மனசிலாயோ- சுயம்பின் திரள்: ஆருயிர் முத்தங்கள்

அகவுலகின் புறவுலகம் அயர்ச்சியுறும்போது புறவுலகின் அகவுலகை இரசிக்கக் கிளம்புவது என்னியல்புமே. இனம் புரியா இன்மையை மிகச் சாதாரணப் பயணமும் தூர்வாரி போதி மரம் நடும்.

உடலைப் பொருத்திக் கொள்ள நல்ல குஷனுள்ள போக்குவரத்தும் தகதகக்கும் உஷ்ணத்தைப் பதப்படுத்தும் குளிரூட்டியும் அல்லது ஜன்னலை இறக்கி நுழைய விடும் பனிக்காற்றும் மனதின் அடியாழத்தை நெருடவல்ல மெல்லிசைகளும் அந்தரங்கமான கற்பனைகளைச் செய்துக்கொள்ளவும் நண்பர் பட்டாளத்தோடு உயிர்ப்போடு பாடிட தெரிவு செய்யும் பாடல்களும் இடையிடையே கடந்து வந்த கணங்களையும் கடக்கக் போகும் வெளிகளையும் இலக்கியம், கலை, அரசியல், காதல், காமம் (நிரல்படுத்தப்படவில்லை) ஆகியவற்றின் பகிர்வினூடே ஆங்காங்கே இளைப்பாறும் நிறுத்தங்களில் இரவின் உயிர்வளியை உயிரோடு பிணைந்திட அனுமதிப்பதும் பருகமும் பர்கரும் பஞ்சுமிட்டாய்களுமென என்னுடைய இரவுப்பயண வாழ்க்கை என்னிலிருந்து சில முகங்களை மீட்டுக்கொள்ளவும் நீக்கிக்கொள்ளவும் அவ்வப்போது துளிர்க்கும்.

இவற்றை விடுத்த தனிமனித ஓட்டமும் நடையும் யாத்திரையும் ஒரு புது பேரடையினைக் குவியப்படுத்தி மறைந்த மையங்களை கண்கூடச்செய்யும். தன்மீட்பின் மாமருந்தும் அதுவே; தன்னிழப்பின் மாநஞ்சும்அதுவே. வாழ்க்கையின் விஸ்தாரமும் கூட.

குறைந்தது ஒரு நூறு வாழ்க்கையினை வாழ்ந்துப் பார்க்க வழிகள் இரண்டு. ஒன்று, பயணக்களத்தில் இறங்கி செயற்படுதல். மற்றொன்று, செயற்பெற்ற பயணக்களத்தின் பதிவுகளில் திளைத்தல். ‘மனசிலாயோ’ இரண்டாம் ரகம். கூடடைந்த கம்பளிப்புழு சிறகுகள் முளைக்கக் கூடுடைத்து ஜீவனத்தை அர்த்தப்படுத்திட நடைபரிதலின்றி ஒவ்வொரு மணிதுளிகளையும் மெது நகர்வால் நுகர எத்தனிக்கும் பட்டாம்பூச்சி அவதாரம்.

தீபகற்பத்தைத் தாண்டி வெளிசெல்லாத என்போலுள்ளவர்களுக்கு இது மிகக்குறைந்த கட்டணத்திலான கடவுச்சீட்டு. எழுத்தாளர் சுற்றிய இடங்களைக் காட்டிலும் எழுத்தாளரைச் சுற்றியிருந்த மனிதர்கள் என்னை அதிகம் ஈர்த்தனர். யாவருமே பேய்ச்சி நாவல் கட்டுமானத்தின் உயிரிகளாக உணர்ந்தேன். பேய்ச்சிகளின் தரிசனங்கள் நூலெங்கும் பரவியுள்ளதாகப்படுகிறது. பேய்ச்சியின் (குறிப்பாக ஓலம்மா) தனித்தனி ரூபங்களாக சாரா, லில்லி, டெய்ஸி, ஃபிரான்ஸ் அருள்பாலிக்கின்றனர். கலவையுணர்ச்சியால் பிரவாகித்து ஏதோவொன்றின் உச்சத்தில்நின்று தாண்டவமாடும் சாரா, தாய்மையின் பிம்பங்களாக லில்லி மற்றும் டெய்ஸி, பண்பாட்டுப் பேணலும் வளமைகளின் வளர்ச்சிகளையும் தீவிரமாகக் கருதும் ஃபிரான்ஸ் என இவர்களனைவரும் இரண்டறக் கலந்த விஸ்வரூபமே பேய்ச்சி. (இந்தப் பத்தியைத் தடை செய்யாதிருத்தல் நலம்.)

முகந்தெரிந்தவர்களின் அன்பு ஓரளவு அனுமானத்திற்குரியது என்பதால் அதன் வெளிப்பாடும் பெறுதலும் வழங்கலும் இயல்பானதாகவே தோன்றும். அதற்காக அதன் தனித்தன்மை, ஆற்றல், முழுமை குன்றுவதென்றில்லை. ஆனால், முகமனற்ற அன்பர்களின் தோற்றம் ஏற்படுத்தும் அதிர்வு அலாதியானது. அவர்களின் வருகைப்பதிவு நிரந்தரக்கூடாரத்தை இதயத்தின் ஏதாவதொரு நுழைவாயினுள் அமைத்திடும். ஒருமுறை இரவுணவு வாங்க பர்கர் கடைக்குச் சென்றிருந்தபோது அங்கு அறிமுகமான முன்பின் தெரியாத நபரொருவர் எனக்கு இன்னும் வேலையமர்வு கிடைக்கப்பெறவில்லை என்று தெரிந்து கொண்டவுடன் நாடகியமின்றி அகமாற வருத்தப்பட்டதும் தட்டிக்கொடுத்ததும் “உன்னைப் பார்க்க என் பிள்ளை போல உள்ளது” எனச் சொல்லி மகிழ்ந்ததும் அதன் பின் நான் முறையிட்ட பர்கருக்கு அவர் செலுத்திய பணமும் என அவற்றின் சிற்றுணர்வலைகளின் தாக்கம் நீங்காதது. இப்பயணத்தில் எழுத்தாளர் நவீனுக்கும் அவரைச் சூழ்ந்து இது போன்று நிகழ்ந்துள்ளது; நிகழ்த்தியுமுள்ளார். பயணப்பக்கங்களில் இவற்றைக் கடக்கும்போது மனம் நெகிழ்கிறது.

ஒவ்வொரு அத்தியாத்திற்கிடப்பட்ட பெயரும் சிறுகதைகளுக்குண்டான தலைப்புகளாக, வல்லமையோடு பொருந்தியிருக்கின்றன. எதையும் நீட்டி, திணித்து சொல்லாது, நூலாக்கத்தின்போது செப்பனிட்டு செறிவுப்படுத்தி நம் உள்ளங்கை தண்டவாள ரேகையில் பயணிக்க உருக்கொடுத்த தொடரியாக இந்நூல் பயணப்படுகின்றது.

விகடக்காரராக நவீன் இருக்கிறார். மறுவாசிப்பின் போதும் நம் முறுவலை தக்கவைத்துக் கொள்ளும் அவரின் எழுத்து பாணி மாசில்லாதது. வற்றாத நடை. இரகசியமாக அவருக்குள் நிகழ்த்தும் தன்னுரைகளும் தனக்குத் தானே மகிழ்வுறுவதும் அபோத மழலையின் தொடுதலைப் போன்றது. நேற்றைய பயணிகள் பிரயாணித்த பொழுதுகளை அசை போடவும் நாளைய பயணிகள் தடம் பதித்திடவும் விளைப்பயன்மிக்ககுறிப்புகளாலும் அளவான, அழகான வருணனைகளாலும் சுவாரசியமான புராண/ வரலாற்றுக் கதைகளாலும் புத்தகம் உயிர்ப்பெறுகிறது. அழுத்தத்தோடு சென்றவர் உடலையும் உள்ளைத்தையும் அத்தியாயமத்தியாயமாக மீட்டுக்கொண்டு நாடு திரும்பியது எழுத்தாளரின் நலன் எண்ணியும் நமது தனிப்பட்ட சலனங்களையும் தளர்த்தி குதூகலப்படுத்துகிறது. இவரது தன்மீட்பு பயணம் நமக்கும் நம்மை மீட்டித் தந்துவிடுகிறது.

இந்தப் பயண நூலின் வாசிப்பினூடே ரோபெர்ட் லூயிஸ் ஸ்தீவன்சனின் (Robert Loius Stevenson) கட்டுரைத் தொகுப்பான “VirginibusPuerisque”இல் உள்ள “El Dorado” கட்டுரை பிரக்ஞையின் பின்னணியில் உதயமானபடி இருந்தது. வாழ்வியலின் ஏதாவதொருபாகத்திலாவது துளியளவு ஆவல் இருந்தாலேவொழிய, வாழ்வென்பது மிக மழுங்கிய, நொய்ம்மையோடு இயக்கங்காணும் கொட்டகையே. கலையோ அறிவியலோஇன்மையுற்றிருக்கும் ஆன்மாவுக்குப் புவியானது வெறும் நிரல்படுத்தப்பட்ட வண்ணங்களாகவோ அல்லது கரடுமுரடான கால்வழித்தடமாகவோ காட்சிப்பெற்று உள்ளுக்குள் ஒளிரும் ஆதனின் மினுமினுப்பைஉடைத்துதிர்த்துவிடுகிறது. ஒழுங்கீனமற்ற அவனது அபிலாஷைகளும் உந்துதலினாலும்தொடர்ந்து ஒரு மனிதன் பொறுமையுடனுமேநிலைத்திருந்து, அவன் பார்வையின் ஸ்பரிசங்களில் விழப்பெறும் பொருட்களாலும் மனிதர்களாலும் கவரப்பெற்று, ஒவ்வொரு பரிதியின் மலர்ச்சியிலும் அவனது வேலைக்கான, இன்பத்திற்கான வேட்கை புதுப்பிக்கப்படுகிறது. அவனது அவா, அறிவாவல் ஆகிய இருவிழிகளினால் உலகத்தை வசியமுறும் வண்ணச்சங்கமங்களாகத் தழுவிக்கொள்கிறான்: அதுவே பெண்களை அழகாகவும் புதைப்படிமங்களை வசீகரமானதாகவும் அவனுள் உருக்கொளச்செய்கிறது: தனது செல்வங்களை வீண்செலவீடு செய்து ஒருவன் நல்குரவை பூண்டெனினும், அவ்விரு காப்புநாண்களைத் தொலைக்காதவரை அவன் இன்னமும் வளமிகுந்தவனே.

இப்பயணம் எழுத்தாளர் நவீனுக்கானதாக இருப்பினும், அந்தரங்கமாக எனக்குச் சில நினைவகங்களையும் திறந்து காட்டியது. என் வீட்டின் முன்னிருந்த ஒற்றைத் தென்னையும் அதன்கீழ் போடப்பட்ட ஊஞ்சலும் அதில் ஆடியபடி ஆயாசப்படுத்திக் கொண்டதும் கபாலத்தினுள் தெறிப்புகளாக வந்து சென்றன.அவர்நுவல்ந்ததைப் போல தென்னைக்குக் குழந்தைகளைத் தெரியும். அதனடியில் சஞ்சரிக்கும் போது என் மீதும் தேங்காய் ஒருபோதும் விழுந்ததில்லை. தற்போதுஅந்த உயர்ந்த விருட்சம் இல்லையென்ற, நானில்லாத சமயத்தில் அதனைச் சாய்த்துவிட்ட துயரை இற்றையும் துறந்ததாகத் தெரியவில்லை. ஊருக்கே தம்பட்டமடித்துச் சொல்லும் வாஞ்சையைக் காட்டிலும் பிரக்ஞைக்கப்பாற்பட்ட மிகமிக அந்தரங்கமான வாஞ்சை முறியும் போது ஏற்படும் வலி விசித்திரமானது.

இவரது போப்பியும் அப்போயின் கருப்பனும் பார்வதிபுரத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் வீட்டில் டோராவாகவும் ஆழப்புலா விடுதியொன்றில் பிளேக்கியாகவும் மலேசியாவிலிருந்து கூடுவிட்டுக் கூடு பாய்ந்துள்ளதாகக் கற்பனைச் செய்துக் கொள்கிறேன். இதற்கிடையே நல்ல வாசிப்புக்குண்டான நூல்களையும் படைப்புகளையும் அவர் சுட்டிக்காட்ட தவறவில்லை.ஒரு பயணத்தின் ஆர்ப்பரிப்பையும் முத்தாய்ப்பையும் விட இவற்றிக்கிடையே நடந்தேறும்நம்பிக்கையோங்கிய யாத்திரையே செழுமையானது; முழுமையானது. அவ்வகையில் இந்நூல் முழுமைப்பெறுகிறது. தனிப்பட்ட முறையில் என் மனதிற்கு நெருக்கமான வரிகள் ஆங்காங்கே நூலினுள் சிதறிக்கிடக்கின்றன. எனக்கானதை நான் கோர்த்துக்கொண்டேன். உங்களுக்கானதை நீங்களும் கோர்த்துக்கொள்ளுங்கள்.

மனசிலாயோ?

(Visited 131 times, 1 visits today)