வல்லினம் செயலி

இன்று வல்லினம் செயலி (App) அறிமுகம் கண்டது. பொதுவாக வல்லினம் இதழ் பிரசுரமாவதும் அதற்கான படைப்புகளைச் சேகரிக்கும் பணியும் மட்டுமே பலரும் அறிந்தது. வல்லினம் பலரையும் சென்று சேர அதற்குப்பின்னால் நின்று உழைப்பவர்களும் முக்கியக்காரணம். அப்படித் தொடர்ந்து சில ஆண்டுகளாக 2000க்கும் மேற்பட்ட வாசகர்களுக்கு வல்லினம் மின்னஞ்சல் வழி தகவல்களை அனுப்பி வைப்பவர் எழுத்தாளர் கங்காதுரை.

கவர்ச்சியான வடிவமைப்பை செய்தபிறகே கங்காதுரை மின்னஞ்சல் அனுப்பும் பணியையும் தொடர்வார். வல்லினம் பிரசுரமாகி சில வாரங்களில் அனுப்பப்படும் அந்த மின்னஞ்சலுக்குப் பின்னர் சட்டென கணிசமான அளவு வாசிப்பவர் எண்ணிக்கை கூடும். ஆனால் இது உழைப்பையும் நேரத்தையும் அதிகம் கோரக்கூடியது என அறிவேன். தனியார் கல்லுரியில் விரிவுரையாளராக பணியாற்றும் அவருக்கு இது அழுத்தமான பணியும் கூட. மேலும் அனுப்பப்படும் மின்னஞ்சல்கள் அனைத்தும் திறக்கப்படுவதில்லை. சிலருக்கு SPAM நோக்கியும் சிலருக்கு Promotions எனும் பகுதியை நோக்கியும் சென்றுவிடும். எஞ்சியவை விரும்பினால் திறக்கப்படலாம்.

கங்காதுரை

வல்லினம் இருமாத இதழ். அனைவருமே அதை நினைவு வைத்து அவ்வகப்பக்கத்தைத் திறந்து வாசிப்பதென்பது இயலாத காரியம். ஆனால் சிற்றிதழ் சூழலில் இயங்கத் தொடங்கியது முதல் ஓர் இதழியல் முயற்சி எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அது சரியான வாசகர்களை அடைய செய்யப்படும் முயற்சிகளும் என நான் அறிந்து வைத்திருந்தேன்.

‘காதல்’ இதழை சுமந்துகொண்டு நானே கடைகள் தோறும் விநியோகம் செய்துள்ளேன். உடன் அப்போது மணிமொழியும் வருவார். வல்லினம் தொடங்கியப்பின்னர் அறுவை சிகிச்சை காலுடன் வல்லினத்தை தபால் நிலையத்திற்கு எடுத்துச்சென்று வாசகர்களுக்கு அனுப்பி வைத்துள்ளேன். ஒரு சமயம் இவ்வளவு தரமான படைப்புகள் வெறும் 1000 பேரை மட்டும் சேர்வதா என 2007இல் ஒவ்வொரு இதழையும் எளிமையான முறையில் இணைய இதழாக மாற்ற ஆசிரியர் நண்பர் மதிவாணன் என்பவருக்கு ஒருவருக்குக் கணிசமான தொகை வழங்கினேன். உண்மையில் அதுதான் வல்லினத்தின் முதல் இணைய இதழ். http://vallinam.6te.net/

அப்போதெல்லாம் வாட்சாப்போ, முகநூலோ இல்லை. இணைய இதழ் வந்துள்ளதாக நானே ஒவ்வொருவராக அழைத்து சொன்னால்தான் உண்டு. இணைய அலர்ஜியும் தமிழ்ப் படைப்பாளிகளிடையே அதிகம் இருந்த காலமது. எனவே யாரும் அதை நாடிச்செல்லவில்லை. ஆனால் எனக்குத் தெரியும் வருங்காலம் இணையம்தான் என. பின்னர் சிவா பெரியண்ணனால் வல்லினத்தின் நேர்த்தியான இணைய வடிவம் சாத்தியமானது.

யாரோ சில எழுத்தாளர்கள் ஓர் இதழை நம்பி தங்கள் படைப்புகளை அனுப்புகின்றனர். அந்த நம்பிக்கைக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பதே என் எண்ணம். வல்லினம் ஓர் இலக்கிய இதழ்; அதன் வாசகர்கள் ஜனரஞ்சக இதழியல் சூழலைக் காட்டிலும் குறைவாகவே இருப்பார்கள் என்ற உண்மை நிலையை அறிந்துகொண்டு அதனுள் இயங்க வரும் எழுத்தாளன் எவ்வளவு மேம்பட்டவன்; இலக்கியத்தின் மீது எவ்வளவு நம்பிக்கைக் கொண்டவன். அந்தப் படைப்பாளியை அதிக பட்ச வாசகர்கள் மத்தியில் சேர்க்க வேண்டும் என்பதுதானே ஓர் இதழின் நோக்கமாக இருக்க வேண்டும். சில சமயம் இந்த ஆவல் பலருக்கும் தொல்லையாகவும் இருப்பதுண்டு. வல்லினம் நண்பர்களைப் படைப்பை முகநூலில் பகிரச்சொல்லி நச்சரித்துச் சாகடிப்பேன். இலக்கியத்தில் நச்சரிப்புக்கு இடமில்லாமல் என்ன?

செல்லியல் செய்தி இதழ் வந்தபோதுதான் App (செயலி) எவ்வாறு இயங்கிறது எனப்பார்த்தேன். ஒரு தகவலை அந்தச் செயலியின் வழியே கவனத்துக்குக் கொண்டுச் செல்ல முடிகிறது. தமிழ் ஊடகங்களில் செல்லியல் மட்டுமே அதி நவீன முறையைக் கையாண்டது. அதை வல்லினத்துக்கு சாத்தியப்படுத்தும் சந்திப்பு ஒன்றை செய்தபோதுதான் அதற்கான செலவுகள் என்னைப் பின்வாங்க வைத்தது.

இது நடந்து ஏழு, எட்டு ஆண்டுகள் கடந்தப்பின் வல்லினத்திற்கான நிலையான வாசகர்கள் உள்ளதை கடந்த ஆண்டு இறுதியில் உறுதியாக அறிந்துக்கொண்டேன். அதில் நுழைந்து வாசிப்பவர் எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்திருந்தது. கிளிக்ஸ் மட்டுமே 17,000 ஐ நெருங்க, 3000க்கும் குறையாத வாசகர்கள் இருப்பார்கள் என உறுதியாக நம்பும் எண்ணிக்கையைக் கணினி காட்டியது. மின்னஞ்சலைவிட மேம்பட்ட தொழில்நுட்பமே இனி தேவை எனத் தோன்றியபோதுதான் மறுபடியும் வல்லினம் செயலி குறித்த எண்ணம் வந்தது.

தர்மா

வல்லினம் செயலியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தவுடன் முதலில் அதை நண்பர் தர்மாவிடம்தான் சொன்னேன். வல்லினத்தின் அனைத்து இணையச் சிக்கல்களையும் கண்காணிப்பது அவர்தான். பின்னர் ஓர் இரவில் நண்பர் ஜி.எஸ்.எஸ்.வி நவீன் நினைவுக்கு வந்தார். அவர் கணினித்துறையில் பணியாற்றுகிறார் என மட்டும் நினைவிருந்தது. அழைத்து என் ஆவலைச் சொன்னேன். அதன் பின்னர் அவர் தர்மாவிடம் தொடர்பு கொண்டு பணியைத் தொடங்கினார். அவருக்கும் இது புதிய அனுபவம் என எனக்கு தாமதமாகத்தான் தெரிந்தது. ஆனால் நான் அவருடைய தொழில் நிபுணத்துவத்துவத்தை விட அவரது அக்கறையையும் ஆர்வத்தையும் அன்பையுமே நம்பினேன். எந்த திறனையும்விட இவையே மேம்பட்ட பலனைக் கொடுக்கக்கூடியது.

நான் எப்போதும் சொல்வதுதான். ‘வல்லினம் குழுவினர்’ என்பது அரூபமானது. யார் அது வளர வேண்டுமென நினைக்கிறார்களோ அவர்கள் அனைவருமே வல்லினம் குழுவினர்தான். மானசீகமாக அதன் வளர்ச்சியால் இலக்கிய வளர்ச்சியும் சாத்தியம் என அவர்கள் நினைக்கிறார்கள். அவ்வகையில் ஜி.எஸ்.எஸ்.வி நவீனுடைய உழைப்பு வல்லினம் வளர்ச்சியின் வரலாற்றில் என்றும் குறிப்பிடத்தக்கது. நாளை அவரது தங்கையின் திருமண நிகழ்ச்சிக்கு மத்தியில் இதனை சாத்தியப்படுத்தியுள்ளார். இதை எழுதுவதும் அதை பதிவு செய்யவே. அதன் வழி அவரை அணைத்துக்கொள்ளவே.

ஜி.எஸ்.எஸ்.வி நவீன்

மற்றபடி இது எனக்கு நெகிழ்ச்சியான நாள். இந்தச் செயலியால் அல்ல. இந்தத் தொழில் நுட்பம் வளர்ந்து புதியதொன்று தோன்றும். இன்று வல்லினம் எனும் ஓர் இலக்கிய இயக்கத்தின் மீது பலரும் கொண்டுள்ள நம்பிக்கை மறுபடியும் நிரூபணமான நாள். உடனிருக்கும் நண்பர்களுக்கு நன்றி. இந்தப் பயணத்தில் இணைய கீழே உள்ள வல்லினம் செயலியை உங்கள் கைப்பேசியில் இணைத்துக்கொள்க.

https://play.google.com/store/apps/details?id=appvallinamcommyversion2.wpapp

(Visited 170 times, 1 visits today)