தைப்புத்தாண்டு: அந்த இன்னொரு வாழைப்பழம்தான் அது!

2019 மே மாத வல்லினத்தில் அ.பாண்டியன்  ‘தையும் பொய்யும்‘ எனும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அக்கட்டுரை சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கு மாற்றாக தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு என்று நிறுவும் முயற்சியை ஒட்டி எழுப்பப்பட்ட கேள்விகளை உள்ளடக்கியது.

அக்கட்டுரை அப்போது அதிகம் வாசிக்கப்படவில்லை. இப்போதும் வாசிக்கப்பட்டிருக்காது. நல்ல வேளையாக ‘எழில் வெய்யோன்‘ என்ற யூ-டியூப் சேனல் அக்கட்டுரையை ஒலி வடிவத்தில் கொடுக்க தங்களைத் தமிழ் அறிஞர்களாக நம்பிக்கொண்டிருப்பவர்கள் அதற்கு சமூக வலைத்தளங்களில் எதிர்வினையாற்றுவதைப் பார்க்க முடிகிறது. அவர்களின் எதிர்வினைகளின் தரத்தைப் பார்க்கும் முன்பு பாண்டியன் கட்டுரையின் சாரத்தை காணலாம்.

பாண்டியன் முன் வைக்கும் கேள்விகள் மிக நேரடியானவை. அதை ஒட்டி அவர் தரும் தரவுகளும் வலுவானவை. கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளாக சொல்லப்பட்ட பொய் என்றே அவர் அதை வலியுறுத்துகிறார். அவர் குறிப்பிடும் பொய்களையும் அதற்கு அவர் கட்டமைக்கும் காரணத்தையும் இரண்டாகத் தொகுத்துக்கொள்ளலாம்.

முதல் பொய்: 1921-ஆம் ஆண்டில் பச்சையப்பன் கல்லூரியில் ஐநூறு தமிழறிஞர்களுடன் விவாதித்து மறைமலையடிகள் பொங்கல் பண்டிகையைத் தமிழ்ப்புத்தாண்டு என்று முன்மொழிந்தார்.

பாண்டியன் கேட்பது: 1921இல் அப்படி ஒரு மாநாடு நடந்ததற்கான ஆதாரங்கள் உள்ளனவா? ஐநூறு தமிழரிஞர்கள் இணைந்தால் அந்த மாநாட்டை ஒட்டிய குறைந்தது 50 அழுத்தமான பதிவுகளாகவும் இருக்க வேண்டும் அல்லவா? அவை எங்கே?

கொஞ்சம் யோசித்தாலே இந்தக் கேள்வியில் உள்ள நியாயம் புரியும். 1921 என்பது அவ்வளவு பின் தங்கிய காலம் இல்லை. இந்த ஆண்டுக்கு முன் சென்று பார்த்தாலும் சுதேசமித்திரன் (1882), திராவிடன் (1916), பாலபாரதி (1917) என சிறிதும் பெரிதுமாக ஏராளமான சஞ்சிகைகள், நாளிதழ்கள் வெளிவந்துள்ளன. 1920க்குப் பின் இன்னும் அதிகம். எனவே சிந்தனையாளர்கள் தங்கள் கருத்துகளைப் பகிரும் சூழலும் தாராளமாக இருந்தது. எனின், அவை அச்சில் எங்கேனும் பதிவு செய்யப்பட்டுள்ளதா? காரணம் 500 பேர் கூடிய மாநாடு என்பது எளிய தருணம் அல்ல. வரலாற்றின் அந்த அரிய தருணம் ஏன் பதிவாகவில்லை என்பதே பாண்டியனின் கேள்வி.

இரண்டாவது பொய்: 1935-ஆண்டில் நடந்த மாநாட்டில் மறைமலையடிகள், திரு.வி.க போன்ற பெரும் தமிழ் அறிஞர்கள் ஒன்றுகூடி தை முதல்நாள் தமிழ்ப்புத்தாண்டு என்னும் முடிவை நிலைநிறுத்தினர்.

பாண்டியன் கேட்பது: தமிழ் ஆய்வாளரான மறைமலை அடிகள் பல்வேறு நூல்களை இயற்றியுள்ளார். வள்ளுவரின் பிறப்பு ஆண்டு குறித்து அவரால் கணிக்கப்பட்ட வரலாற்று சான்றுகள் உள்ளன. ஆனால் தை முதல் நாளை திருவள்ளுவர் ஆண்டின் தொடக்கமாக வைத்ததற்கான சான்றுகள் இல்லை. அப்படி இருந்தால் அவை எங்கே?

பாண்டியன் கூற்று உண்மைதான். மறைமலை அடிகள் ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். பல நூல்கள் இன்று இலவசமாகவே இணையத்தில் வாசிக்கக் கிடைக்கின்றன. மறைமலையடிகள் அவ்வாறு செய்துள்ளது உண்மையென்றால் தாராளமாகவே அந்நூல்களில் இருந்து எங்கேனும் ஆதாரம் காட்டலாம். ஆனால் கட்டுரை எழுதப்பட்ட இரண்டு ஆண்டுகளில் இன்னமும் காட்டப்படவில்லை என்பதே வருத்தமானது.

மறைமலை அடிகளின் நாட்குறிப்பு

இவ்விரு கட்டமைக்கப்பட்ட பொய்களை அடையாளம் காட்ட பாண்டியன் மறைமலை அடிகளின் நாட்குறிப்பையும் துணை நூலாகப் பயன்படுத்துகிறார். தன் வாழ்நாளில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நாட்குறிப்பு எழுதும் பழக்கத்தைக் கொண்டிருந்தவர் மறைமலையடிகள். அவரின் மகன் வழி பேரன் பேரா.மறை.தி.தாயுமானவன் (மறை. திருநாவுக்கரசரின் மகன்) 2018-ல் மறைமலையடிகளின் நாட்குறிப்பின் உள்ளடக்கங்களைத் தொகுத்து ‘மறைமலையடிகளாரின் அடிச்சுவட்டில்’ என்ற நூலாக வெளியிடப்பட்டுள்ளது. அந்த நூலில்  1921ஆம் ஆண்டு கருத்தரங்கு பற்றிய தகவலோ, 1935-ஆம் ஆண்டு கருத்தரங்கு பற்றிய தகவலோ இடம்பெறவில்லை என்பதை அ.பாண்டியன் தன் வாசிப்பில் உறுதிபட கூறுகிறார். இது மிகவும் கவனிக்கத் தக்க விடயம். மறைமலை அடிகள் போன்ற தமிழ் அறிஞர்கள் அன்றாடங்களை தங்கள் குறிப்புகளில் எழுதப்போவதில்லை. மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவைகளைப் பதிவு செய்யும் அவர்கள் பணியில் இவை விடுபட்ட காரணம் என்ன என்று ஆராய வேண்டியுள்ளது.

அ.பாண்டியனும் பொங்கலும்

அ.பாண்டியனின் இக்கட்டுரையில் தொனிப்பது பொங்கலை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடும் வழக்கத்தை மாற்றி அமைப்பதோ சித்திரையே தமிழர் புத்தாண்டு என நிறுவுவதோ அல்ல. இன்னும் சொல்லப்போனால் பொங்கல்தான் தமிழர் புத்தாண்டு என நிறுவ மொழி ஆராய்ச்சி, கிரக ஆராய்ச்சி, கால ஆராய்ச்சி என பல நிலைகளில் நடக்கும் ஆராய்ச்சிகளைப் பற்றியெல்லாம் அவர் இக்கட்டுரையில் கேள்வி எழுப்பவும் இல்லை. ஆனால் நூறு ஆண்டுகள் சொல்லப்பட்டு வந்த இந்தப் பொய்யை அவர் களையெடுக்கிறார். மறுபடி மறுபடி சொல்லப்பட்டு, அப்படி சொல்லப்படுவதையே வரலாற்று தரவாக மாற்றும் மடமையைக் கேள்வி எழுப்புகிறார். ஓர் அறிவுச்சூழலில் நிகழ வேண்டிய உரையாடல் இது ஆனால் இந்த உரையாடல் எத்தனை அபத்தமாகக் கொண்டுச் செல்லப்படுகிறது என்பது வருத்தமானது.

குமரவேலு ராமசாமி

முகநூல் விவாதங்கள் அப்படியே புறக்கணிக்கப்படக் கூடியவை அல்ல. தீவிரமான உரையாடல்கள் நிகழும்போதெல்லாம் சிலர் உள்ளே புகுந்து ‘நான் சாதாரண வாசகன்; என் கருத்து என்ன வென்றால்’ என்றும் ‘இவங்க எல்லாம் இப்படித்தான் சார்’ என்றும் ‘சபாஷ் உங்கள் கருத்து சூப்பர்’ என்றும் அடையாளத்துக்காகச் சொல்லிவிட்டு செல்வதுண்டு. அந்தச் சிறியர்களை மௌனமாக ஓரங்கட்டிவிடவேண்டும். அவர்களின் தாழ்வுணர்ச்சிக்கு அப்படியான சில சந்தர்ப்பங்கள்தான் வாய்க்கின்றன. அன்றிரவு தாங்கள் ஓர் அறிவுஜீவி எனும் நம்பிக்கையில் நிம்மதியாக உறங்க அது ஒரு சிறந்த வாய்ப்பு. எனவே அவர்கள் போதாமையை மேலும் சுட்டி அவமதிப்பது தகாது என்ற பக்குவத்துக்கு நான் வந்து நெடுநாட்கள் ஆகின்றன. ஆனால் பாண்டியன் விடுவதாக இல்லை.

உதாரணமாக, பாரதிதாசனின் கவிதை வரிகளை தைப்புத்தாண்டுக்கு ஆதாரம் காட்டினால் அதே காலக்கட்டத்தில் வாழ்ந்த இன்னொரு பெரும் கவிஞரான வெ. ராமலிங்கம் பிள்ளையின் சித்திரைப் புத்தாண்டு கவிதையை உதாரணம் வைக்கிறார். கவிஞர்கள் உணர்ச்சிமிகு வரிகளை வரலாற்று ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாததையும் அது அன்றைய கவிஞர்களின் அரசியல் நிலைபாடு சார்ந்துள்ளதையும் சொல்கிறார். சரி, கோ.சாரங்கபாணி அவ்வாறு தைப்புத்தாண்டை கொண்டாடினார் என புதிதாக எதையாவது சொன்னாலும் கோ.சாவின் அத்தனை தலையங்கத்தையும் தொகுத்த பாலபாஸ்கரனின் நூல் வேறு பாண்டியனுக்குச் சாதகமாக உள்ளது. எதையாவது சொல்லி வரும் சந்ததியினரிடம், அறிஞர் பட்டியலில் என் பெயரும் உள்ளது குழந்தாய் எனச்சொல்ல துடிக்கும் மனதையெல்லாம் இப்படி தகுந்த ஆதாரங்களுடன் துண்டித்துவிடுகிறார்.

இந்த முகநூல் புத்திஜீவிகளிடம் வரலாற்றின் தரவின் நம்பகத்தன்மையை கேள்வி கேட்டால் அவரை தமிழ் இன துரோகி என்று சித்தரிப்பது இன்னொரு வேடிக்கை. இப்படியே போனால், இந்த வருடத்திற்குள் பாண்டியன் இந்துத்துவ தீவிரவாதியாக, சங்கியாக இறுதியில் அவர் தமிழராக இருக்கவே வாய்ப்பில்லை என்ற சந்தேக நிலைக்குத் தள்ளிவிடுவார்கள்.

மற்றபடி, இந்த உரையாடலில் கருத்தின் அடிப்படையில் யாரேனும் வாதிடுகின்றனரா என மட்டுமே நான் ஆராய்ந்தேன். அப்படி அக்கருத்தில் உரையாடலுக்கான சாத்தியம் இருந்தால் அதை தொடரலாம். அல்லது அப்பதிவு அறிவு வயப்பட்ட ஒரு குழுவினரால் இன்றோ நாளையோ ஏற்கப்படும் என நம்பி அடுத்த வேலையைப் பார்க்க கிளம்பலாம். அவ்வகையில்தான் குமரவேலு ராமசாமி தன் எதிர்க்கருத்தை பதிவிட்டவுடன் அதனை ஆர்வமாக வாசிக்கத் தொடங்கினேன். முதல் காரணம் அவர் ஒரு கல்வியாளர். எனவே தரவுகளின் அடிப்படையில் வலுவான எதிர்க்கருத்தைச் சொல்வார் என்ற நம்பிக்கை. அடுத்தது,  மறைமலை அடிகளை வைத்து சொல்லப்பட்ட பொய்யை நானும் நம்பி இருந்திருக்கிறேன். அதை உரக்கவும் சொல்லியுள்ளேன். ஆனால் பாண்டியன் முன் வைத்துள்ள கருத்துகளை முடக்க என்னிடம் போதிய தரவுகள் இல்லை. அக்கட்டுரையை வல்லினத்தில் பிரசுரித்தபோதும் அதற்கு பின்புமே நான் ஆராய்ந்ததில் அவர் கருத்தே வலுவாக இருந்தது.

எனவே என்னைப் போன்ற பலவீனமான அறிவை கொண்ட ஒருவனை காக்க வந்த அறிவுஜீவியாகவே குமரவேலு ராமசாமி அவர்களைக் கருதினேன். அவரது விவாதத்தில் பளீர் பளீர் என அறிவின் ஒளி மிளிரும் அதில் நானும் கொஞ்சம் கற்கலாம் என ஆவலாகக் காத்திருந்தேன். ஆனால் நடந்தது வேறு.  குமரவேலு அவர்களின் விவாதங்களை இவ்வாறு தொகுத்துக்கொள்ளலாம்.

1. நாட்குறிப்பை வைத்துக்கொண்டு ஊகங்கள் செய்வதை அறிவியல் என்று ஏற்க முடியாது.

2. மறைமலை அடிகளுக்குப் பின் அவரோடு நெருக்கமாக அவரின் பிள்ளைகள், உறவினர்கள், பேரப்பிள்ளைகள் தைப்புத்தாண்டு என்பதை அடிகள் மறுத்தார் என்று யாரும் கூறவில்லையே.

3. மறைமலை அடிகளாரின் தலைமையில் பல தமிழறிஞர்கள் சந்தித்திருக்கின்றனர் என்பதற்கு ஆதாரம் இருக்கிறது. அப்போது தைப்பொங்கல் புத்தாண்டு என்பது பொதுக்கருத்தாக இருந்திருக்கலாம் ( ஊகம்தான்).

4.  1921இல் மறைமலை அடிகள் 500 தமிழறிஞர்களுடன் கருத்தரங்கில் கலந்து கொண்டு பொங்கல் புத்தாண்டு குறித்து பேசினார்.

5. பொங்கல் சமயச் சார்பற்ற தமிழரின் கலாச்சார விழா, அறுவடைத் திருவிழா என்பதை முன்னெடுக்கவும் தடையில்லை. அது இந்து சமய விழா என்று கொண்டாட யாருக்கும் தடையும் விதிக்கவில்லை.

குமரவேலு ராமசாமி அவர்களின் கருத்து மிக எளிதானது. அதாவது, பொங்கலைத் தமிழ்ப்புத்தாண்டு எனச் சொல்லாத மறைமலை அடிகள் அது புத்தாண்டு இல்லை என்று மறுக்கவும் இல்லை. எனவே இரண்டுமே ஊகம்தான்.

இதை தவிர குமரவேலு ராமசாமி அவர்கள் உதிர்த்த வசைகள், வாதத்துக்கும் சம்பந்தமற்ற பிற புலம்பல்கள், அவரது நம்பிக்கைகள் என பல உள்ளன. அவற்றை இங்கே விரிவாகப் பதிவிட முடியாது. எனக்கு குமரவேலு ராமசாமி போன்ற ஒரு கல்வியாளரை நேரடியாக அரைவேக்காடு எனச் சொல்ல மனம் இல்லை. விரும்புபவர்கள் https://www.facebook.com/pandiyan.anbalagan வாசித்து முடிவு செய்துக்கொள்ளலாம்.  

ஆனால் அவர் உதிர்த்த சில கருத்துகள் அடிப்படையில் மறைமலை அடிகளை வைத்து கட்டமைக்கப்பட்ட  நூறாண்டுகால பொய்யை அவராலும் நிரூபிக்க முடியவில்லை என தெரிகிறது. தெரிந்தால் தாராளமாக ‘இதோ இந்த நூலில் இப்படிச் சொல்லியுள்ளார்’ எனக் காட்டலாம். ஆனால் அப்படி எங்கும் இல்லை; அல்லது அவர் அதை தேடி வாசிக்க முயலவில்லை. மாறாக தான் கொண்டுள்ள நம்பிக்கைக்காக அவரால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சொற்களை விரையம் செய்கிறார். அது ஒரு உத்தி. உரையாட கருத்தில்லாதவர்கள் மத்தியில் இந்த உத்தி முகநூலில் மிகப்பிரபலம்.

எ.கா: திருவள்ளுவர் ஒரு சமணராக இருக்கலாம் என ஒருதரப்பு சொல்கிறது என்று வைத்துக்கொள்வோம். இவர்கள் ‘திருவள்ளுவர் ஓர் சைவராகவே இருக்கும். சைவம் தமிழுக்கு எவ்வளவு உதவியது. அதில் உள்ள பக்திப்பாடல்கள் எப்படியெல்லாம் தமிழை வளர்த்தது. அப்பரும் சுந்தரரும் பாடிய பாடல்கள் இன்றெல்லாம் கேட்க இனிமை குறையாயதது’ என நீட்டிக்கொண்டு போவார்கள். முதல் வாக்கியத்தைத் தவிர மற்ற அனைத்தும் ஏற்புடையவைதானே. பொதுபுத்தியில் ‘ஆம் ஆம்’ எனச் சொல்லக்கூடியவை தானே. எனவே இந்த ‘ஆம்’ முதல் வாக்கியத்திலும் இயல்பாக சேர்ந்துக்கொள்ளும். நன்றாக யோசித்தால் அவர் கடைசிவரை தன் கருத்துக்கான தரவுகளைச் சொல்லியிருக்க மாட்டார். ஆனால் அதனை கேட்கும்/ வாசிக்கும் எளிய மனிதனால் இந்த சூழ்ச்சியை வகுக்க முடியாது. தான் நம்பிய ஒன்று, தான் அறிவாளி என நம்பும் ஒருவன் வாயால் வெளிபடும்போது அவன் உவகை அடைகிறான். அது தானும் ஓரு அறிவுஜீவி என நம்ப கிடைக்கும் வாய்ப்பின் பலன். எனவே வகுத்து அறிய முடியாமல் அனைத்துடனும் ஒத்துப்போகிறான்.

என்னைக்கேட்டால்  குறை அறிவுள்ளவர்களை பேச விடுவதும் சுவாரசியமானது. அவர்கள் பேசி பேசியே தங்களை முட்டாள் என நிரூபித்துக்கொள்வர். இதை இங்கு பொதுவாகவே சொல்கிறேன். மற்றபடி ஐயா, குமரவேலு ராமசாமி அவர்களின் வாதத்தில் நான் கவனித்த சில முரண்களும் உண்டு. எ.கா: தைப்பொங்கல் புத்தாண்டு என்பது அன்றைய பொதுக்கருத்தாக இருந்திருக்கலாம் என ஊகிக்கும் அவரே 1921இல் மறைமலை அடிகள் 500 தமிழறிஞர்களுடன் கருத்தரங்கில் கலந்து கொண்டு பொங்கல் புத்தாண்டு குறித்து பேசினார் என்கிறார். எனக்குப் புரியாதது என்ன வென்றால் மாநாடு நடந்தது என உறுதியாகச் சொல்லும் அவர், அது அப்போதைய பொதுக்கருத்து எனவே அது பற்றி பேசி இருக்க மாட்டார்கள் என ஏன் ஊகிக்கிறார். பிறகு எதற்கு மாநாடு போட்டார்கள்?

இதனால் எல்லாம் அவரை நான் குறைத்து மதிப்பிடவில்லை. எனக்கென்னவோ தன் கருத்துகளில் ஆங்காங்கு சில ஆங்கில கோட்பாடுகளையெல்லாம் அவர் திணித்திருப்பது அவர் அறிவின் விசாலத்தைக் காட்டுகிறது. இது ஒரு புதுவித கோட்பாடாகவும் இருக்கலாம். காரணம் அவரது கருத்துகள் சில இடங்களில் இப்படி முன்னுக்குப் பின் முரணாக உள்ளன. முன்னுக்குப் பின் முரணான ஒரு கோட்பாட்டை உருவாக்கியது யார் என ஆராய்ந்தபோதுதான் அறிஞர் செந்தில் நினைவுக்கு வந்தார்.

அறிஞர் செந்தில் முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்துள்ளார். அவர் தன் அண்ணன் கவுண்டமணிக்கு இரண்டு வாழைப்பழம் வாங்க சென்று ஒரு பழத்துடன் திரும்புகிறார். அந்த இன்னொரு வாழைப்பழம் எங்கே என அண்ணன் கேட்க ‘அந்த இன்னொன்று இதுதான்’ என இவர் சொல்ல வாழைப்பழ கோட்பாடு உருவாகிறது. அதாவது ஒருவர் வரலாறு என சொல்லப்பட்ட ஒன்றில் இல்லாத தரவு குறித்து கேள்வி கேட்டால் ஊகத்தாலேயே ‘இதுதான் அது’ என சொல்லிவிடலாம்.

பாண்டியன், நூறு வருடங்கள் சொல்லப்பட்ட மறைமலை அடிகளின் வரலாற்றின் ஆதாரம் எங்கே எனக்கேட்டால் அதைத் தவிர மற்ற யூ-டியூப் உரைகள், கட்டுரைகள் என எல்லாவற்றையும் காட்டிக்கொண்டே இருக்கலாம். இவர் கேட்டுக்கொண்டே இருக்க, அவர் வேறு எதையாவது காட்டிக்கொண்டே இருப்பார். அந்த இன்னொன்றுதானே அது எனச் சொல்லிவிட்டால் அறிவுலகம் ஏற்காமலா போய்விடும்.

தொடர்புடைய பதிவுகள்

தையும் பொய்யும் – அ.பாண்டியன்

பொங்கல் பானைக்குள் எலிகள் – அ.பாண்டியன்

உரத்த வரிகளும் ஓயாத கூச்சல்களும் – அ.பாண்டியன்

எழில் வெய்யோன் யூ-டியூப்

(Visited 1,495 times, 1 visits today)