மகரந்த வெளி – பஞ்சு மிட்டாயும் பட்டு நூலும்

pic-7சுனில் கிருஷ்ணன் பருந்துப் பார்வை என்ற தற்காப்புக் கவசத்துடன் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளார். (மகரந்த வெளி) மலேசிய / சிங்கப்பூர் பகுதிகளில் விடுபட்டுப்போனது போலவே இலங்கையின் பகுதியும் பாதியில் தொங்குகிறது.

இலங்கை மலையகப் படைப்புகளில் மாத்தளை சோமுவின் படைப்புகள் ஆய்வில் தவிர்க்க முடியாதவை. ஒரு தோட்டத்து நாதஸ்வரம், சொந்த நாட்டு அகதிகள், கருவறை மற்றும் அவரது சிறுகதைகளை விட்டுவிட்டு இந்தக் கட்டுரை நகர்ந்துள்ளது. அதேபோல எஸ்.பொவை தவிர்த்து நீங்கள் இலங்கை இலக்கியத்தைச் சொல்ல முடியாது. எஸ்.பொவின் கடைசியாக வெளிவந்த யாழினி நாவல் தற்கால அரசியலை முன்வைத்துப் பேசுகிறது. எவ்வகை இலக்கிய விவாதத்திலும் எஸ்.பொன்னுத்துரையின் சிறுகதை, நாவல்களின் வீச்சைத் தவிர்க்கவே முடியாது.

ஆய்வுகளை மேற்கொள்பவர்கள் குறிப்பிட்ட சிலரின் கட்டுரைகளையே ஆதாரமாக எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இப்படி எடுத்துக்கொள்வதால்  சில நல்ல படைப்புகள் காணாமல் அடிக்கப்படுகின்றன.

என்னைப் பொறுத்தமட்டில் இலக்கியத்தில் அளவுகோள்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறுபடுவதை ஆய்வாளர்கள் கவனத்தில்கொள்ள வேண்டும். குறிப்பாக மலேசிய  ஆர். சண்முகத்தின் ‘ஜப்பானிய மரண ரயில்’ நாவலை 34 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றைய அளவுகோளின்படி விமர்சிப்பது எப்படி சரிப்பட்டு வரும்? ஆர்.சண்முகத்தின் சிறுகதைகளைப் போல் மலேசிய வாழ்க்கையை வேறு கதைகள் சொல்லிவிடவில்லை என்பது எனது 61 ஆண்டுகால இலக்கிய அனுபவத்தின் கண்டெடுப்பு.

முதலில் ஆய்வாளர்களின் தலைப்புகளே குழப்பமாகின்றன. ஒட்டுமொத்த ஆய்வுகளையும் ஒரே சட்டியில் போட்டு சமைக்கக் கூடாதென்பது என் அனுபவம். குறிப்பாக மலேசியத் தோட்டப்புற வாழ்க்கை, சஞ்சிக் கூலி, 2ம் உலகப்போரில் ஜப்பானிய ஆக்கிரமிப்பு, அதன் பிறகு கம்யூனிஸ்ட் அவசரகால நிலைமை, நாடு சுதந்திரத்திற்குப்பின் ஏற்பட்டதோட்டத் துண்டாடல், 1990களுக்குப் பிறகு தமிழ்ச் சமூக மாற்றங்கள். இப்படி பல்வேறு வகையாகப் பிரிக்கப்பட்டு ஆய்வு செய்தாலன்றி உண்மைநிலை வெளிவருவதில் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டிவரும்.

இந்நிலையில் நவீன் கல்விக்கூடங்களில் மு.வ புகுந்ததைப் பற்றிக் கூறியுள்ளார். (கடிதம்) அது 1970களுக்குப் பிறகு நிகழ்ந்தவை. மலேசியாவில் மு.வ, அகிலன், ந.பா வின் படைப்புகள் அதிகம் வாசிக்கப்பட்ட காலத்தின் கட்டாயம் குறித்து எனக்குத் தெரிந்தவற்றைப் பகிர்தல் சில வெளிச்சங்களை ஏற்படுத்தலாம் என நம்புகிறேன்.

மு.வ என்ற பெயர் ஒரு மந்திரச்சொல்லாகவே அக்காலத்தில் பயன்பட்டது. மனோன்மணி, கிருஷ்ணா, சிவகுரு புத்தக விற்பனையாளர்களே கோலாலம்பூரில் தமிழ்ப் புத்தங்களை விற்பனை செய்தார்கள். 1960களில் புதுமைப்பித்தன் பேசப்பட்ட அளவு அவரின் நூல்கள் மலேசியாவில் வாசகர்களின் பார்வைக்கு வரவில்லை. அப்போதைய சூழலில் ஸ்டார் பிரசுரம் வெளியிட்ட புதுமைப்பித்தனின் ஒரே ஒரு தொகுப்பு மட்டுமே வந்திருந்தது. கு.அழகிரிசாமியின் வருகைக்குப் பிறகே புதுமைப்பித்தனின் பெயர் பரவலாகியது. இது 1950களின் மத்தியில் பொது மக்களுக்குப் புதுமைப்பித்தன் சரியாகப் போய்ச் சேராத காலமெனினும் சில தீவிர தேடல் நிறைந்த எழுத்தாளார்களின் பார்வைக்கு புதுமைப்பித்தன் வந்துள்ளார்.

கல்கியிலும் ஆனந்தவிகடனிலும்  நடந்த புதுமைப்பித்தன் / கல்கி விவாதங்கள் வழி சூடுபிடித்த வாசகர் எண்ணிக்கை புதுமைப்பித்தனின் முதலாளி விசுவாசத்தால் வாசகர்கள் சலிப்படைந்தார்கள். இலக்கிய விவாதமாக கல்கியின் படைப்புகளைப் பற்றிப் பேசிய புதுமைப்பித்தன் பிறகு திரைப்படத்தின் அளவு குறித்துப் பேசியதில் வாசகர்கள் சலிப்படைந்தார்கள்.

ஆனந்த விகடன் அதிபர் SS வாசனின் திரைப்பட கதை இலாக்காவில் பு.பி பணியாற்றிய ஔவையார் காலம் அது. எனவே வாசனை ஆதரித்து புதுமைப்பித்தன் செயல்பட்டார். ஆனந்த விகடனிலிருந்து கல்கி கிருஷ்ணமூர்த்தி விலகி கல்கி என்ற சொந்தப் பத்திரிகையை ஆரம்பித்து வியாபாரப் போட்டியை உருவாக்கினார். இதன் விளைவாக ஜெமினி கதை இலாகாவில் இருந்ததால் கால்கியைச் சாட புதுமைப்பித்தனை கருவியாக பயன்படுத்தினார் வாசன். (காலச்சுவடு வெளியிட்டுள்ள புதுமைப்பித்தன் கட்டுரைகள் காண்க) இப்படியாகத்தான் புதுமைப்பித்தனின் பெயர் மலாயாவில் அடிபடத்துவங்கியது.

சுப. நாராயணன்  “ரசமட்டம்” என்ற தலைப்பில் கந்தசாமி என்ற புனைபெயரில் விமர்சனங்களும் சிறுகதைகள் பற்றிய விளக்கங்களும் சிங்கப்பூர் தமிழ் முரசில் தொடராக எழுதி வந்த காலத்தில் பு.பித்தனின் பெயர் கொஞ்சம் பிரபலமாகியது. ‘ரசமட்டம்’ பு.பித்தன் தினமணியில் பணியாற்றிய காலத்தில் நூல் விமர்சனங்களுக்காக ஏற்படுத்திக்கொண்ட ஒரு பகுதியின் தலைப்பாகும். பு.பித்தனின் ‘கடவுளும் கந்தசாமியும் ‘சிறுகதையில் வரும் கந்தசாமியின் பெயரை சுப.நா புனைப்பெயராகப் பயன்படுத்தினார். இக்காலகட்டத்தில் புதுமைப்பித்தனின் ‘விபரீத ஆசை’ என்ற சிறுகதை பெருத்த விமர்சனத்துக்குள்ளாகியது. அக்காலகட்டத்தில் அக்கதை ஆபாசக் கதையென்ற விவாதத்துக்குள்ளாகியது. சிங்கை /மலேசிய எழுத்தாளார்கள் தமிழ் முரசில் விவாதம் புரிந்தார்கள். இவற்றைத் தொகுத்து சிங்கை டாக்டர் ஸ்ரீலட்சுமி ஒரு நூல் எழுதியுள்ளார். இந்த விவாதங்களில் தைப்பிங் ம.செ.மாயத்தேவன் பெரும்பங்காற்றியுள்ளார்.

இதை ஒட்டி வந்த அகிலன், ந.பார்த்தசாரதியின் எழுத்துகளை பின்பற்ற வேண்டிய சுழல் உண்டாகியது. ந.பாவின் தீபம் ஓரளவு என்னைப் போன்றவர்களுக்குப் புதிய பார்வைகளைத் தந்தது. சிற்றிதழ்கள் வெகு காலம் கழித்தே இங்கே விற்பனைக்கு வந்தன.

ஞாயிறு இதழ்களே இங்கு இலக்கியத்தை வளர்க்க வேண்டிய சூழலில், துர்தஷ்டவசமாக அப்பகுதி ஆசிரியர்களுக்கு நவீன இலக்கியப் போக்குகளை அறியும் வாய்ப்பே ஏற்படவில்லை. அதனால்  புதிய அலைகளை அறிந்தெழுதும் எழுத்தாளர்கள் உருவாகவில்லை. நவீனம் என்றால் அது ஆபாசமானதென்ற பிற்போக்குச் சிந்தனையும் இங்கே வேர்விட்டது. இவைகள் அகிலன், நா.பா வின் எழுத்துகள் நமது பாணியில் வந்தமைய காரணமாயின.

டாக்டர் மு.வவின் செல்வாக்கு பெரும்பங்காற்றியதற்குக் காரணம் திராவிட வாசனை எழுத்துகளே. பெரியாரின் 1954 வருகை சாதியம், சுயமரியாதை, கலப்புத் திருமணம், தூய தமிழ் போன்றவை நெருப்பென பற்றின. அண்ணா, கலைஞர், சி.பி.சிற்றரசு போன்றவர்களின் எழுத்துகள் பரவலாக வாசிக்கப்பட்டன. இதையொட்டியே தூய தமிழ்ப் பெயர்களைச் சூட்டிக்கொண்டு பிராமண எழுத்தைப் புறந்தள்ளிய மலாயாத் தமிழனுக்கு  மு.வவின் எழுத்துகள் பக்கமாகபலமாக அமைந்தன.

இதில் மற்றொரு அம்சத்தை நாம் கவனத்தில்கொள்ள வேண்டியுள்ளது. மு.வவின் ஏதோ ஒரு கதை மட்டுமே தொடராக பத்திரிகையில் வந்தது. மற்ற எழுத்துகள் நேரிடை நூலாக வந்தவை. அவரின் நூல்கள் பற்றிய விளம்பரங்கள்கூட பத்திரிகைகளில் வந்ததில்லை. வாய்வழிச் செய்திகளாகியே அந்நூல்கள் பிரபலமாயின. சிவகுரு அதிபரின் அடுத்த தலைமுறை வாரிசுவிடம் பேசிய பொழுது அவர் சொன்ன செய்தி என்னை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. ‘மு.வவின் நூல்கள் விற்பனையில்தான் நாங்கள் சம்பாதிக்க முடிந்தது. நூற்றுக்கணக்கில் வரவழைப்போம். ஒரு சில நாட்களில் விற்றுத்தீர்ந்துவிடும். ஒரு நாளைக்கு கடைக்கு நூறு பேர் வந்தால் 70 பேர் மு.வவின் நூல்களைத் தேடியே வருவார்கள். பெரும் பணம் சம்பாதித்தோம்,” என்றார்.

ஆக மு.வ, அகிலன், ந.பா.வின் எழுத்துப்பாணி வளர கல்கி, ஆனந்தவிகடன் ஓர் காரணம். இப்போது நவீன் போன்றவர்களின் விடாமுயற்சியால் நிலைமை மாறிவருகிறது. கல்வியில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது.

சை.பீர்முகம்மது

 

மரியாதைக்குரிய சை.பீர் அவர்களுக்கு,

ஐம்பதுகள் தொடங்கி மலேசிய இலக்கியச் சூழலில் வாசிப்பில் எவ்விதமான மாற்றங்கள்sunil-2 நிகழ்ந்தன எனச் சொல்லும் வெகு சிலரில் நீங்கள் ஒருவர். அவ்வகையில் இக்கடிதம் வழி கல்கி, மு.வ, ந.பா போன்றவர்கள் மலேசியாவில் நுழைந்த விதத்தை நீங்கள் கூறியிருப்பது அவசியமானதே. இன்னும் விரிவான முறையில் இதுபோன்ற தகவல்களைத் தேடித் தொகுக்கும் போது மலேசியாவில் இலக்கிய வாசிப்பு முறை எப்படி தோன்றித் தொடர்ந்தது என அறிய முடியும்.

கடிதத்தில் தாங்கள் சுனில் கிருஷ்ணன் கட்டுரை குறித்து கூறியுள்ள கருத்துகள் குறித்து மட்டும் எனக்கு சில மாற்றுக்கருத்துகள் உள்ளன. எஸ்.பொ பெயர் விடுபடலை நானும் என் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன். அதை நீங்கி சிலவற்றை பேசலாம்.

மலேசிய இலக்கியம் குறித்து தமிழகத்தில் எந்த எழுத்தாளர் விமர்சனம் வைத்தாலும் பொதுவாகவே நம் மத்தியில் எழும் கேள்வி, இவர் எல்லாவற்றையும் வாசித்துவிட்டுதான் பேசுகிறாரா? ஏன் சிலர் விடுபட்டுள்ளனர்? என்பதுதான்.

மலேசியாவின் வாழும் நாம் தமிழக இலக்கியங்களில் பொதுவாசிப்பில் பிரபலமாகாத ஒரு படைப்பாளியை விமர்சகர்களின் வழியாகத்தான் வந்தடைகிறோம். தனிப்பட்ட முறையில் பா.சிங்காரம் தொடங்கி சு.வேணுகோபால் வரை நான் சென்று சேர்ந்தது கறாரான விமர்சகர்களின் கவனப்படுத்தல் வழியாகத்தான். பின்னர், இலக்கியம் குறித்து நாம் எழுதும் கட்டுரைகளில் அளவுகோள்களாகக் குறிப்பிடுவதும் அவர்களைத்தான். இது எவ்வாறு நிகழ்கிறது?

பதில் மிக எளிதுதான். உங்கள் கட்டுரையில் கு.அழகிரிசாமியின் மூலம் புதுமைப்பித்தன் மலேசியாவில் அறிமுகமானதைச் சொல்லியுள்ளீர்கள். புதுமைப்பித்தனை முன்வைத்தது கு.அழகிரிசாமியின் தேர்வுதானே. இதுபோல தீவிர இலக்கியச் சூழலில் இயங்கும் எண்ணற்ற விமர்சகர்களின்/ எழுத்தாளர்களின் தேர்வுகள், முன்வைப்புகள் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு; ஒவ்வொரு காலகட்டத்திலும் உருவாகும் வெவ்வேறு விமர்சகர்களால்/எழுத்தாளர்களால் பல்வேறு  வாசிப்புக்குட்படுத்தப்பட்டு நிலைக்கவும் நீக்கவும் படுகிறார்கள்.

புதுமைப்பித்தன் படைப்புகள் சாதிய இலக்கியம் எனும் ஒரு வாசிப்பும், ஜெயகாந்தனின் புனைவுகள் நவீன இலக்கியத்தின் அழகியல் இழந்தவை எனும்  ஆய்வுகளும் தமிழ்ச்சூழலில் நடந்துள்ளன. அதற்குப் பின்னரும் அவர்கள் தமிழ் இலக்கிய உலகின் மகத்தான ஆளுமைகளாக இன்றுவரையில் உலவுகிறார்கள். இன்று நவீன இலக்கியம் பயில வரும் ஒருவர் அப்படி ஒவ்வொரு காலக்கட்டத்திலும் விவாதிக்கப்பட்டு முன்னெடுக்கப்படும் படைப்பாளிகளையே வாசிக்கிறார்கள். ஒருவேளை புதுமைப்பித்தன் காலத்தில் வேறு ஒரு படைப்பாளி பிரபலமாக இருந்திருக்கலாம். ஆனால் இன்று நானோ நீங்களோ சிறுகதை முன்னோடியென எழுதும்போது அவர்கள் பெயர் இருக்காது. இது பல ஆண்டுகளாக அங்குள்ள விமர்சனப் போக்கு  நமக்குள் தன்னிச்சையாக உண்டாகிக்கொடுத்துள்ள  தேர்வு. அதன் வழியாகத்தான் நாம் தமிழக இலக்கியம் என ஒன்றுக்குள் பயனிக்கிறோம்.

இப்போது அடுத்த கேள்வி. தமிழ் இலக்கியத்தில் ஒருவர் வாசகனாக நுழையும்போது இவ்வாறு ஒரு திரண்ட கருத்து முன்வந்து நிற்பதற்கு அங்குள்ள விமர்சன மரபு காரணமாக இருக்கிறது. ஆனால் தமிழகத்தைவிட படைப்பாளுமைகளும் படைப்பிலக்கிய எண்ணிக்கையும் குறைவாக உள்ள நம்மிடம் அது நிகழ்ந்திருக்க வேண்டும் அல்லவா? அது நடந்ததா?

என் நினைவில் உள்ளவரை நீங்கள், ரெ.கார்த்திகேசு, மா.சண்முகசிவா ஆகியோர் அப்படியான விமர்சனங்களை எழுத முயன்றதுண்டு. ஆனால் அவை பெரிய விளைவுகளை உண்டாக்கவில்லை. எழுபதுகள் தொடங்கியாவது மிகக் கறாரான ஓர் எழுத்தாளர் பட்டியல் நம்மிடம் உண்டா என்ற கேள்வியே தொக்கி நிற்கிறது.

கு.அழகிரிசாமி தன் காலத்தில் சில மலேசிய எழுத்தாளர்களை முதன்மையானவர்கள் என்றார். அவர் நடத்திய இலக்கிய வட்டத்தில் கலந்துகொண்ட ஸ்ரீ செ. ஆலிவர் குணசேகர், பொ. சா. பரிதிதாசன், சி. வேலுஸ்வாமி, நாகுமணாளன், சி. வடிவேல், இராச இளவழகன், மு. தனபாக்கியம் ஆகியோரின் புனைவுகளைக் குறிப்பிட்டு பிரபல பத்திரிகையில் வரும் பிரபலமான கதையை ஒத்தது என அவரே எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.  ஆனால் அதன்பின் அவர்கள் புனைவுகள் குறித்த விரிவான உரையாடல் நடைபெறவில்லை. இவர்களின் மொத்தப் புனைவுலகம் குறித்த விமர்சனமும் அடுத்தடுத்த தலைமுறை எழுத்தாளர்களிடமும் நடக்கவில்லை. ஆனால் கு.அழகிரிசாமி சொல்லிச்சென்ற இந்தப் பெயர்கள், அவர்களது படைப்புகளை ஒட்டிய எவ்வித விமர்சனமும் இல்லாமல் மீண்டும் மீண்டும் ஒப்புவிக்கப்பட்டன.

உங்கள் தலைமுறையிலும் ஏராளமான எழுத்தாளர்கள் எழுந்து வந்தார்கள். 70களில் பவுன் பரிசுத் திட்டத்தின் வழி உருவான ஒரு தலைமுறை எழுத்தாளர்கள் பெரிதும் கவனிக்கப்பட்டார்கள். அதுவே சிறுகதைக்கான செழுமையான காலம் என இன்றும் சொல்லப்படுகிறது. ஆனால் அவர்களின் படைப்புகள் குறித்து விரிவான உரையாடல்கள் நடந்து அவர்கள் படைப்புலகத்தில் மிகச்சிறந்தவை அடையாளம் காணப்பட்டதா? மொத்தத் தமிழ் இலக்கியத்தில் அவர்கள் படைப்புகளின் இடம் என்ன என்பது பற்றி யாருக்கும் எந்த அக்கறையும் இருந்ததில்லை.

தொண்ணூறுகளில் நீங்கள் மறுபடியும் சோம்பிக் கிடந்த மலேசிய இலக்கிய உலகை உற்சாகம் பெற வைக்க எடுத்த முயற்சிகள் கவனிக்கத்தக்கவை. நீங்கள் தொகுத்த வேரும் வாழ்வும் இந்தத் தலைமுறைக்கு ஒரு முன்னோடி முயற்சி என்றே சொல்வேன். அதில் குறிப்பிட்ட எழுத்தாளர்களை நீங்கள் தேர்வு செய்தே தொகுத்துள்ளீர்கள் அல்லவா? 1950ஆம் ஆண்டில் தொடங்கிய இலக்கிய முயற்சிக்கு நாற்பது ஆண்டுகள் வயதென்றால் சுமார் 200 பேராவது சிறுகதைகள் எழுதியிருப்பார்கள். அதில் குறிப்பிட்ட எழுத்தாளர்களின் குறிப்பிட்ட கதையைத் தேர்வு செய்து நீங்கள் பதிப்பித்ததுகூட ரசனை அடிப்படையானதே. ஆனால் இது விமர்சனமாக மாற்றம் அடைந்திருக்க வேண்டும்.

அதேபோல, நம் கல்விச்சூழலில் எழுதப்படும் இலக்கியத் திறனாய்வு கட்டுரைகளில் கதைமாந்தர்கள், பாடுபொருள், கருத்து என படைப்பின் புறவடிவ ஆராய்ச்சியை மட்டும் இலக்கிய விமர்சனமென நம்பிக்கொண்டிருப்பவர்களும் உண்டு. அதுபோன்ற கட்டுரைகளில் எல்லாருடைய பெயர்களும் இருக்கும், எவ்வளவு மொண்ணையான படைப்பும் உள்ளடக்கம் சார்ந்து மட்டுமே முக்கியம் என நிறுவப்பட்டிருக்கும், உருவாக்கிக்கொண்ட கோட்பாட்டில் புனைவுகள் திணிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டிருக்கும். ஆனால் அவை எப்போதுமே இலக்கிய விமர்சனத்தின் பங்களிப்பைச் செய்வதே இல்லை.

இன்னொரு பக்கம் எழுத்தாளர் சங்கம் போன்ற அமைப்புகள் தங்கள் விசுவாசிகளின் புனைவுகளை மலேசிய இலக்கியத்தின் முகமெனக் காட்டி இருக்கும் மரியாதையையும் தமிழகத்தில் கெடுத்துவிட்டு வருவார்கள். அதை அயலக பாடநூலாக அங்கீகரிக்கும் கூத்தெல்லாம் நடக்கும். அதற்கு ஒத்தூத மாலன், சுப்ரபாரதிமணியன் போன்றவர்கள் எப்போதுமே தயாராக இருப்பார்கள்.

இந்நிலையில்தான் வல்லினம் மூலம் நாங்கள் சில முயற்சிகள் எடுத்தோம். 1970 – 80களின் உருவான படைப்பாளிகள் நால்வரைத் தேர்வு செய்து அவர்களின் மொத்தச் சிறுகதைகளை மறுவாசிப்பு செய்து ‘புனைவுநிலை உரைத்தல்’ எனும் விமர்சன நூலை வெளியிட்டோம். நான் ‘விருந்தாளிகள் விட்டுச்செல்லும் வாழ்வு’ எனும் மலேசிய நாவல் விமர்சன நூல் எழுதியதும் அ.பாண்டியன் ‘அவரவர் வெளி’ எனும் மலேசிய சிறுகதைகள் குறித்த நூலை எழுதியதும் இருப்பவற்றில் தரமானதை அடையாளம் காட்டவே. அதேபோல தேர்ந்தெடுத்த மூத்த எழுத்தாளர்களின் தலா இரு கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நூலாக வெளியிட்டோம். சீ.முத்துசாமி, முத்தம்மாள் பழனிசாமி படைப்புகளுக்கு விமர்சனக்கூட்டம், அ.ரெங்கசாமிக்கு வல்லினம் விருது போன்றவையெல்லாம் அதன் தொடர்ச்சிதான். ஆனால் இவை போதாது. மேலும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் உள்ள படைப்பாளிகளின் புனைவுகள் வாசிக்கப்பட்டு மறுபடி மறுபடி உரையாடலை நிகழ்த்தும்போதே பிற நாட்டு எழுத்தாளர்களிடம் அவர்களை நாம் கடத்த முடியும்.

இவை அண்மையில் நடந்த சில முன்னெடுப்புகள் மட்டுமே. ஆனால் கடந்த ஐம்பது ஆண்டுகளாக இப்படி எந்தத் தொடர் உழைப்பையும் நாம் செய்யவில்லை. இங்குள்ள எழுத்தாளர்களுக்குள் ஆரோக்கியமான விவாதம் எழுந்து; அது நல்ல புனைவுகளை மீட்டெடுக்கும் முயற்சிகளும் வளரவில்லை.  இந்நிலையில்தான் மலேசிய – சிங்கை இலக்கியத்தை அறிமுகப்படுத்தும் நோக்கோடு தன் வாசிப்பில் அகப்படும் நூல்களை முன்வைத்து பேசும் சுனிலிடம் முரண்படுகிறோம். இது அபத்தமில்லையா?

சுனில் இக்கட்டுரைக்காக மலேசிய – சிங்கப்பூரின் மொத்த இலக்கியங்களையும் அல்லது முக்கியமான இலக்கியங்களை வாசித்திருக்க வேண்டுமென்ற புகார்கள் வந்தபடி உள்ளன. அடுத்த கேள்வி, முக்கியமான என்றால் எந்த முக்கியமான? யார் பார்வையில் முக்கியமான? என்பது. அப்படி முக்கியமான என ஏதும் பட்டியல் போடப்பட்டுள்ளதா? அது தனிமனிதரால் நிகழ்த்தப்பட்டதா? அந்தத் தனி மனிதர் அனைத்துப் படைப்புகளையும் வாசித்து சரியான பார்வையுடன் தன் கருத்துகளைத் தொகுத்துள்ளாரா? என்பது தொடர் கேள்வியாக இருக்கும் அல்லவா. நான் அறிந்து அப்படிச் செய்திருப்பவர்  ஜெயமோகன்தான்.

சமகாலத்தில் சிங்கையில் எழுதுபவர்களின் சிறுகதைகள் குறித்து தெளிவாகவே தன் கருத்தைச் சொல்லியுள்ளார். அதற்கு மாற்றுக்கருத்து இருந்தால், அதுபோன்ற விரிந்த வாசிப்பில் ஓர் ஆரோக்கியமான உரையாடல் நிகழ்ந்திருக்க வேண்டும். ஆனால் போலிஸ் புகாருடன் அந்த அபூர்வமான தருணம் தன் ஆயுளை முடித்துக்கொண்டது. (நான் சிங்கைப் படைப்பாளிகள் சிலரது புனைவுகள் பற்றி கொஞ்சம் எழுதியுள்ளேன்.) அதேபோல விஷ்ணுபுரம் விருதை சீ.முத்துசாமிக்கு வழங்கி அவரது புனைவுலகை கவனப்படுத்தினார். நிலை இப்படி இருக்க, சுனில் சிங்கை, மலேசிய இலக்கியம் குறித்து பேச அந்த மூலத்திலிருந்து எடுத்து வாசித்து உரையாடுவதுதானே நியாயம். மலேசிய – சிங்கப்பூர் இலக்கியம் பற்றிப்பேசும் ஒரு தமிழக எழுத்தாளர் முழுமையாக அனைத்தையும் வாசித்திருக்காதது குற்றமென சொல்லும் நாம்; அதற்கான மூலங்களை விமர்சனங்களின் வழி கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் தொகுத்துக்கொடுக்காமல் இருப்பதை மட்டும் எப்படி சரியென நம்பலாம்.

சை.பீர் சர், வேறு யாரை விடவும் உங்களுக்கு இவை நன்றாகவே புரியும். நீங்கள் இலக்கியத்தில் மட்டுமே வாழ்பவர். அதனால் என் மரியாதைக்குரியவர். மாற்றுக்கருத்தை வரவேற்று மகிழ்பவர். அந்த உற்சாகத்தில்தான் விரிவாக உங்களுடன் பேச முடிகிறது. மலேசிய, சிங்கை இலக்கிய உலகம் கலர் கலராக பஞ்சு மிட்டாய்களை விமர்சனம் என உற்பத்தி செய்துகொண்டிருக்கிறது. தொலைவில் இருந்து பார்க்க அவை  பிரமாண்டமாக, வண்ணமயமாக இருக்கும். ஆனால் அவை ஒரு சொட்டு சீனியால் காற்றின் வழி நூற்கப்பட்டவை. ஈரம் பட்டவுடம் அமுங்கிவிடும். விமர்சனம் என்பது அதுவல்ல. பட்டுப்புழுவிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நூலை அறுவடை செய்து தரமான பட்டுத்துணியை நெய்வது.

நம்மில் பலரும் முயன்றால் கொஞ்சம் கொஞ்சமாக அதை மலேசியாவிலும் நெய்யலாம்.

ம.நவீன்

(Visited 343 times, 1 visits today)