‘ஜிகினாக்களுக்கு மட்டுமே ஒவ்வொரு காலத்திலும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது’
மலேசியாவில் இருந்து வரும் புதிய இலக்கிய அதிர்வுகளின் பின்னணியில் இருக்கும் இளம் எழுத்தாளர்களில் ம.நவீன் ஒரு முக்கிய ஆழுமை. இலக்கிய வடிவங்களின் பல தளங்களில் இயங்கும் நவீன் மலேசியத் தமிழ் இலக்கிய அசைவின் உந்து சக்தியாகவும் இருந்து வருகிறார். தற்போது இணைய இதழாக வரும் ‘வல்லினம்’ தமிழ் இலக்கியத்தில் முக்கிய தடம் பதித்துள்ளது என்பது மிகையான கூற்றல்ல. இவரது படைப்புலகம் பற்றி – பொதுவான மலேசியத் தமிழ் இலக்கியத் தடம் பற்றி ஒரு பதிவை ஏற்படுத்துவதற்காக ஒரு நீண்ட உரையாடலை நவீனுடன் நிகழ்த்தினோம். ஆசிரியர் வேலை- எழுத்துவேலை -இணைய இதழ் வேலை என்று பல்வேறு வேலைகள் அவர் நேரத்தைக் குடித்தாலும் பொறுமையுடன் உரையாடிமைக்கு -எதிர்- நன்றி சொல்கிறது. அவரது நுணுக்கமான சமூகப் பார்வையையும் இலக்கிய ஆழுமையையும் இந்தச் செவ்வியில் அவர் அளித்திருக்கும் பதில்களிற் காணலாம். –http://ethir.org/–
1. பரவலாக அறியப்பட்ட மலேசிய இலக்கிய வலைப் பத்திரிகையாக வல்லினம் இன்று கவனத்திற்குள்ளாகியுள்ளது. மலேசிய இலக்கியவாதிகள் பற்றி எதிர் வாசகர்களுக்குச் சுருக்கமான அறிமுகங்களைத் தரமுடியுமா?
இதற்கு நான் பதில் சொல்வது மிகச் சங்கடமானது. இலக்கியவாதிகள் யார் என்பதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான கருத்தாக்கங்கள் இருப்பது போலவே எனக்கும் உள்ளது. அவ்வகையில் தொடர்ச்சியாக எழுதுவதாலும் புத்தகங்கள் வெளியிடுவதாலும் ஒருவரை இலக்கியவாதியாக அடையாளம் காண முடியாது. இங்குள்ள எழுத்தின் போக்கை தமிழகத்தோடு ஒப்பிட்டு நிராகரிக்கும் மனப்போக்கில் நான் இதை கூறவில்லை. ஒரு படைப்பின் அழகியல் கல்வி, காலம், திணை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டவை. எனது தேர்வு எழுத்தாளனிடம் உள்ள அடிப்படை நேர்மை சார்ந்தது. இனப்பற்று, தனித்தமிழ் , நவீன இலக்கியம், பின் நவீனத்துவம், பகுத்தறிவு, மார்க்ஸியம், மதவாதம் என ஓர் எழுத்தாளன் எவ்வகையான அரசியல் சார்ந்தும் இயங்கலாம். அதில் அவன் எவ்வகையான நேர்மையுடன் செயல்படுகிறான் என்பதுதான் முக்கியம். எந்தச் சக்தியின் முன் அவன் இதை விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்கிறான் என்பதிலிருந்தே நான் ஓர் எழுத்தாளனை அடையாளம் காண்கிறேன். அவ்வகையில் எழுத்தை ஒரு பொழுது போக்கு அம்சமாகவும் , தன்னை முன்னிருத்தும் ஒரு சாதனமாகவும், பணம் சம்பாதிக்கும் வழியாகவும் முன்பும் இப்போதும் இருந்து வருகிறது. இதில் மலேசியாவில் மிகச் சிறு குழு ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இலக்கியம் என்ற ஒன்றை அதன் சுயத்தோடு காலா காலமாக கைமாற்றி கொண்டு வந்திருக்கிறது. அதை பெற்று கொள்ள நானும் வல்லினம் நண்பர்களும் தயாராகிக் கொண்டிருக்கிறோம்.
2. நீங்கள் சொல்லும் பழைய சிறு குழு இலக்கியவாதிகளுக்கும் தற்போது உருவாகிவரும் புதிய தலைமுறை எழுத்தாளர்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. தற்போதைய உக்கிரமான இலக்கியத் தேடல் வித்தியாசமானது. அதிகாரத்துக்கு எதிரான நுட்பமான சமூக நோக்குடன் பலர் எழுதத் தொடங்கியிருப்பது தெரிகிறது. யார் யார் நம்பிக்கை தரும் எழுத்தாளர்கள் என்று நினைக்கிறீர்கள்?
உங்கள் கேள்வியில் முதலில் ஒரு சிறுதிருத்தம். மூத்த இலக்கியவாதிகள் மத்தியிலும் உக்கிரமான இலக்கியத்தேடல் இருந்தே வந்துள்ளது. அவர்கள் இணைவதற்கும் அடுத்தடுத்து நகர்வதற்கும் ஏற்ற இயங்கு தளம் இல்லாமல் போனதுதான் துர்தஷ்டம். அவர்கள் அதை ஏற்படுத்திக்கொள்ளவும் முனையவில்லை. புதிய தலைமுறை பற்றி பதில் சொல்லும் அனுபவத்தில் நான் இல்லை. நான் அவர்களில் ஓர் அங்கமாக இருக்கிறேன். இன்னும் என்னால் மனிதர்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை. நேற்றுவரை காத்திரமாக உரையாடிய இலக்கிய நண்பர்கள் மலிவான அரசியல் சித்தாந்தங்களைக் கொண்டிருக்கும் கட்சிகளில் இணைவதைப் பார்க்கிறேன். அவர்களின் இலக்கியத்தின் பாதை குப்புற கவிழ்ந்து வெவ்வேறு சமரசங்களில் உழல்வதைப் பார்க்கிறேன். எல்லோரிடமும் அவரவருக்கான நியாயங்கள் இருக்கின்றன. இலக்கியம் எதை கொடுத்ததோ இல்லையோ … சமாதானங்களைச் சொல்லவும் சமரசங்களை ஏற்கவும் சொற்களைக் கொடுத்துள்ளது. வாழ்வின் எதார்த்தம் கழுத்தில் கத்தியை வைத்து அழுத்தும் வரை எல்லோருக்கும் காத்திரமாக இருக்க சம்மதம்தான். இவற்றையெல்லாம் என்னால் பார்க்க மட்டுமே முடிகிறது. மிகத்தீவிரமாக இலக்கியம் பேசிய மூத்த அல்லது புதிய தலைமுறையில் அதிகாரத்தின் பாதங்களை நக்கும் பத்து எழுத்தாளர்களை என்னால் வெகு எளிதில் நினைத்துப்பார்க்க முடிகிறது. இந்தப் பயணத்தில் நான் எனக்குள் எழும் கேள்விகளுக்குப் பதில் சொல்வதையே பெரும் சவாலானதாக நினைக்கிறேன். எனக்கு நான் நேர்மையாக இருப்பதும் எனது சொல்லுக்கு நான் நேர்மையாக இருப்பதுமே இப்போதைக்கு முக்கியமாகப் படுகிறது. பத்திரமான ஒரு வளையத்துக்குள் இருந்துகொண்டு சமூக நோக்குடன் எழுதி எதை கிழிக்கப் போகிறேன். என் எழுத்தைப் படித்து நான்கு பேர் தொடர்பு கொண்டு பேசலாம். நான்கு பேர் கடிதம் எழுதலாம். ஒரு கூட்டத்தில் என்னை எளிதாக அடையாளம் காட்டிக்கொள்ளலாம். இவையெல்லாமே என் ஆணவத்திற்கு நீர் வார்க்க உதவும். அவ்வளவுதான். என் சமூகத்திற்கு இப்போது இது தேவையில்லை. மாறாக தாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக சுரண்டப்படுவதை உணர கொஞ்சமாவது சுய பிரக்ஞை மட்டுமே தேவை. குறிப்பாக இளையர் மத்தியில். அவர்கள் அமைதியிழக்க வேண்டும். ஒவ்வொரு நிமிடமும் தங்கள் கழுத்துக்குப் பக்கத்தில் கத்தி தொங்கி கொண்டிருப்பதை உணரவேண்டும். அந்நிலையே ஒருவனை சிந்திக்க வைக்கும். அதை என்னாலோ சக மலேசிய எழுத்தாளர்களாலோ ஒருவனுக்கு ஏற்படுத்த முடிந்தாலும் நான் மகிழ்ச்சி கொள்வேன். அப்போது நீங்கள் கேட்கும் பெயர் பட்டியலில் அவர்கள் பெயர் தானாகவே இணைந்துகொள்ளும்.
3. மலேசியத் தமிழ் இலக்கியத்தில் மாபெரும் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. பல ஆழுமையான எழுத்துகளைப் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. இது இந்திய, இலங்கை இலக்கியத்துக்கு எவ்விதத்திலும் குறைந்ததல்ல. இருப்பினும் மலேசிய இலக்கியம் கவனிக்கப்படாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?
நீங்கள் சொல்லும் மாற்றம் கடந்த சில ஆண்டுகளில் நிகழ்ந்தவை. மேலே நான் சொன்னதுபோல ஆரம்பக்காலம் தொட்டே மூத்தப் படைப்பாளிகள் தங்களின் தீவிரமான இயக்கத்திற்குச் சிற்றிதழ் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டிருந்தால் மலேசிய இலக்கியத்தின் போக்கு இன்னும் தீவிரமானதாக இருந்திருக்கும். இந்த உண்மை எனக்குத் புலப்பட்ட அடுத்த சில மாதங்களிலேயே ‘காதல்’ இதழை தொடங்குவதற்கான பணிகளை 2005 இல் செய்தேன். ’காதல்’ இதழே மலேசியா – சிங்கை தமிழ் இலக்கியச் சூழலில் மாற்றுச் சிந்தனைகளையும், நவீன இலக்கியத்திற்கான சூழலையும் முதன் முதலாக உருவாக்கியது. அதன் தொடர்ச்சியாக வல்லினம் வந்தது. இன்று ஓரளவு மலேசிய இலக்கியம் உலகத் தமிழர்களிடம் சேர காரணமாக இருப்பது இணையம்தான். கவனிக்கப்படாமல் இருக்கவும் சில காரணங்கள் உண்டு. அதில் முக்கியமான இரண்டை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
முதலாவது, மலேசியாவில் இலக்கியம் படைக்கப்படுவதைக் காட்டிலும் தங்கள் ஆளுமைகளை பெரிது படுத்திக் காட்டவே எழுத்தாளர்கள் ஆவல் கொள்கின்றனர். இலக்கியம் என்ற மிகத்தீவிரமான ஒரு நீரோட்டத்தில் இன்று மிக எளிதாக ஐந்தாறு அரைக்குறை கதைகளை எழுதிவிட்டு ஒருவன் இணைந்து கொள்ளலாம். தொடர்ந்து நிகழும் ஏதோ ஒரு சர்ச்சையில் தன்னை இணைத்துக் கொண்டு நான்கைந்து கருத்துகள் கூறி தன்னை அடையாளப் படுத்திக்கொள்ளலாம். புளோக் , அகப்பக்கம், ஃபேஸ் புக் போன்ற தகவல் ஊடகங்கள் அவற்றுக்குப் பெரும் உதவி செய்யும். போதிய சமரசம் செய்து கொண்டால் இருக்கவே இருக்கின்றன ஏதாவது ஒரு சங்கம்… பரிசும் விருதும் கொடுக்க. பின்னர் அப்படி ஒருவன் எழுதிக்கொண்டிருக்கிறான் என்பதை தவிர வேறென்ன அடையாளம் இருக்கப்போகின்றது. இன்று இலங்கையிலும் மற்றும் புலம்பெயர்ந்தும் பரவலாக வாசிக்கப்படும் ஷோபா சக்தி, அ.முத்துலிங்கம், எம்.ஏ.நுஃமான், எஸ்.பொ, சேரன், மு.தளையசிங்கம் போன்றோர் தங்களை தங்கள் படைப்புகளால் மட்டுமே அடையாளம் காட்டிக்கொண்டனர். அவ்வகையான ஆக்ககரமான இலக்கிய முயற்சிகள் மலேசியாவில் நிகழ்ந்துள்ளதா என எங்களை நாங்களே கேட்டுக்கொள்ள வேண்டியுள்ளது. தொடர்ந்து உச்சரிக்கப்படும் ஒரு சிலரின் படைப்புகளை வாசித்துவிட்டு மலேசிய இலக்கியத்தை அநேக தமிழக மற்றும் இலங்கை எழுத்தாளர்கள் நிராகரித்துவிடுகின்றனர்.
இரண்டாவது, மலேசியாவில் நிகழ்ந்த நல்ல இலக்கிய முயற்சிகளை மலேசிய எழுத்தாளர்களே அடையாளம் காட்ட முனைந்திருக்கிறார்களா? அவரவர் விருப்பு வெறுப்பின் அடிப்படையில் சில எழுத்தாளர்களைப் பற்றி பேசுகிறார்களே தவிர கடந்த ஐம்பது ஆண்டுகளில் எத்தனை எழுத்துப் பிரதிகள் குறித்த விரிவான விவாதங்களும் முன்னெடுப்புகளும் நிகழ்ந்துள்ளன? இன்று தமிழ் இலக்கியத்தில் இயங்கும் ஒருவன் மிகச் சாதாரணமாக தமிழகத்தில் எழுதப்பட்ட மிக முக்கியமான எழுப்படிவங்கள் குறித்த மேலோட்டமான பார்வையையாவது கொண்டிருப்பான். இது அவன் வாசிப்பில் ஏற்பட்டதல்ல. காலம்காலமாக பிற எழுத்தாளர்களின் வாய்வழியாகவே இன்றைய தலைமுறைக்கு வந்து சேர்ந்தவை. ஆனால் மலேசியாவில் அவ்வகையான தேர்வுகளே கிடையாது. மலேசியாவில் அனேக படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை முன்னிறுத்தவே காலம் முழுதும் உழைக்கிறார். ஒட்டுமொத்தமான தீவிர வாசிப்பில் குறிப்பிட்ட சில பிரதிகளை முதன்மை படுத்தியதில்லை. இங்கு நான் பேராசிரியர்களை கணக்கில் கொள்ளவில்லை. அவர்களின் இலக்கிய கருத்துகளை எந்தக் காலத்திலும் கவனத்தில் கொள்ள வேண்டியதில்லை. தீவிர எழுத்தாளர்களாய் தங்களை வரித்துக் கொள்பவர்களின் நிலைபாடுதான் கவனத்துக்குறியது. துரதஷ்டவசமாக அவர்களில் பலரும் தங்களை மலேசிய எழுத்தாளர்களாய் உணர்வதே இல்லை. தமிழக கண்களையே தற்காலிகமாக அணிந்துள்ளனர்.
4. பல மலேசியத் தமிழர்கள் இன்று முக்கியமான கலைஞர்களாக வேறு மொழிகளில் இயங்கி வருகிறார்கள். ராணி மூர்த்தி போன்றோர் ஆங்கிலத்தில் முக்கியமான நாடகாசிரியராக கருதப்படுகிறார். இளங்கோவன் பற்றி உங்கள் இதழில் அறிமுகப்படுத்தியிருந்தீர்கள். இதுபோல் பலர். இதற்கு மலேசியக் கல்விமுறை காரணம் என்று நினைக்கிறீர்களா அல்லது இந்தியப் பத்திரிகைகள், இலக்கியவாதிகளின் ஒதுக்குதல் காரணமா?
முதலில் இலக்கியம் என்ற கலை வடிவத்தை ஒருவன் எதன் மூலமாக வெளிப்படுத்த விரும்புகிறான் என்பது அவனது சுய தேர்வு. ஒருவேளை எனக்கு தமிழ் அளவிற்கோ அல்லது அதைவிட அதிகமாகவோ பிற மொழியில் புலமை இருந்திருந்தால் நான் அம்மொழி சார்ந்தும் இயங்கி கொண்டிருக்கலாம். இந்தச் சுய தேர்வை மீறி, சூழலும் சிலர் வெவ்வேறு மொழிகளில் ஈடுபட காரணமாக உள்ளது. குறிப்பாக தமிழில் எழுதும் ஒருவனுக்கு மலேசியாவில் எவ்வகையான அரசாங்க அங்கீகாரமும் கிடைப்பதில்லை. சிங்கையில் அரசாங்க விருதெல்லாம் உண்டு. அங்குத் தமிழ் புத்தகங்களைப் பதிப்பிக்க அரசாங்கத்தில் பண ஒதுக்கீடும் உண்டு. அவர்கள் தமிழையும் தேசிய இலக்கியமாகவே கருதுகிறார்கள். மலேசியாவில் மலாய் மொழிக்கு மட்டுமே அத்தகைய அங்கீகாரங்கள் . இது குறித்து தீவிரமாகச் செயல்பட வேண்டிய எழுத்தாளர் சங்கமும் தங்களுக்கு தேசிய அங்கீகாரமெல்லாம் வேண்டாம் கருணாநிதியும் வைரமுத்துவும் அங்கீகரத்தாலே போதும் என தமிழகத்துப் படையெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இதில் இன்னுமொரு வெட்கக்கேடும் உண்டு. மலேசிய சிங்கை தமிழ்ச் சூழலில் உண்மையான கலைஞன் அடையாளம் காணப்படாமல் ஜிகினாக்களுக்கு மட்டுமே ஒவ்வொரு காலத்திலும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர்கள் தங்களுக்குச் சாதகமானவர்களை ஒவ்வொரு காலக்கட்டத்திலும் முன்னெடுக்க முயல்கிறார்கள். மாற்றுச் சிந்தனைகள் அருவருக்கத்தக்கதாக ஒதுக்கித் தள்ளப்படுகின்றன. ஒரு மேட்டுக்குடி மனோபாவத்தில்தான் பலரும் கலை இலக்கியத்தை அணுகுகின்றனர். இவற்றில் கசந்துபோகும் கலைஞர்களும் தங்கள் படைப்புகளை ஆங்கில மொழிகளில் வெளிப்படுத்துகிறார்கள்.
நீங்கள் சொன்னது போல கல்வி முறைதான் காரணம் என்றும் முழுதுமாகச் சொல்ல முடியாது. இன்று மலாய் மற்றும் ஆங்கில பள்ளிகளில் படித்த பலர் தமிழ் சார்ந்த கலை துறைகளில் இயங்கிக் கொண்டிருக்கின்றனர். தமிழில் அதிகமாக இருக்கின்ற காலியான இடங்களை இவர்கள் தங்களை அரைகுறையான வெளிபாட்டின் மூலம் நிறைக்கின்றனர். உதாரணமாக இங்குள்ள நாடகத்துறையைப் பற்றி கூறலாம். மலேசியாவில் ஒரே நவீன தமிழ் மேடை நாடக இயக்குனராக எஸ்.டி.பாலா மட்டுமே இருக்கிறார். இன்று அவர் மேடை நாடகங்கள் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகின்றன. அரசாங்கத்தின் பண ஒதுக்கீடும் அவருக்குச் சென்று சேர்கிறது. ஆனால் தேர்ந்த மேடை நாடக இயக்குனர் ஒருவர் அந்நாடகத்தைப் பார்க்கும் போது அடையப்போகும் அதிர்ச்சியை என்னால் நன்கு உணர முடிகின்றது. மலாய் கல்வி சூழலைக் கொண்ட அவரின் தமிழ் நாடகங்களின் வசனங்கள் எவ்வகையிலும் ஆழம் இல்லாதவை. ஒரு சமூக பிரச்சனையை நாடகத்தில் அவர் காட்டும் விதமும் அதற்கான தீர்வுகளும் ஒவ்வொரு வீட்டின் குசினிகளிலும் பேசப்படுபவை. இதற்கு நாம் அவரை மட்டும் குறை சொல்ல முடியாது. மலேசியாவில் இருக்கின்ற தமிழ் கலை இலக்கியத்திற்கான வெளியை உரியவர்கள் நிரப்பாத வரையில் இது போன்ற அபத்தங்கள் நடந்துகொண்டே இருக்கும்.
5. அங்கீகாரத்துக்காக விலைபோகும் எழுத்தாளர்கள் பற்றி சாடுகிறீர்கள். மலேசிய அர்த்தத்தில் அங்கீகாரத்துகான ஏக்கம் விளங்கிக்கொள்ளக் கூடியதே. ஒருவிதத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடியதும். ஏனெனில் நீண்டகாலப் புறக்கணிப்பை அங்கிருக்கும் எழுத்தாளர்கள் சந்தித்து வந்துள்ளார்கள். இது தொடர்பாக சமீபத்தில் பாலமுருகன் பொன்னாடை போர்த்தி பரிசு பெற்றது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அங்கீகாரம் கிடைப்பதை நான் சாடவில்லை. அங்கீகாரத்துக்காகச் செய்யப்படும் சமரசங்களையும் வியாபாரங்களையுமே சாடுகிறேன். உலகின் பல்வேறு துறைகளுக்கும் அதில் ஈடுபடும் ஆளுமைகளுக்கும் அதற்கான அங்கீகாரம் கிடைக்கும் போது எழுத்தாளனுக்குக் கிடைப்பதில் என்ன தவறு இருக்க முடியும். அவ்வகையில் பாலமுருகனுக்கு கிடைக்க வேண்டிய விருதுதான் அது. 24 வயதில் அவர் எழுதிய நாவலுக்கு அவ்விருது கிடைத்திருப்பது பாராட்டுக்குறியதே. எழுத்தாளர் சங்கத் தலைவரின் காலில் விழுந்திருந்தால் போதும் ஏதாவது விருது கிடைக்கும் என ஏங்கித்தவிக்கும் எழுத்தாளர்களுக்கு மத்தியில் எழுத்தாளர் சங்கத்தின் எல்லா சுரண்டல்களையும் எதிர்த்து எழுதி வல்லினத்துடனும் ஒரு வருடமாகச் கருத்து வேறுபாட்டின் காரணமாகத் தனிமையில் இருந்தவர் பாலமுருகன். அத்தனிமையிலும் அவர் படைப்பாற்றல் வற்றாதது ஆச்சரியமானது. தன்னைத் தானே இயக்கிக்கொள்ள எப்போதுமே உற்சாகமான ஒரு மனநிலை தேவை. மேலும் எழுத்தின் சக்தியை அறிந்தவரால்தான் அவ்வாறு தொடர்ந்து இயங்க முடியும். அது அவரிடம் இருக்கிறது. விருதை அவர் தீர்மாணிக்காத போது விருது வழங்கப்படும் முறையையும் அவர் அணுமாணித்திருக்க வாய்ப்பில்லை. நாவலின் தரம் குறித்து வாசித்தபின்தான் சொல்ல வேண்டும். மற்றபடி என்னளவில் சிற்றிதழ் சூழலில் இயங்கத்தொடங்கிய அந்த நிமிடத்திலிருந்து போட்டி எதிலும் கலந்துகொள்வதில்லை என முடிவெடுத்தேன். அதை இன்றுவரை கடைப்பிடிக்கிறேன். இலக்கியத்தின் தரம் போட்டிகளால் தீர்மாணிக்கப்படுவதில்லை என எனக்கு சிற்றிதழ் சூழலே உணர்த்தியது.
6. நீங்கள் மலேசிய எழுத்தாளர்களின் குறைபாடுகளை மட்டும் சுட்டிக்காட்டுகிறீர்கள். இதில் தமிழக மற்றும் இலங்கை எழுத்தாளர்களின் பங்கென்ன?
தமிழ் நாட்டிற்குள்ளேயே ஓர் எழுத்தாளனின் உழைப்பை மட்டம் என்று அவனின் ஆளுமையை முழுமுற்றாய் அகற்றும் நண்டு வேலையை பிற எழுத்தாளர் செய்யும் மலிவான அரசியலில் மலேசியா மீது அவர்களின் கடைக்கண் பார்வை பட வேண்டும் என நான் ஏங்கித் தவிக்கவில்லை. இன்று தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்படும் எழுத்தாளர்கள்தான் நம் வாசகர்கள் என்ற அபத்தமான நம்பிக்கையும் இல்லை. தமிழகத்து படைப்பாளிகள் எழுத்திலோ பேச்சிலோ வழங்கும் அங்கீகாரத்தால் என் படைப்பு அதன் உச்சத்தை அடைந்துவிட்டது என நான் கற்பனை செய்தால் என்னைவிட மடையன் வேறு யாரும் இருக்கப் போவதில்லை. பெயர் சொல்லிக்கொள்ளாத தீவிரமான வாசகர்கள் தங்களுக்குத் தகுந்த படைப்பிலங்கியங்களை சென்றடைவார்கள் என்பதில் நம்பிக்கை உள்ளவன் நான். அதுவும் காலத்துக்குக் காலம் மாறுபடும். விமர்சனம் இல்லாது, எல்லா காலத்திலும் கண்மூடித்தனமாகக் கொண்டாடப்படும் படைப்புக்கும், சுயம் குறித்த தேடல் இல்லாமல் கோவிலில் விழுந்து வணங்குவதற்கும் என்ன வித்தியாசம்? நான் நம்பும் வாசகர்களை தமிழ்நாடு , மலேசியா, இலங்கை என பேதம் பிரிக்கவில்லை. அவர்கள் நுணுகி வாசிப்பவர்களாக இருந்துகொண்டே இருக்கிறார்கள். வல்லினத்தை இரண்டு ஆண்டுகள் நடத்துவதில் இதை நான் அறிந்து வைத்துள்ளேன். ‘இது பிரசுரிக்க அல்ல’ என்ற குறிப்புடன் எத்தனையோ வாசகர்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார்கள். என்னைத் திட்டுகிறார்கள். கருத்துகளை முன்வைக்கிறார்கள். ஆலோசனை வழங்குகிறார்கள். எனக்கு இது போதும். இலக்கியத்திற்கு இடைத்தரகர்கள் தேவையில்லை.
7. ‘எழுதாமல் இருத்தல் நிவர்த்தி செய்யமுடியாத பாவச்செயலாக உறுத்தும் விடயம்’ என்று கெமிங்வே ஒரு செவ்வியில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் எழுதிக் குவிப்பவன்தான் எழுத்தாளன் அல்ல சொற்பமாக எழுதினாலும் உருப்படியான இலக்கியம் படைக்கவேண்டும் என்று நினைப்போரிடம் இருந்துதான் நல்ல இலக்கியங்கள் வருகிறது. அதே நேரம் எழுதிக்கொண்டே இருக்கவேண்டும் என்பதும் ஒவ்வொரு எழுத்தாளனினதும் (தாகம்) விடாய். சிலர் குப்பைகளை எழுதிக் குவித்துக் கொண்டிருப்பது எல்லா நாடுகளிலும் பார்க்கக்கூடிய ஒன்றே. மலேசியாவில் மாபெரும் உலகத்தமிழ் இலக்கியம் உருவாகி விட்டது என்று சொல்ல முடியாது. ஆனால் அதற்கான அடிப்படை வேகம் வேட்கை தேடல் உழைப்பு அனைத்தையும் பார்க்க கூடியதாக இருக்கிறது. இந்த இயங்கு தளம் பற்றி விரிவாகப் பகிர முடியுமா?
ஒரு பாய்ச்சல் நிகழ்வதற்கு ஒரே கருத்தை ஒட்டி பலரும் இணைய வேண்டும் என நம்புகிறேன். நீங்கள் ஒருவனை அமர வைத்து ஒரு மாதம் மார்க்ஸியம் பேசி அவனை அச்சிந்தனைக்குள் கொண்டுவரமுடியுமே தவிர அது அவனின் நிரந்தர குணம் ஆகாது. ஆனால் அவனுக்குள்ளிருக்கும் தீ, ஜுவாலைவிட தொடர்ச்சியான உரையாடல்கள் தேவைப்படுகிறது. அதாவது இங்கு யாரும் யாராலும் உருவாக்கப்படவில்லை என்பதே உண்மை.
நான் எனது பதினேழவதுவது வயதிலிருந்தே இதழ் சார்ந்து இயங்கி கொண்டிருக்கிறேன். ஜனரஞ்சகத்தின் அத்தனை சுபாவங்களும் எனக்கு நன்கு தெரியும். எனது கவிதைகள் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் பல போட்டிகளில் முதல் பரிசுகளை வென்றிருந்தது. இதற்கிடையில் நாவல் எழுதி 23 வயதில் தேசிய அளவில் இரண்டாவது பரிசும் பெற்றிருந்தேன். விருதுகள் வழங்கவும் வாங்கவும் ஏற்ற மனிதர்கள் என்னைச் சுற்றி இருந்தார்கள் மிக குதூகலமான ஜனரஞ்சகக் கடலில் நீச்சல் அடிக்கும் ஒரு சூழலில்தான் சண்முகசிவாவுடனான தொடர்பு ஏற்பட்டது.
முதல் சந்திப்பில் அவர் வினவிய எந்தக் கேள்விக்கும் என்னிடம் நேர்மையான பதில் இல்லை. மென்மையான குரலில் தொணித்த அவர் கேள்விகள் என்னை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியது. அவரிடம் நான் பதில் சொல்லித் தப்பிக்க முடிந்ததே தவிர என்னிடம் பதில் சொல்லி நான் தப்ப முடியவில்லை. சண்முகசிவாவின் ஆலோசனையுடன் வாசிப்பின் தளம் மாறியபோது மலேசியாவில் இலக்கியத் தேக்க நிலையை உணர முடிந்தது. மலேசியாவிலும் சிற்றிதழ் சூழல் உருவாக வேண்டுமென விரும்பினேன். அச்சமயம் மூத்த பத்திரிகையாளர் பெரு.அ.தமிழ்மணி அவர்களுடன் நட்பு ஏற்பட்டது. அவருடன் தொடர்ந்து உரையாடியதில் ஏற்பட்ட நம்பிக்கையால் ‘காதல்’ எனும் இலக்கிய இதழ் உருவானது. ‘காதல்’ இதழை அவர் மகள் மணிமொழி நிர்வாகம் செய்ய நான் உள்ளடகப் பொறுப்புகளைப் பார்த்துக்கொண்டேன். மணிமொழி பெரியாரியத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். அதே போல அவ்விதழ் உருவாக்கத்திற்காக சிவத்தையும் யுவராஜனையும் அழைத்திருந்தேன். சிவம் கவிதை குறித்த தனித்த பார்வை கொண்டவராய் இருந்தார். அதே போல யுவராஜன் அதிகம் வாசிந்திருந்தார். அவர் பயின்ற பல்கலைக்கழகம் அதற்கு தகுந்த களமாய் இருந்தது. கவிஞர் தோழி மற்றும் பூங்குழலியும் எங்களுடன் பங்கு கொண்டனர். பூங்குழலி ஈழத்தோடு தன்னை இணைத்துக்கொண்டவர். அவரது இளங்கலை ஆய்வே ஈழ வரலாறு குறித்தே இருந்தது. இதழை வடிவமைத்த சந்துரு நவீன ஓவியர். மலேசியாவில் அவர் ஓவியங்களுக்குத் தனித்த அடையாளம் இருந்தது.
இவ்வாறு பல்வேறு குணங்களுடன் ஆனால் எவ்வகையான அதிகாரத்துக்கும் பணிந்து போகாத ஓர் இளையர் குழு இயல்பாய் இணையும் போது அவரவருக்கான தனித்தனி தீ ஒட்டுமொத்தமாய் ஒரே ஜோதியாய் மிளிர்ந்தது. ‘காதல்’ இதழ் மூலம் வேறுபட்ட வாசகர் பரப்பை உருவாக்க முடிந்தது. அவ்வாறு உருவானவர்களில் முக்கியமானவர் பாலமுருகன். ‘காதல்’ இதழ் பொருளாதார போதாமையால் மூடப்பட்ட போது நான் ‘வல்லினம்’ இதழைத் தொடங்கினேன். பாலமுருகன் எங்களோடு வல்லினத்தில் இணைந்து கொண்டார். அதே போல நான் கவிதை போட்டிகளில் கலந்து கொண்டக் காலத்தில் மிகத்தீவிரமாகக் கவிதையும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டிருந்த சிவா பெரியண்ணனுடன் ஏற்பட்ட இரண்டாம் கட்ட சந்திப்பில் அவரும் எங்களோடு இணைந்து இன்று அவரே வல்லினம் அகப்பக்கத்தை வடிவமைத்து அதை ஆரோக்கியமான வாசகர் பரப்பில் கொண்டு சேர்ப்பவராக இருக்கிறார். எங்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறான ஆளுமைகளும் வெவ்வேறு வகையான கருத்துகளும் முரண்பாடுகளும் இருப்பதே எங்களின் பலமென நினைக்கிறேன். சாதி சங்கங்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும்தானே ஒத்த கருத்துகள் தேவை.
இவ்வாறான பல்வேறு மாறுபட்ட கருத்து சூழலில் நாங்கள் மலேசிய இலக்கியத்தில் இயங்கி கொண்டிருக்கிறோம். இதுபோன்றதொரு சூழல் இதுவரை மலேசிய இலக்கியத்தில் நடந்ததாகத் தகவல் இல்லை. இதை நான் சாதனை என்று சொல்லவரவில்லை. ஒவ்வொரு மனிதனும் தனியனாக இருந்தாலும் ஒரு பொது வளர்ச்சிக்காக இணைவதில்தான் பாய்ச்சல் சாத்தியமாவதாக சில சம்பவங்களின் வழி உணர்கிறேன். முக்கியமாக ‘வல்லினம்’ இதழ் பாதிப்பால் சிங்கையில் வெளிவரத்தொடங்கிய ‘நாம்’ சிற்றிதழ். ‘காதல்’ இதழ் வழி எங்களை அடைந்த பாலமுருகன் உருவாக்கிய ‘அநங்கம்’ . நல்ல இலக்கியத்திற்கு ஆரோக்கியமான சூழல் உள்ளதென அறிந்து கொண்டு ஏ.தேவராஜன் வெளியிடும் ‘மௌனம்’ எனும் கவிதைக்கானச் சிற்றிதழ் என அடுக்கிக் கொண்டே போகலாம். இடையில் கழிந்து போனதை தவிர இப்போது இருக்கும் வல்லினம் குழுவினரின் நேர்மை வலுவாக இருக்கும் வரையில் அதன் அதிர்வலை சுற்றியுள்ளவர்களை தொடர்ந்து இயக்கிக் கொண்டே இருக்கும்.
8. உங்களின் கவிதைப் புத்தகமான ‘சர்வம் ப்ரம்மாஸ்மி’ யை ஆங்கிலம் தமிழ் என்று இரு மொழிகளிள் கொண்டு வந்ததுக்கு ஏதாவது காரணம் உண்டா?
உண்மையில் அத்தொகுப்பு முதலில் ‘உயிர்மை’ பதிப்பில் வந்தது. அதன் வடிவத்தையும் புத்தகத்தின் அமைப்பையும் பார்த்த சிங்கை இளங்கோவன்தான் முதலில் அதிருப்தி அடைந்தார். அவர்தான் அப்புத்தகம் இருமொழியில் வரவேண்டும் என்ற திட்டம் கொடுத்தார். சிங்கை இளங்கோவன் எதையுமே உலக போக்கோடு ஒப்பிடக்கூடியவர். எதிலும் ஒரு நேர்த்தி இருக்க வேண்டும் என விரும்புபவர். அவரே எனது கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தார். என்னை இருமொழிகளிலும் வெளியிடும்படி ஊக்கப்படுத்தினார். புத்தகம் வந்தபோது தனது புத்தகம் போல மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். இதுபோன்ற எதையும் எதிர்ப்பாராத அன்பு செலுத்துபவர்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறார்கள். அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி. காரணம் எதையும் எதிர்ப்பார்க்காத அன்பு என்பது பல வீனமானவர்களிடமிருந்தும் தாழ்வு மனப்பான்மை உள்ளவர்களிடமிருந்து கிடைப்பதில்லை. அவர்கள் தாங்களிடம் உள்ள சொற்பமான ஒன்றை இழப்பது போன்று பதற்றம் அடைவார்கள். தங்கள் மேல் ஆழமான நம்பிக்கை கொண்டவர்களிடமிருந்தே முழுமையான அன்பும் உதவியும் கிடைக்கிறது. என்னைச் சுற்றி சிலராவது அப்படி இருப்பது எத்தனை மகத்தானது
9. கவிதைகளைப் பற்றிக் பேசுவது சிக்கலானது. தனி மனித உணர்வுகள்- வித்தியாசமான வாசிப்புகள் -புரிதல்கள் என்று பல்வேறு பரிணாமங்களைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் பேசமுடியாது. இருப்பினும் சில பொதுவான இலக்கிய அடையாளங்கள் பற்றிப் பேச முடியும். உங்களது கவிதைகளைப் படித்த போது பழைய கணையாழிக் கவிதைகள் தான் ஞாபகத்துக்கு வந்தது. இப்பதிப்பு வந்து ஓராண்டுக்கும் மேலான நிலையில் இத்தொகுப்பு உங்களுக்கு நிறைவைத் தருகிறதா?
இல்லை. முதலில் அத்தொகுப்பை ஒட்டி இதுவரை சாதகமாகவோ பாதகமாகவோ விரிவான ஒரு விமர்சனம் எழுத்து ரீதியில் வரவில்லை. அது ஒரு குறிப்பிட்ட காலம்வரை நான் எழுதிய கவிதைகள். அதில் எனது சில நம்பிக்கைகளும் தடுமாற்றங்களும் உள்ளன. நமது வாழ்வின் ஒரு பகுதியை நாம் நிராகரிப்பதும் அல்லது கொண்டாடுவதும் சரியாகாது. வாழ்வென்பது முழுமையானதுதானே! ஆனால் இப்போதும் அதை நான் படித்துப் பார்க்கையில் எனக்குள் மிக ஆழத்தில் இருக்கும் நான் ஆங்காங்கே வெளிப்பட்டிருப்பது தெரிகிறது. அது முதன்முதலாக கண்ணாடியை நிர்வாணமாக பார்க்கும் குழந்தையின் சிலிர்ப்பை எனக்கு ஒவ்வொரு முறையும் தருகிறது. அக்கவிதைகளை கூர்ந்து வாசிக்கும் ஒருவன் தானும் அதுபோன்ற அபத்தங்களை கடந்து வந்த தருணம் ஞாபகம் வந்து கூச்சமடைய வைக்கலாம். மேலும் அத்தொகுப்பில் மற்றுமொரு பகுதி சமூகத்தை நோக்கி கேள்வி எழுப்புகிறது. திடமான ஒரு பகுதியில் சலனத்தை ஏற்படுத்த முயல்கிறது. என் நோக்கம் முதலில் சலனம் ஏற்படுத்துவதுதான். இரும்பில் ஒட்டியிருக்கும் துரு சில சமயம் அசைக்கப்படும் போதுகூட தானே விழும் வாய்ப்பு உண்டு.
10. பிச்சமூர்த்தி காலத்தில் இருந்து நீண்ட காலத்தை கடந்து வந்து விட்டது ‘புதுக்கவிதை’. இந்தப் புதுக்கவிதை நடையில் இனி ஒரு புதுசும் இல்லை. ஒரு கவிஞனாக இதை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?
கவிஞனாக மட்டும் இல்லை பொதுவாகவே ஓர் இலக்கிய வாசகனாக நான் வடிவ ரீதியான சிக்கலை பொருட்படுத்த விரும்புபவனல்ல. நான் ஒரு கவிஞனாக சில உணர்வுகளைச் சொல்ல ஒரு பாணியைத் தேர்ந்தெடுக்கிறேன். அது எனது இதற்கு முந்தைய வாசிப்பின் ஒரு சாயலை ஒத்திருக்கிறது. ஒருவேளை எனக்கு அந்தப் பாணி அவசியமில்லை என கருதும்போது அதைவிட்டு வெளிவர எல்லா வகையான சுதந்திரத்தையும் என்னில் நான் கொண்டுள்ளேன். கவிதை தனக்கான நடையை தானே தேடி அடைகிறது. இலக்கியத்தில் வடிவம் பற்றியும் அமைப்பு பற்றியும் பேசுபவர்கள் சுதந்திரம் பற்றி பேசக்கூடாது. யார் கண்டுப்பிடித்தது இந்த வடிவத்தை. காலம் காலமாக வாசகர் மத்தியில் வெற்றிபெரும் வடிவம்தான் இலக்கியத்திற்கு ஏற்புடையதா என்ன? பொதுவாகவே எழுத்தாளன் வாசகனின் சுவாரசியத்துக்கு தீனி போட விரும்புபவனாக இருக்கிறான். ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் வாசகனின் பார்வையிலிருந்து ஒவ்வொரு படைப்பாளியும் தன் படைப்பை வாசிக்கத் தவறுவதில்லை. சில எழுத்தாளர்கள்தான் தனது எழுதுக்கான புதிய வாசக பரப்பை ஏற்படுத்துகிறார்கள். புதிய வாசிப்பனுபவத்தை வழங்குகிறார்கள். நான் கவிதையின் நடையைத் தாண்டி கொதிக்கும் உணர்வின் வடிக்காலாக ஒட்டுமொத்தமான ஒரு தளத்தை உருவாக்குகிறேன். வெற்று வார்த்தைகளால் சொல்லமுடியாத அவ்வுணர்வுக்கு நாளையே சந்தமும் எதுகை மோனையும் தேவைப்பட்டாலும் சேர்த்துக்கொள்ள எந்தத் தயக்கமும் இல்லை அதே போல அதை சிதைக்கவும்.
11. நீங்கள் படைப்பாளி என்ற நோக்கிலிருந்து கொண்டு அந்த படைப்பு எந்த வடிவத்தில் வடிந்தாலும் பரவாயில்லை என்ற அர்த்தத்தில் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஆனால் வடிவத்தை மீறி -படைப்பாளி முன்வைக்கும் மொழியைத்தாண்டி வாசகனால் படைப்புக்குள் நுழைய முடியுமா? அந்த அர்த்தத்தில் வடிவம் முக்கியமானது தானே. கவிதை என்ற வடிவம் இன்று எவ்வளவு தூரம் வெற்றியளிக்கும்? -அதாவது உயிர்ப்புள்ள படைப்பை காவிச் செல்லும்; – என்பது சந்தேகமாக இருக்கிறது. உலகெங்கும் பெரும்பாலான படைப்பாளிகள் கவிதை அல்லாத வடிவத்தையே தேர்ந்தெடுக்கிறார்கள். குறுகிய இலக்கிய வட்டங்களுக்குள் மட்டும் கவனம் பெறும் கவிஞர்கள் சிலர் பின்னர்; நோபல் பரிசு முதலான பரிசுகளை வெல்வதன் மூலம் பொதுக் கவனத்துக்கு வருகிறார்கள். அதன்பிறகுகூட பெரும்பான்மையானவர்கள் வாசிப்பதில்லை. தமிழில் நிலை வேறு. பெரும்பான்மைப் படைப்பாளிகள் கவிதை எழுதுகிறார்கள். இதற்குப் படைப்புச் சோம்பேறித்தனம் காரணமென்றும் சிலர் சொல்கிறார்கள். இவை பற்றி உங்கள் கருத்தென்ன?
நான் அவ்வாறு நினைக்கவில்லை. பாவினமும் செய்யுளும்தானே தமிழ் இலக்கியத்தின் தொடக்கம். என்னதான் ஐரோப்பிய தாக்கங்கள் நமது இலக்கிய வடிவில் புகுந்தாலும் நமக்குறிய இலக்கிய வடிவம் வெவ்வேறு சொல் அடுக்குகளிலும் பெயர்களிலும் நம்மை வந்து அடைவதாகவே கருதுகிறேன். இன்னமும் நான் திருக்குறளை வாசிக்கும் போது அஃது நவீன கவிதை உணர்த்தும் பல்வேறு உணர்வு தளங்களை என்னுள் ஏற்படுத்துவதாகவே உள்ளது.
’யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்’ எனும்போது அதில் உள்ள மொழியின் குழைவு ஒரு பெண் வெட்கப்படுவது போன்ற ஒரு காட்சியை அதன் அர்த்தங்களையெல்லாம் மீறி காட்டுகிறது. பல குறட்பாக்களை இதுபோல உதாரணம் காட்ட முடியும். அதே போல மணிமொழியுடன் உணவருந்தும் போதெல்லாம் நான் அவ்வப்போது விளையாட்டாக ஒரு திருமந்திரத்தைச் சொல்லிக்கொண்டே இருப்பதுண்டு.
’அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்
இடப்பக்க மேஇறை நொந்தது என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழி தாரே’ . ஒரு மரணம் நிகழும் தருணத்தை எவ்வித மிகை உணர்வும் இல்லாமல் மரணம் எவ்வாறும் நிகழும் என்பது போன்ற ஒரு மொழியின் அடுக்கை இதில் காண்கிறேன். இவ்வாறான வரட்சி மிக்க வரிகள் மூலம் உருவாகும் நவீனக் கவிதைகளை இன்று ஏராளம் பார்க்கிறோம். இவ்வாறு பலநூறு ஆண்டுகளின் கவிதை அல்லது பாவின மரபு ஊறிய நமது இரத்த அணுக்களிலிருந்து கவிதைதானே அதிகம் பிறக்கும்.
தற்சமயம் நான் சில கவிதைகளைப் படிப்பதைக்கூடத் தவிர்க்கிறேன். அவை எனது மிக அந்தரங்கமான ஒரு மனநிலையை அப்பட்டமாகக் காட்டிவிடுவதாகக் கூச்சம் கொள்கிறேன். நவீன கவிதைகளின் போக்கு அதுதான் . அது தற்கால மனிதனின் அக புற சிக்கல்களைப் பேசுகிறது. குறிப்பாக மனுஷ்ய புத்திரன் கவிதைகள். தமிழகத்தில் அவர் வீட்டில் தங்கியிருந்த போது , மறுநாள் வெளியீடுக்காணப் போகும் ‘கடவுளுடன் பிராதித்தல்’ புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தேன். அதில் ஒரு கவிதை (தலைப்பை சொல்ல விரும்பவில்லை) என்னை மிகவும் பாதித்தது. அது எனக்கான உணர்வென்று தோன்றியது. என் கவிதையென என்னிடம் ஒட்டிக்கொண்டது. அன்று காலையிலேயே அக்கவிதையை அவரிடம் காட்டினேன். அது தன்னையும் அதிகம் பாதித்தக் கவிதை என்றார். அந்நேரத்தில் அவரிடம் ஒரு வருத்தம் உதித்தது. பொதுவாகவே அவர் கவிதைகளை நடுக்கத்துடந்தான் வாசிப்பேன். சிறுகதைகள் என்னை அவ்வாறு செய்வதில்லை. சிறுகதைகளை பிறருக்கு நடப்பது போன்ற ஒரு சுயநலத்துடன் வேடிக்கைப் பார்க்க முடிகிறது. கவிதைகள் முற்றிலும் வேறானவை. பாரதியின் பல கவிதைகள் இவ்வாறானவை. ஆத்மாநாம் கவிதைகள் என்னை பல சமயங்களில் செயலிலக்க வைத்துவிடும். முகுந்த் நாகராஜன் கவிதைகளும் மிக ஆழமாய் சீண்டுகின்றன. நான் இதை சொல்வதற்குக் காரணம் கவிதை எழுதுதல் அவ்வளவு எளிதானது அல்ல. சொற்கள் மூலம் ரோஜாவின் வாசத்தை உணர்த்துவது போல. கவிதையை நான் இவ்வாறு புரிந்து கொள்கிறேனே தவிர எதையும் திட்டவட்டமாகச் சொல்லவில்லை. அப்படி சொன்னால் கவிதைக்கே பிடிக்காது. மற்றபடி படைப்புச் சோம்பேறித் தனத்தாலும் உருவாகும் கவிதைகளும் வந்து கொண்டுதான் இருக்கும். பின்னர் அதுவாகவே காணாமல் போய்விடும்… தலைவாராத சோம்பேறியின் தலையில் உருவாகும் பேன்கள்போல.
12. தான் ‘லகரியில்’ எழுதுவதாக சு.ரா எழுதியது ஞாபகத்துக்கு வருகிறது. கவிதை சொற்கள் சேர்த்து தானாக வெளியாகிறது என்கிறீர்கள். கவிதை எழுதும் நிகழ்வு எப்படி நிகழ்கிறது?
இன்று புதிதாய் நவீன கவிதைகளை வாசிக்க வரும் ஒருவருக்கு நான் முதலில் பரிந்துரைப்பது சுந்தர ராமசாமியின் விமர்சன நூலான ‘ந.பிச்சமூர்த்தியின் கலை : மரபும் மனித நேயமும்’ தான். அதேபோல மிகக் கவனமாய் தவிர்ப்பது அவரின் கவிதை தொகுதியாகத்தான் இருக்கும். ஒருவேளை சுந்தர ராமசாமியின் கவித்துவத்தை அறிந்து கொள்ள முடியாத அளவிற்கு நான் மக்காக இருக்கிறேனோ என்னவோ.
உங்கள் கேள்வி சுவாரசியமானது. இதுவரையில் நான் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாத ஒன்று சுவாரசியமானதுதானே. கவிதை எழுதப் போகும் காலக்கட்டம் எனக்கு சில அறிகுறிகளை முன்னமே வழங்கிவிடுகின்றன. முதலில் என் மூளையின் சுறுசுறுப்பு அதிகரித்திருக்கும். அதன் விளைவாகத் தூங்க முடியாது. மனதில் கவிதை ஏற்கனவே பல்லாயிரம் முறை எழுதப்பட்டுவிட்ட நிலையில் அதன் மைய உணர்ச்சியை மட்டும் மனமும் அறிவும் கூர்ந்து பார்த்துக்கொண்டே இருக்கும். பின்னர் அது வெளிப்படும். அடுத்த நிமிடமே தூக்கம்தான். (இதை சொல்வதற்கும் ஒரு வகையில் நடுக்கமாக இருக்கிறது. இதை படிக்கும் யாராவது டாக்டர் இது மனநோயின் அறிகுறி என்று கூறிவிட்டால் பின்னர் நான் புகழ் பெற்ற எழுத்தாளனாகி விடுவேன். இன்று தமிழகத்தில் மனநோயுடன் இருப்பதுதான் எழுத்தாளனுக்கான தகுதிபோல மாறிவிட்டது. ) கவிதை எழுத்து பூர்வமாக வெளிவருவது அப்போதைய வசதி பொருத்து அமையும். வைரமுத்து போல எந்த நேரமும் ஒரு கவிஞனின் வேஷத்துடன் அலைய முடியாத நிலையிலும் அவருக்கு இருப்பது போன்ற உதவியாளர்கள் எந்த நேரமும் எழுத்தாணியும் ஓலையுடன் என்னிடம் தயாராக இல்லாத நிலையில் கைத்தொலைப்பேசியில் கூட சில சமயங்களில் பதிவு செய்து வைத்துக்கொள்வதுண்டு.
நுண்ணிய உணர்வுகளை வெளிப்படுத்த சொற்களின் தேர்வு அவசியமாகிறது. சொற்களின் தேர்வு அறிவின் பரப்பில் நடப்பதாக நான் கருதவில்லை. கவிதையில் உதிரும் சில சொற்கள் எப்படி அங்கு வந்தன என்ற குழப்பம் ஒரு கவிதை எழுதி முடிந்தபின் இன்றளவும் எனக்கு நேர்கிறது. சொற்களின் தேர்வு ஆழ்மனதில் உருவாகிறது என்று நினைக்கிறேன். என் சேகரிப்பில் இருக்கும் மிகப் பொருத்தமான வார்த்தை கவிதை எழுதும் போது விழுகிறது. இங்கு நுண்ணிய உணர்வு என்பது என்னவென்ற கேள்வியும் வரலாம். ஓர் எளிய உதாரணம் சொல்கிறேன். கார் விபத்தின் ஒருவன் தன் மனைவியையும் தன் காரையும் இழந்துவிட்டான். இதை நான் ஒரு வாக்கியத்தில் இவ்விரு இழப்புக்கும் அவனிடம் ‘கவலை’ என்ற உணர்வு ஏற்பட்டிருப்பதாகக் கூறலாம். ஆனால் இவ்விரண்டின் இழப்பிற்கும் அவனிடம் எழும் கவலை ஒன்று போலவா இருக்கிறது? இவ்விரண்டிற்கும் அவனுக்குமான உறவின் நிலை வேறானதுதானே. அப்படிப் பார்க்கும் போது அவ்வுணர்வின் பேர் கவலை இல்லை. அவ்வுணர்வுக்குச் சொல்லே இல்லை. அவ்வுணர்வை ஒரு கவிஞனால் உணரவைக்க முடியும். அதன் மிக நுண்ணிய உணர்வின் பகுதியை விழிப்படையச் செய்ய வைக்க முடியும். சொற்கள் எழுத்துகளால் ஆனது. எழுத்துகள் ஓசைகளால் ஆனது. மொழி ஆய்வாளர்கள் மனித உணர்விலிருந்து தோன்றியது மொழி என்கின்றனர். கோபத்தினால் ‘ஆ’ என்றும் சிரிக்கும் போது ‘ஈ’ என்றும் அழுகையில் ‘ஊ’ என்றும் எழுத்துகள் தோன்றியதாக ஆய்வேடுகள் சொல்கின்றன. சொல் கொடுக்கும் அர்த்தமும் ஓசையும் சதா மனதை அறிக்கும் உணர்வை வெளிப்படுத்த ஏற்றதாய் அமையும்போது கவிதை யாருக்காகவும் காத்திருப்பதில்லை.
13 கவிதை வரும்போது வடிவமும் சேர்ந்தா வருகிறது. எதை வைத்து வசனம் பிரித்துப்போடுகிறீர்கள். உங்கள் கவிதையின் வடிவத்தை தீர்மானிப்பது எது?
கவிதை மிகக் குறைந்த சொற்களைக் கொண்டது. ஒவ்வொரு வார்த்தையும் ஒரு உணர்வு தளத்தை வெளிப்படுத்துவதற்கான ஆயுதங்கள். அங்கு தூங்குகின்ற சொற்களுக்கு இடமே இல்லை. என் பெரும்பாலான கவிதைகளில் ஒவ்வொரு வரியும் ஓர் உணர்வைக் கைமாற்றிக் கொண்டு செல்லும் படிதான் அமைக்கிறேன். வடிவங்களை நான் தீர்மாணிக்கவில்லை. அதை கவிதைதான் தீர்மாணிக்கிறது.
14. சமகாலத்தில் மனுஷ்ய புத்திரன் பல நல்ல கவிதைகளை எழுதியுள்ளார். அதே சமயம் ஒரு பதிப்பாசிரியராகவும் கடின வேலையுடன் ஓடித்திரிகிறார். நல்ல கவிதைகளை எழுதும் ஆதவன் தீட்சண்யா முழு நேர வேலைக்கும் அப்பால் கட்சி வேலை, எழுத்தாளர் முற்போக்கு சங்க வேலை என்று அலைகிறார். அதற்குள் இலக்கிய இதழும் கொண்டுவருகிறார். நீங்களும் முழுநேர பள்ளி ஆசிரியர் வேலையுடன் வல்லின மாத இதழைக் கொண்டு வருவதற்கு மத்தியில் கவிதை எழுதி வருகின்றீர்கள். தமிழில் இது எல்லா எழுத்தாளர்களும் எதிர்கொள்ளும் நிலைதான் என்பதைக் கடந்த வல்லினம் இதழில் (25வது) சாருநிவேதிதா சொல்லியிருந்தார். இருப்பினும் இது படைப்பியக்கத்தை நிச்சயமாக பாதிக்கும் விசயம். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நீங்கள் கூறிய பணிகளுக்கிடையில் என் மேற்படிப்பையும் மேற்கொண்டு வருகிறேன். வல்லினம் அகப்பக்கத்தை உருவாக்கும் மிகக் கடுமையான பணியை சிவா பெரியண்ணன் செய்வதால் நான் படைப்புகளைச் சேகரித்து அவற்றைச் செறிவாக்கும் பொறுப்பை மட்டும் மேற்கொள்கிறேன். இன்னும் மூத்த எழுத்தாளர்களின் வாழ்வையும் அவர்கள் ஆளுமைகளையும் பதிவு செய்யும் வகையில் நானும் சிவாவும் எழுத்தாளர்களை ஆவணப்படம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளோம். பள்ளி வேலையும் மிக முக்கியமானது. குறிப்பாக அடித்தட்டு மக்களுக்கான கல்விக்கூடம்போல மேட்டுக்குடி புத்தியுள்ளவர்களால் காட்டப்படும் தமிழ்ப்பள்ளிகளில் என் போன்றவர்களின் கடமை மிக அதிகம். ஒரு சந்ததியினரை முன்னோக்கி நகர்த்த வேண்டிய பெரும்பணி அது. அதுவும் நான் பணிபுரியும் பள்ளியில் முப்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தாய் தந்தை இல்லாதவர்கள். ஓர் ஆசிரமத்தில் தங்கி சமூக நல உதவிகளால் பயில்கிறார்கள். அவர்களுக்கு ஏற்படும் மனச்சிதைவையும் வாழ்வின் மீதான அவநம்பிக்கைகளையும் களைவதை என் முதல் பணியாகக் கருதுகிறேன். ஏட்டுக்கல்வியைக் கற்பிப்பது என்பதெல்லாம் அடுத்தக்கட்டம்தான்.
இதற்கிடையில் இலக்கியத்தில் தொடர்ந்து இயங்குவது ஒரு வகையில் சவால் மிக்கதுதான். இங்கு நான் கவிதை எழுதுவதை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. கவிதை எப்போதும் என் மனதில் ஊறிக்கொண்டுதான் இருக்கிறது. ஓர் உணர்வை வெளிப்படுத்த கவிதை தனக்கான தகுந்த சொற்களை சேகரித்துக்கொண்டே இருக்கிறது. நானே எதிர்ப்பார்க்காத ஒரு தருணம் அது என்னிலிருந்து வெளிப்படுகிறது. வாழ்வின் மிகுந்த இக்கட்டான சூழல்களில்கூட என்னால் கவிதை எழுத முடிந்ததை இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது. கவிதை மற்ற இலக்கிய வடிவங்கள் போலல்லாமல் சற்றும் கருணை காட்டாது மனதைத் துளைத்துக்கொண்டு இரத்தக்கவுச்சியுடன் வெளிவந்து விழுகிறது. அது இடம் பொருளையெல்லாம் பார்ப்பதில்லை. அந்த உக்கிரமான தருணத்திற்குப் பிறகு மனம் ஆசுவாசம் அடைகிறது. ஒரு புணர்ச்சிக்குப் பின்னர் வெளிப்படும் சுவாசம் போல அங்கும் நிகழ்கிறது. இந்த வரியைப் படிக்கும் ஒரு கவிஞர் அத்தருணத்தை இந்நேரம் நன்கு உணர்ந்திருப்பார். ஒருதரம் மூச்சை இழுத்தும் விட்டிருப்பார்.
சிறுகதை , கட்டுரை எழுதுவதிலும் பாதிப்பு உண்டென சொல்ல முடியாது. எதையுமே தொட்டு எழுதாமல் மிகுந்த ஓய்வு நிலையில் வாசித்தப்படியே என் பொழுதுகள் பலவற்றையும் கழித்துள்ளேன். வாசிக்கவும் செய்யாமல் தொடர்ந்து டீ, காப்பி குடித்தப்படியே சில தினங்களைப் போக்கியதும் உண்டு. அதையும் செய்யாமல் தூங்கிக் கொண்டே இருந்த தினங்களும் உண்டு. எழுத்தும் வேட்கை உண்மையில் எழும்போது நேரம் பற்றாக்குறையெல்லாம் வெற்றுக் காரணங்கள்தான்.
நான் பாதிப்பாக நினைப்பது என் வாசிப்பில்தான் நிகழ்கிறது. மற்றவர்களுக்கு எப்படியெனத் தெரியாது வாசிப்பதற்கு எனக்கு மன நிலை அவசியமாகிறது. அதிக புத்தகங்களை படித்து கிழித்து ‘நான் என்னென்னலாம் படிச்சிருக்கேன் தெரியுமா?’ என பட்டியலிட்டுக்கொண்டிருக்கும் நோக்கமெல்லாம் என்னிடம் இல்லை. ஒரு புத்தகமாக இருந்தாலும் ஆழமான வாசிப்பாக இருக்க வேண்டும். அப்புத்தகத்துடன் நான் விவாதிக்க வேண்டும். எனக்குள் நான் முரண்படும் தருணத்தைக் கண்டடைய வேண்டும் என விரும்புகிறேன். தற்போது எனது மேற்கல்வி சங்க பாடல்களை வாசிக்க எனக்கான அவகாசத்தையும் கட்டாயத்தையும் வழங்கியுள்ளது. நாம் விரும்பும் ஒன்று தீவிரமானதாக இருந்தால் அதை அடைவதற்கான சந்தர்பங்களை இயற்கையே கொடுக்கும் என்பது இதுதான் போல.
15. மேற்சொன்ன சமகால கவிஞர்களின் படைப்புலகம் பற்றிய தங்கள் பார்வை என்ன?
நான் முன்பே சொன்னது போல மனுஷ்ய புத்திரனின் கவிதைகள் எனக்கு நெருக்கமானவை. நன்றாக யோசித்துப் பார்த்தால் அகம் நோக்கி எழுதப்படும் பல கவிதைகள் எனக்கு விருப்பமானவையே. நகுலன் , கல்யாண்ஜி, கலாப்ரியா, ஆத்மாநாம், சுகுமாரன், மு.சுயம்புலிங்கம், யுவன், லீனா மணிமேகலை, மாலதி மைதிரி, முகுந்த் நாகராஜன் போன்றோரின் பல கவிதைகளை நான் விரும்பிப் படிப்பதுண்டு. இதே போல சமூகம் நோக்கிப் பேசும் கவிஞர்களில் சேரன் மற்றும் ஆதவன் தீட்சண்யாவை முக்கியமாகக் கருதுகிறேன். ஆதவன் தீட்சண்யாவின் ‘புதுஆட்டம்’, ‘கடவுளும் கந்தசாமி பறையனும்’ எனும் கவிதைகள், கவிதைகளின் பண்முகத்தன்மையை அது கொண்டிருக்க வேண்டிய அரசியல் பார்வையையும் எனக்கு உணர்த்துவதாய் இருந்தன. நான் இதுவரை ஆதவன் தீட்சண்யாவைப் பார்த்தது கிடையாது. பேசியது இல்லை. ஆனால் அவரை எனக்கு மிக நெருக்கமானவராக உணர்கிறேன். ‘நான் ஒரு மநு விரோதன்’ எனும் அவரின் நேர்காணல்கள் அடங்கிய நூலின் மூலமாகவே அவரை முதலில் வாசித்ததாக ஞாபகம். இன்று பேரிலக்கியங்கள் பேசும் ஜெயமோகன் தனது விஷ்ணுபுரம் விருதளிப்பு மேடையில் மணிரத்தினத்திற்கு இடம் கொடுப்பதைக் காட்டிலும் மனுஷ்ய புத்திரன் வை.கோவுக்கும் மாலனுக்கும் மேடையில் இடம் கொடுப்பதைக் காட்டிலும் பல மடங்கு நேர்மை மிக்கது ஆதவன் தீட்சண்யா செயல்பாடுகள் என நம்புகிறேன். அதே போல ஷோபா சக்தி. ஓர் எழுத்தாளன் என்பதையெல்லாம் மீறி என்னால் ஷோபாவிடம் மட்டுதான் நெருக்கமாக உரையாட முடிகிறது. நான் ஒரு ஆணை இவ்வளவு நேசிப்பது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. ‘விளம்பரம் வரும் பத்திரிகைகளில் எழுத மாட்டேன்’ என இன்று வரை தன்னையும் தன் படைப்பையும் எதற்கும் விற்காது, புதிய முயற்சிகளில் ஈடுபடும் நண்பர்களுக்கும் இளைஞர்களுக்கும் மட்டுமே தனது படைப்புகளை வழங்கி ஊக்குவிக்கும் அவர் தீவிரத்துக்கும் நேர்மைக்கும் முன் விரைகளை நசுக்கும் தடித்த பிரதிகள் எம்மாத்திரம்? ஷோபாவின் இடத்தில் இருக்கும் ஒருவர் மிக எளிதாகத் தமிழகப் பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதியும் தமிழக எழுத்தாளர்களின் வாலைப்பிடித்தும் தனது புத்தகங்களை பெரிய பதிப்பகங்களில் தொடர்ச்சியாக பிரசுரிக்க இயலும். அதன் மூலம் “நான் தான் இன்று தமிழ் இலக்கியத்தை தீர்மாணிக்கும் நீதிபதி” என படிக்க வேண்டிய நாவல்களின் பட்டியலையும் தரமுடியும். ஆனால் ஷோபா தனது படைப்பின் மூலமே தன்னை நிறுவுகிறார். சிறிய பதிப்பகங்களில்தான் தனது புத்தகங்களைப் பதிப்பிக்கிறார். எளிய மனிதர்களுடன்தான் அவர் நட்பும் அன்பும் தொடர்கிறது.
நான் ஒவ்வொரு நாளும் பார்க்கும் அகப்பக்கங்களில் சாருவுடையதும் ஒன்று. ஆனால் நான் அவரின் ஆளுமையை அகப்பக்கத்தைவிட அவரது புத்தகங்களில்தான் அதிகம் உணர்கிறேன். ஹீரோ டிகிரி எனக்கு விருப்பமான நாவல்களில் ஒன்று. ‘பாலியல்’ என்ற தலைப்பில் சாரு , நளினி ஜமீலாவுடன் செய்த உரையாடல் தமிழ்ச்சூழலில் எளிதில் நடக்கும் காரியமாக நான் கருதவில்லை. அதே போல இசை மற்றும் சினிமா குறித்த அவர் கட்டுரைகள் வாசகனின் இரசனையை மேம்படுத்தக்கூடியது. சாருவை நான் புரிந்து கொள்ளும் விதம் வேறானது. அவர் தன்னை நோக்கி கட்டப்படும் எல்லா பிம்பத்தையும் தனது செயல்பாடுகளால் தகர்கிறார் என்றே தோன்றுகிறது. அதன் மூலம் தன்னை ஒரு நிச்சயமற்ற பிம்பமாகவே அறிந்தோ அறியாமலோ உருவாக்குகிறார். ‘என்னை தீர்மாணிக்க நீ யார்?’ எனும் கேள்வியைத் தனது செயல்பாடுகள் மூலம் ஏற்படுத்துகிறாரோ எனத் தோன்றுகிறது. அண்மைய காலங்களில் அவரிடமிருந்து கட்டுரைகள் வராமல் வசைகள் மட்டுமே கிடைப்பதுதான் வருத்தமாக இருக்கிறது. இதை அவர் அறிந்தே செய்கிறாரா என்றும் தெரியவில்லை. ஏதாவது சொல்லப்போக “இதை நீ சொல்வதற்கு பதில் என் முகத்தில் குத்தியிருக்கலாம். இதை சொல்லும் நீ எப்படிப்பட்டவன் தெரியுமா…..” என சாரு திட்டத்தொடங்கலாம். எதற்கு வம்பு… ஹ…ஹ…ஹ…
16. டானியல் முதலான தரமான ஈழத்து எழுத்தாளர்கள் தமிழகத்தில் கவனத்துக்குள்ளாவது இன்றும் சிரமம்தான். அங்கு மொழியாடு வித்தைகளை இலக்கியத் தரமாக பார்க்கும் போக்கைக் கட்டி வளர்த்து வைத்திருக்கிறார்கள். இதற்குப் பின்னால் ஒரு பிராமணிய ஒடுக்கும் வரலாறு உண்டு. டானியலின் கதைப்பரப்பு அவரது மொழியால் கவனமிழந்ததாகக் கருதலாம். இதே கண்றாவி -மொழி மேலாதிக்கம்-; இலங்கையின் மலையக எழுத்தாளர்கள் மேலும் திணிக்கப்பட்டது. இதேபோல் மலேசியத் தமிழ் எழுத்துக்கள் பல ஒதுக்கப்பட்டிருக்ககூடும் என்ற ஐயம் உண்டு. இரா. தியாகராஜனின் ‘கண்ணீர் சொல்லும் கதை’ என்ற நாவலைப் படிக்க நேர்ந்தது. வித்தியாசமான கதைப்பரப்பை பலவீனமான மொழியில் உருவாக்குகிறார். இதை டானியலுடன் ஒப்பிடவில்லை. ஆனால் இது போன்று பல முயற்சிகள் கவனத்திற்கு வராமலே போய்விட்டனவோ என்ற சந்தேகம். இது பற்றி உங்கள் கருத்தென்ன?
கவனத்திற்குக் கொண்டு வந்திருக்க வேண்டியவர்கள் யார்? தமிழகத்திலிருந்து வைரமுத்துவை அழைத்து வந்து அவரின் புத்தகத்தை வெளியீடு செய்து பணம் திரட்டித் தர முடிகிற வெட்கங்கெட்ட இந்தச் சமூகத்தால் ஒரு மலேசிய எழுத்தாளனுக்கு அவ்வாறு செய்ய முடியவில்லை. ஏதோ மிருகக் காட்சி சாலையில் உள்ள மிருகத்தை வேடிக்கை காட்டுவது போல இங்கிருந்து சிலரை தமிழகம் அழைத்துச் சென்று கருணாநிதியைக் காட்டுவதற்கு பயன்படும் நேரமும் பணமும் மலேசியாவில் இனி கிடைக்காது போன நாவல்களை மறுபதிப்பு செய்ய பயன்படவில்லை. அட, தமிழகம் இருக்கட்டும் தேர்வு பெற்ற மலேசியத் தமிழ் இலக்கியத்தை ஆங்கிலத்திற்கோ மலாய்மொழிக்கோ மொழிப்பெயர்க்க வக்கில்லாமல் தமிழகத்திலிருந்து அழைத்துவரப்படும் எழுத்தாளனுக்கு அரசியல்வாதி செலவில் விஸ்கி ஊற்றி கொடுக்கும் வரை எவ்வாறு மலேசிய தமிழ் இலக்கியம் இந்நாட்டிலேயே அடையாளம் காணப்படும்? இதில் தமிழகத்தை நொந்து என்ன பயன்?
இலக்கியத்தில் பல ஆண்டுகள் ஈடுபடும் மலேசிய தமிழ் எழுத்தாளனோ அல்லது மலேசிய இலக்கியத்தை வளர்க்கிறோம் என மேடையில் முழங்கும் எந்த இயக்கமோ மலேசியாவில் 5 முக்கியமான நாவலை அதற்கான எல்லா சான்றுகளுடனும் விமர்சனங்களுடனும் முன்வைக்கத் தயாரா? கட்டுரைகளின் வழி அறிமுகம் செய்வதற்காக நான் தேடும் பல நாவல்களே இன்றுவரை எனக்குக் கிடைத்தப்பாடில்லை. தமிழகத்தின் இலக்கியப் போக்கு குறித்து அக்கறையுள்ள பலரும் மலேசிய இலக்கிய வளர்ச்சி குறித்து பேசுவதில்லை. மலேசியாவில் வெளியிடப்பட்ட நூல்களுக்கு முறையான நூல் தேட்டத்தை லண்டனிலிருந்து நூலகவியலாளர் என்.செல்வராஜா செய்யவேண்டியதாய் உள்ளது. அது குறித்து இங்கு எவ்விதமான அக்கறையும் இல்லை. இந்நிலையில்தான் வல்லினம் இணைய இதழ் அதற்கான ஓர் தளமாகத் தன்னை மாற்றிக்கொண்டுள்ளது. எங்களால் இயன்ற அளவு தற்கால மலேசிய இலக்கியத்தையும் அதன் போக்கையும் பதிவு செய்ய முயல்கிறோம். இலக்கியவாதிகளின் எழுத்தையும் வாழ்வையும் ஆவணபடம் வழி பதிவு செய்து வருகிறோம். நீங்கள் சொன்னதுபோல மறைக்கப்பட்ட அல்லது மறக்கப்பட்ட பிரதிகள் குறித்த மறுவாசிப்பு மீண்டும் தீவிரப்படுத்தினால் அவற்றுக்கான அடையாளம் கிடைக்கலாம். அதற்கு முதலில் மலேசிய எழுத்தாளர்கள் தங்களின் கால்களை மலேசியாவில் ஊன்றிகொண்டு அதன் சகல வசதிகளையும் அனுபவிப்பது மட்டுமல்லாமல் கொஞ்சம் பொறுப்புணர்ச்சியுடன் நடந்துகொள்ள வேண்டும்.
17. ஜெயமோகனின் எழுத்துகள் மலேசியாவில் விரும்பிப் படிக்கப்படுகின்றனவா? ஞானமரபு, தொன்மை,விழுமியங்கள் போன்ற விடயங்களைப் பேசும் தமிழ்நாட்டு எழுத்துகளின் இவ்வகை எழுத்துகள் அங்கு விரும்பப்படக் காரணங்கள் என்ன?
இல்லை. வாசிக்கப்படவில்லை. ரமணி சந்திரன், பாலகுமாரன், வைரமுத்து, சுஜாதா போன்றோரோடு ஒப்பிட்டால் இதுதான் பதில். ஆனால் தீவிரமாக இலக்கியத்தில் ஈடுபடுபவர்கள் அவரை வாசிக்கின்றனர். நானும் தொடர்ந்து வாசிக்கிறேன். அவரது ஆழமான வாசிப்பும் அறிவும் என்னை எப்போதும் ஆச்சரியப்பட வைக்கிறது. முதலில் ஒன்றை நான் தெளிவு படுத்த விரும்புகிறேன். பெரும்பாலும் மு.வ வையும் அகிலனையும் வாசித்துவிட்டு அதே போல எழுதிக்கொண்டும் , புதுக்கவிதையா மரபுக்கவிதையா என பட்டிமன்றம் வைத்துகொண்டும் இருந்த மலேசிய இலக்கிய சூழலில் கடந்த ஐந்து ஆண்டுகளாகத்தான் மார்க்ஸியம், பெண்ணியம், தலித்தியம், பின் நவீனத்துவம் என பல்வேறான கருத்தாடல்கள் வெளிப்படுகின்றன அவற்றுக்கான தடுமாற்றங்களுடன். என்னைக் கேட்டால் இன்று புதிதாக எழுதும் அனைவரும் ஒருவகையான பயிற்சியில்தான் இருக்கிறோம். பல்வேறுவகையான வாசிப்பு அனைவருக்குமே தேவைப்படுகிறது. இருக்கின்ற கருத்துகளை வைத்துக்கொண்டு அவ்வப்போது சண்டை வேறு போட்டுக்கொள்கிறோம். இதுபோன்ற சமயங்களில் சிலவற்றை பயிற்சி செய்து பார்ப்பது சிலவற்றை பின்பற்றுவதும் இயல்பாக நடக்கக்கூடியதுதானே. நான் இவற்றையெல்லாம் வளர்ச்சிக்கான அறிகுறியாகத்தான் பார்க்கிறேன். அதுவரையில் இதுதான் எங்களால் விரும்பப்படுகிறது என யாருமே அனுமானிக்கமுடியாது. நாங்கள் கூட.
18. ஜெயமோகனுக்கு ஆழமான வாசிப்பிருக்கென்று நான் நம்பவில்லை. நிறைய வாசித்துத் துணுக்குகள் எழுதுவதற்கும் ஆழமான வாசிப்புக்கும் வித்தியாசம் உண்டு. அதற்கும் அப்பால் ஜெயமோகனுக்கு எதிரான வர்க்க உணர்வு ஏற்படுவதற்கு வாசிப்பே தேவையில்லை. விளிம்பு வாழ்தலே போதுமதற்கு. அந்த அடிப்படையில் ஜனரஞ்சகத்தைத் தாண்டிய வாசகர்களை ஜெயமோகன் கவர முடியும் என்று என்னால் நம்பமுடியவில்லை. அவருடனான உங்கள் தொடர்பாடல் பற்றிச் சொல்ல முடியுமா?
ஜெயமோகனை நீங்கள் சாதாரணமாக நினைக்கிறீர்கள் என்றால் இந்த நேர்காணலில் அவர் பற்றிய கேள்விக்கும் என் பதிலுக்கும் காரணம்தான் என்ன? அவர் குறித்து பேசாமலேயே நாம் இந்த நேர்காணலை நகர்த்தியிருக்கலாம் அல்லவா? நான் நிறைய விஷயங்களில் அவருடன் முரண்படுகிறேன். அதை என் கட்டுரைகள் மூலமே பதிவு செய்துள்ளேன். ஆனால் அவரை ஒன்றுமே இல்லையென புறக்கணிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஒருவகையில் ஜெயமோகனும் பிற எழுத்தாளர்கள் மீது இதையே செய்துள்ளார். தனக்கு உவப்பில்லாத எழுத்தாளர்களின் இடத்தை அவர் திறமையான வாதத்தால் நிராகரிப்பார். எனக்கு இதில் நம்பிக்கை இல்லை. யாருடைய ஆளுமையையும் யாரும் அகற்றிவிட முடியாது. அவரவருக்கான இடம் மிக வசதியாகவே இங்கு இருக்கிறது. அதற்காக நான் ஜெயமோகனிடம் விவாதமா செய்துக்கொண்டிருக்க முடியும் ? அண்மையில் மலேசியா வந்த அவர் மலேசியாவில் படைப்பிலக்கியத்தின் குறைபாடுகளைக் கூறினார். எல்லோரும் எகிறி குதித்தனர். ஒருவரும் ஜெயமோகனின் தவறான கருத்தைச் சுட்டிக்காட்டும் படி முழுமையான ஓர் ஆய்வில் கட்டுரையும் எழுதவில்லை. எழுதப்பட்டதும் பேசப்பட்டதும் மொட்டைத்தனமான வெட்டிப்பேச்சுகள். இங்கு நான் செய்ய வேண்டியது என்ன? மிஞ்சி போனால் அவரை இந்துத்துவா என திட்டலாமா? அதனால் இந்தப் பிரச்சனை தீருமா? அவ்வளவு சுருங்கிய ஆளுமையா ஜெயமோகன்? இனி முடிந்த வரை மலேசிய படைப்பிலங்கியங்கள் குறித்து எழுதலாம் என இருக்கிறேன். பல முக்கியமான நாவல்களின் பிரதிகள் இப்போது கிடைக்காவிட்டாலும் அதை தேடிச்சென்றாவது வாசிக்கலாம் என்றிருக்கிறேன். இது ஜெயமோகனுக்காக மட்டுமல்ல. இன்றைய தேவை அது. அதன் மூலமே மலேசியாவில் உள்ள நல்லப் படைப்பிலக்கியத்தை அறிமுகம் செய்ய முடியும்.
நீங்கள் கூறியபடி, ‘நவீன இலக்கிய முன்னோடிகள்’ என அவர் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்து வெளியிட்ட ஏழு புத்தகங்கள் முதல் அண்மையில் இணையத்தில் அவர் வெளியிட்ட எழுத்தாளர்களின் படைப்புகள் ஒட்டிய கட்டுரைகள் வரை எதையும் நான் துணுக்குகள் என உணரவில்லை. ஒவ்வொன்றும் ஆழமானவை. இன்னும் சொல்லப்போனால் இதுவரை எந்த விமர்சகரும் முன்வைக்காத மாற்றுக்கருத்துகளை அவர் அந்த நூல் வரிசையில் முன்வைக்கிறார். அதுதவிர கண்ணீரைப் பின்தொடர்தல், ஆழ்நதியை தேடி போன்ற நூல்களில் அவரின் இலக்கியம் ஒட்டிய பார்வை விசாலமானது. மாறாக மதம், மார்க்ஸியம், பெரியாரியம் தொடங்கி மாவோயிஸ்ட் வரை அவர் வெளிப்படுத்தும் கருத்துகளில் எனக்கு மாற்றுக்கருத்துகள் உண்டு. அதே சமயம் அவை குறித்தான என் புரிதலில் எல்லையை நான் கேள்வி யெழுப்பிக்கொள்கிறேன். ஜெயமோகன் இன்று தவிர்க்க முடியாத ஆளுமை என்பதற்காக அவர் சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை. அல்லது அவரின் அத்தனை சொல்லுக்கும் எதிர்ப்பாக இருக்கவேண்டியதும் இல்லை. இதில் இரண்டில் ஒன்றை செய்தாலே அதுதான் அடிமைத்தனம். ஒரு நாணயத்தின் இரு வெவ்வேறு பக்கங்கள் போல. உடல் ரீதியில் அடிமையாய் இருப்பதை விட சிந்தனை ரீதியில் அடிமையாய் இருப்பது கேவலமானது.
எனக்கு இப்போதைய தேவை என்னுடன் எதிர்க்கருத்து கொண்டிருப்போருடன் விவாதம் அல்ல. எதிர்க்கருத்துக் கொண்டவரிடமும் கற்பதுதான். இலக்கியத்தில் விவாதம் என்பதின் எல்லைதான் என்ன? அதற்கு தீர்ப்பு சொல்லும் நீதிபதி யார்? அறிவு சார்ந்த விவாதம் ஒன்றையொன்று விழுங்கி வெல்லக்கூடியது. இரண்டு பாம்புகள் ஒன்று மற்றதில் வாலைப் பிடித்துக்கொண்டு மூர்க்கமாக சுழல்வதுபோல. ஆனால் நான் நம்பும் கருத்தை , அரசியலை தெரிவிப்பதில் எனக்கு எந்தத் தடையும் இருந்ததில்லை. அதில் நான் நேர்மையாக இருக்கிறேன்.
ஜெயமோகன் இதுவரை மூன்றுமுறை மலேசியா வந்துள்ளார். மூன்று முறையும் அவரைச் சந்தித்தேன். மூன்றாவது முறை அதிக நேரம் அவருடன் செலவழிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மிக நெருக்கமாக தனது வாழ்வினை மனம் விட்டுப்பகிர்ந்து கொண்டார். ஒரு வாரம் தமிழகம் சென்று வந்தாலே பத்து நடிகையுடன் படுத்தேன் என சொல்லிக்கொள்ளும் பலரைப் பார்த்திருக்கிறேன். நடிகைகளைக் கேவலப்படுத்துவதில் பலருக்கு தனி அலாதி. ஜெயமோகன் சினிமாவில் இயங்கிக்கொண்டு நடிகைகளைப் பற்றி தவறான எந்த வார்த்தையும் பேசவில்லை என்பது ஆறுதலாக இருந்தது. நடிகைகள் மட்டுமல்ல யாரைப்பற்றியும் அவரிடம் தப்பான கருத்துகள் இல்லை. கலை , இலக்கியம் சார்ந்த விமர்சனங்கள் மட்டுமே இருந்தன. யாருடைய தனிப்பட்ட வாழ்வு பற்றியும் ஒரு வார்த்தை தவறாகப் பேசவில்லை. அதேபோல தனது தனிப்பட்ட வாழ்வை பொதுவில் வைத்து விவாதிக்கவும் தயங்கவில்லை. மற்றபடி, அவர் பேச்செல்லாம் இலக்கியம் மட்டும்தான். அவர் எழுத்துக்கும் பேச்சுக்குமான எவ்வித பேதத்தையும் நான் உணரவில்லை. எதை எழுதுகிறாரோ அதுவே அவராக எங்களுடன் இருந்தார். அவருடன் இருந்த பொழுதுகள் சிரித்துக்கொண்டே இருந்தோம். அவரின் சில கருத்துகளில் உடன்படாவிட்டாலும் நான் கேட்பவனாக மட்டுமே இருந்தேன். ஒரு பொது உரையாடலில் என் கருத்துகளை திணிப்பது அவசியமாகப் படவில்லை. ஆனால் என் மாற்றுக் கருத்துகளை அவ்வப்போது கேள்விகளாக மட்டும் எழுப்பினேன்.
நான் மீண்டும் சொல்லிகொள்வது என்னவென்றால், ஆரம்பகால இலக்கிய வளர்ச்சிக்கு இதுபோன்ற பல்வேறு முகங்கள் தேவை. இதையெல்லாம் பெற்றுக்கொண்டு ஒருவன் என்னவாக இருக்கிறான் என்பதுதான் அவசியம். அவன் ஏதோ ஒரு ஆளுமைக்கு முன் தன்னைத் தொலைக்கிறானா அல்லது இன்னும் தீவிரமாக வாழ்வையும் இலக்கியத்தையும் புரிந்துகொள்கிறானா என்பதுதானே வளர்ச்சியைக் காட்டுகிறது.
19. மீண்டும் கவிதைத் தொகுப்பு கொண்டுவரும் நோக்கமுண்டா? அல்லது வேறு வடிவங்களில் பரிசோதனை செய்யும் நோக்கமுண்டா?
நிச்சயம் உண்டு. தொடர்ந்து நான் கவிதைகள் எழுதிக் கொண்டிருக்கிறேன். அதை பிரசுரிப்பதில்லை. கவிதை உருவான மனநிலையை விட்டு விலகியப்பின் அதை வாசித்து செறிவு செய்கிறேன். என் முதல் தொகுப்பில் கற்றுக்கொண்ட பாடம் இது. நான் கவிதையில் பரிசோதனையெல்லாம் செய்வது கிடையாது. ஒன்றிரண்டு அப்படி செய்யலாமே தவிர முழுமையாக அவ்வாறு என்னால் இயலாது. நான் முன்பே சொன்னது போல கவிதை எனக்குள் மெல்ல மெல்ல உருவாகி என் அனுமதிக்காகக் காத்திருக்காமலேயே என்னுள்ளிருந்து வெளிப்படுவது. சிறுகதைகளில் அவ்வாறு சோதனை முயற்சி செய்யும் எண்ணம் உண்டு. ஒரு நாவலுக்கான கதையும் மனதில் நெடுநாட்களாக ஊறிக்கிடக்கிறது. செய்வதற்கு நிறைய காரியங்கள் உண்டுதான். ஓய்வாக இருக்கும் போது இவையெல்லாம் தவறியும் ஞாபகத்திற்கு வராமல் இருப்பதுதான் ஆச்சரியமாக உள்ளது.
20. உங்கள் பதில்களில் மார்க்சியம் பற்றி பலதடவை சாதகமாக குறிப்பிட்டு எழுதியிருந்தீர்கள். நீங்கள் மார்க்சியரா? அல்லது சகபயணியா?
மாணவன்
21.’ஒரே மலேசியா’ என்ற பெயரில் நஜீப் சிறுபான்மையினரின் வாக்குகளை வெல்ல முயற்சி செய்வது பற்றி உங்கள் கருத்தென்ன? ஒரு மலேசியா என்ற ஒன்றிருக்கா?
ஒரு பண்ணையில் அதிக மாடுகள் வாழ்ந்து வந்தன. அவை சில பன்றிகளையும் ஆடுகளையும் மேய்த்து வந்தன. பன்றிகளுக்கு மாட்டுக்கூட்டம் ஒரு பொருட்டே இல்லை. அவை சுயமாக இயங்கும் ஆற்றலைப் பெற்றவை. மேலும் அவற்றின் கலாச்சாரமே தனி. ஆடுகள் தான் பாவம். மாடுகள் மேயும் புல் வெளியையே நம்பி இருந்தன. இந்நிலையில் பல ஆண்டுகளாக மாடுகள் தங்களுக்கான புல் பரப்பை தருவதில்லை என்று உணர்ந்த ஆடுகள் பன்றிகளைப் பின்பற்றி தனித்துச் செயல்படத் துவங்கி மாடுகளின் அதிகாரத்தை அசைக்கத் துவங்கின. இந்நிலையில் கொஞ்சம் உசாராகிவிட்ட ஒரு மாடு அக்கூட்டத்துக்குத் தலைமை பொறுப்பை ஏற்றது. ஆடுகளிடமும் பன்றிகளிடமும் கொஞ்சிக்குலாவியது. ஆடுகளுக்குக் கொஞ்சம் புல் தரைகளைத் தர முன்வந்தது. பன்றிகளோடு சேர்ந்து மலம் தின்னவும் தயாராக இருந்தது. பன்றிகள் மாட்டின் திடீர் மாற்றத்தை நம்புவதாய் இல்லை. இந்நிலையில் மாட்டுக்கு ஆட்டுக் கூட்டத்தின் ஒத்துழைப்பு தேவைப்பட்டது. அதன் மூலமே பிசராத ஆதிக்கத்தை அமுல்படுத்த முடியும் என்று நம்பியது. அதனால் அது நாமெல்லாம் ஒரே இனம் எனப் பிரச்சாரம் செய்யத் தொடங்கியது. அதற்குச் சான்றாக மூவினத்துக்கும் நான்கு கால்களும் ஒரு வாலும் இருப்பதை ஆதாரமாகக் காட்டி ஆதரவு கேட்டது. கொம்பு இல்லாத படியால் பன்றிகள் சுலபமாக மாட்டின் சூதாட்டத்தை விளங்கிக் கொண்டன. ஆடுகள் தங்கள் கொம்புகளைச் சந்தேகத்தோடு தடவிக் கொண்டிருக்கின்றன. சில ஆடுகள் ‘மா’ எனக் கத்தவும் ஆரம்பித்து விட்டன. உங்கள் கேள்வி எனக்கு புரியவில்லை. எனக்கு மட்டும் இல்லை. மலேசியாவில் சுய புத்தி உள்ள எவனுக்கும் புரியாது. ஆனால் நான் கூறிய கதை உங்களுக்குப் புரிந்திருக்கும்.
22.அன்வர் இப்பிராகிமை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று அரசு துடிக்கிறது போலுள்ளது. மாறி மாறி அவர்மேல் போடப்படும் வழக்குகளை மீற அவரால் முடியுமா?
எனக்குத் தெரிந்து அன்வார் மேல் மூன்று வழக்குகள் போடப்பட்டிருந்தன. அவற்றில் ஒன்று அதிகார துஷ்பிரயோகம். மற்ற இரண்டு ஓரினச் சேர்க்கை. அதிகார துஷ்பிரயோகத்தை அமைச்சர் முதல் அரசாங்க அதிகாரி வரை செய்கிறார்கள். ஓரினச் சேர்க்கை என்பது அவரவர் விருப்பம் சார்ந்தது. அதற்கெல்லாம் வழக்கா என்று தான் கேட்கத் தோன்றுகிறது. கடைசியாக வற்புறுத்தலின் பேரில் ஓரினச் சேர்க்கை என வழக்குப் பதிவாகி இருந்தது. மலேசியாவை பொறுத்தவரை இது அவர்களின் மதத்துக்கு எதிரானது. அன்வார் தனது அரசியல் வாழ்வு முழுவதுமே இது போன்ற எதிர்புகளைச் சம்பாதித்தவர். தனது மாணவர் பருவத்திலேயே ‘அபிம்’ எனும் இயக்கத்தின் வழி இஸ்லாமியர்களையும் மலாய்க்காரர்களையும் முன்னெடுத்துச் செல்ல செயல்பட்டவர். ‘எம்.பி.எம்’ எனும் மலேசிய இளையர் இயக்கம் என்று துவங்கி மலாய் இளைஞர்களை முன்னெடுத்துச் செல்வதற்கு பாடுபட்டவர். 1969 தேர்தலில் மஹாதீரை ஆதரித்து பிரச்சாரம் செய்துள்ளார். மலாய்க்காரர்களின் முன்னேற்றமே தங்கள் குறிக்கோளாக இருந்த படியால் மஹாதீரும் அன்வாரும் கைக்கோர்த்தனர். அன்வாருக்கு செனட்டர் பதவி வழங்கப்பட்டு பின் துணை கல்வி அமைச்சராக பதவி ஏற்றார். 1997ல் நடைப்பெற்ற அம்னோ மாநாட்டில் 30 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிக்கை அன்வாருக்கு எதிராக வாசிக்கப்பட்டு அவர் அம்னோவிலிருந்து நீக்கப்பட்டார். அன்வாரின் உரை உணர்ச்சியைத் தூண்டக்கூடியது. இன்றளவும் அவர் பேச்சு வீரியத்துடனே வெளிப்படுகிறது.என்னளவில் அன்வாரின் புறக்கணிப்பு பொறாமையால் மட்டுமே நிகழ்த்தப்பட்டது. அந்த அளவிற்கு அம்னோவில் சக்தி மிக்கவராக இருந்தவர் அன்வார்.
23. அன்வரும் மக்களுக்கான நியாயமான மாற்றை முன்வைக்கவில்லை. இதற்கிடையில் இனம்சார் கட்சிகளின் செல்வாக்கும் அதிகரித்து வருகிறது. இன்னிலையில் மாற்று அரசியலை முன்னெடுப்பவர்கள் பற்றி சொல்லுங்கள்.
நான் முன்பே சொன்னது போல அன்வாரின் ஆரம்பகால செயல்பாடுகள் அனைத்தும் மலாய் இனத்தை உயர்த்துவதுதான். இன்று அவர் ஒரு கூட்டணி கட்சிக்குத் தலைவராக இருக்கும் பட்சத்தில் சில செயல்பாடுகளில் மாற்றம் இருக்கலாமே தவிர அடிப்படை சித்தாந்தம் மாறாதுதானே. மலேசியாவில் இனவாத அரசியல் நடத்த மட்டுமே சாத்தியம். தேசிய வாதம் இங்கு யாருக்கும் பயிற்றுவிக்கப்பட வில்லை. அல்லது அதிகார வர்க்கங்கள் அதை விரும்பவில்லை. டத்தோ ஓன் பின் ஜபார் மட்டுமே ஒரு தேசியவாத கட்சியை விரும்பினார். அவரையும் மலாய் சமூகத்துக்கு எதிரானவர் என விரட்டிவிட்டனர். தேசிய முன்னணி கூட்டணியாகட்டும் எதிர்க்கட்சி கூட்டணியாகட்டும் எல்லாமே இன வாரியாகத்தான் பிரிந்து இருக்கின்றன. மாற்று அரசியலெல்லாம் சாத்தியமே இல்லாத சூழல் இது. இந்த நிலையில் இன ரீதியான சிந்தனை இல்லாமல் வர்க்க ரீதியான ஓர் இயக்கத்தைக் கொண்டுச்செல்ல தகுந்த ஆளுமைகள் தேவைப்படுகிறது. ஒடுக்கப்பட்டவர்களின் உரிமையை மீட்டுக்கொடுக்கிறோம் என சொல்பவர்களும் இந்தியர்களை மையப்படுத்தியே தங்கள் செயல்பாடுகளை முன்னெடுக்கின்றனர். ஹிண்ட்ராப் குழுவினரின் செயல்பாடுகள் சமூகத்தில் பெரும் மாற்றங்களைத் தராதது இன ரீதியான மனப்போக்கினால்தான். இந்தியர்களைப் போலவே மலாய்க்காரர்களும் சீனர்களும் இந்நாட்டில் ஒடுக்கப்படுகின்றனர். இவ்வாறு அந்நிய தொழிலாளர்களின் உரிமை உட்பட உழைக்கும் வர்க்கத்தினரை இணைக்கும் மாற்று அரசியல் சக்தி உருவாகுமேயெனில் பெரிய மாற்றத்தினை மலேசிய அரசியல் சூழலில் உருவாக்கமுடியும் என நம்புகிறேன்.
24. இலங்கையில் யுத்தம் கொடிய முறையில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது மலேசிய தமிழர் மத்தியில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது?
இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று இலங்கை தமிழர் நிலை குறித்து பதற்றம் கொள்பவர்கள். எனது கவலையும் அத்தகையதே. மற்றது பிரபாகரன் மரணம் குறித்துக் கவலை படுபவர்கள். இவர்களே எண்ணிக்கையில் அதிகம். இது குறித்து நான் முன்னமே ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். தொலைக்காட்சியின் முன் அமர்ந்து காற்பந்தாட்டத்தை ரசித்து , தன் அணி வீழ்கையில் கவலையுறுபவர்களுக்கும் இது போன்றவர்களுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. மீண்டும் பிரபாகரன் வர வேண்டும் இலங்கையில் போர் செய்து தமிழீழத்தை மீட்க வேண்டும் என்று கவிதை எழுதும் கரத்தையும் பேசும் நாவையும் அறுத்து அடுப்பில் வைக்கவேண்டும் போல தோன்றும். ஒரு பாதுகாப்பான வலையில் இருந்துகொண்டு வேளா வேளைக்கு மூக்குப் பிடிக்கத் தின்று கொழுத்து ஏப்பம் விடும் ஒரு மலேசிய தமிழனுக்கு போரின் அவலம் தெரியாது. இங்கு தான் அரசாங்கத்தால் சுரண்டப்படுவதை தட்டிக்கேட்க முதுகெலும்பில்லாத பன்னாடைகள் சுரணையில்லாமல் அடுத்த நாட்டில் புரட்சி வெடிக்க வேண்டும் என வேண்டிக் கொள்கின்றன. இங்கு எல்லோர் கண்களிலும் வெற்றி தோல்வி மட்டுமே தெரிகிறதே தவிர அதற்குப் பின் இருக்கும் உயிர்களின் துயரங்கள் தெரிவதில்லை. சுருங்கச் சொன்னால் … ஒரு சிலரைத் தவிர பெரும்பாலோர் சரியாக ஆறரை மணிக்கும் ஏழரை மணிக்கும் சீரியலைப் பார்த்து அழுவதைப் போல இலங்கை செய்தியைப் பார்த்து அழுகின்றனர். பின்னர் தங்கள் வேலைகளைப் பார்த்துக்கொண்டு போய்விடுகின்றனர். இதில் பிரபாகரன் இறந்து விட்டாரா? என ஏக்கக் கேள்விகள் வேறு.
25. சிங்கப்பூர் எழுத்தாளர்களுக்கும் மலேசிய எழுத்தாளர்களுக்குமான உறவு எப்படியிருக்கிறது?
சிற்றிதழ்கள் உருவாகத் தொடங்கியவுடன் இன்னும் உற்சாகமாக வளர்ந்துள்ளது. எனக்கு அங்குச் சில நண்பர்கள் உள்ளனர். வல்லினத்தில் அவர்கள் தொடர்ந்து எழுதுகின்றனர். மலேசியாவில் நடக்கும் இலக்கிய நிகழ்வுகளில் பங்கு கொள்கின்றனர். அதே போல இங்கிருந்தும் அங்கு பயணங்கள் நிகழ்கின்றன. இந்தச் சூழலில் வரும் 26 ஆம் திகதி மலேசிய சிங்கை தமிழ் இலக்கிய உறவுப்பால மாநாட்டு ஒன்றும் நடக்கிறது. அவரவர் சக்திக்கு இயன்றது போல மலேசிய – சிங்கை இலக்கிய உறவுக்கு உழைக்கின்றனர். சிங்கை இளங்கோவன் சிங்கப்பூரில் தனித்த அடையாளம் கொண்டவர். வல்லினத்தில் வெளிவந்த அவரது நேர்காணலையெல்லாம் விட அவர் ஆளுமை பெரிது. அவரிடம் பெற வேண்டிய விஷயங்கள் இன்னும் அதிகம் இருப்பதாகவே கருதுகிறேன். அவரின் ஒவ்வொரு நாடகம் குறித்தும் கூட தனித்தனியான உரையாடகளை நிகழ்த்தலாம். அதே போல லதா. அவரின் கவிதைகளைவிட சிறுகதைகள் கவனிக்கப்பட வேண்டியவை. விவாதிக்கப்பட வேண்டியவை. அவரது நான் கொலை செய்யும் பெண்கள் எனும் சிறுகதை தொகுப்புக்கு சிங்கை அரசாங்கம் 2008ஆம் ஆண்டுக்கான சிங்கப்பூர் இலக்கிய விருது வழங்கி, பத்தாயிரம் சிங்கப்பூர் டாலரைப் பெற்றுத் தந்தது. அதோடு சரி. தொடர்ச்சியான விவாதம் எழவே இல்லை. மலேசியா போல சிங்கப்பூர் தமிழர்களும் விருது தான் இலக்கியத்தின் இறுதி முடிவு என நினைத்து விடுகிறார்கள் போல.
26. தற்போது நடைபெறும் இண்டர்லோக் நாவல் பற்றிய விவாதம் சாதியம் உடைக்கப்படுவதற்கான தேவையை மேலும் வலுப்படுதுகிறது. ம.இ.கா வை ஒரு சாதி காப்பாற்றும் கட்சி என்று சொல்லலாமா? டத்தோ சாமிவேலு ஒரு சோசலிஸ்டிடம் தோற்றிருப்பது அந்த போராட்டத்துக்கு தேவையான அடிப்படையை சுட்டி நிற்கிறது என்று நினைக்கிறேன். நீங்களும் பாலமுருகனும் இது பற்றி தீவிரமாக எழுதிவருவதை பார்க்ககூடியதாக இருக்கிறது. இந்தியாவில் நிறப்பிரிகை செய்ததை வல்லினத்தின் மூலம் மலேசியாவில் செய்ய முடியும் என்றே தோன்றுகிறது. இவை பற்றி தங்கள் கருத்தென்ன?
ம.இ,கா மட்டுமல்ல இந்தியர்கள் சார்ந்த கட்சிகள், இயக்கங்கள், அவர்கள் வகிக்கும் தலைமை பொறுப்புகள், கோயில்கள் என எல்லாவற்றிலும் முன்னெப்போதையும் விடச் சாதியம் முக்கிய பங்கு வகிக்கத் தொடங்கிவிட்டது. தான் வாழ்நாள் முழுதும் ரகசியமாகப் பார்க்கும் சாதியைப் பற்றி ஒரு மலாய் எழுத்தாளர் புத்தகத்தில் சொல்லிவிட்டார் என்பதற்காக ஆளாளுக்கு எகிறிக் குதிக்கிறார்கள். இதற்கு சில பண முதலைகள் பின்பலமாக இருக்கின்றன. இண்டர்லோக்குக்கு எதிராக அறிக்கை விட்டவர்கள் ஒவ்வொருவரும் சாதிச் சங்கங்களின் ஆண்டு புத்தகங்களில் பல்லிளித்தபடி போஸ் கொடுத்தப் படங்களை மாதம் ஒன்றாகப் பிரசுரிக்கலாம் என்று இருக்கிறேன். தன் பக்கத்தில் இருக்கும் ஒருவன் சாதிச் சங்க அறிக்கை விடுவதைக் கண்டுக் கொள்ளாத பத்திரிகைகள் அவனிடம் பணம் வாங்கிக்கொண்டு ஒரு பக்கத்தில் சாதி விளம்பரத்தைப் போட்டு வயிறு வளர்க்கின்றன. இதில் மக்களுக்குப் போராடுவதாக நாடகம் வேறு. இங்கு பத்திரிகைகள் எல்லாம் வியாபாரத் தளமாகி விட்டது. இண்டர்லோக் பிரச்சனை இது குறித்து பேசுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. நானும் பாலமுருகனும் இணைந்து ‘பறை’ என்ற புதிய அகப்பக்கதை தொடக்க உள்ளோம். மாற்று அரசியல் ரீதியான முன்னெடுப்புகளையும் மாற்றுக்கருத்துகளையும் உடனுக்குடன் பதிவு செய்வதற்கு இப்பக்கம் உருவாகி வருகிறது. இப்போதைக்கு எங்களிடம் இருக்கும் ஆயுதம் எழுத்து மட்டும்தான். அதை தொடர்ந்து தீட்டிக்கொண்டே இருக்க வேண்டியுள்ளது.
கருத்துக்கள் யாவும் அற்புதம். அதிலும் ஒரே மலேசிய திட்டத்தைப் பற்றி தங்களின் கருத்து தெளிவான உண்மையான ஒன்று. அதைத்தவிர இலக்கியத்தின் சிறப்புக்கு முத்தாய்ப்பாக அமைக்கும் வகையில்’இலக்கியம் எதைக் கொடுத்ததோ இல்லையோ சமாதானங்களைச் சொல்லவும் சமரசங்களை ஏற்கவும் சொற்களைக் கொடுத்துள்ளது’ என்ற தங்களின் கருத்து என் மனதைக் கவர்ந்தது
அருமையான நேர்காணல் என்பதைவிட, அறைந்து கூறும் பதில்கள்
மிகவும் கவனிக்கப்படவேண்டியவை. நவீன் எனும் இந்த இளைஞனை
ஏனோ வியந்து வாழ்த்தத் தோன்றுகிறது.
கமலாதேவி அரவிந்தன். சிங்கப்பூர்
இது குறித்து தீவிரமாகச் செயல்பட வேண்டிய எழுத்தாளர் சங்கமும் தங்களுக்கு தேசிய அங்கீகாரமெல்லாம் வேண்டாம் கருணாநிதியும் வைரமுத்துவும் அங்கீகரத்தாலே போதும் என தமிழகத்துப் படையெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்
🙂
I’d come to consent with you one this subject. Which is not something I usually do! I enjoy reading a post that will make people think. Also, thanks for allowing me to comment!
உங்கள் நெருப்பு அணையக்கூடாது.இந்த நெருப்பின் கங்கு வான் நோக்கிப் போவதைவிட மண் நோக்கியும் வந்தால் சிலவற்றை எரித்து உயிரூட்டலாம்
தீயை விட தீவிரமான ஒன்று சுடர்கின்றது