அவ‌தாரும் ஆத்தாவும்!

 

அவ‌தார் ப‌ட‌த்தை இர‌ண்டாவ‌து முறையாக‌ ‘3டி’ காட்சியில் பார்த்த‌போதும் மன‌ம் அப்ப‌ட‌த்தின் இறுதி க‌ட்ட‌த்திற்கே காத்திருந்த‌து. ம‌ற்றெல்லா காட்சிக‌ளைவிட‌வும் இறுதி காட்சியில் என‌க்கு ஒரு வ‌கையான‌ சிலிர்ப்பு ஏற்ப‌ட்ட‌து. இனி தோல்விதான் என‌ அந்த‌ப் பூமியின் ம‌க்க‌ள் பின்வாங்கும் நிலையில் இந்த‌ வ‌ன‌ம் எங்க‌ளுக்கும் சொந்த‌மான‌துதான் என‌ வில‌ங்குக‌ள் வ‌ந்து யுத்த‌ம் செய்யும் காட்சி ம‌னித‌னின் ஆண‌வ‌த்திற்கு அறைவிழுந்த‌து போல் இருக்கும்.

இத்த‌னை கால‌மாக‌ப் போரில் ம‌னித‌னை ஏந்திச்செல்லும் வாக‌ன‌மாக‌வே காட்ட‌ப்ப‌ட்ட‌ வில‌ங்குக‌ள் த‌ங்க‌ளுக்கான‌ போரினைத் தாங்க‌ளே தொடுத்த‌து இந்த‌ப் பூமி ம‌னித‌னுக்கான‌து ம‌ட்டும‌ல்ல‌ என‌ நிரூபிப்ப‌தாய் இருந்த‌து. ம‌னித‌ன் எனும் பீட‌த்தில் அம‌ர்ந்துகொண்டு நாம் செய்யும் ஒவ்வொரு காரிய‌த்துக்குப் பின்னும் உள்ள‌ ஆண‌வ‌த்தின் க‌ண்க‌ளுக்கு ம‌ற்ற‌ உயிர்க‌ளைப் பொருட்ப‌டுத்தும் திற‌ன் ஒருபோதும் வாய்த்த‌தில்லை. இப்பூமிப்ப‌ர‌ப்பில் வாழும் பிற‌ உயிர்க‌ள் அனைத்துமே ந‌ம்மை ந‌ம்பி வாழ்வ‌து போன்றே பாவ‌னை செய்வ‌தில் ந‌ம் ஆண‌வ‌த்திற்கு நீர் ஊற்றிக்கொள்கிறோம். உண்மையில் ம‌னித‌ன் அல்லாத‌ பிற‌ உயிர்க‌ள் அதன‌த‌ன் வாழ்வை சுய‌மாக‌த் தீர்மானிக்கும் வ‌ல்ல‌மையைக் கொண்டுள்ள‌ன‌. அவ‌ற்றிட‌ம் ந‌ட்பு பாராட்டுவ‌தும் சில‌ ச‌மர‌ச‌ உட‌ன் ப‌டிக்கைக‌ள் செய்து கொள்வ‌தும் ம‌ட்டுமே ந‌ம‌க்கான‌ சாத்திய‌ங்க‌ள்.

வெல்ல‌ஸிலி தோட்ட‌த் த‌மிழ்ப்ப‌ள்ளியில் நான் அப்போது இர‌ண்டாம் ஆண்டு மாண‌வ‌ன். அக்கா மூன்றாம் ஆண்டு மாண‌வி. ப‌ள்ளிக்கும் வீட்டுக்கும் அதிக‌ தூர‌ம் இல்லாத‌தால் இருவ‌ரும் ஒன்றாக‌வே ந‌ட‌ந்து சென்று வீடும் திரும்புவோம். பெரிதாக‌ ஒன்றும் பேசிக்கொள்வ‌தில்லை. அப்ப‌டியே நான் எதுவும் பேசினால் அக்கா என்னை ‘முட்டாள்’ என்பார். நாங்க‌ள் க‌ம்ப‌த்தில் இருந்தாலும் ப‌ள்ளிக்குச் செல்ல‌ இர‌ப்ப‌ர் தோட்ட‌த்தைக் கட‌ந்து செல்ல‌ வேண்டும். அது குறுக‌லான‌ ஒற்றைய‌டிப் பாதை. அவ்வாறு ஒரு நாள் வீடு திரும்பும் போது சிறு ப‌ஞ்சு குவிய‌ல் போல் பாதையின் ந‌டுவில் தென்ப‌ட்ட‌து. கொஞ்ச‌ நேர‌த்தில் அந்த‌ப் ப‌ஞ்சு குவிய‌ல் அசைய‌ அருகில் சென்று பார்த்தோம். அக்கா “பூனை குட்டி” என‌ ம‌கிழ்ச்சியில் துள்ளினார். என‌க்கு அதை எப்ப‌டிப் பிடித்துத் தூக்குவ‌தென்றே தெரிய‌வில்லை. அக்காவுக்கு என்னைவிட‌ தைரிய‌ம் அதிக‌ம். ச‌ட்டென‌ அதை தூக்கிய‌வ‌ர் “இதை நான் வ‌ள‌ர்க்க‌ப் போறேன்” என்றார். அத‌ற்கு பிற‌கு “அம்மா ஏச‌ப்போறாங்க‌” என‌ப் ப‌ய‌ணம் நெடுகிலும் நான் ப‌ய‌முறுத்தியும் அக்கா அதை பொருட்ப‌டுத்தாம‌ல் பூனைக்குட்டியைக் கொஞ்சிய‌ப‌டி வ‌ந்தார். வீடு அடைவ‌த‌ற்குள்ளாக‌ அத‌ற்கு ‘பூசி’ என்று பெய‌ரும் வைத்து விட்டிருந்தார்.

நான் நினைத்த‌து போலெல்லாம் அம்மா கோவ‌ப்ப‌ட‌வில்லை. பூனைக்குட்டியை ஒருத‌ர‌ம் க‌விழ்த்துப்பிடித்து ‘பொட்ட‌க்குட்டி’ என்றார். பிற‌கு அவ‌ரே பாலும் க‌ல‌க்கி வைத்தார். கொஞ்ச‌ நாட்க‌ளிலேயே பூனைக்குட்டி ந‌ன்கு புஷ்டியான‌து. அந்த‌ வீட்டிற்கு அப்போதுதான் குடிபெய‌ர்ந்திருந்த‌தால் ‘பூசி’ போன்ற‌ ஒரு துணை அம்மாவுக்குத் தேவைப்ப‌ட்டிருக்க‌ வேண்டும். தொலைவிலிருந்து பார்த்தால் காட்டுக்கு ந‌டுவில் இருப்ப‌து போல் தெரியும் எங்க‌ள் வீடு. இன்று ப‌ற‌வை பூங்காவில் பார்க்கும் ப‌ற‌வைக‌ளையெல்லாம் அப்போது மிக‌ச்சாதார‌ண‌மாக‌வே எங்க‌ள் க‌ம்ப‌த்தில் பார்க்கலாம். எலித் தொல்லையையும் ப‌ல்லி தொல்லையையும் மிக‌ விரைவிலே அட‌க்கிய‌து பூசி. அத‌ன் வ‌ள‌ர்ச்சி மிக‌த் துரித‌மாக‌ இருந்த‌து. உட‌ல் முழுதும் வெள்ளை நிற‌மாக‌வும் வால் ம‌ட்டும் சாம்ப‌ல் நிற‌மாக‌வும் இருந்தது. அது ‘ச‌யாம்’ ர‌க‌ப் பூனை என‌ பின்னாளில் தெரிய‌வ‌ந்த‌து.

ஆர‌ம்ப‌த்தில் அக்கா அது த‌ன‌து பூனை என்றாலும், ‘பூசி’ ஆத்தாவிட‌மே (பாட்டி) மிக‌ நெருக்க‌மாக‌ இருக்கும். த‌ன‌து க‌ன்ன‌ப்ப‌குதியைச் சொறிந்துவிடும் ப‌ணி என்னுடைய‌து என‌ அது முடிவெடுத்திருக்க‌ வேண்டும். என‌து விர‌ல்க‌ள் அத‌ன் க‌ன்ன‌த்தில் ப‌டுவ‌தில் அலாதி சுக‌ம் க‌ண்ட‌து. க‌ன்ன‌ங்க‌ள் தட‌வ‌ப்ப‌டும்போது அது வெளிப்ப‌டுத்தும் உர்… எனும் ஓசையில் அதிர்வு விர‌ல்க‌ள் மூல‌ம் உட‌ல் முழுதும் ப‌ர‌வும். இப்ப‌டியிருந்த‌ பூசி ஒருநாள் க‌ர்ப்ப‌மான‌து. த‌ன‌து பிர‌ச‌வ‌ நாளின் இறுதி நிமிட‌ம் வ‌ரை அது என‌து ம‌டியில் ப‌டுத்து கிட‌ந்த‌து.

பூசி குட்டிப்போடும் போது அம்மா எங்க‌ளைப் பார்க்க‌விட‌வில்லை. அது நான்கு குட்டி போட்ட‌தாக‌வும் ஒரு குட்டியைப் பூசியே சாப்பிட்டுவிட்ட‌தாக‌வும் அம்மா கூறினார். பூசி மீத‌மிருந்த‌ த‌ன‌து மூன்று குட்டிக‌ளை வாஞ்சையோடு ந‌க்கிவிட்ட‌ப‌டி இருந்த‌து. ஆத்தா எங்க‌ள் க‌ண்க‌ளில் ப‌டாம‌ல் பூசி தின்று மீத‌ம் வைத்திருந்த‌ இற‌ந்த‌ குட்டியின் த‌லையை ம‌ட்டும் எடுத்து வெளியில் புதைத்தார். அப்போது ஆத்தாவிட‌ம் எந்த‌ச் ச‌ல‌ன‌மும் இல்லை.

அன்று இர‌வு முழுவ‌தும் நானும் அக்காவும் பூசி த‌ன் குட்டியைத் தின்ற‌து ப‌ற்றியே பேசிக்கொண்டிருந்தோம். ஆத்தா எங்க‌ளுக்கு ஆறுத‌ல் சொல்லும் வ‌கையில் அந்த‌க் குட்டிதான் பூசிக்கு ம‌ருந்துண‌வு என்றார். “அப்ப‌டியானால் உங்க‌ளுக்குப் பிள்ளை பிற‌ந்த‌ போது யாரைத் தின்றீர்க‌ள்” என்றேன். ஆத்தா கொஞ்ச‌ நேர‌ம் அமைதியானார். இள‌ வ‌ய‌தில் இற‌ந்து போன‌ அவ‌ரின் மூன்றாவ‌து ம‌க‌ன் சுப்ர‌ம‌ணிய‌ம் ப‌ற்றிய‌க் க‌தையை மீண்டும் கூற‌த் தொட‌ங்கினார். எத்தனை முறை சொன்னாலும் ஆத்தாவின் வாயால் நான் கேட்க‌ விரும்பும் க‌தை அது. அந்த‌க் க‌தையைச் சொல்லும் போதும‌ட்டும் ஆத்தாவிட‌ம் எந்த‌ச் ச‌ல‌ன‌மும் இருந்த‌தில்லை. மெதுவாக‌ ஒரு ப‌ழைய‌ பெட்டியைத் திற‌ந்து சுப்ர‌ம‌ணிய‌ம் மாமாவின் இற‌ந்த‌ போது பிடித்த‌ப் ப‌ட‌த்தை ம‌ட்டும் எடுத்துக் காட்டுவார். சாதார‌ண பென்சிலைக் கூட‌ பாதுகாக்க‌ முடியாம‌ல் ப‌ள்ளியில் தொலைத்து வ‌ரும் என‌க்கு, இத்த‌னை சிக்க‌லான‌ வாழ்வை க‌ட‌ந்து வ‌ந்த‌ ஆத்தா எப்ப‌டி அந்த‌ப் ப‌ட‌த்தை ம‌ட்டும் காப்பாற்றி வைத்துள்ளார் என்ப‌து ஆச்ச‌ரிய‌மாக‌ இருக்கும். பின் நாட்க‌ளில் பூசி குட்டி போடுவ‌தும் அதில் ஒரு குட்டியைத் தானே உண்ப‌தும் எங்க‌ளுக்கு வ‌ழ‌க்க‌மாகிப் போன‌து.

வீட்டைச் சுற்றிலும் பெரிய‌ நில‌ம் இருந்த‌தால் அம்மாவுக்குக் கோழி வ‌ள‌ர்க்கும் ஆவ‌ல் திடீரென‌ தோன்றியிருக்க‌ வேண்டும். அத‌ற்குப் பொருளாதார‌ப் போதாமையும் ஒரு முக்கிய‌க் கார‌ண‌ம். அப்பா முத‌லில் ஒரு சேவ‌லையும் ஒரு பெட்டையையும் ம‌ட்டும் வாங்கி வ‌ந்தார். சேவ‌ல் த‌லையைச் சாய்த்த‌வாரே ந‌ட‌க்கும். அத‌ற்கு உண‌விடும் வேலையும் பாதுகாக்கும் வேலையையும் ஆத்தா தானாக‌ எடுத்துக்கொண்டார். ஆத்தா சேவ‌லுக்குக் ‘கோண‌க்க‌ழுத்து’ என‌ பெய‌ரிட்டிருந்தார். சிறிது நாட்க‌ளிலேயே கோண‌க்க‌ழுத்து த‌ன‌து பெய‌ரை அடையாள‌ம் க‌ண்டுக்கொண்ட‌து. ஆத்தா அழைக்கும் போதெல்லாம் சேவ‌ல் எங்கிருந்தாலும் ஓடிவ‌ரும். மாலை ம‌ணி ஐந்துக்கு சேவ‌லும் பெட்டையும் கொள்ளைப் புற‌ம் த‌ங்க‌ள் உண‌வுக்காக‌க் காத்திருக்கும். ஆத்தா ஒரு பிடிய‌ள‌வு உண‌வை அள்ளி வீச‌ அவை கொத்தித் திண்ணும் அழ‌கு அலாதியான‌து. என‌க்கும் அக்காவுக்கும் ஆத்தா என்றாவ‌து ஒருமுறை உண‌வை அள்ளி வீச‌ வாய்ப்ப‌ளிப்பார். சில‌ மாத‌ங்க‌ளில் துரித‌மான‌ இன‌விருத்தியால் வீட்டில் க‌ம்ப‌த்துக் கோழிக‌ளின் எண்ணிக்கை அதிக‌ரித்த‌து. ஆத்தா ‘பெ…பெ’ என்ற‌வுட‌ன் அவை கொள்ளைப்புற‌த்தில் குவிந்து நிர்க்கும். ஆத்தா அவைக‌ளுக்கு ம‌த்தியில் ஒரு த‌லைவியைப்போல் ப‌வ‌ணி வ‌ந்து ச‌ற்று நேர‌ம் உரையாடிய‌ப்பின் நாலாப்புற‌மும் உண‌வை அள்ளி வீசுவார். சேவ‌ல்க‌ளும் பெட்டைக‌ளும் அவைக‌ளுக்கான‌ இட‌த்தில் சென்று குழுமிக்கொள்ளும். ஆத்தாவின் குர‌லுக்கு கோழிக‌ள் அட‌ங்குவ‌தும் ஆத்தாவுக்கு ஒவ்வொரு கோழியின் குண‌மும் த‌னித்த‌னியாக‌த் தெரிவ‌தும் எங்க‌ளுக்கு ஆச்ச‌ரிய‌மாக‌ இருக்கும்.

சில‌ மாத‌ங்க‌ளுக்குப் பின், அப்பா ஒரு நாள் பெரிய‌ பெரிய‌ ம‌ர‌த்தூண்க‌ளை எடுத்துவ‌ந்து பூமியில் ஊன்ற‌ ஆர‌ம்பித்தார். அப்பா இதுபோல‌ ஏதாவ‌து செய்வ‌து வ‌ழ‌க்க‌ம். அது போன்ற‌ நேர‌மெல்லாம் நான்தான் அப்பாவுக்குத் துணை. ஆணி எடுத்துக் கொடுப்ப‌து. ச‌ட்ட‌ங்க‌ளை இர‌ம்ப‌த்தில் அறுக்கும்போது ந‌க‌ராம‌ல் பிடித்துக் கொள்வ‌து என‌ மிக‌ முக்கிய‌மான‌ ப‌ணி என‌து. சிறிது நாளில் அப்பா ஆடுக‌ள் வ‌ள‌ர்க்க‌ கூண்டு அமைக்கிறார் என‌த் தெரிந்த‌போது குதூக‌ல‌மானேன்.

நான் ஆடுக‌ளை அருகில் பார்த்த‌து குறைவு. ஆடுக‌ள் வீட்டிற்கு வ‌ரும் நாளை எண்ணிய‌ப‌டி காத்திருந்தேன். ஒரு நாள் அப்பா ஒரு கெடா ஒரு பெட்டை என‌ இரு ஆட்டுக்குட்டிக‌ளை வாங்கிவ‌ந்தார். கெடா க‌ருப்பு நிற‌த்திலும் பெட்டை சாக்லெட் நிற‌த்திலும் இருந்த‌ன‌. ஆசைத்தீர‌ அவ‌ற்றைத் தொட்டுப் பார்த்தேன். ஆடுக‌ளின் மேல் என‌க்கு இருந்த‌ ஈடுபாட்டால் அவ‌ற்றை மேய்க்கும் பொறுப்பு என‌க்கு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து. ப‌ள்ளிவிட்டு வ‌ந்த‌தும் நேராக‌ ஆடுக‌ளிட‌ம் ஓடிவிடுவேன். அது வ‌ரையில் க‌ட்டிப்போட‌ப்ப‌ட்டிருக்கும் ஆடுக‌ளை அவிழ்த்து காடுக‌ளில் சுற்றுவேன். ஆடுக‌ளுக்குப் ‘பால் இலை’எனும் ஒருவ‌கை கொடி இலையைத் தேடி அழைவ‌தில் நேர‌ம் க‌ழியும். எவ்வ‌ள‌வு புல் மேய்ந்தாலும் ஆடுக‌ளுக்கு ஒவ்வொரு நாளும் காண்டா இலைக‌ளை வெட்டிப்போட‌ வேண்டும். அது ஆட்டின் வ‌ள‌ர்ச்சிக்குத் துணை புரியும் என்றார்க‌ள். கெடா வ‌ள‌ர்ந்த‌தும் கொஞ்ச‌ம் முர‌டு பிடிக்க‌த்தொட‌ங்கிய‌து. ஒரு க‌ம்பீர‌ம் அத‌ன் உட‌ல் முழுதும் ப‌ர‌வியிருந்த‌து. தொட‌ர்ச்சியாக‌ப் பெட்டை இர‌ண்டு குட்டி போட்ட‌போது எங்க‌ள் வீட்டில் நான்கு ஆடுக‌ள் இருந்த‌ன‌. ஆட்டின் அல‌றல் மிக‌க் கொடுமையாக‌ இருக்கும். வாயைப் பிளந்து நாவை அதிர‌ விட்டு அது சாதார‌ண‌மாக‌க்க‌‌த்தினாலும் ம‌ர‌ண‌ ஓல‌ம் போல‌வே கேட்கும். ஆடுக‌ள் வ‌ள‌ர‌ வ‌ள‌ர‌ ஆத்தாவின் சுறுசுறுப்பும் அதிக‌ரித்திருந்த‌து.

ஆத்தாவின் வ‌ய‌தின் கார‌ண‌மாக‌ அம்மா அவ‌ரை காடுக‌ளில் ந‌ட‌க்க‌ வேண்டாம் என‌க் க‌ட்ட‌ளையிட்டும் அவ‌ர் அதையெல்லாம் பொருட்ப‌டுத்திய‌தில்லை. என்னைப் ப‌டிக்க‌க் கூறிவிட்டு, ஆடுக‌ளோடு சுற்றி தின‌ம் தின‌ம் ஏதோ ஒரு காய‌த்தை வீட்டிற்குக் கொண்டுவ‌ருவார். காலையில் ஆடுக‌ளோடும் ம‌திய‌ம் கோழிக‌ளோடும் இர‌வில் பூனையோடும் என‌ அவ‌ர் பொழுதுக‌ள் துரித‌மாக‌க் க‌ழிந்த‌ன‌. சிறிது நாட்க‌ளிலேயே என் வ‌ச‌ம் இருந்த‌ ஆடுக‌ளின் பொறுப்புக‌ளை ஆத்தா த‌ன‌தாக்கிக் கொண்டார்.

இய‌ல்பாக‌வே ஆத்தா அதிக‌ம் பேசாத‌வ‌ர். இள‌ வ‌ய‌திலேயே க‌ண‌வ‌ரை இழ‌ந்த‌வ‌ர் .என் அம்மா உட்ப‌ட‌ நான்கு பிள்ளைகளையும் மிக‌ க‌ஷ்ட‌ப்ப‌ட்டே வ‌ள‌ர்த்தார். பிள்ளைக‌ளுக்குச் சோறு கொடுத்துவிட்டு வெறும் சோற்று நீரை ம‌ட்டும் ப‌ருகி நாளெல்லாம் க‌டின‌ வேலையை அவ‌ர் செய்த‌ க‌தையை அம்மா இப்போதும் சொல்வ‌துண்டு. க‌டின‌ உழைப்பாளியாக‌ இருந்த‌ அவ‌ருக்கு நாள்தோறும் ஏதாவ‌து செய்துகொண்டிருக்க‌ வேண்டும். ஒரு ச‌ம‌ய‌த்தில் எங்க‌ள் வீடும் அதில் உள்ள‌ ந‌வீன‌ க‌ருவிக‌ளும் அவ‌ர் வ‌ச‌திக்கு இல்லாம‌ல் போக‌, செய்ய‌ வேலை எதுவும் இன்றி த‌வித்தார். எங்க‌ள் உல‌க‌ம் அவ‌ருக்குப் புரியாம‌ல் போன‌து. ப‌ல்லாங்குழியை எடுத்துவைத்துக் கொண்டு என‌க்கும் அக்காவுக்கும் காத்திருப்பார். மாண‌வ‌ன் என்றால் எந்த‌ நேர‌மும் ப‌டித்து கொண்டே இருக்க‌ வேண்டும் என்ற‌ தொற்றுநோய் அப்போதே எங்க‌ள் ப‌ள்ளியில் ப‌ர‌வியிருந்த‌தால் அடுக்கி வைக்க‌ப்ப‌ட்ட‌ புத்த‌க‌த்தோடும் பென்சிலோடும் நானும் அக்காவும் மூழ்கிக் கிட‌ப்போம். அம்மா ஒரு ம‌ர‌ தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்து அப்பாவுக்குத் துணையாக‌ வ‌ருமான‌த்திற்கு கூடுத‌ல் வேலையெல்லாம் செய்து க‌ளைத்திருப்பார். வெறுமை ஆத்தாவை த‌ன‌க்கான‌ உல‌கை அமைக்க‌ வ‌ழிகொடுத்த‌து.

ஒவ்வொரு வில‌ங்கையும் நாங்க‌ளே தேர்வு செய்து வ‌ள‌ர்த்த‌போது கேட்காம‌லேயே அப்பாவின் ந‌ண்ப‌ர் ஒருவ‌ர் மூன்று நாய் குட்டிக‌ளை வீட்டில் கொண்டுவ‌ந்து சேர்த்திருந்தார். மூன்றுமே ஆண் குட்டிக‌ள். ம‌ற்ற‌ வில‌ங்குக‌ளோடு உற‌வு கொள்வ‌தைக் காட்டிலும் நாய்க‌ளோடு கொள்ளும் உற‌வு வித்தியாச‌மாக‌ இருந்த‌து. நாய்க‌ள் ம‌னித‌னிட‌ம் ந‌ட்பு கொள்ள‌ ம‌ட்டுமே ப‌டைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ என‌த் தோன்றிய‌து. நாய்க‌ளிட‌ம் நான் விளையாடுவ‌தோடு ச‌ரி. அவ‌ற்றிற்கு உண‌விடுவ‌தெல்லாம் ஆத்தாதான். அதைப் பாதுகாக்கும் முறையை அப்போது நாங்க‌ள் யாருமே அறிந்திருக்க‌வில்லை. மிக‌க் குறுகிய‌ கால‌த்திலேயே ஒன்ற‌ன் பின் ஒன்றாக‌ நாய்க‌ள் நோய் பிடித்து இற‌ந்த‌ன‌. ஆத்தாதான் அவ‌ற்றைப் புதைத்தார். ஒவ்வொரு முறை புதைக்கும் போதும் அவ‌ர் முக‌த்தில் எவ்வித‌மான‌ உண‌ர்ச்சியும் இருந்த‌தில்லை . ப‌ர‌ப‌ர‌வென‌ குளியைப் ப‌ரித்து புதைத்துவிட்டு அடுத்த‌ வேலைக்கு ஓடிவிடுவார்.

நாய்க‌ளுக்கு மாற்றாக‌ அப்பா அத‌ன் பின் இர‌ண்டு ஆங்சா குஞ்சுக‌ளை வாங்கி விட்டார். ஆங்சா வாத்து இன‌த்தைச் சேர்ந்த‌து. பாதுகாப்ப‌ற்ற‌ சூழ‌லை உண‌ரும் போது பெரும் குர‌லெடுத்து க‌த்த‌க்கூடிய‌து. நாங்க‌ள் இருந்த‌ க‌ம்ப‌த்தில் ஒரு மாத‌த்தில் ஒரு பாம்பாவ‌து வீட்டிற்கு விஜ‌ய‌ம் புரியும் என்ப‌தால் ஆங்சா போன்ற‌ ஒரு காவ‌லாளி எங்க‌ளுக்குத் தேவைப்ப‌ட்ட‌து. ப‌டி ப‌டியாக‌ வான்கோழியும் , ப‌ன்னைக் கோழிக‌ளும் எங்க‌ள் ப‌ண்ணையில் இணைந்து கொண்ட‌ன‌.

ஆச்ச‌ரிய‌மாக‌ எங்க‌ளின் அனைத்து வ‌ள‌ர்ப்புப் பிராணிக‌ளும் ஆத்தாவை த‌லைவியாக‌த் தேர்ந்தெடுத்திருந்த‌ன‌. அவ‌ர் சொல்லுக்குக் க‌ட்டுப்ப‌ட்ட‌ன‌. அவ‌ர் அருகில் சென்றால் எதுவும் ப‌ய‌ந்து ஓடுவ‌தில்லை. பெட்டைக‌ள் த‌த்த‌ம் முட்டைக‌ளை அடையிலிருந்து எடுக்க‌வும் வைக்க‌வும் ஆத்தாவுக்கு ம‌ட்டுமே அனும‌தி கொடுத்த‌ன‌. வான்கோழிக‌ள் கூப்பிட்ட‌ குர‌லுக்கு ம‌ர‌த்திலிருந்து ப‌ற‌ந்துவ‌ந்த‌ன‌. ஆடுக‌ள் குறித்த‌ நேர‌த்திற்கெல்லாம் கொட்ட‌கையில் அடைந்த‌ன‌. ஒரு பெரும் ச‌ம‌ஸ்தான‌த்தையே ஆளும் அர‌சி போல‌ ஆத்தா அவைக‌ளுக்கு இடையில் வ‌ல‌ம் வ‌ந்தார்.

ப‌டிவ‌ம் ஐந்து ப‌டித்த‌போது எங்க‌ள் க‌ம்ப‌ம் வேறொருவ‌ருக்கு உரிமையாகியிருந்த‌து. அங்கு வ‌சித்த‌வ‌ர்க‌ளுக்கெல்லாம் குறிப்பிட்ட‌ ஒரு தொகையைக் கொடுத்துவிட்டு க‌ம்ப‌த்தைவிட்டு வெளியேற‌ ப‌ணிக்க‌ப்ப‌ட்ட‌து. க‌ம்ப‌ம் புதிய‌ குடியிருப்பாக‌ உருமாற‌ இருந்த‌தால் எங்க‌ளுக்கும் ஒரு தொகை கிடைத்த‌து. அப்பா த‌ன்னிட‌ம் இருந்த‌ புகைப்ப‌ட‌க்க‌ருவியால் வீட்டைச் சுற்றிலும் நிறைய‌ ப‌ட‌ங்க‌ள் எடுத்துக்கொண்டார். ஆத்தா நிறைய‌ கேள்விக‌ளோடு மீத‌ நாட்க‌ளில் வீட்டைச் சுற்றி சுற்றி வ‌ந்தார். அவ‌ர் வ‌ள‌ர்ப்புப் பிராணிக‌ளிட‌ம் அதிக‌ நேர‌த்தை இறுதியாக‌ச் செல‌வ‌ளித்தார்.

குறிப்பிட்ட‌ ஒரு நாளில் நாங்க‌ள் வ‌ள‌ர்த்த‌ பிராணிக‌ள் அனைத்தும் வேறொருவ‌ரின் கைக்கு மாறிய‌து. ஆத்தாதான் ஒவ்வொரு கோழியாக‌ப் பிடித்து காலில் க‌யிற்றை இறுக்கிக் கொடுத்தார். வான்கோழியின் காலையும் இற‌க்கைக‌ளையும் அசைய‌விடாம‌ல் க‌ட்டினார். ஆடுக‌ளை ப‌ல‌வ‌ந்த‌மாக‌ க‌ன‌வுந்தில் ஏற்றினார். அன்றைய‌ தின‌த்தில் எல்லா பிராணிக‌ளின் ச‌த்த‌மும் வீட்டின் சுற்றுப்புற‌த்தை அடைத்து நின்ற‌ன‌. ஒரு ந‌ம்பிக்கை துரோக‌த்தைச் ச‌ந்தித்த‌த‌ற்கான‌ பெரும் ஓல‌ம் அது. பூனையும் அத‌ன் குட்டிக‌ளும் கூட‌ அருகில் இருந்த‌ ம‌லாய்கார‌ர்க‌ளின் க‌ம்ப‌த்தில் விட‌ப்ப‌ட்ட‌து. நாங்க‌ள் க‌ம்ப‌த்தை விட்டு செல்லும் முத‌ல் நாள் எந்த‌ வில‌ங்குக‌ளின் குர‌லும் இல்லாம‌ல் நிச‌ப்தித்திருந்த‌து. அவ‌ற்றின் எச்ச‌ங்க‌ளின் க‌ல‌வை ம‌ட்டும் அக‌லாம‌ல் வாச‌னை ப‌ர‌ப்பியப‌டி இருந்த‌து.

அன்று இர‌வு ஆத்தா அதிக‌ம் பேச‌வில்லை. வீடு மாற்ற‌லாகிச் செல்ல‌ த‌ன‌து உட‌மைக‌ளைத் த‌யார் செய்து கொண்டிருந்தார். க‌ம்ப‌த்தில் விட்ட‌ பூசி என்ன‌ செய்து கொண்டிருக்கும் என ம‌ட்டும் அடிக்க‌டி கேட்டுக்கொண்டார். இந்த‌ உல‌க‌ம் ம‌னித‌னுக்கான‌து ம‌ட்டும் அல்ல‌ என‌ ஆத்தா அன்றே நினைத்திருக்க‌க் கூடும். அதை சொல்வ‌த‌ற்கான‌ மொழியும் வெளியும் அவ‌ருக்கு இல்லாம‌ல் இருந்திருக்க‌லாம்.

(Visited 181 times, 1 visits today)

One thought on “அவ‌தாரும் ஆத்தாவும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *