத வைப்பதும் அவர்களைப் படைப்பிலக்கியத்தில் இயங்கவைப்பதும் மிக முக்கியம். ஆனால், அதற்கான முயற்சிகளை சமீப காலமாக மலேசிய எழுத்தாளர் சங்கம் முன்னெடுத்ததா என்று எனக்குத் தெரியவில்லை. அப்படி எதையும் நான் பார்க்கவுமில்லை. அதற்கான வெளிப்பாடுகளெதுவும் இருந்ததாகவும் தெரியவில்லை.

மூன்றாவதாக எழுத்தாளர் சங்கம் செய்ய வேண்டியது, புத்தகச் சந்தையைப் பரவலாக்குவது. ஒரு எழுத்தாளின் புத்தகம் எல்லா இடங்களுக்கும் பரவலாகப் போய்ச் சேர வேண்டிய அடிப்படை வசதிகளைச் செய்ய வேண்டியது நிச்சயமாக எழுத்தாளர் சங்கத்தின் வேலைதான். தேசிய முன்னணி ஆட்சியில் இருந்த காலத்திலேயே ம.இ.கா கட்சியிடம் பேசி அவர்களுடைய கிளைத்தலைவர்கள் புத்தகத்தை வாங்கி அந்தந்த கிளைகளில் உள்ள பள்ளிக்கூடத்தில் கொடுத்தாலே  எழுத்தாளனின் சிக்கல் தீர்ந்துவிடும். ஆனால். இந்தப் பேச்சு வார்த்தையை நடத்துவதற்கு அவர்களின் சங்கத்தில் ஒரு வலுவான குரல் தேவை. நான் சொல்வது சமரசக் குரல் அல்ல. சமீப காலமாக அப்படி ஒரு முயற்சி நடப்பதாகக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது ஒரு அமைச்சர் மாதம் 5,000 ரிங்கிட் வழங்குவதாகவும் அது புத்தகம் வெளியிட  பயன்படுமெனவும் கூறப்பட்டது. ஆனால், நமக்குத் தேவைப்படுவது ஒரு நிரந்தரத் தீர்வு. ஆனால், இவர்கள் திட்டமிடுவதோ தற்காலிகமானது. நாளையே அந்த கிளைத் தலைவர் பதவியிலோ அல்லது கிளையிலோ இல்லாமல் போகும் பட்சத்தில் அல்லது அவர் கொடுக்க மறுத்துவிட்டாலோ இந்தத் திட்டம் நிச்சயம் தடைப்பட்டுப்போகும். ஒரு புதிய எழுத்தாளன் தன்னுடைய புத்தகத்தை வெளியிட விரும்பினால் அந்தப் புத்தகம் தரமானதா என்பதை தீர்மானிக்க ஒரு குழுவும்,பிறகு அதற்குத் தேவையான பணத்தைக் கொடுக்க  ஒரு அறவாரியமும் தேவை. அதன் பின்னர் அந்தப் புத்தகத்தைச் சந்தைப்படுத்துவதற்கான ஒரு வழிமுறை தேவை. இது இருந்தாலே போதும்,  இந்த நாட்டில் எந்த எழுத்தாளனும் மிகச் சிறப்பாக வாழ்வான்.

கேள்வி: சரி  எழுத்தாளர் சங்கத்தின் மீதான குற்றச்சாட்டு ஒரு புறமிருக்கட்டும். தமிழ் இளைஞர் மணிமன்றம் என்பது ஒரு பொதுவான அமைப்பு. நீங்கள் அவர்களின்மீதும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருவது ஏன்?

ம.நவீன்: உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் மணிமன்றத்தைப் பொருத்தவரை எனக்குக் கோபத்தைவிட கவலைதான் அதிகம் இருந்தது. எனவே, நான் அவர்களை விமர்சித்தேன் என்பதைவிட என்னுடைய கவலையை முன்வைத்தேன் என்பதுதான் உண்மை. இந்த நாட்டில் தமிழர்கள் பல்வேறு முறையில் தங்களது மொழியையும், பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் முன்னெடுக்க வழிவகுக்கும் இந்த மணிமன்றம் 2500 பானைகளை வைத்து பொங்கல் வைக்கிறது. இது ஒரு பெரிய சாதனையாக எல்லா பத்திரிகைகளிலும் வெளியிடப்பட்டது. ஆனால், அந்தச் சமயத்தில் எனக்கு ஒரு  கேள்வி இருந்தது. அதே காலகட்டத்தில் வெளிவந்த ஜாகாட் என்ற திரைப்படத்துக்கு தேசிய விருது கிடைத்திருந்தது. இந்த சமூகத்தில் பிறந்த ஒரு தமிழ் இளைஞனுக்குக் கிடைத்த தேசிய விருதை அக்கீகரிக்காத ஒரு அமைப்பு 2500 பானைகளில் பொங்கல் வைத்து எதைச் சாதித்துவிடபோகிறார்களென்பது என்னுடைய மிக அடிப்படையான கேள்வியாக இருந்தது. அப்படி அதனுடைய அவசியம் என்ன. அது உங்களிடைய திருப்திக்காகக் கலாச்சாரத்தின் பேரில்  செய்யப்பட்டாலுமே அதை பிரமாதப்படுத்த வேண்டிய அவசியம் என்ன? ஒரு அரசாங்கம் இந்த சமூகத்திற்காக என நம்பி வழங்கக்ககூடிய பணம் ஏன் இப்படி எரிந்து போக வேண்டும். அது ஏன் ஒரு இளைஞனுக்குப் பயன்படவில்லை. வளர்ந்து வரும் ஒரு கலைஞனுக்கு ஏன் அது பயன்படவில்லை குறைந்தபட்சமாக அந்தக் கலைஞனுக்கு அடுத்த படம் இயக்குவதற்கான அல்லது அவனது அடுத்த முன்னெடுப்பைக் கொண்டு செல்வதற்கு இப்படியான ஒரு இயக்கம் பக்கபலமாக இருந்தால் இந்த சமுதாயம்  நிச்சயம் ஓர் உயர்ந்த நிலையில் இருந்திருக்கும். கலைகளை வளர்க்கக்கூடிய இளைஞர் மணிமன்றம் வளர்ந்து வரும் ஒரு இளைஞனுக்கு உதவாமல் பொங்கலைக் கொண்டாடி அதைப்பிரமாண்டப்படுத்தியது எனக்குக் கவலையைத் தந்தது. இந்த  கொண்டாட்டங்களினாலேயே இந்த சமூகம் இன்னும் உயராமல் இருக்கிறது என நான் கருதுகிறேன். இப்படி என்னுடைய கருத்துகளை எழுதும் போதோ சொல்லும்போது நவீன் என்பவன் தொட்டதையெல்லாம் விமர்சிப்பவனாகவும், குற்றம்சாட்டுபவனாகவும் காட்சிப்படுத்தி விடுகிறார்கள்.

இதை நான் எழுதியபோது எனக்கு நிறைய மிரட்டல்கள் வந்தன. ஆனால், நான் மிக சாதாரணமானவன், ஒரு சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவன். நான் ஒரு ரௌடியோ அல்லது என்னைச் சுற்றி படைபலமோ எதுவுமே இல்லை. இப்படி ஒரு பலவீனமான பின்னணியில் இருந்தே நான் என்னுடைய கருத்துகளை முன்வைக்கிறேன். அதற்கு நான் சந்திக்கும் எதிர்வினைகளும் வலுவாகவே இருக்கின்றன. இதை நான் முன்வைக்கவில்லையென்றால் வேறு யார் வைப்பார் என்ற கேள்வி எனக்கு தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும்படியால் நான் அதைச் செய்கிறேன். காரணம் அந்த அளவுக்கு இந்த சமுதாயம் வரண்ட சமுதாயமாக, சிந்தனையற்ற சமுதாயமாக,  இருக்கிறது. இன்னும் சொல்லவேண்டுமென்றால் எதையோ எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்ற ஒரு சமுதாயமாகதான் நான் இதைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். இவனைப் பகைத்துக்கொண்டால் பின் அவன் மூலமாகக் கிடைக்கவேண்டியது கிடைக்காமல் போகலாமோ, அவன் நட்பை இழந்தால் லாபம் விட்டுப் போய்விடுமோ, யாரை பகைத்துக் கொண்டால் நாம் லாபம் பார்க்க முடியும் இப்படி தந்திரமாக சிந்தித்து கள்ள மௌனம் காக்கின்ற சமுதாயத்தினூடே நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எனவே, இப்படி விமர்சனம் செய்வதை என்னுடைய பொழுதுபோக்கு போல காட்டுகின்றனர். இது போன்ற கேள்வி எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாகவே இருக்கிறது.

கேள்வி: பாடலாசிரியர் வைரமுத்து மலேசிய வருவதற்கு தாங்கள் பல விமர்சனங்களையும் எதிர்க்கருத்துகளையும் முன் வைத்துள்ளீர்கள். ஆனால், அதே நீங்கள் தமிழ் நாட்டிலிருந்து பல எழுத்தாளர்களை அழைத்து வந்து இங்கே பல நிகழ்வுகளை நடத்துகிறீர்கள். ஆக உங்களுக்கு ஒரு நியாயம்  மற்றவர்களுக்கு ஒரு நியாயமா?

ம.நவீன்: முதலில் நான் ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் வைரமுத்துவை மலேசியாவுக்கு வரவேண்டாமென எந்த                 இடத்திலுமே சொல்லவில்லை. இது போல நான் சொல்லாததைத்சொல்லியதாக யாராவது விமர்சிக்கும்போது, இவர்கள்              யாரும் நான் எழுதியதை படிக்கமாட்டார்களா என்ற கேள்வி என்னுள் வலுவாக இடம்பெறுகிறது. மலேசிய எழுத்தாளர் சங்கம் என்ற ஒரு அமைப்பு அல்லது ஒரு இயக்கம் தமிழகத்தில் இருக்கும் ஒரு எழுத்தாளனை அழைத்து வந்து அவருடைய புத்தகத்தை வெளியிடுவது எந்த விதத்தில் நியாயம் என்பதுதான் என்னுடய கேள்வி. மலேசியாவிலேயே எத்தனையோ படைப்பாளிகள் தங்களுடைய புத்தகத்தை எப்படி வெளியிடலாமென யோசித்துக் கொண்டிருக்கும்போது, அதற்குண்டா செலவுகளை எண்ணி கவலையிலிருக்கும்போது, செல்வச் செழிப்பில் இருக்கும் ஓர் எழுத்தாளரை அழைத்து வந்து அவருடைய நூலை வெளியிடுவதன் அவசியமென்ன? அதையேன் மலேசிய எழுத்தாளருக்கு செய்யவில்லை. இதையே ஒரு தனி நபரோ அல்லது தனி நிறுவனமோ செய்வது வேறு; நான் அதை ஒட்டி கேள்விகள் எழுப்பப்போவதில்லை. அது அவர்களின் சொந்தப் பணம். எனவே, அவர்கள் அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் யாரை வேண்டுமானாலும் அழைத்து வந்து புத்தகம் வெளியிடலாம். ஆனால் ஓர் இயக்கம் என்பது வேறு, அது பொதுவானது. உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அரசாங்கம் அதற்குப் பணம் வழங்குகிறது. எனவே எங்களுக்குக் கொடுத்த பணத்தை எதற்காக மற்றவர்களுக்கு செலவழிக்க வேண்டும் என்ற கேள்வியைத்தான் நான் முன் வைக்கிறேன்.

ஆனால், வல்லினம் செய்வதன் நோக்கம் அங்கிருக்கும் படைப்பாளிகளை சந்தைப்படுத்தவது அல்ல. மலேசியாவில் தரமான படைப்பிலக்கியக்களை அறிமுகம் செய்வதே எங்களுடைய நோக்கம். அப்படி ஒரு அறிமுகத்திற்கு தரமான படைப்பாளிகளும் தரமான விமர்சகர்களும் இந்த நாட்டிற்கு வருவதும், இந்நாட்டுப் படைப்புகளைப் படிப்பதும் தங்களுடைய கருத்துகளைச் சொல்வதும்  அவசியமாகிறது. எனவே, நாங்கள் தொடர்ந்து செய்வது இதற்கான முயற்சிகளைத்தான். அந்த முயற்சிக்குண்டான பலனையும் நாங்கள் அடையவே செய்துள்ளோம். உதாரணமாக, எழுத்தாளர் இமையம், ஜெயமோகன், சு.வேணுகோபால் போன்றவர்கள் மலேசிய படைப்புகளைப் பற்றி விரிவாகவே கட்டுரைகள் எழுதியுள்ளனர். அதே போல   சீ.முத்துசாமி அவர்களுக்கு கடந்த ஆண்டு விஷ்ணுபுரம் விருது கிடைத்தது. இவை எல்லாமே, இவர்கள் தொடர்ந்து மலேசியாவிற்கு வருவதன் மூலமாகவும் மலேசிய படைப்புகளைத் தொடர்ந்து வாசிப்பதன் மூலமாகவுமே சாத்தியப்படுகிறது. இப்படி மலேசிய படைப்புகளின் மீது கவனத்தை ஏற்படுத்துவதற்காகவே வல்லினம் தொடர்ந்து முயன்று கொண்டிருக்கிறது.

கேள்வி: சற்று முன்பு நீங்கள் வைரமுத்து மலேசியாவிற்கு வந்து புத்தகம் வெளியிடுவதற்கு நான் எதிர்ப்புத் தெரிவிக்கிறேனென்று கூறினீர்கள். ஆனால், அதற்கு முற்றிலும் முரணாக அண்மையில் வெளிவந்த ‘மீ டூ’ என்ற சர்ச்சையின் போது நீங்கள் அவர் மலேசியாவிற்கு வருவதற்கு ஆதரவளிக்கிறேனென்று கூறியுள்ளீர்கள், இப்படியாக, முன்னுக்குப் பின் முரணாக பல குழப்பகரமான தகவல்களைக் கூறுவது ஏன்?

ம.நவீன்: இதில் நான் எதையும் குழப்பவில்லை. இந்த சமுதாயம் குழம்பியிருக்கிறது. எல்லாவற்றையுமே குழப்பிப் பார்க்கக்கூடிய குணம்தான் நம்மிடையே அதிகம் உண்டும். வைரமுத்துவின் படைப்பிலக்கியத்துக்கான காலம் மிகப் பின்னால் இருக்கிறது என்பதுதான் நான் அவரை  விமர்சனம் செய்கின்ற தளம். அவரை மலேசியாவில் ஒரு முதன்மைப் படைப்பாளியாகக் காட்ட வேண்டாமென்பதே என்னுடைய கருத்து. இது முழுக்க முழுக்க இலக்கிய விமர்சனம் சர்ந்தது மட்டுமே. சற்று முன்பு வைரமுத்துவின் புத்தகத்தை இங்கே சந்தைப்படுத்துதல் பற்றி கூறியது அரசியல் மற்றும் பொருளாதாரம் சார்ந்த விமர்சனம். ஆனால், இந்த ‘மீ டூ’ சர்ச்சையை அடிப்படையாக வைத்து அவருடைய இலக்கியத்தைத் தீர்மானிப்பது ஒரு பெரிய முட்டாள் தனமென நான் கருதுகிறேன்.

கேள்வி : அப்படியென்றால் எழுத்தாளனுக்கு ஒழுக்கம் அவசியமில்லையா?

ம.நவீன்: பாரதி தொடங்கி ஜெயகாந்தன் வரை கஞ்சா அடிக்கும் பழக்கமிருந்துள்ளது. இதை நாம் அவர்களுடைய வாழ்க்கை குறிப்பில் அறியலாம். அப்பழக்கத்தை அவர்கள் மிக வெளிப்படையாக வைத்திருந்துள்ளனர். ஜெயகாந்தன் தொடங்கி பாலகுமாரன் வரையில் இரண்டாவது திருமணம் செய்துள்ளனர். இவர்களையெல்லாம் நீங்கள் இலக்கியவாதி இல்லயெனச் சொல்வீர்களா? அது போல ஜி.நாகராஜனும் பாலியல் தெருக்களில் அலைந்த அனுபவங்களை நிறைய புனைவுகளாக எழுதியுள்ளார். இவரை தமிழ் இலக்கியவாதிகளின் பட்டியலில் இருந்து புறக்கணிக்க முடியுமா? மேலும் இந்த நாட்டில் தொடர்ந்து கண்ணதாசன் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அவர் ஒரு கையில் மதுவும் மற்றொரு கையில் மாதுவும் இருக்கும்போதுதான் தன்னுடைய ஜீவன் பிரிய வேண்டும் என்று சொன்னவர். ஆக, நீங்கள் கூறும் ஒழுக்கத்தின் அடிப்படையில் இவர்கள் அனைவரையும் புறக்கணித்த பின் நாம் தமிழ் இலக்கியத்தை பேச வேண்டுமா? மேற்கு நாடுகளை எடுத்துக்கொண்டாலுமே காப்காவின் பாலியல் சிக்கல்களை நாம் பல கட்டுரைகளின் வழி அறியலாம். ஏன் அண்மையில் நோபல் பரிசு பெற்ற நைபால், ஒரு ஆணாதிக்கவாதியென்பது குறித்தும் அவர் செய்த பல அராஜகங்கள் குறித்தும் அவர் மனைவி கூறியுள்ளார். படைப்பாளி என்பவன் இப்படித்தான் இருப்பான் அல்லது இருக்க வேண்டுமென்பது என் கருத்தல்ல. நான் பெரிதும் மதிக்கும் ஜெயமோகன் தன்னை உறுதியான ஒழுக்கவாதியாகவே நிறுவியுள்ளார். ஆக, படைப்பாளி அவன் தேர்வின்படி வாழ்கிறான். அவன் எளிய மனிதனிலிருந்து புறப்பட்டு வரக்கூடிய ஒரு கலைஞன்.  எனவே, அவனது வாழ்க்கையை இப்படித்தான் இருக்க வேண்டுமென்ற ஒரு வரைமுறைக்குள் கொண்டு வர முடியாது.

நேர்காணல் 01கேள்வி: தமிழராகிய நாம் தமிழ் தேசியம் என்ற ஒன்றை நோக்கி சென்றுகொண்டிருக்கும்போது மலேசியாவில் சாதி அடிப்படையில் சில இலக்கியங்களை உருவாக்கியுள்ளீர்கள். குறிப்பாக உங்கள் மீது உள்ள குற்றச்சாட்டானது நீங்கள் தலித் இலக்கியம் என்ற ஒன்றை மலேசியாவில் உருவாக்குகிறீர்கள் என்பது. தமிழ் இலக்கியம் என்பது ஒரு பொதுவான இலக்கியமாக இருக்கும் பட்சத்தில் உங்களைப் போன்ற எழுத்தாளர்கள் அதை சாதி அடிப்படையில் பிரிப்பது எவ்வகையில் நியாயம்?

ம.நவீன்: இப்படி மீண்டும் மீண்டும் கீழிறங்கி வந்து ஒரு விவாதத்தில் பங்கெடுப்பது என்பது மலேசிய தமிழ் இலக்கியத்தில் எனக்கு மிகவும் சோர்வளிக்கக்கூடிய ஒன்று. இதைக்காட்டிலும் இன்னும் அறிவுபூர்வமாக, ஒரு தர்க்கபூர்வமாகப் பேசக்கூடிய நபர் எனக்குக் கிடைத்தால் அந்த விவாதம் எனக்குத் திருப்தியளிப்பதாக இருக்கும். நீங்கள் கேட்கக்கூடிய இந்தக் கேள்விக்கு மிக எளிதாக ஆதாரபூர்வமாக என்னால் மறுப்புச் சொல்ல முடியும். இதற்கான பதில்கள் அனைத்துமே நம் வீட்டில், நம் இணையத்திலேயே உள்ளது. தலித் எனும் சொல் தல் எனும் அபிரேய மொழிச்சொல்லிலிருந்து வந்ததாகக் கருதப்படுகிறது. இது மராட்டிய மொழிக்குச் சென்று, அங்கிருந்து தமிழுக்கு இன்று வந்துள்ளது.  மகாத்மா ஜோதிபா கோவிந்த ராவ் புலே என்பவர் தலித் என்ற சொல்லை அறிமுகம் செய்கிறார். தல் என்ற அபிரேய மொழிச் சொல் தமிழ் விவிலியத்தில் ஏழைகள் என்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதுவே அம்பேத்கார் மூலமாக விரிவாக ஒரு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. தலித் என்ற அந்தச் சொல் மராட்டியத்தில் புழக்கத்துக்கு வந்தபோது அதற்கான திட்டவட்டமான வரைமுறையையும் சொல்லிவிட்டார்கள். தாழ்த்தப்பட்டவர்கள், மலைவாழ் மக்கள், புதிய பௌத்தர்கள், உழைக்கும் மக்கள், நிலமற்றவர்கள், ஏழை விவசாயிகள், பெண்கள், இறுதியாக அரசியல் பொருளாதார ரீதியிலும் மதத்தின் பெயராலும் சுரண்டப்படும் அனைவருமே தலித்துகள்தான் என்று கூறப்படுகிறது.

கேள்வி: ஆனால் தமிழ் நாட்டைப் பொருத்த வரையில் தலித் இலக்கியம் என்பது சாதி இலக்கியமாக கருதப்படுகிறது. அப்படி சாதிய இலக்கியமாக இருக்குமொன்றை நீங்கள் ஏன் கொண்டுவர வேண்டும். ஒடுக்கப்பட்டவர்களின் இலக்கியம், குரல் நசுக்கப்பட்டவர்களின் இலக்கியம்  என புதிய ஒன்றை கொண்டுவரலாமே? எதற்காகத் தலித் இலக்கியமென கொண்டுவருகிறீர்கள் என்பதுதான் என்னுடைய கேள்வி.

ம.நவீன்: நீங்கள் தமிழ்நாட்டை வைத்து ஒப்பிட வேண்டிய அவசியமில்லை. முன்பே சொன்னதுபோல தலித் என்பது தமிழ்ச் சொல்லே இல்லை. மராட்டியத்தில் எந்த அர்த்தத்தின் அடிப்படையில் சொல்லப்பட்டுள்ளது என்பது மிகத் தெளிவாகவே உள்ளது. இது 1973-இல் மிகத் திட்டவட்டமாகச் சொல்லப்பட்ட ஒரு வரையறை. கால ஓட்டத்தில் அது தமிழ் நாட்டிற்கு வந்த பிறகு தமிழ் நாட்டில் ஒடுக்கப்பட்ட சாதியினரோடு பெண்கள், பூர்வக்குடியினர், அடித்தட்டு சாதியினர், திருநங்கைகள் இப்படி இவர்கள் அனைவருமே இந்த தலித் என்ற வர்க்கத்தின் அடிப்படையிலேயே கவனிக்கப்பட்டனர். அதே போல வட நாட்டிலும் ஒடுக்கப்பட்ட சாதியும் அதில் அடக்கப்பட்டார்கள். நான் மீண்டும் மீண்டும் இந்த வித்தியாசத்தைச் சொல்கிறேன் சாதி என்பது வேறு வர்க்கம் என்பது வேறு.

கேள்வி: அப்படிபென்றால் நீங்கள் அதைக் குரல் நசுக்கப்பட்டவர்கள் அல்லது ஒடுக்கப்பட்டவர்களின் இலக்கியம் என்று வைத்துக்கொள்ளலாமே. ஆனால் ஒரு எழுத்தாளனாக நீங்கள் இந்த இலக்கியத்தைச் சாதி ரீதியில் பிரிப்பது நியாயமா?

ம.நவீன்: நான் ‘அம்மா’ என்று சொல்லும்போது உங்களுக்கு தமிழ் நாட்டில் இருக்கும் ஜெயலலிதா நியாபகத்துக்கு வந்தால் நான் எந்த விதத்திலும் பொறுப்பேற்க முடியாது. நான் அம்மா என்ற சொல்லைப் பொதுவாக தாய்மார்களைக் குறிக்கக்கூடிய சொல் என நான் நினைக்கிறேன். ஆனால் உங்கள் மனதில் அது எப்படிப் பதிவாகி இருக்கிறது என்பது பற்றி எனக்கு எந்த விதமான கவலையும் இல்லை. அதுபோல தலித் என்பதற்கான அர்த்தத்தை நான் திட்டவட்டமாகச் சான்றுகளுடன் கூறுகிறேன். ஒருவேளை உங்களுக்கு கொஞ்சமாவது உழைப்பு இருக்குமெனில் இதை நீங்களே தேடிப்பார்த்து நான் கூறிவதை மறுத்து அது தோன்றிய காலத்தில் என்னவாக இருந்திருக்கிறது என நிரூபிப்பதுதான் அறிவார்ந்த ஒரு விவாதமாக இருக்கும். தலித் என்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அடையாளமாக இருக்கும்பொழுது அந்த அடையாளத்தோடு இருக்கும் இந்நாட்டு பூர்வகுடியினர், வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து பணிபுரிபவர்கள், அதே போல சாதி அடிப்படையில் ஒடுக்கப்பட்டவர்கள் இருக்கவே செய்கிறார்கள். எனவே இவர்களிலிருந்து அல்லது இவர்களைப் பற்றி பேசும் படைப்பிலக்கியங்களை தலித் இலக்கியம் என்று வகைப்படுத்தலாமென்றே நான் சொல்கிறேன்.

இரண்டாவதாக நீங்கள் நான் திணிப்பதாகக் கூறினீர்கள். யாருமே எந்த இலக்கியத்தையும் திணிக்க முடியாது. அதாவது எந்த ஒரு படைப்பாளியும் தான் இந்த வகைப் படைப்பிலக்கியத்தைதான் எழுதபோகிறேன் என்று தீர்மாணித்துக்கொண்டு எழுத முடியாது. நான் தலித் இலக்கியத்தைதான் எழுதுவேன் அல்லது நான் பெண்ணிய இலக்கியத்தைதான் எழுதப்போகிறேன் என்று சொல்லிக்கொண்டு எழுதுவது நிச்சயமாகச் சாத்தியப்படாதது. எல்லாருமே அவரவர் பார்த்த அல்லது கேட்ட  ஒரு வாழ்க்கையைத்தான் பதிவு செய்கிறார்கள். அப்படி பதிவு செய்யப்பட்ட பிறகு அந்தப் படைப்பிலக்கியத்தை ஆய்வாளர்கள் பார்த்து அந்த படைப்பிலக்கியம் எந்த ரகம் என்று வகைப்படுத்துகிறார்கள். உதாரணமாக சு.வேணுகோபால் என்னுடைய சிறுகதையை ஒரு சிறந்த தலித் சிறுகதை என்று சொல்லுகிறார். அதே கதையை இன்னொரு ஆய்வாளார் பார்க்கும்போது அதில்  பெண்களின் பாத்திரம் அதிகமாக இருப்பதை கவனிக்கிறார். அதாவது ஒரு அம்மா பாத்திரம், பாட்டி பாத்திரம், பழங்கால அம்மாவின் பாத்திரம் என்ற அடிப்படையில் இருக்கிறது. எனவே, அந்த பெண்கள் யார் என்பதன் அடிப்படையில் இக்கதையை ஒரு சிறந்த பெண்ணியக் கதை எனவும் வகைப்படுத்தலாம். ஒருபடைப்பிலக்கியத்துக்கு திட்டவட்டமான ஒரு முகம் இல்லை என்பதே உண்மை. அது அந்த ஆய்வாளர் அந்த படைப்பிலக்கியத்தை அணுகும் முறையைப் பொருத்தது. எனவே படைப்பிலக்கியத்தில் யாரும் எதையும் திணிக்க முடியாது. இந்தக் கேள்வி ஒரு அடிப்படையற்ற ஒரு கேள்வி.

கேள்வி : வல்லினத்தை அழிக்கப்போவதாகப் பல காலமாகவே அவ்வப்போது கூச்சல் எழுவதைக் காண முடிகிறது. அப்படி ஏதேனும் முயற்சிகள் நடந்துள்ளனவா?

.நவீன்: 2013இல் ஒரு நாளிதழ் அவ்வாறான கேளிக்கையைச் செய்துகொண்டிருந்தது. அந்த நாளிதழையும் இப்போது காணவில்லை. பின்னர் தனி நபர்களாகச் சிலர் அப்படிச் சொல்லிக்கொண்டிருப்பதும் உண்டு. வல்லினத்தை முற்றும் முழுதுமாக அழித்துவிட்டதாகவும் வெளியில் கேள்விப்படுகிறேன். வேடிக்கையாகத்தான் இருக்கும். கருத்தியல் ரீதியான விவாதங்களை மட்டுமே நாங்கள் முன்வைக்கிறோம். அதே சமயம் கருத்துகளுடன் முரண்பட்ட எதிர்வினைகளை கருத்துகளால் எதிர்கொள்கிறோம். 2013இல் வல்லினத்தை ஒழித்துக்கட்டுவதாக எழுந்த கூச்சலுக்குப் பின் ஏராளமாக நூல்களைப் பதிப்பித்துவிட்டோம். ஏராளமாக நிகழ்ச்சிகளும் செய்துவிட்டோம். தொடர்ந்து செய்துகொண்டும் இருக்கிறோம். ஒரு திரைப்படத்தில் வடிவேலு தன்னைத்தானே அடித்துக்கொண்டு; மண்ணில் புரண்டெழுந்து பிறரை மிரளவைப்பார். மற்றவர்களும் நமக்கெதற்கு வம்பு ஒதுங்கிபோய்விடுவர். அது நல்ல நகைச்சுவையல்லவா? அதுதான் இன்று முகநூலில் நடப்பது. இந்த வெற்றுக்கூச்சல்கள் பற்றி எங்களுக்கு அக்கறையில்லை. அவை எப்போதும் எங்கும் இருப்பதுதானே. செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் உள்ளன. அதில் வல்லினம் எப்போதும் சுணங்கியதில்லை. உற்சாகம் குறைந்ததுமில்லை.

கேள்வி : மலேசியாவைப் பொருத்தவரை நீங்களும் உங்கள் குழுவினரும் இலக்கியத்தை முன்னெடுத்துச் செல்வது உண்மையிலேயே எனக்கு மிக மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம். உங்கள் மீது அக்கறை கொண்டவனாக நான் எழுப்பக்கூடிய ஒரு கேள்வி என்னவென்றால் தமிழ் இளைஞர் மணிமன்றம், மலேசிய எழுத்தாளர் சங்கம் இப்படி இது போன்ற இயக்கங்கள் தொடர்ச்சியாக உங்கள் மீது குற்றச்சாட்டுகள் எழுப்பிய வண்ணமிருக்கின்றன. கடந்த 2014-இல் கூட உங்களுடைய இலக்கியத்தைப் பற்றி பத்திரிக்கைகளிலும் முகநூலிலும் சில சர்ச்சைகள் எழுந்தன. இப்படியான சர்ச்சைகளினால் உங்களுக்கோ, உங்களது குழுவினருக்கோ அல்லது வல்லினத்துக்கோ பின்னடைவு இல்லையா?

ம.நவீன்:               நிச்சயமாக இல்லை. ஒரு 4,000 பேர் மட்டுமே வாசித்துக்கொண்டிருந்த வல்லின இதழ் 2014-இல் ஏற்பட்ட ஒரு சர்ச்சைக்குப் பிறகு அந்த எண்ணிக்கை 12000-ஐ எட்டியது. இதை வெறுமெனே வாய்வார்த்தைக்காகச் சொல்லவில்லை. என்னால் சான்றுகளைக் காட்ட முடியும். பிறகு அது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது. காரணம் சர்ச்சைக்காக வரும் வாசகர்கள் சர்ச்சை தீர்ந்த் பிறகு நிலைப்பதில்லை. ஆனால் அப்படி வரக்கூடிய வாசகர்கள் ஒரு தரமான படைப்பிலக்கியத்தை வாசிக்கக்கூடியவர்களாக இருக்கும்பட்சத்தில் அங்கேயே நின்று நிலைப்பார்கள். அப்படி நிலைத்த பிறகு இன்று வல்லினத்தைச் சராசரியாக வாசிப்பவர்கள் எண்ணிக்கை 8,000. அதே சமயத்தில் இந்த சர்ச்சை நடக்கும்போதுதான் சில நண்பர்கள் வல்லினத்தில் இணைந்தார்கள். உதாரணமாக விஜயலட்சுமி, கங்காதுரை ஆகியோரைச் சொல்லலாம். இவர்கள் வல்லினத்திற்கு வந்த பிறகு இவர்களுடைய ஆற்றலும் உழைப்பும் வல்லினத்தை மேலும் வளர்க்கவே செய்தது. எனவே, இப்படியான சர்ச்சை வல்லினத்துக்கு பல்வேறு விதத்தில் லாபத்தைதான் தேடித்தந்துள்ளது. ஆக, சர்ச்சை பலவிதத்தில் வல்லினத்தின் மீது ஒரு கவனத்தை வளர்த்திருக்கிறது. அந்த நேரத்தில் அது கஷ்டமாக இருந்தாலுமே அதற்குப் பின்னான காலத்தில் அது லாபத்தையே தந்துள்ளது.

ஆனாலும்,தனிப்பட்ட முறையில் பல படைப்பாளிகளின் படைப்புகளை விமர்சனம் செய்யும் காரணத்தால் அவர்களின் நட்பை இழப்பது எனக்கு மிகுந்த வருத்தத்தைக் கொடுக்கிறது. அதற்காக என்னால் விமர்சனம் எழுதுவதை நிறுத்த முடியாது.  கடந்த 50 ஆண்டு காலமாக படைப்பிலக்கியத்தை விமர்சனம் செய்தால் இவரைப் பகைத்துக்கொள்ள நேரும் என்பதால்தாலேயே அதிகமானோர் தங்களது கருத்தை முன்வைக்காமல் இருந்துள்ளனர். இந்தத் தலைமுறையோடு அந்தப் பழக்கம் முடிந்துபோக வேண்டுமென்பதே என்னுடைய எண்ணம். படைப்பிலக்கிய விமர்சனம் என்பது தனிமனித சாடல் அல்ல. நான் வைக்கும் ஒரு விமர்சனத்தை உங்களுக்கு முதிர்ச்சி இருக்கும் பொருட்டு அதை ஏற்றுக் கொண்டு நட்பு பாராட்டலாம். அப்படி இல்லாமல் நீங்கள் பகைமை பாராட்டினால் அதற்கு நான் பொறுப்பாக முடியாது. மற்றபடி இந்தச் சூழலை எதிர்கொண்டே ஆக வேண்டும் என்ற மனநிலையுடன்தான் இதை நான் தொடர்ந்து செய்கிறேன்.

(Visited 1,337 times, 1 visits today)