ஒரு நாவல் குறித்து, அது வெளிவந்த ஆறேழு மாதங்களில் தொடர்ச்சியான வாசக அனுபவங்கள் மலேசிய – சிங்கப்பூர் சூழலில் வருவது அரிது. ம.நவீனின் ‘பேய்ச்சி’ நாவல் வெளிவந்த சில மாதங்களுக்குள்ளாக இருபதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளால் பல்வேறு வாசிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. தனிமனித ஒழுக்கம் சார்ந்த அவதூறுகள் ஒரு எழுத்தாளரின் மேல் விழும்போது மௌனம் சாதிக்கும் சூழலில், பேய்ச்சி நாவலுக்கு ஆதரவாக வெளிவந்த குரல்கள் பெரும்பாலும் பெண்களுடையவை என்பது ஆச்சரியமளிக்கிறது. மேலும், எழுதப்பட்ட கட்டுரைகளில் காணப்படும் விமர்சனப் பார்வை வல்லினத்தின் பத்தாண்டுகால முயற்சியின் பலனென உணர முடிகிறது. விரிவாக வாசிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்ட ஒரு நாவல் குறித்து எழுதுவதற்கு சில காரணங்கள் உண்டு.
தமிழ் இலக்கியச் சூழலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இலக்கியப் படைப்பு இந்த வட்டாரத்தில் வெளிவந்துள்ளபோது, அது எழுதப்பட்ட காலத்தில் ஓர் எழுத்தாளராக அதுகுறித்து பேசுவது அவசியம் தோன்றியது. அடுத்து, நாவலை வாசித்தபோது பெற்ற உணர்வுநிலை அடங்கியபின் மறுவாசிப்பில் மேலும் அறிவார்த்தமாக அணுகமுடியுமா என்ற தேடல் இரண்டாவது காரணம். மேலும், இதுவரை வெளிவந்த வாசிப்பு அனுபவத்திலிருந்து புதிய ஒன்றைக் கண்டடையும் வாய்ப்பை உருவாக்கிக்கொள்கிறேன்.
சமூகமும் பெண்ணும்
ஒரு சமூகத்தின் பண்பாடு, மரபுகளின் தொடர்ச்சியை உறுதிசெய்பவர்கள் அச்சமூகத்தின் எளிய மக்களாகவே இருக்கிறார்கள். பண்பாடும் மரபும் அவர்களது வாழ்வுடன் ஒன்றுகலந்து இருக்கிறது. அதனால் அவர்கள் போகுமிடங்களிலெல்லாம் அவர்களின் பண்பாடும் மரபும் கிளை விரிக்கிறது. உலகின் எந்தச் சமூக வரலாற்றிலும் இதனைக் காணலாம்.
அந்தவகையில், தமிழ்ச் சமூகத்தின் தொன்மமும் மரபும் சாதாரண மக்களால் வேற்று மண்ணில் வேர் தழைக்கும்போது அவ்விடச் சூழல்களால் ஏற்படும் மாற்றங்களை உள்வாங்கிக்கொண்டே எவ்வாறு மேலும் வலுப்பெறுகிறது, புதிய பண்பாட்டு உருவாக்கம் எப்படி நிகழ்கிறது என்பதை மலேசியத் தமிழ்ச் சமூகத்தின் மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் மூலம் அறியத்தருகிறது ‘பேய்ச்சி’ நாவல்.
தமிழ் மக்களின் மரபுசார்ந்த நாட்டாரியல் தெய்வங்கள் அவர்கள் மலேசிய மண்ணில் உருப்பெறுவது பற்றிய இந்த நாவலில், பல இன சமூகக் குழுமங்கள் வாழும் ஒரு சூழலில் அந்தத் தெய்வங்கள் சார்ந்த நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகள், அவற்றின் தொடர்ச்சி ஆகியனவும்; கால, சமூக மாற்றங்களினால் ஏற்படும் பரிணாமங்கள் இதன் பேசு பொருட்களாக உள்ளன.
பொதுவாகவே தமிழர் வரலாறு, தமிழகப் பண்பாட்டு வரலாறு ஆகியவற்றில் மண்சார்ந்த மக்களின் மரபுகள் பதிவாதில்லை. மக்களின் பண்பாட்டை உருவாக்குவதில் அம்மக்களின் சமய மரபுகளுக்கும் பங்குண்டு. இதில், தெய்வங்களின் தோற்றம் குறித்த வரலாறும் அதுசார்ந்த நம்பிக்கைகளும் முக்கிய இடம்பிடிக்கின்றன. ஒரு சமூகத்தில் வாழ்ந்து மறைந்த, கொலையுண்ட அல்லது தற்கொலை செய்துகொண்ட மனிதர்களே பெரும்பாலும் சாமிகளாகியுள்ளனர். இந்த தெய்வங்கள் பற்றிய கதைகள் உண்மை நிகழ்வுகளாலும் கற்பனைகளாலும் பின்னப்பட்டிருக்கும். இவை பெரும்பாலும் வாய்வழிக்கதைகளாக இருக்கும். ஆதிக்க சக்திகள் தங்களுக்கு சார்பாக ஏற்படுத்திய நீதிநெறிகள், அவர்களின் அடக்குமுறைகள், மீறியவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனைகள், தனிமனிதர்களுக்கு சமூகம் விளைத்த அநீதி, தனிமனித சோகங்கள் என பல அறியப்படாத உண்மைகளை இந்தக் கதைகளின் வழி கண்டெடுக்கலாம்.
சாமிகளாக்கப்பட்ட இந்த ஆண்களும் பெண்களும் பெரும்பாலும் சாதாரண அடித்தள மக்களாகவே இருப்பார்கள். இதில் மற்றொரு சமூகச் செயல்பாட்டையும் காண முடியும். ஆணாதிக்க சமூகம் பெண்கள் மீது கட்டமைத்துள்ள தாய்மைப் பண்புகள் அனைத்தும் பெண் தெய்வங்கள் மீதும் சுமத்தப்பட்டிருக்கும்.
சுய விருப்பு வெறுப்புகள், தன்னைப் பற்றிய சிந்தனை, புரிதல்கள் எல்லாம் தேவையற்றதாகி தன் குழந்தைக்காக அனைத்தையும் துறந்து தியாகியாக வாழ்வதே ‘போற்றுதற்குரிய பெண்மை’ எனும் பெண்ணுக்குள் புகுத்தப்பட்டுள்ள செயற்கையான ‘தாய்மைத் தன்மை’ இந்தப் பெண் தெய்வங்களுக்கும் இருக்கும். தாய்மை என்பது பிரகடனப்படுத்தப்படாத ஒரு நிறுவனம் என்பார் அமெரிக்க கவிஞர் அட்ரென் ரிச் (Adrienne Rich) அதுபோல பெண் பிறக்கவில்லை உருவாக்கப்படுகிறாள் என்பார் சிமான் டி புவா (Simone de Beauvoir). குழந்தை பெறுவது என்பது பெண்ணுக்கு இயற்கையானது. அது உயிரியல் ரீதியான பெண்ணுக்கு அமைந்துள்ள தனித்தன்மை. ஆனால், பிள்ளைப்பேற்றிலும் பிள்ளை வளர்ப்பிலும் உண்டாகும் வலிகளையும் துன்பங்களையும் மனமுவந்து ஏற்று மகிழும் மனப்போக்கானது திணிக்கப்பட்டது என்பது பெண்ணிய அறிஞர்களின் கருத்து.
இயற்கையான போர்க்குணம், பேராற்றல்கள் பெண்களிடமிருந்து களையப்பட்டதுபோல் இத்தெய்வங்களிடமும் களையப்பட்டிருக்கும். அறச்சீற்றம், வீரம் யாவும் துறந்து, தியாகமும் கனிவும் நிறைந்தவர்களாக இப்பெண் தெய்வங்கள் இருப்பார்கள்.
குற்றமற்றவளாக இருந்தாலும் பெண்ணாகிய சக்தியை எரிக்கவும் சபிக்கவும் அழிக்கவும் சிவன் துளியும் தயங்கமாட்டார். தன்பேச்சைக் கேட்காமல் தந்தையைக் காணச் சென்ற தாட்சாயிணியை வெடித்துச் சிதறச் செய்வார் சிவன். பிரபஞ்சத்தை அழிக்கும் அந்த கடுச்சினமும் உக்கிரமும் ஆண்களுக்கு கம்பீரமானது. நியாயம், அநியாங்களைக் கடந்து உக்கிரநிலையில் செயல்படும்போது கடவுளாக இருந்தாலும் பெண்ணானவள், கணவன் என்பவனுக்கு முன் அனைத்தையும் துறந்து, அடங்கி அடிபணிபவளாக இருப்பாள்.
பேய்ச்சியில் பேச்சி
இத்தகைய தாய்மைப் பண்புகளோடு உருகொண்டிருக்கும் நாட்டார் தெய்வம்தான் பேய்ச்சி. நாட்டார் தெய்வங்களில் மிகவும் அறியப்பட்ட அதிகம் வழிபடப்படும் தெய்வங்களில் ஒன்றாகப் பேய்ச்சியைச் சொல்லாம். தமிழ் மக்கள் வாழும் இடங்களில் எல்லாம் பேய்ச்சி இருப்பாள். பெரும் தெய்வங்களின் கோயில்களில் இருக்கும் பேய்ச்சி பெரும்பாலும் ஒரே தோற்றத்துடன் ஒத்த கதையைக் கொண்டவளாக இருந்தாலும், கிராமங்களிலும் சிறு ஊர்களிலும் வணங்கப்படும் பேய்ச்சியின் உருவங்களும், கதைகளும் மாறுபட்டிருக்கும். நடுகல், மண் இறுகி எழுந்த கல் என பல்வேறு வடிவங்களில் பேய்ச்சியைக் காணலாம்.
நாவலில் வரும் பேச்சி ஒரு சிறு கல். எனினும், அவள் பல பெண்களின் படிமம். இப்பெண்கள் ஆசாபாசங்களும் கோபதாபங்களும் நிறைந்த, இயலாமைகளும் உள்ள சாமன்யர்கள். என்றாலும் அவர்களது மீது ஏற்படும் அச்சம் அவர்களைத் தெய்வமாக்குகிறது.
சாராயம் விற்கும், ஆண்களைப் பயன்படுத்திக்கொள்ளும் ஏமாற்றுத்தனங்கள் நிறைந்த சீனப் பெண், கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறாள். அதைத் தடுக்க முடியாதுபோன தனது இயலாமையை, தனது அச்சத்தைக் கடக்க ராமசாமி அவளைத் தெய்வமாக்குகிறாள். ஊரின் பேரழிவுக்குக் காரணமான சாராயம் அத்தெய்வத்துக்குரிய நைவேத்தியமாகிறது. ஓலம்மாவின் உக்கிரம் மீதான பயத்தை கடத்த அந்தக் குணத்தை பேய்ச்சியின் குணமாக்குகிறார்கள் ஊர் மக்கள். அவளது சத்தகம் அதன் ஆயுதமாகிறது. ஆற்றில் மறைந்துவிட்ட ராமசாமி மீது ஏற்பட்ட அச்சத்தை, அவரின் நோய்தீர்க்கும் தன்மையைப் பேய்ச்சிக்குத் தருவதன் மூலம் அதைக் கடக்கிறார்கள் ஊர் மக்களும் பூசாரியும். கொப்பேரனைப் பயங்கொள்ள வைத்த, மாலதியின் வளையல் அதன் ஆபரணமாகிறது. இப்படிப் பல கூட்டுப் பயங்களின் படிமமாகவே பேய்ச்சியைக் காணலாம்.
அறம் பிழைத்த அச்சம்
“உக்கிரமா இருக்கும்போது ஆத்தா முன்னாடி வரவங்க எல்லோரையும் வதம் பண்ணுவாய்யா. அப்படி எல்லாத்தையும் வதம் செஞ்சா. ஆத்தா உக்கிரத்த யாராலயும் குறைக்க முடியல. யாரால முடியும்? நெருங்கினாலே செதச்சிற மாட்டாளா? அப்பதான் செவன் ஆத்தா வர வழியில் படுத்துட்டாரு. ஆத்தா உக்கிரமா வரும்போது செவன் மேல கால் பட்டதும்தான் அங்க படுத்திருக்குறது தன் புருசன்னு தெரிஞ்சிக்கிட்டா. ஆத்தா கோவம் அடங்குச்சி,” என்று தனது பேரனுக்குச் சொல்லித்தரும் ஓலம்மா, மனபலமும் உடல் பலமும் மிக்கவள். சிறு வயதில் அனாதையாகி, வாழ்க்கையில் அடிபட்டு அடிபட்டு தன்னை உரமேற்றிக்கொண்டவள். இத்தகையதோர் பெண் மூலமாக, எப்பேர்ப்பட்டவளாக இருந்தாலும் பெண்ணானவள், பணிந்துபோக வேண்டியவள் எனும் சமூகநெறியை, வளரும் தலைமுறை ஆண்குழந்தையிடம் கடத்தி, அவன் தலைமுறையிலும் இச்சிந்தனையை வலுப்படுத்தப்படுவது என்பது ஆணாதிக்க சமூகச் சிந்தனையை வெளிப்படுத்தும் நுண்மையான படிமம்.
நாவலில் ஆழிப்பேரலையாகப் பொங்கும் தாய்மையுணர்வினால் கணவனையும் துவம்சம் செய்கிறாள் ஓலம்மா. ஆனால் தாய்மையே இங்கே அவளுக்குள் குற்றவுணர்வை ஏற்படுத்துகிறது.
“பொம்பள மேல கைய வச்ச… அறுத்துடுவேன்!” என்று தவறிழைத்தவனை அறையும் ஓலம்மா கணவனின் கழுத்தை நெரிக்கத் தயங்காதவள். வீரியமிக்க அவளின் இந்த மன உரம், தாய்மையில் நெக்குருகி நிற்கிறது. குமரனின் கூவலும் முனியம்மாவின் சிடுசிடுத்த வார்த்தைகளும் அப்போயின் இருப்பும் அவளை இறகிலும் மென்மையானவளாக்கி விடுகின்றன. பதின்ம வயதுப் பெண்ணாக, விவரமறியாத மகனுக்காக அத்தனை சிரமங்களையும் எதிர்கொள்கிறாள். எவரையும் அடக்கிவிடுபவள், மகள் முனியம்மா முன் கோழிக்குஞ்சுபோல் நடுங்குகிறாள். கடைசி காலத்தில் அப்போயை சுற்றியே தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு அவனுக்காகவே வாழ்கிறாள். அவனில்லாத வாழ்க்கை அவளுக்கு அர்த்தமற்றதாகிறது.
“….இது கோவம் இல்லய்யா. உக்கிரம். உக்கிரமுன்னாலும் உக்கிரம். மகா உக்கிரம். உக்கிரத்துக்கு ஞாயம் தெரியாது. எல்லாத்தையும் அழிக்கும்” என்று காளியின் வெஞ்சினம் பற்றிப் பேசுவதன் வழி அவளது அறம் சொல்லப்படுகிறது.
‘தாய்மையின் பேரன்பில்’ உருப்பெற்ற அவளின் அந்த அறம், தன் சமூகத்தின் சீரழிவுக்குக் காரணமாக சின்னியையும் அவளுக்குத் துணைபோகத் துணிந்த தன் கணவனையும் பேரன்னையாகி அழிக்க வைக்கிறது. சமூகக் குடும்பமாக பரிணமித்த கம்பத்து வாழ்க்கைக்கான குறியீடான அவளின் இருப்பை இல்லாதொழிக்க வந்த ஆதிக்கத்தைத் தகர்க்கும் அந்த அன்னையின் உக்கிரம், தான் வளர்த்த அத்தனை உயிர்களையும் பயிர்களையும் துவம்சம் செய்கிறது.
மகா உக்கிரத்தோடு அலைந்தவள், குமரன் மரணத்துக்குக் காரணமாகி அறம் பிழைத்துவிட்டதை தன்னெஞ்சிடம் ஒத்துக்கொள்ளும் தருணத்தில் உடைகிறாள். சின்னியைக் கொன்ற அவளின் அறத்தை அவளால் நிலைநிறுத்த முடியாமல்போகிறது. அவளது செயலுக்கான மறுதலிப்பாக ராமசாமி தெய்வமாக்கிய சின்னியை அவளால் சிதைக்க இயலவில்லை. அல்லது தன் குழந்தையைப் பாதுகாக்கக் கேட்டு இறைஞ்சிய சின்னி என்ற தாயின் கடைசி ஏக்கத்தை பொருட்படுதாத தன் மறைக்கப்பட்ட குற்றம் அவளைச் சிதைத்திருக்கலாம்.
‘அம்மா’ எனும் கருப்பனின் அலறல் அதுவரையிலான அவளது நியாயங்களையெல்லாம் தகர்த்து, அவளிடம் கனிந்து, அடங்கும் தாய்மையைக் கோருகிறது. காளிபோல் ரத்தம் சொட்டும் சத்தகத்தை ஏந்தியடி இனியும் அவளால் கெக்கலிக்க முடியவில்லை. எந்த சாரயத்தை விஷம் என்றாளோ, எதற்காக சின்னியைக் கொன்றாளோ அதைக் குடித்து, தனக்குத்தானே தண்டனை விதித்துக்கொள்கிறாள். நேரடி வாசிப்பில் பேரன்புமிக்க தாய்மை, ஓலம்மாவின் வீரத்தையும் வலிமையையும் முடக்கி, அடக்கி விடுவதாக அவள் மரணம் தெரிகிறது.
ஆனால், நாவலின் முடிச்சு இங்கேதான் இருக்கிறது.
அம்மா என்ற கருப்பனின் மரணஓலம் அவளுக்கு தன் மகனின் கடைசிக்கூக்குரலை நினைவுபடுத்தி, அவளைக் குற்றஉணர்வில் உடையச் செய்கிறது என்றால், மகனின் மரணத்தில்தான் பங்கு வகித்ததை அவள் உள்ளம் அறிந்தே இருக்க வேண்டும். ஏற்கெனவே ராமசாமி விஷம் கொடுத்தவர் என்பதை அறிந்தவள் என்பதால்தால் சிறிதுகூட தயங்காமல் அவளால் மணியத்துக்கு விஷம் கேட்க முடிந்திருக்கிறது. அந்நேரத்தில் இருவருக்குமிடையில் தொங்கிக்கொண்டிருக்கும் கனத்த மௌனம் பலவற்றைப் பேசுகிறது. நாவலெங்கும் அறச்சீற்றம் கொள்பவளாக வலம் வருபவள் ராமசாமியை மன்னிப்பவளாக இருக்கிறாள். இது எதுவும் இல்லாமல் அந்த ‘அம்மா’ எனும் சொல் குமரனில் இருந்து திரிந்து திரிந்து சின்னியின் மகளின் குரலாக, கருப்பன் தன்னை தாயென்று நம்பியதன் சாட்சியாக, இன்னும் துடிக்கும் உயிர்கள் எல்லாம் சொல்லும் ‘அம்மா’ எனும் ஒற்றைச் சொல் அவள் முன் பிரமாண்டமடைந்திருக்கலாம்.
தானில்லாத உலகில் தான் வளர்த்த உயிர்கள் சிரமப்படக்கூடாது என அவ்வுயர்களை மாய்ப்பது ‘தாய்மை’யின் உச்சபட்சமான கருணை. நல்லதங்காள் கதையிலிருந்து கொரோனா ஊரடங்கால் உணவுகிடைக்காமல் ஐந்து பிள்ளைகளை ஆற்றில் வீசிய உத்திரப்பிரதேச தாயின் மனவோட்டம் வரையில் இந்த உச்சபட்சமான தாய்மையைக் காணலாம். இதே உணர்வுதான் ஓலம்மாவை தான் வளர்த்த மரஞ்செடிகள், ஆங்சா, கோழிகள் என எல்லாவற்றையும் கொன்றழித்து கருப்பனையும் வெட்டிச் சாய்க்க வைக்கிறது.
பேரன்பின் மீதான அச்சம்
தாய்மை எனும் பேரன்பின் மீது ஆணாதிக்க சமூகத்திற்கு எப்போதுமேயுள்ள ஐயமும் பேரச்சமும் காத்தாயி மூலம் வெளிப்படுகிறது.
காத்தாயியின் பேரன்பு கொப்பேரனுக்கு பயமேற்படுத்துகிறது. மாசற்ற தாய்மை எனும் தான் உருவாக்கிய செயற்கையான குணத்தை காணும்போது ஆண் எதிர்கொள்ளும் அச்சம் அது. கால் பாவாமல் நடக்கிறாள். பிள்ளைக்காக நோவைப் பொறுத்து, கொதிக்கும் தைலத்தைத் தடவிக்கொள்கிறாள். வரிசையாக ஐந்து குழந்தைகளைப் பலிகொடுத்த உடல் வலியையும் மனவலியையும் மறந்து நோயுற்றிருக்கும் கணவனின் நிம்மதியான தூக்கமே முக்கியமென நினைக்கிறாள். இருவாரங்கள்கூட ஆகாத பச்சைக் குழந்தையை பனியில் வைத்துக்கொண்டு எந்தத் தவிப்பும் இல்லாதிருக்கிறாள். அதுவும் சாகக்கூடும் என்ற தனது வெருட்சி துளிக்கூடத் தெரியாமல் கொப்பேரனை மேலுமேலும் வெருட்டுகிறாள். தன்னையும் குழந்தையையும் மறந்து அவனைத் தாங்குகிறாள். முன்னோர் இழைத்த பாவங்கள் குறித்த அச்சத்தை ஏற்படுத்துகிறது. காலம்காலமாக பெண்ணுக்குள் மழுங்கடிக்கப்பட்டுவிட்ட அவளின் இயற்கையான குணங்களை அவளிடம் தேடி தேடி, காணமுடியாதபோது அவரது அச்சம், நச்சுத் தோய்ந்த நீராக அவரை தூங்கவிடாமல் செய்கிறது. பேரருள் நிறைந்த அந்த அன்பினின் கட்டிலிலிருந்து தப்பி ஓடுகிறார். அவளது அன்பு, மெக்பெத்தின் கரங்களில் படிந்த கறைபோல கழுவிக்கரைக்க முடியாத ரத்தக் கறையாக அவர் நினைவுகள் எங்கும் நிறைந்து அவரைத் துன்புறுத்துகிறது. அந்த அன்பைக் குரூரமான திருப்தியாக அவர் மனம் நம்ப விரும்புகிறது. அந்த நம்பிக்கையிலேயே தனது குற்றவுணர்ச்சிகளைக் கழுவுகிறார்.
இந்த பயத்தை ‘அப்போய்’ குமரனிடத்திலும் காணலாம். குழந்தை மனத்தோடு விளையாடித் திரிந்த மாலதி, சேவலின் இறகடிப்பைக் கண்டு நடுங்கிய சிறு பெண், தாய்மைக்காக ஆக்ரோஷத்துடன் சேவலின் கழுத்தறுக்கிறாள். தாய்மை என்பதைப் பெரும்பேறாகவும் அதற்காக எதைச் செய்யவும் துணிவதை அதன் உச்சமாகவும் தன்னால் நிர்மாணிக்கப்பட்ட குணங்கள் மெலெழுந்து வரும்போது, இயல்பாக ஆண்களின் காணப்படும் மனபயத்தை குமரன் வெளிப்படுத்துகிறான். ஓலம்மா தாய்மையினால் தணிந்து கனிகிறாள் என்றால், அதே தாய்மைக்காக உக்கிரம் கொண்டவளாகிறாள் மாலதி.
தாய்மை தரும் அச்சம்
சமூகப் பார்வையில் நியாயமற்றவளாகவும் ஒழுக்கமற்றவளாகவும் சமூகத்தைச் சீரழிப்பவளாகவும் சின்னி உள்ளாள். அவள் நல்ல பெண்ணாக, நல்ல தாயாக இருந்தால், சமூகத்தை அழிக்கும் சாராயம் காய்ச்சக்கூடாது. ஆண்களை மயங்குபவளாக இருக்கக்கூடாது என்ற கருத்தாக்கம் ஓலம்மா மூலமாக வைக்கப்படுகிறது.
ஆனால் சின்னிக்கு இருப்பது தாய்மையின் வேறு நியாயங்கள். தான் பெற்ற பிள்ளைக்காக தனது சுய விருப்புகள், ஆசாபாசங்கள், நியாயங்களைத் தள்ளிவைத்துவிட்டு வாழ்பவள் அவள். ஒருவகையில் அவள் ஓலம்மாவின் இன்னொரு வடிவம். ஒருவரும் அழிக்கின்றனர். இருவரின் பற்றும் பிள்ளைகள்தான். ஒருத்தி அழித்து காக்கிறாள் என்றாள் மற்றவள் காக்க அழிக்கிறாள்.
சின்னி துணியைக் கடித்து வேதனையை விழுங்கி, கண்ணீர் வடித்துக்கொண்டே மணியத்தின் ஆசைக்கு அடிபணியும் போதும், தப்பி ஓடப் பார்க்கும்போதும் தன் பிள்ளை ஆதரவற்றுப்போய் விடுமே என்றே தன்னை நியாயப்படுத்துகிறாள். மிகக்கொடூரமான மரணவேதனையிலும் தன்னைக் கொன்றாலும் தன் பிள்ளையைக் காப்பாற்றச் சொல்லி தெய்வமாகிறாள் அந்த சீனப் பெண். குட்டையான கால்சட்டை போடுபவளாக, உழைப்பாளியாக, தனியாகப் பிள்ளையை வளர்ப்பது பற்றி அலட்டிக்கொள்ளாதவளாக, பணமே குறியாக இருப்பவளாக, சீனர்களுக்கான பொதுவான குணாதிசியங்களுடன் இந்த சீனப் பெண் உருவாக்கப்பட்டிருக்கிறாள். தமிழ் மரபார்ந்த அறநெறிகளை அவள் கொண்டிருக்கவில்லை. எனினும், மானுட சமூகம் உருவாக்கிய தாய்மைப் பண்பை அவள் பெற்றிருக்கிறாள். தமிழ்ச் சிந்தனையில், அந்தத் தாய்மை தெய்வநிலை அடைகிறது.
பெண்மையும் தாய்மையும்
தாய்மை எனும் சமூகத்தால் உருவாக்கப்பட்ட பெண்மையின் அடையாள குணத்திலிருந்து விலகி, தன் இயல்பில் இயங்கும் ராமசாமி கதாபாத்திரம் மிக நுட்பமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. பெண்மைத்தன்மையினால் கேலிக்கு ஆளாகி, தன்னைச் சுருக்கிக்கொண்ட ராமசாமிக்கு மருத்துவராக சமூகம் அளித்த அங்கீகாரம் தெம்பைத் தருகிறது. குமரனைக் கவனித்துக்கொண்டபோதும், ஓலம்மா அவரது தாய்மையைக் கொண்டாடியபோதும் அவர் மேலும் மேலும் தன்னுள் தாய்மை உணர்வை வளர்த்துக்கொள்கிறார். அந்த உணர்வினால் ஓலம்மாவைக் காப்பாற்ற மணியத்திற்குத் துணைபோகிறார். ஒரு தாயாக, சமூகத்தில் வாழச் சிரமப்படும் உயிருக்கு விடுதலை அளிப்பதாக எண்ணுகிறார். ஆனால், அவரது இயற்கையான மனித குணம் அவருக்குள் குற்றவுணர்வையும் பயத்தையும் விதைக்கிறது. அவரால் ஓலம்மாவிடமோ, குமரனிடமோ தோக் குருவிடமோகூட மனம் திறந்து மன்னிப்புக் கேட்க முடியவில்லை.
குமரன், கண்ணன் வாத்தியார், மணியம், சின்னி ஆகியோரின் மரணங்களுக்குத் துணை நின்றதில், மருத்துவ அறத்தை இழந்தது பற்றிய கவலையைவிட, தாய்மையின் அறத்தைக் கைவிட்டதே அவரை ராமசாமியை வருத்துகிறது. தன்னிலை நியாயம் கற்பிக்கும் மனத்தைக் கண்டு பயப்படுகிறார். வீட்டைப் பூட்டிக்கொண்டு தனக்குள்ளேயே உழல்கிறார். தற்கொலை செய்து தப்பிக்கப் பார்க்கிறார். தன்னுள் ததும்பும் தாய்மையுடன் போராடிப் போராடி இறுதியில் வெற்றியும் கண்டுவிடுகிறார். அவருக்குள்ளிருந்து தாய்மையுணர்வு அகலும்போது, அகாலவேளையில் பூனியான் காட்டில் தனித்து நிற்கும் சிறுவனை, அவனை இழந்து தவிக்கப்போகும் அவன் தாயை, ஓலம்மா மீதான அன்பு -பயத்தை, அவரைப் பேதலிக்க வைத்த குற்றவுணர்வை அனைத்தையும் அவரால் துறந்துவிட்டு நீரினுள் நிச்சலனமாக நடக்க முடிகிறது.
அப்படிக் கடக்க முடியாத அந்த அச்சம் தெய்வமாக்கப்படுகிறது. தெளிவது விடுதலை தருகிறது. அஞ்ச வைப்பது கடவுளாகிறது. இந்நாவல் தரும் தரிசனம் இது.
பல கோணங்களில் வாசிப்பவை வழங்கும் இந்நாவல், தமிழ் மரபின் தொடர்ச்சி, பல சமூகப் பின்னணியில் உருவாகும் பொதுப்பண்பாடுகள், வரலாற்றுப் பதிவு, மலேசியத் தமிழ் சமூக மாற்றங்கள், சமூகக்கூட்டு வாழ்வுமுறை ஒழிக்கப்பட்டு தனிமனித சிந்தனை வளர்க்கப்படுவது என வெவ்வேறு பார்வைகளையும் தருகிறது.
மரபின் தொடர்ச்சி
பல தலைமுறைகள் கடந்த தமிழகத்தின் ஒரு சிறு மலைக்கிராமத்தின் பேய்ச்சி எனும் தெய்வம், காத்தாயி எனும் உயிருள்ள பெண்ணாகி, கொப்பேரன் வழியாக கடல் கடந்து வேற்றுநிலத்தில் தடம்பதிக்கிறாள். அந்நிலத்து மக்களின் பாவனைகளைப் பெற்றபோதும் தமிழ் நாட்டாரியல் சிந்தனை மரபின் வெளிப்பாடாகவே இன்றைய காலகட்டத்திலும் துலங்குகிறாள். நவீன அறிவியல் நம்பிக்கைகளைத் தாண்டி சடங்கும் நம்பிக்கையும் நிலைபெற்றிருப்பதும் இதன் வெளிப்பாட்டை, எதற்கும் அசையாத குமரன், மாலதியைக் கண்டு பயந்து பார்வையைத் திருப்பிக்கொள்ளும் கணத்தில் அறியலாம். தொடரும் இம்மரபின் குறியீடாக, மாலதியிடம் காணப்படும் பல தலைமுறைகள் தாண்டிய தொல் கிராமத்து வளையல் உள்ளது.
வேறு இனத்தைச் சேர்ந்த பெண் ஒருத்தி தமிழர்களின் தெய்வமாவதும், இதனூடான சமூக அசைவியக்கம் பற்றியும் பேசும் முதல் படைப்பாகவும் பேய்ச்சி உள்ளது.
இந்த மக்களின் மூதாதையர்கள் விட்டுவந்த நிலமும் வாழ்வும் மாறிவிட்டது. ஆனால், அவர்கள் சுமந்து வந்த நம்பிக்கைகளையும் சடங்குகளையும் மொழியையும் பாதுகாக்கும் பொறுப்பை தங்களை அறியாமலேயே இவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
தாய்நிலமான தமிழ் நாட்டிலிருந்து மலேசியாவுக்குப் பிழைப்புத் தேடிச் செல்லும் கொப்பேரன், பூமண் நாடார், அழகப்பா செட்டியார், ஓலம்மா, மணியத்தின் மூதாதயர் என எல்லாருமே தங்களை வாழவைத்த மண்ணையே தங்கள் வாழ்வாகவும் கொண்டபோதிலும் தங்களின் பண்பாட்டுத் தொடர்ச்சியை உறுதிசெய்வதில் உறுதியாக இருக்கிறார்கள். வாழ்க்கைப்பாட்டின் துன்பங்களும் போராட்டங்களும் இந்தப் பொறுப்பை மேலும் மேலும் அதிகரித்து வந்துள்ளது. கொப்பேரனின் பேச்சி வழிபாட்டை ராமசாமியும் அவருக்குப்பின் பெரியார் தொண்டனாகிய சம்புவும் வளர்த்தெடுக்கிறார்கள். கட்டையாவின் குட்டைக்கார முனியாண்டி பெரிய கோயிலில் குடிகொள்கிறார்.
பண்பாட்டு உருவாக்கம்
சின்ன வயதில் தான் பார்த்த ஜல்லிக்கட்டும், கப்பல் பயணமும் நினைவுகளில் மிதந்தாலும், “இந்த தோட்டம்தான் என்னைய வளத்துச்சி. இவங்க என் மக்க மனுசாலுங்க,” என்றே வாழ்கிறாள் ஓலம்மா.
மலேசிய மண்ணுக்கேயுரிய பொதுப் பண்பாடுகளையும் இந்தத் தமிழ் மக்களிடம் காணமுடிகிறது. மலாய், சீன இன மக்களுடன் ஒன்றிணைந்த வாழ்க்கையில் அவர்களின் பழக்கவழக்கங்களை இவர்கள் உள்வாங்கிக்கொள்கிறார்கள். இவர்களின் பழக்கங்கள் அவர்களிடமும் படிகிறது. தோட்டத்தில் குடியேறும் நாடார் குடும்பத்தின் இளையர்கள் மலாய்க்காரர்களுடன் சேர்ந்து தூக்கணாங்குருவிக் கூடுகளையும் மணிப்புறாக்களையும் பிடித்து சீனர்களிடம் விற்கிறார்கள். மலாய்க்காரர்களிடமிருந்து குடும்பமாகச் சேர்ந்து உண்டு களிக்கத் தெரிந்துகொள்கிறார்கள்.
தேங்காய்பால் ஆப்பத்தை சீனர்களுக்குப் பழக்குகிறாள் ஓலம்மா. சீனர்களின் கொய்தியோவில் உடல்வளர்க்கிறார் மணியம். சீனனிடம் உழைப்பைக் கற்றுக்கொள்ளும் மணியம், மாணிக்கம் பிள்ளையிடம் முதலாளித்துவத்தைப் படிக்கிறார்.
வெவ்வேறு இனக்குழுக்கள் சேர்ந்து வாழும் ஒரு நிலம்சார் சமூகம், நிலச்சார்பிலிருந்து விடுபட்டு பொருளே முதலாகக்கொண்ட ஒரு வாழ்க்கைக்குத் தள்ளப்படும்போது யாரைத் தின்று யார் வளர்வது எனும் போக்கு பூதமாக வளர்கிறது. தமிழர்களிடம் சாராயம் காய்ச்சப் பழகி, தமிழர்களிடமே அதில் ஆதாயம் தேடும் சின்னி, வியாபாரி ஆசோ, அவர்களுக்கிடையிலான வியாபார சண்டையில் தலையிடாமல் விலகிச் செல்லும் தமிழர்களின் போக்கு, சீன முதலாளிக்கு ஏவல் புரியும் தமிழ் இளையர்கள் என்று மெல்ல மெல்ல ஆரம்பகால தோட்டச் சமூக அமைப்பு மாறுகிறது.
நாட்டின் பொருளாதார மாற்றங்களால் மக்கள் வாழ்க்கையும் அவர்களின் மனப்போக்கும் நிலமறியாது நீர் உறிஞ்சி வளரும் செம்பனைபோல, வெளித்தெரியாது மாற்றமடைவதை கதைசொல்லிகளின் உணர்வுகள் மூலம் வெளிப்படுத்துவது பேய்ச்சியின் சிறப்பு.
வரலாற்றில் எழுச்சி
இரு தலைமுறை மக்களது காலத்தை, அந்த காலகட்டத்தின் அறத்தை, அறமறுப்பை, கனவுகளை, ஏமாற்றங்களை அழகியலோடு கண்முன்னே கொண்டு வருகிறது இந்நாவல்.
குடிப் பழக்கம், குடும்ப வன்முறை, தோட்டங்கள் அழிக்கப்படுவது, சிறுபான்மையினத்தின் அல்லாடல்கள், தமிழ்க் கல்வி, கோயில்கள், சாதி அடுக்கு, பெரியாரின் சீர்திருத்த எண்ணங்களினால் ஏற்பட்ட சமூகத் தாக்கம், தோட்டங்களின் அழிவினாலும் நாட்டின் பொருளாதாரக் கொள்கை மாற்றங்களினாலும் தமிழ் உழைப்பாளி வர்க்கத்தினர் எதிர்கொண்ட வாழ்க்கைப் போராட்டங்கள் என மலேசியத் தமிழ்ச் சமூகத்தின் பல சிக்கல்கள், இயல்பான காட்சிகளாக நாவலில் விரிகின்றன.
“பெரியார் திரும்பத் திரும்ப ‘இனி இதுதான் ஒங்க மண்ணு’ எனச் சொல்லிக்கொண்டிருந்தது வீட்டுக்கு வந்த பிறகும் அவன் காதுகளில் ஒலித்துக்கொண்டிருந்தது.” என்ற வரிகள் மலேசியத் தமிழ்ச் சமூகத்தில் நிகழ்ந்த ஒரு பெரும் மாற்றத்தின் சாட்சியம்.
அடர் காடுகளாகவும் மலைகளாகவும் இருந்த மலேசிய நிலத்தைக் கொத்தி, திருத்தி பொருள் கொழிக்கும் பூமியாக்கியதில் இந்திய சமூகத்திற்கு பெரும் பங்குண்டு. இதில், குடியேறிய காலத்திலிருந்து உழைத்துத் தேய்ந்த உழைப்பாளி சமூகம் நெடுங்காலம் வரையில் தனது உரிமைகள் குறித்த உணர்வில்லாமலேயே வாழ்ந்தது. மண் சார்ந்த வாழ்வு இந்நிலத்துடான பற்றுதலை உணர்வுநிலையிலேயே போற்றிக்கொண்டிருந்த சமூகத்திடம், அறிவுநிலைப்பட்ட சிந்தனையைப் பெரிய அளவில் தூண்டியவை பெரியாரின் சமூகச் சீர்திருத்தச் சிந்தனைகள். தொழிலாளர் இயக்கப் போராளிகளின் கம்யூனிச சிந்தனைகள் பொருளியல் சார்ந்து குறிப்பிட்ட ஒரு நிலையிலேயே அசைவை ஏற்படுத்தியுள்ளது. பெரியாரின் சீர்திருத்த சிந்தனைகள் வர்க்கம், சாதி அடிப்படைகளில் உருவாக்கப்பட்டிருந்த சமூகக் கட்டமைப்புகளை அசைத்து, உளவியல் ரீதியான சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தின.
வழிவழியாக வெட்டியான் தொழில் செய்து, மேட்டுக்குடிக்கு அடிமையாக வாழ்ந்து வரும் ஒருவன் தன்னுர்வு பெற்று, சுய உரிமைக்காக போராடுவதை, உயர்வெழுச்சிக்கான அவனது அடையாள மாற்றங்களின் முதல் அடியாக பெரியாரின் இந்த வார்த்தைகள் அவன் மனதில் விழுகின்றன.
சிலம்பம் சுற்றி, உடல்வலுவால் உயர்ந்து தன் அடையாளத்தை மாற்றிக்கொள்கிறான். “மம்பட்டி தூங்கினாயென்னா, மரம் சீவினாயென்ன? செவன் சுடுகாட்டுலயும் இருப்பான் கோயில்லயும் இருப்பான் புரிஞ்சிக்க” என ஓலம்மா மண்வெட்டியைக் கையில் கொடுத்தாலும் தலைவனாக வாழும் மணியம் அறம் பிழைக்கும்போது அவனது அக உயர்வு தாழ்கிறது. “செலம்ப கம்ப சுத்துனவன் கையில மம்மட்டிய கொடுக்கறீயாக்கும்!” என்று மறுத்து நின்றவனின் மனம், பின்னர் குழிதோண்ட நேர்ந்தபோது ‘நா வெட்டியான் இல்லை’ அரற்றுவது கவித்துவமானது. இதுபோன்ற பல அழகிய தருணங்கள் மொழியைக் கடந்து நாவலை உள்வாங்க வைக்கின்றன.
கள்ளும் சாராயமும்
நையாண்டியும் கேலியும் இழையோடும் மொழி; பிராஞ்சா, சடக்கு, லயன் வீடு, கித்தா காடு, காண்டா, நெரை, ஆயாக்கொட்டாய், என்று மலேசியத் தோட்டத் தமிழின் மணம்; பெரியார் ஏற்படுத்திய அகவெழுச்சி, அவராலும் மாற்றமுடியாத வழிபாட்டு, சடங்கு நம்பிக்கைகள், கம்யூனிச எழுச்சியினால் பாதிக்கப்பட்ட இந்திய முதலாளி வர்க்கம், கம்யூனிச சிந்தனை உழைக்கும் வர்க்கத்திடம் உண்டாக்கிய தாக்கம், அஉடலுக்கு உரமூட்டிய தென்னங் கள் குடித்த உழைப்பாளிகளை உடலை அழிக்கும் ரசாயன சாராயத்துக்கு அடிமையாக்கும் அதிகாரவர்க்கம் என உணர்ச்சிமிகு கதையூடே பின்னப்பட்டிருக்கும் வரலாறு நாவலுக்கு மேலும் செறிவூட்டுகிறது.
கொத்தடிமைகளாக உழைத்துத் தேய்ந்த கூலி மக்களின் சத்துணவாக இருந்தது தென்னிந்தியாவிலிருந்து மலேசியாவுக்கு அறிமுகமான தென்னங்கள். அதன் கால்சியச் சத்தும் புத்துணர்ச்சியூட்டும் தன்மையும் அவர்களின் உழைப்பின் களைப்பையும் ஊரின் நினைவையும் மறந்து வாழவைத்தது. அடிமை சமூகத்தைச் சிந்திக்கவிடாமல், வேறெங்கும் நகரவிடாமல் ஒரே இடத்தில் முடக்கி வைக்க, இந்த கள் கலாசாரம் உதவியதால் பிரிட்டிஷ் அரசாங்கமும் இதை வளர்த்தது. ஆனால், சீனர்களின் மலிவான அதிக போதையூட்டும் சாராயங்களும் வரைமுறையற்று புழக்கத்துக்கு வந்தபோது, அது உழைக்கும் தமிழ் மக்களை பெரிதும் பாதித்தது. சீன சாராயத்தின் காட்டத்தைத் தாங்கக்கூடிய அளவுக்கு உணவை அவர்களுக்குக் கிடைப்பதில்லை. அந்த ரசாயனம் அவர்கள் குடலை எரித்தது. உடலை உருக்கியது. வேலை செய்ய முடியாமல் மயங்கிக் கிடந்தார்கள். இதனால், குடி எதிர்ப்பு இயக்கத்தை சமூக ஆர்வலர்கள் தொடங்கினர். நீதிமன்றத்துக்கு வழக்கு சென்றது. கள் விற்பனைக்கு பல கெடுபிடிகளை விதித்த பிரிட்டிஷ் அரசாங்கம், மெல்ல மெல்ல வெளிநாட்டு சரக்குகளை நுழைத்தது. ஜப்பான் ஆட்சி காலத்தில் எல்லா சட்டதிட்டங்களும் காணாமல் போக, சாராயம் தோட்டங்களில் கரைபுரண்டோடியது. தென்னந்தோப்புகளெல்லாம் செம்பனைத் தோட்டங்களான பின்னர், கார்ப்ரேட் நிறுவனங்களின் பியருக்கும் சிறு தொழிலர்களின் கள்ளச் சாராயத்துக்கும் உழைப்பாளிகள் அறிமுகப்படுத்தப்பட்டனர். தோட்டங்களிலிருந்து நகரங்களுக்கு குடிபெயர்ந்த, குடியமர்த்தப்பட்ட அவர்களால் மதுப் பழக்கத்திலிருந்து இன்னமும் விடுபடமுடியவில்லை. மலேசிய இந்திய/ தமிழ்ச் சமூகத்தின் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக மதுப்பழக்கம் இருக்கிறது. பொருளியல் முதல்வாத சமூகத்தில் முதலாளி வர்க்கமும் ஆதிக்க சக்திகளும் அடித்தள மக்களின் எளிய உணவுப் பழக்கங்களிலும் ஆதாயம் காண்பதை விவரிக்கிறது நாவலின் மையக் கதை.
நாவலில் வரலாற்றுப் பதிவு என்பது கத்தியின் கூர்ப் பகுதியில் பழத்தை உருட்டிச் செல்வதுபோல் மிகக் கவனமாகக் கையாள வேண்டியது. புள்ளிவிவரங்களும் திகட்டும் குறிப்புகளும் நாவலின் கலைத்தன்மையைக் குறைத்துவிடும். ஆதாரபூர்வமான நிகழ்வுகள் பற்றிய விவரங்கள் தவறாகும்போது உண்மைத்தன்மையை நாவல் இழந்துவிடும். கற்பனைப் படைப்புக்கு உண்மைத்தன்மை தேவையா என்ற கேள்வி எழலாம். வாழ்க்கை, சிந்தனை ஆகியவற்றின் உண்மை நிலையில் நின்று, எல்லையற்ற கற்பனையில் விரியும்போதுதான் வாசக மனங்களை படைப்பு ஈர்க்கிறது.
மக்களின் உணரப்படாத வகையில் சுயலாபத்துக்காக கள்ளிலிருந்து சாராயத்துக்கு சமூகம் மாற்றப்பட்டதைப்போல, வாசகர்கள் உணராத வகையில் கதையோடு இழையோட விட்டிருக்கிறார் ஆசிரியர்.
மற்றொரு குறிப்பிடத்தக்க பதிவு எம்ஜிஆர் – ரஜினி. தனது நிறத்தாலும் குடிக்காத, புகைக்காத, பெண்களைத் தேடிச்செல்லாத, நல்லதே நினைத்து நல்லதே செய்யும் எம்ஜிஆர் உயர்நவிற்சி உழைத்துத் தேய்ந்த மக்களின் கனவு. அவரின் வாள் வீச்சும் காதல் விளையாட்டுகளுக்கும் அவர்களது வெளிப்படுத்தமுடியாத வீரத்துக்கும் ஆசைகளுக்கும் வாய்க்கால். உயர்குணச் சிறப்புகள் அவர்கள் போத்திக்கொள்ள விரும்பும் போர்வை. எளிய மக்களின் தன்முனைப்பாகவும் ஞானத் திரியாகவும் இன்றளவும் இருப்பது அவரது தத்துவப் பாடல்கள். மீண்டும் மீண்டும் இந்தக் கனவுலகில் மூழ்கித் திளைந்திருந்த சமூகம், தாழ்வுணர்ச்சிகளிலிருந்து விடுபட்டு எழும்போது கருப்பான, சிகரெட் புகைக்கும், முரட்டுக்குணங்களால் ஆன ரஜினியைக் கொண்டாடத் தொடங்குகிறது. வாத்தியார் போன்ற உயர்குடிமக்களிலிருந்து மணியம், சாம்பு என தாழ்ந்த நிலையிலிருக்கும் மக்கள் வரையில் பொருளாதார மாற்றங்கள் சமூகத்தில் கொண்டுவரும் மாற்றத்தை, தலைமுறை மாற்றத்தை இந்த எம்ஜிஆர் படத்திலிருந்து ரஜினி படத்துக்கு மாறுவதன் மூலம் மிக யதார்த்தமாகச் சொல்லிச் செல்கிறது நாவல்.
கலை நுட்பம்
தென்னை, ரப்பர், செம்பனைத் தோட்டங்களையும் மூலிகைத் தோட்டங்களையும் பூனியான் காட்டையும் போமோக்களின் உலகத்தையும் காட்சிகளாக மனதில் விரித்துச் செல்வது பேய்ச்சியின் பலம். “எல்லாத்தையும் ஒரே கண்ணால பாக்க முடியாதப்பு,” என்பார் ராமசாமி. காட்சிகள் ஒவ்வொன்றையும் அதனதன் தன்மையோடு உணர வெவ்வேறு பார்வைகள் தேவைப்படுகின்றன.
அமைதியான காத்தாயி கொப்பேரனை அழுத்தமான பாத்திரமாக்குவதுபோலவே வாயே திறக்காத சங்கர் முனியம்மாவின் பாத்திரத்துக்கு அழுத்தம் தருகிறாள். நாவலில் முனியம்மா – ஓலம்மா உரையாடல்கள் சுவாரஸ்யம் ஊட்டுகிறதென்றால் ராமசாமியின் உரையாடல்கள் தத்துவக் கேள்விகளை எழுப்புகின்றன. இரண்டையும் சாராயச் சாவுக்கு முன்னான காலத்தில் ஓலம்மாவுக்கும் ராமசாமிக்குமான உரையாடல்கள் இணைத்திருக்கக்கூடும். அவரவர் குரல்களில் ஒலிக்கும் உரையாடல்கள் நாவலுக்கு ஒலித்தன்மையை தருகின்றன.
கொப்பேரனின் வெட்டுக்கத்திக்குத் தப்பிய ஆறாவது ஆட்டில் தொடங்கி, கொப்பேரனை மலேசிய மண்ணுக்குரியவனாக்கும் மலாய் நாகம், இந்த மண்ணின் தனித்தன்மையோடு பேய்ச்சி கோயிலின் தல விருட்சமாக அழிக்க முடியாத சமூகப் பதிவாக தழைத்து நிற்கும் ரம்புத்தான் மரம், பன்றி வேட்டை, எம்ஜிஆர், ரஜினி, தைப்பூசத் திருவிழா என்று மாலதியின் வெள்ளி வளையல் வரையில் வாசகரின் உழைப்பைக்கோரும் குறியீடுகள் இந்நாவலில் பல உண்டு.
அறச்சீற்றமும் உணர்ச்சிக்கொந்தளிப்புகளும் நிறைந்து குளர்ச்சியான பசுமையோடு, சாவுகளும் கொலைகளுமாக ரத்தக் கவிச்சியும் வீச்சமும்கொண்ட இந்த நாலுக்கு உயிர்ப்பு தருபவர்கள் அப்போயும் கருப்பனும். ஓயாத கேள்விகளாலும் விளையாட்டுகளாலும் நாவலை ஒரு சிறுவனின் கள்ளமற்ற உற்சாகத்தோடு அப்போய் நகர்த்திச் செல்கிறான். சின்ன சின்ன சந்தோஷங்களில் அகமகிழ்ந்து திருப்தியடைகிறான். பறவையின் வேதனை கண்டு தவிக்கிறான். பெருங்காட்டில் பயமின்றி உலவுகிறான். அற்புதமாக சிறுவனின் உலகத்தைப் படைத்திருக்கிறார் நவீன். அவனில் தொடங்கி அவனிலேயே முடிகிறது நாவல்.
மற்ற இனங்களுடன் கலந்தும், பிரிந்துநின்றும் மலேசிய மண்ணில் வேர்கொண்டிருக்கும் தமிழ் வாழ்வை பல மக்களின் அகங்களிலிருந்தும் அள்ளித் திரட்டித் தந்து, அதிலிருந்து ஓராயிரம் அனுபவங்களை உள்வாங்க வைக்கும் படைப்பிலக்கியமாக பேய்ச்சி திகழ்கிறது. ஒரு நாட்டாரியல் கதையாடல். மிஞ்சினால் அஞ்சி, அஞ்சினால் மிஞ்சி அல்லாடும் மனிதனின் எளிய குணப்போக்கினால் உருப்பெறும் சமூக வரலாற்றின் சான்று எனக் கொள்ளலாம்.
மொழியாலும் தனிச்சையாகச் செல்லும் நடையாலும் வாழ்க்கைச் சித்திரங்களாலும் ஆசிரியரின் கட்டிலிருந்து விடுபட்டு தன்பாட்டில் சொல்லிச் செல்லும் ‘பேய்ச்சி’யில் உலவும் மனிதர்கள் காலத்தின் துண்டுகள்.
நாடார் குடும்பமும் மலாய்க் குடும்பமும் இணைந்து தொடங்கிய வாழ்க்கை, மணியத்தின் சிலம்பப் பள்ளி, ஓலம்மாவின் ஆரம்பகால தோட்ட வாழ்க்கை, சீனர்களுடனான கம்பத்து மக்களின் வாழ்க்கை, சம்பு பூசாரியானது என சில இடங்களை விவரித்திருக்கலாம். சொல்லாத பல கதைகள் பேசப்பட்டிருக்கும். நாவலை நவீன் மேலும் ஓரிரு தடவைகள் மறுவாசிப்பு செய்து மெய்ப்பும் பார்த்திருக்கலாம்.
எனினும், வெட்டியான், நாடர், போமோக்கள், மருத்துவர்கள், என்று சமூகத்தின் பல முகங்களை இத்தனை விரிவாக பேய்ச்சிதான் அலசுகிறது. இது ஒரு நல்ல தொடக்கம்.
கொப்பேரனின் மூதாதையின் மலைக் கிராமம் அழிந்திருக்கலாம். அவர் வழி வந்தவர்களின் பண்பாட்டு நிலைக்களங்களும் கட்டமைப்புகளும் மாறியிருக்கலாம். ஆனால், பல தலைமுறைகள் கடந்தும் பினாங்குப் பெண்ணான மாலதியின் வளையலில் வாழ்கிறது. புலம்பெயர் சமூகத்தின் ஆதாரமான பலமாகவும் பலவீனமாகவும் இதுவே உள்ளது. கெட்டியாகப் பொத்திப்பிடித்துப் பாதுகாக்கும் தன்மை ஒரு சமூகத்தின் பண்பாடு அழிந்துபோவதிலிருந்து பாதுகாக்கிறது. கட்டற்ற வளர்ச்சியினால் ஏற்படும் மேம்பாட்டுக்குத் தடையாகவும் இருக்கிறது. நெகிழ்வுத்தன்மையற்ற இப்போக்கு, புதிய தலைமுறையை ஒருகட்டத்தில் எல்லாவற்றையும் தூக்கியெறிந்துவிடச் செய்யும். இந்த வட்டாரத்தில் தமிழ் மொழியும் அதனால் உருவான தமிழ்ப் பண்பாடும் எதிர்கொள்ளும் இச்சவாலை பேசாமல் பேசுகிறது பேய்ச்சி.
இந்திய மொழிகளில் சிறந்த நாவல்களாக சொல்லப்படும் அக்கினிநதி, நீலகண்ட பறவையைத் தேடி போன்றவற்றை வாசித்து முடித்தபிறகு கிடைக்கும் மனநிலை ஒன்று உண்டு. பெரும் வரலாற்றுக்குள் நுழைந்து மீண்டு வரும் மனநிலை அது. வரலாற்றில் நிகழ்ந்த அத்தனையும் நிகழ்காலத்தில் அசைவற்ற நதிபோல நம் கண்முன் தவழ்ந்து கொண்டிருக்கும். பேய்ச்சி நாவல் சிறந்த நாவலாக கூற வாசகியாக நான் அந்தரங்கமாக உணரும் மனநிலையைச் சொல்வேன். ரம்புத்தான் மரத்தின் முன் குமரன் நிற்கும்போது அத்தனை காலங்களையும் அதன் உக்கிரங்களையும் ஓலங்களையும் வெறும் நினைவுகளாக மட்டுமே அந்த மரம் சுமந்து சாட்சியாக உள்ளது. வரலாற்றின் முன் மரம் ஒரு சாட்சியாக இருப்பதுபோலவே வாசகனையும் நிறுத்திவைக்கும் இடமே இந்நாவலின் சாதனை. தமிழ் நாவல் வரலாற்றில் குறிப்பிடத் தகுந்த நாவல்களில் ஒன்றாக பேய்ச்சி இடம்பிடிக்கும்.