முனைவர் மனோன்மணியும் பெயர் மாற்றமும்

உப்சி கல்லூரியின் விரிவுரையாளர் முனைவர் மனோன்மணி அவர்கள் குறித்த புகார் கடிதம் ஒன்றை அருண் துரைசாமி என்பவர் வாசிக்கும் காணொளியை நண்பர் ஒருவர் காலையிலேயே அனுப்பி வைத்திருந்தார். அருண் துரைசாமி வீடியோ இப்படி எங்காவது சுற்றியடித்து அவ்வப்போது வருவதுண்டு. முதல் வேளையாக அதனை அழித்து விடுவேன். இனம், மொழி, மதம் என்பனவற்றுக்கிடையில் பேதம் தெரியாத அரைவேக்காட்டு நபர்களின் உளறல்கள் இப்படி சமூக ஊடகங்களில் ஏராளமாகவே சுற்றிக்கொண்டிருக்கின்றன. அவற்றைக் கொண்டாடும் மூடர் கூட்டமும் எப்போதும் இருப்பதுண்டு. முன்பு இந்தக் கூட்டம் தோட்டத்து சாராயக்கடைகளில் இருந்ததாக ஞாபகம். இப்போது சமூக ஊடகங்களில் புகுந்து கலந்துள்ளனர்.

அந்தக் காணொலி மனோன்மணி அவர்களைப் பற்றியது என்பதால் முழுமையாகக் கேட்டேன். நான் அவரை ஒரு முறை சந்தித்துள்ளேன். மற்றதெல்லாம் நிகழ்ச்சிகளில் பார்த்ததுதான். கவிஞர் சீனி நைனா முகம்மது அவர்களின் மாணவி; தனித்தமிழ் பற்றாளர்; கல்வியாளர் என மனதில் அவர் குறித்து பதிந்திருந்தது.

காணொளியின் சாரம், மனோன்மணி அவர்கள் தன் கல்லூரி மாணவர்களின் பெயர்களைத் தமிழ்ப்படுத்துகிறார். அப்படி மாற்றியமைக்க மாணவர்களை வலியுறுத்துகிறார் என்பதுதான். அப்படி அவர் செய்திருந்தால் அச்செயல் ‘தவறு’ என்பதுதான் என் புரிதல். யாருடைய பெயரையும் மாற்றி வைக்கும் உரிமையை இன்னொருவர் தன் அதிகாரத்தின் பலனால் கையாள்வது முறையல்ல. அப்படிச் செய்தால் அது அதிகார துஷ்பிரயோகம்; வன்முறை.

நான் இத்தகவலை ஒட்டி என் தொடர்பில் இருந்த அக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள், இன்றைய மாணவர்கள் பலரையும் அழைத்தேன். குறைந்தபட்சம் பத்து பேரிடம் இது குறித்துப் பேசினேன். அனைவருமே கூறிய பதில் ஒன்றுதான். ஒருபோதும் முனைவர் மனோன்மணி யாரையும் பெயர் மாற்ற வற்புறுத்தியதில்லை. மாறாக, வடமொழியில் உள்ள பெயருக்கு சரியான தமிழ்ப் பெயர் என்னவென்று விளக்குவார். சில சமயம் அன்பாக அப்பெயரிட்டு வகுப்பில் அழைப்பார். ஒவ்வொரு அழைப்புக்குப் பின்னரும் நான் முனைவர் மனோன்மணி அவர்களின் நோக்கத்தை மெல்ல மெல்லப் புரிந்துகொண்டேன்.

அவர் பெயர்களில் கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தக்கூடாது என விரும்பியிருக்கிறார். அதேபோல தமிழில் உருவாகாத பெயர்களை அதே பொருளில் தமிழ்ப்படுத்த முயன்றுள்ளார். அப்படியான வாய்ப்புகள் உள்ளதை மாணவர்களிடம் தெரிவித்திருக்கிறார். இது தமிழ்ச்சூழலில் எப்போதும் உள்ளதுதான். சூரிய நாராயண சாஸ்திரி தன் பெயரை பரிதிமாற் கலைஞர் என்றும் வேதாசலம் தன் பெயரை மறைமலை அடிகள் தட்சிணாமூர்த்தி தன் பெயரை கருணாநிதி என்றும் தமிழ்ப்படுத்திக்கொண்டதெல்லாம் இந்தப் பாணியில்தான். இப்படி நீண்ட நெடிய வரலாறு நமக்குண்டு.

மாணவர்களிடம் பேசிய பிறகு மனோன்மணி அவர்களின் செயல் சரியா, என மீண்டும் ஒருதரம் கேட்டுக்கொண்டேன்.

உறுதியாகச் சரிதான். அதுவும் கல்வியின் ஒரு கூறுதான்.

முனைவர் மனோன்மணி தமிழ்த்துறையின் கீழ் பணியாற்றுபவர். எனவே மொழி சார்ந்த கல்வியை எப்படியும் அறிமுகப்படுத்த அவருக்கு உரிமை உண்டு. விவாதிப்பதும் உரையாடுவதும் சிந்திக்கத் தூண்டுவதும் கல்வியின் அம்சமே. அதுவும் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் தமிழ்ப்பயிலும் மாணவர்களிடம் இந்தப் புரிதலை உருவாக்குவதில் என்ன பிழை? அதை வாழ்வியலோடு இணைத்துப் பார்ப்பதில் என்ன தவறு உள்ளது?

மனோன்மணி அவர்களின் இந்தச் செயல்தான் ‘மாணவர்களின் பெயரை மாற்றினார்’ என்ற ஒருவரி குற்றச்சாட்டாக திரிக்கப்பட்டுள்ளது. அவர் என்ன பதிவிலாக்கா அதிகாரியா பெயரை மாற்ற? ஆனால் அவதூறுகளைப் பரப்பவும் தங்கள் வக்கிர மனதை சமுதாய உணர்ச்சியாக மாற்றிக்காட்ட விளைபவர்களுக்கு இந்த உண்மையெல்லாம் அவசியமில்லை. கழுதைப்புலிகள்போல கும்பலாக கூச்சலிட்டுப் பிணத்தில்மேல் வேட்கையோடு பாயும் வேகத்தில் அவர்களிடையே உணர்ச்சிகள் பீரிட்டுக்கிழம்பும். குரல் பதிவுகளாலும் காணொளிகளாலும் அடையாளத்தை தேடிக்கொள்ள இதைவிட வேறென்ன வாய்ப்பு கிடைத்துவிடப்போகிறது?

எந்தச் செயலுக்கும் அதை செய்பவரின் நோக்கமே பிரதானமானது. முனைவர் மனோன்மணியிடன் உள்ளது மொழிப்பற்று மட்டுமே. ஒரு கல்வியாளராக அதை தன் போதனையில் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்தப் பணியைத்தான் மு.வ தொடங்கி, இந்த நாட்டின் ஆரம்பகால கல்வியாளர்கள் வரை மேற்கொண்டார்கள். தமிழ் மக்கள் வழிபடும் கடவுள்களுக்கு நல்ல தமிழ்ப் பெயர்கள் உண்டு. தேவாரம் திருவாசகத்திலிருந்து, திவ்யப் பிரபந்தம் வரையில் ஆயிரமாயிரம் அழகிய தமிழ்ப் பெயர்கள் கொட்டிக்கிடக்கின்றன. பீட்டர் பெர்சிவல் பைபிளைத் தமிழில் மொழி பெயர்த்தபோது, பல நல்ல தமிழ்ச் சொற்களை அதில் சேர்த்தார். உமறுப் புலவர் போன்ற சில இஸ்லாமியப் புலவர்களின் தமிழைப் படித்திருந்தால் இவ்வாறு அவதூறு செய்யத் தூண்டாது.

ஆனால் இதனைப் பெரிதாக்க நினைப்பவர்கள் இச்செயலை மொழிப்பற்று எனச் சொல்லிவிட்டால் சாதாரணமாகிவிடும் என நினைத்து செய்யும் சூழ்ச்சிகள்தான் இங்குக் கண்டிக்கத்தக்கது. அதாவது மனோன்மணி அவர்கள் மதத்துக்கு விரோதமாகச் செயல்படுகிறார் என கூடுதலாக சில கூறுகளை அப்புகாரில் இணைப்பதன் மூலம் தங்கள் தரப்புக்கு அழுத்தம் கொடுக்க முனைந்துள்ளனர். ‘கடவுள் நாமத்தைக் கொண்ட தங்கள் குழந்தைகளின் பெயரை மாற்றுகிறார், அதன் வழி இந்து மதத்துக்கு விரோதமாக செயல்படுகிறார்’ என பொய்யை மெல்ல மெல்ல கட்டமைக்கின்றனர். ஒரு மொழிப்பற்று மத விரோதமாக மாற்றப்பட்டு அதன் வழி ஒருவரை தாக்குவதற்கு நச்சுப் பாதையை வகுக்கத் தொடங்கியுள்ளனர்.

இது மிகவும் கவனித்து பார்க்க வேண்டிய அம்சம். ஒருவரை வீழ்த்த அவர் மேல் என்ன விதமான முத்திரை குத்தப்படுகிறது என்பது முக்கியமானது. மொழியை ஆதரிக்கும் ஒருவரை மிக எளிதாக திராவிட ஆதரவளராகக் கட்டமைப்பதும் அதன் வழி அவரை இறை மறுப்பாளராக மாற்றுவதும் இறுதியில் நாட்டின் தேசிய கோட்பாட்டை அவமதிப்பதாகவும் புகார் கொடுத்து வீழ்த்துவது ஒரு தரப்பு. திராவிடத்தை முன்னிலைப்படுத்தி செயல்படுபவரைக் கேள்வி எழுப்பும்போது அவரை மத வெறியராகக் கட்டமைத்து மொழிக்கு விரோதமானவராகக் காட்சிப்படுத்துவது இன்னொரு தரப்பு.

இந்த முத்திரை ஒருவர் மேல் வலிந்து திணிக்கப்படும் காரணம், அவரைக் கண்மூடித்தனமாக எதிர்க்கும் ஒரு கும்பலின் வசைக்கு இரையாக்கத்தான். அதன் வழி அவரது சமூக மதிப்பை இறக்குவதும் மன உளைச்சலுக்கு ஆளாக்குவதும் எனத் தொடர்ந்து மொழியை மையமாகக் கொண்டு இயங்குபவர்களை பயமுறுத்துவதில் சென்று முடியும். தொடர்ந்து செயல்படும் முனைப்புக்கொண்டவர்கள் இந்தச் சாக்கடை சூழலை கடந்து வந்தே ஆகவேண்டும். வேகமாக முன்னோக்கிச் செல்லும்போது மிகச்சிறிய கல் கூட கண்ணாடியை உடைப்பது இயற்கைதானே. மற்றபடி என் ஊகத்தில் முனைவர் மனோன்மணி இந்தப் புகாரில் இருந்து மீண்டு விடுவார். அவருக்கு எந்த அரசியல் ஆதரவும் அவசியம் இருக்காது. உண்மையுடன் நிகழ்த்தும் செயல் ஒவ்வொன்றுக்கும் அதற்கான அற பலம் என ஒன்று உண்டு. இறுதியில் அதுவே வெல்லும். அதில் நிகழும் சிறு சிறு சறுக்கல்கள்கூட இன்னும் பல படிகள் உயர்ந்து பறப்பதற்கான உந்துவிசைதான். அதுவரை புகார் கொடுக்கும் மூடர் கூட்டம் அப்படிக் கொடுக்கப்பட்டதாலேயே சந்தோசம் கொண்டிருக்கும். அவர்களுக்கு கிடைக்கும் அதிகபட்ச மகிழ்ச்சி அது மட்டும்தான்.

தமிழ் நாடு, தமிழ் மக்கள் என்பது மொழியால் ஏற்பட்ட அடையாளம். மதத்தாலோ, சாதிகளாலோ வேறெந்த அடையாளத்தாலோ ஏற்பட்டதல்ல. அன்றைய மலாயாவில் தமிழவேள் கோ.சாரங்கபாணி முதற்கொண்ட பல தலைவர்கள் தமிழ் மக்களை இப்படி மொழியால்தான் ஒன்றுபடுத்தினார்கள். தமிழ்ச் சமூகம் பரந்தபட்ட சமூகம். பல்வேறுபட்ட, மத, சடங்கு நம்பிக்கைகளையும் பின்னணிகளையும் கொண்டவர்கள் தமிழர்கள். பேச்சுத் தமிழ் நாட்டுக்கு நாடு, ஊருக்கு ஊர், சமூகத்துக்கு சமூகம் என பலவேறாக உள்ளது. ஆனால் இதில் நல்ல தமிழ் என்பது ஒன்றுதான். வருங்கால சமூகத்துக்கு நல்ல தமிழை வழங்கும் கல்வியாளர்களை இவ்வாறு அவதூறு செய்து, அவமானப்படுத்தி அவர்மீது சமூக விரோத முத்திரை குத்துவதுதான் இத்தரப்பினரதும் நோக்கம். இதை நாம் மௌனமாக அனுமதிக்கும் பட்சத்தில் நாளை எல்லா துறைகளிலும் இந்தக் கும்பல் தங்கள் மேலாதிக்கத்தை நடைமுறைப்படுத்தவும் செய்யும்.

என் புரிதலில், இந்தச் சூழலை உண்மையாக கையில் எடுக்க வேண்டியவர்கள் அவரது மாணவர்களே. தங்கள் புகைப்படத்தைப் பதிவேற்ற மட்டுமே சமூக தளங்களைப் பயன்படுத்தாமல் இவை அனைத்தும் அவதூறு மட்டுமே என ஒலிக்கும் அவர்கள் குரலுக்கு சக்தி உண்டு. அதைச் செய்தால் மட்டுமே அறிவுடைய சமுதாயம் உருவாகிறது எனப்பொருள். இல்லாவிட்டால் இன்னொரு அருவருப்பை அனுபவித்த கசப்புடன் கடக்க வேண்டியதுதான்.

(Visited 1,207 times, 1 visits today)