காலம் தாண்டி நிலைக்கும் பேய்ச்சி (ப.தெய்வீகன்)

நாவல் என்பது காலமாற்றத்தின் இலக்கிய வடிவம்.

காலமாற்றத்திற்குள் தன்னை தொடர்ச்சியாக புதுப்புத்திக்கொள்கின்ற பண்பாட்டு கூறுகள் மீதான ஆழமான அவதானிப்புக்கள், அந்த மாற்றங்களுக்குள் தன்னை ஒப்புக்கொடுகின்ற மானுட உணர்ச்சிகள், அவற்றின் மீதான மதிப்பீடுகள் ஆகியவற்றை நுட்பமாக பேசுகின்ற நாவல்கள் காலம்தாண்டிய பிரதிகளாக இலக்கியத்தில் நிலைபெறுகின்றன.

தமிழ் இலக்கியத்தின் அத்தனை அரும்பெரும் நாவல்களும் இத்தகைய தகுதிகளை செழிப்போடு தங்களிடம் வைத்திருக்கின்றன. நவீனின் “பேய்ச்சி’ நாவல் மலேசியாவில் லூனாஸ் எனப்படும் சிற்றூரில் எண்பதுகளில் இடம்பெற்ற விஷச்சாராய மரணம் பற்றிப்பேசுகின்ற சிறியதொரு கதைக்கரு. ஆனால், அந்த சம்பவத்திற்கு வெளியிலிருந்து அவர் கட்டமைத்திருக்கின்ற மிகப்பெரிய வாழ்வு, அந்த பிரதியை காலம்தாண்டி நிலைக்கக்கூடிய செறிவான நாவலாக்கியிருக்கிறது.

மூன்று தலைமுறைகளாக நீளுகின்ற கதாபாத்திர அமைப்புக்களை வட தமிழகத்திலிருந்தும் தென் தமிழகத்திலிருந்தும் மலேசிய கம்பங்களுக்குள் கொண்டுவந்து சேர்க்கின்ற நவீன், அவர்களைச்சுற்றி கட்டமைக்கின்ற வாழ்வு வாசகர்களை அதற்கு நெருக்குமாகிறது. ஒரு மலேசிய கதையை விழுங்கி செமித்துவிட்டு ஏப்பமிட்டு காட்டுகின்ற சிறிய நூலாக நின்றுவிடாமல், “பேய்ச்சி” பல்வேறு காரணிகளின் வழியாக சர்வதேச தன்மையை பெற்றுக்கொள்கிறது.ஆரம்பத்தில் மலேசியாவில் தோட்டங்களுக்கு வேலையாட்களாக வந்தவர்களை ஏற்கனவே அங்கிருந்த இந்திய முதலாளிகள் எவ்வாறு நிர்வகித்தார்கள், சீன – மலாய் முதலாளிகள் – தொழிலாளிகள் ஆகியோர் இவர்களுடன் எவ்வாறு பயணித்தார்கள், இவர்களுக்கு இடையில் காணப்பட்ட கலாச்சார முரண்டுபாடுகள் – தொழில்போட்டிகள் என்ன? தமிழகத்திலிருந்து வந்திருந்தவர்கள் கொண்டுவந்த அரசியல் மற்றும் தெய்வ வழிபாடுகள் என்ன? அவற்றைத்தாண்டிய சமூக – குடும்ப நம்பிக்கைகள் என்பவை ஒருபுறம் பெரும் சரடுகளாக பல தளங்களில் விரவியிருக்க – காலவெளியை இயற்கையின் கண்களின் வழியாக காட்சிப்படுத்துகின்ற மரங்கள், செடிகொடிகள், பறவைகள் என்றும் அவற்றோடு ஒள்றிப்போயிருந்த நாட்டு மருந்து மற்றும் மாந்திரீக முறைகளின் ஊடாகவும் பெருந்தொகை தகவல்கள் நாவலை செறிவடையச்செய்கின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாக நாவலில் வருகின்ற முக்கிய பெண் கதாபாத்திரங்களில் அவ்வப்போது வந்து குந்திக்கொள்கின்ற பேய்ச்சி என்ற தெய்வப்படிமம், நாவலில் அவ்வப்போது தொலைகின்ற காலத்தினை இரைமீட்டுக்கொடுக்கிறது.

நாவலை முழுமையாக வாசிக்கும்போது, அதன் மையச்சரடு மிகச்சிறிய புள்ளியாக மாறி, அதனைச்சுற்றி நவீன் எழுதிச்செல்கின்ற பெரியதொரு வாழ்வும் அதில் வாழ்ந்தவர்களின் இயல்புகளும் வாழ்வின் மீதான அவர்களின் மதிப்பீடுகளும் கண்களை நிறைத்துக்கொள்கின்றன. நன்கு செப்பனிடப்பட்ட பிரதி. எழுத்துப்பிழைகளை கண்டுபிடிப்பதாயின் பேய்ச்சியம்மனேதான் வரவேண்டும்போலுள்ளது. நவீனின் கூர்மையான மொழி அவரை சிறுகதை உலகத்திலிருந்து மிகவும் வித்தியாசமானவராக பேய்ச்சிக்குள் கொண்டுவந்திருக்கிறது. பேய்ச்சிக்கு பின்னர் நவீன் நிச்சயம் நாவலுக்குரிய கதைசொல்லியே என்று நம்பவேண்டியிருக்கிறது. வாழ்த்துக்கள் நவீன்.

(Visited 22 times, 1 visits today)