‘மகரந்த வெளி’ கட்டுரையை காலையில் வாசித்தவுடன் இதை எழுதுகிறேன். சுனில் கிருஷ்ணனின் உழைப்பின் மீது கொண்டுள்ள மரியாதை அவரது ஒவ்வொரு வெளிப்பாட்டிலும் அதிகரிக்கிறது. சிங்கை – மலேசியப் பயணத்தில் இன்னும் பல அனுபவங்களை இக்கட்டுரையில் அவர் தொகுத்து அளித்துள்ளார். அது மலேசிய – சிங்கை படைப்புகளை இன்னும் நெருக்கமாக அறிய வழியமைத்துள்ளது. ஒருவேளை குறிப்பிட்ட கால வரையறைக்குள் உருவான இலக்கிய வடிவங்களை ஒட்டிய பார்வையாக இக்கட்டுரை இடம்பெற்றிருந்தால் இன்னும் கூர்மையான அவதானிப்புகள் கிடைத்திருக்கலாம் என்று தோன்றியது. பெயர்களைப் பட்டியலிடுகையில் விடுபடல்கள் சாத்தியம் என்றாலும் ஈழ இலக்கியத்தில் எஸ்.பொவின் பெயர் விடுபடல் கூடாது என்றே எண்ணிக்கொண்டேன்.
சுனில் எழுதிய கட்டுரை சில எண்ணங்களை உருவாக்கின.
முதலாவது மலேசியாவில் எப்போதும் இருக்கும் மு.வ, நா.ப, அகிலன் போன்றோர் மேலுள்ள பிடிப்பு குறித்த அவர் பகிர்வு. இதன் பின்னணியை விளக்குவது அவசியமென நினைக்கிறேன். மலேசியத் தமிழ் இலக்கியம் எப்போதுமே ஏதோ ஒருவகையில் தமிழகத்தின் இலக்கியப் போக்குகளைச் சார்ந்தே செயல்படுகிறது. 1950களில் கு.அழகிரிசாமியின் வருகையினால் இங்குள்ள புனைவுலகத்தில் சில மாற்றங்கள் நிகழவே செய்தன. ஆனால், தொடர்ந்து மலேசியா வந்த நா.பா, அகிலன் போன்றவர்களின் நாடு முழுவதுமான இலக்கியக் கூட்டங்கள் சில தாக்கங்களை ஏற்படுத்தின. ஜனரஞ்சகப் படைப்புகளே தமிழ் இலக்கியத்தின் பிரதானமானவை என முன்வைக்கப்பட்டது இந்தக் காலக்கட்டத்தில்தான்.
மலேசியாவில் ஏற்கனவே மு.வ.வின் தாக்கம் இருந்தாலும் மலாயா பல்கலைக்கழகத்திற்கு நவீன தமிழ் இலக்கியம் போதிக்கும் பணி நிமித்தமாக வந்த இரா.தண்டாயுதம் அவரை முதன்மையான இலக்கிய ஆளுமையாக முன் வைத்தார். இரா.தண்டாயுதம் மலேசிய இலக்கியத்திற்கு குறிப்பிட்ட பங்களிப்பை ஆற்றியுள்ளார். மலேசிய நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுத்தது, ‘இலக்கிய வட்டம்’ சிற்றிதழ் உருவாக ஆலோசனைகள் வழங்கியது, ‘நவீன இலக்கியச் சிந்தனை’ போன்ற இயக்கங்கள் உருவாகப் பக்கபலமாக இருந்தது போன்றவற்றை கவனத்தில்கொள்ளலாம். அதேநேரத்தில் தமது ஆசிரியர் மு.வ.வை கல்விக்கூடங்களில் நிலைநிறுத்தவும் அவர் பங்களிப்பு அதிகம்.
அவரிடம் நவீன இலக்கியம் கற்ற மாணவர்களே பின்னர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளிலும் கல்வி அமைச்சின் தமிழ்ப்பிரிவுகளிலும் பொறுப்பு வகித்தனர். அதன்விளைவாக பாட நூல்களாக மு.வ, நா.ப போன்றவர்களே மீண்டும் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டு, வாசிக்கப்பட்டனர். கல்லூரியுடன் வாசிப்பை முடித்துக்கொள்ளும் ஆசிரியர்கள் தங்கள் வாழ்நாளில் சிரமப்பட்டு வாசித்த அந்த ஒரு சில நூல்களை மட்டுமே தமிழ் இலக்கியத்தில் தலையாயது எனப் பேசத் தலைப்பட்டனர். அதனால், அந்த ஒரு சில நூல்களை வாசித்த பெரும் குழுவினர் அவற்றை மட்டும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி 2000 ஆண்டு வரை இடைநிலைப்பள்ளி இலக்கியப் பாடத்தில் இணைத்துவிட்டனர். கடைசிவரை மு.வ.விலிருந்து ‘மூவ்’ ஆகவேயில்லை.
சுனில் கிருஷ்ணன் கட்டுரையில் எழுபப்பட்டுள்ள தமிழ்ச் சமூகம் ஒரு மூடிய சமூகமா என்ற கேள்வி முக்கியமானது. கொஞ்சம் தயக்கத்துடன் ‘ஆம்’ என்பதே பதில். மலேசியாவில் பெரும்பாலான புனைவுகளில் பிற இனத்தவர்களின் அடையாளங்கள் வருவதில்லை என்பது உண்மைதான். இங்கு ஒரு மலாய்க்காரரின் அல்லது சீனரின் புற அல்லது பிரபலமான கூறுகள் இணைக்கப்படுகின்றனவே தவிர அவர்கள் எவ்வாறு சிந்திக்கிறார்கள் உண்மையில் அவர்கள் என்னவாக இருக்கிறார்கள் எனப் பேசிய படைப்புகள் குறைவு. ‘ராமனின் நிறங்கள்’ போன்ற செம்பனையின் வளர்ச்சியை அதன் வரலாற்றுடன் சொல்ல முனையும் நாவல்களில்கூட அசலான மலாய் கதாபாத்திரங்களுக்கு பதிலாக தமிழர்களையே பிரதானமாக்கி தமிழர்கள் வாழ்வுக்குள்ளேயே புனைவுகள் சுற்றிவருகின்றன. உண்மையில் ஒரே நாட்டில் வாழ்ந்தாலும் பிற இனத்தவர்களின் தமிழ் மக்களுக்கு வாழ்வு பெரிதாக அறிமுகமாகவில்லை என்பதே காரணமாக இருக்கலாம். அதற்கு சீன மலாய் இலக்கியங்கள் தமிழுக்கு அறிமுகமாகாததும் ஒரு காரணம். அவ்வகையில் ‘ரிங்கிட்’ நாவலை சமீபத்தில் வந்த நல்ல முயற்சி எனலாம். என் வாசிப்பில் அ.பாண்டியனின் இந்தக் குறுநாவல் மலாய்க்காரர்கள், சீனர்களின் மனநிலையை கொஞ்சம் நெருங்கிச் சென்றுள்ள முதல் புனைவு என்றே கருதுகிறேன்.
சுனில் கிருஷ்ணன் கட்டுரையில் என்னைக் கவர்ந்த அம்சம் மஹாத்மன் சிறுகதை ஒன்று குறித்த எளிய குறிப்பு. மஹாத்மனின் சிறுகதைகள் குறித்த பேச்சுகள் இங்கு பெரியளவில் பேசப்படவில்லை. 2009இல் வல்லினம் பதிப்பித்த முதல் சிறுகதைத் தொகுப்பு அது. ஏறக்குறைய சுந்தர ராமசாமி கதைகளின் வழி ஒரு சிறுகதையின் வடிவத்தை உள்வாங்கிய தலைமுறைக்கு அக்கதைகள் அபத்த முயற்சிகளாகவே இருந்தன. மெல்லிய கிண்டல்கள் வழியே அக்கதைகள் நிராகரிக்கப்பட்டன. பெரும் அனுபவங்களினால் திரிந்த மனநிலையுடன் வீதிகளில் உலாவும் மஹாத்மன் போன்றவர்களின் கட்டற்ற எழுத்து நடையை செம்மையாக்கி விரிந்த விவாதங்களுக்கு உட்படுத்துவது சமகால இலக்கியத்தில் இயங்குபவர்கள் பணி. நான் அறிந்தவரை தமிழகத்தில் தமிழினி போன்ற பதிப்பகங்கள் செய்யும் இதுபோன்ற முயற்சிகளே பல தரப்பட்ட புனைவு முயற்சிகள் கலைச்செறிவோடு வெளிவரக் காரணமாக உள்ளன. மஹாத்மன் போன்ற படைப்பாளிகளின் புனைவுகளில் கலைக்குறைபாடுகள் இருந்தாலும் அவரை எழுதத்தூண்டுவதன் வழியே மலேசியாவின் சொல்லப்படாத வாழ்க்கை அறிமுகமாகும் சாத்தியமுண்டு. அதற்கு மலேசிய நிலத்தின் மொத்த இலக்கியப்போக்கை கவனத்தில்கொண்டு முன்வைக்கப்படும் விமர்சனங்களும் அவற்றை எழுதும் விமர்சகர்களும் அவசியமாகின்றன. ஒருவேளை அவருடைய கதைகளை மீண்டும் கவனத்துக்குக் கொண்டுவர சுனிலின் கட்டுரை சிறு பங்காற்றுமெனினும் எனக்கு அது மகிழ்ச்சியே.
விஷ்ணுபுரமோ அதை சார்ந்த தோழர்களோ இலக்கிய உரையாடல்களில் மலேசிய இலக்கியங்கள் குறித்து பேசுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அது விரிந்த கவனம் பெறுவது இதுபோன்ற முயற்சிகள் வழியே சாத்தியம். நன்றி.