நூலை வாசித்து முடித்ததும் கேரளாவிற்குச் சென்று வந்த ஓர் உள்ளக் களிப்பு என்றே கூறலாம். ஒவ்வொரு இடங்களையும் பயணத்துடன் சார்ந்து கூறும் போக்கு அருமை. ஒவ்வொரு காட்சிகளும் கண்களை மூடினாலும் அப்படியே நிஜத்தில் உள்ளது போல் ஒரு கற்பனை உலகத்தை ஏற்படுத்துகிறது. இயற்கையோடு பயணம் செல்வதன் வழி மனதை இலகுவாக்கிறார்.
சுந்தரி புட்டு, கெட்டுவல்லம், பிரதமன் இது போன்று பல சொற்கள் கேரளா சொல்லாடல் பயணக் கட்டுரையில் புதுமையாக இருந்தாலும் கட்டுரையுடன் பொருந்தி சிறப்பாக உள்ளது. எழுத்தாளர் கட்டுரையில் சில தருணங்களில் நகையாடும் விதத்தில் மனதில் சிறு புன்னகையை மலர செய்கிறார்.
‘ஒவ்வொரு நாளும் சரியாகச் சூரிய உதயத்திலும் அஸ்தமனத்தில் மொட்டை மாடியில் இருப்பதை உறுதி செய்து கொண்டேன். சூரியன் கடலுக்குள் இறங்குவதை ஒரே ஒருமுறை மட்டுமே பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தத.’ இதனை வாசித்த போது மனம் அப்படியே கரைந்து எண்ணம் நிஜ வாழ்க்கையை நினைக்க வைத்தது.
பகலவன் மறையும் காட்சியைக் காணுவதற்கே கடற்கரை செல்வது வழக்கம். ஆதவன் மறைவை காணும் அத்தருணத்தை வர்ணிக்க இயலாது. அந்த அஸ்தமனத்தைப் பார்க்கும் போது என் மனதில் உள்ள அனைத்துக் கவலைகளையும் துன்பங்களையும் அப்படியே என்னை விட்டு மறையும் ஓர் உணர்வு ஏற்படும். அப்படியே கண்களை மூடி தென்றலை உள்வாங்கும்போது மனம் இலேசாக இருக்கும் தருணம். மாலை வேளையில் எழுத்தாளர் உலா வரும் காட்சிகள் மனதை வருடி செல்கிறது எனலாம்.
லில்லி மற்றும் டெய்ஸி இவர்களின் தாய்மை உணர்வுக்கு அளவே இல்லை எனலாம். உணவு பரிமாறும் விதமாக இருந்தாலும் கோவிலுக்கு உள்ளே சென்று இறைவனுக்கு அர்ச்சனை செய்ய சொல்லும் விதமாக இருந்தாலும் தன் தாயிடம் காணும் குணத்தை வெளிகாட்டியுள்ளார். தான் அணிந்து வந்த காலணியை மறந்து தன் மகனுக்குப் பிடித்த மீனை வாங்கிய தாய். தன் காலுக்குக் காலணி வாங்க எண்ணம் கொள்ளாத தாயின் உள்ளத்தைக் கண்டு வியக்கவைக்கிறார்.
பல இடங்களில் வரலாறுடன் பயணத்தைச் சிறப்பாக நகர்த்தி சென்றுள்ளார். பத்மநாப சுவாமி கோயில் சிறப்புகளையும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளார். பகவதி அம்மன் கோயிலைப் பற்றி சித்தரிக்கும் வருணனை எளிமையாக இருந்தாலும் கண்களுக்கு முன் அக்காட்சி பிரமாண்டமாக படிப்போரின் மனதில் நிலைநாட்டியுள்ளார். ஆழப்புழாவில் படகு வீடுகள், படகு சவாரி போன்றவற்றைப் படிக்கும் போது ஒரு சுவாரசியம் ஏற்பட வழிவகுத்துள்ளார்.
வெளிநாட்டிற்குப் போகும் முன் எழுத்தாளரிடம் ஆலோசனை கேட்டுக்கொண்டுதான் செல்ல வேண்டும். எழுத்தாளர் வாகன ஓட்டிகளிடம் கையாண்ட உக்தி முறை சுவாரசியமானது. எழுத்தாளர் அடுத்த முறை கேரளா செல்வதாக இருந்தால் என்னையும் அழைக்கனும்.
சாரே மனசிலாயோ…